எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 28 செப்டம்பர், 2017

கர்னாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு ஒரு தமிழனின் பாராட்டும் எச்சரிக்கையும்!

மூடநம்பிக்கைகள் நிறைந்த இந்திய மண்ணில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் பகுத்தறிவாளராக இருப்பது அரிதினும் அரிதான ஓர் நிகழ்வாகும்.
மகாராஷ்ட்ராவைப் போல கர்நாடகாவிலும் விரைவில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இதன் மூலம் காலங்காலமாக சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். 

மத வழிபாட்டுத் தலங்களில் செய்யப்படும் மனிதத் தன்மையற்ற சடங்குகள், ஜோதிடம், மாந்திரீகம், நரபலி உள்ளிட்டவை ஒழிக்கப்படும். குறிப்பாக, மங்களூரு குக்கே சுப்பிரமணிய கோயிலில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது தலித்துகள் உருளும் சடங்கு[மடே ஸ்நானா], நிர்வாண பூஜை உள்ளிட்ட சடங்குகளுக்குத் தடை விதிக்கப்படும்  என்று கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா 2013ஆம் ஆண்டிலேயே அறிவித்திருந்தார்.

இதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், ஸ்ரீராம் சேனா உள்ளிட்ட நூற்றுக்கும் மேலான அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன; மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம் என்று மிரட்டின. எனினும்.....

கர்நாடகாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று முற்போகுவாதியான சித்தராமையாவுக்கு கன்னட எழுத்தாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் கோரிக்கை விடுத்தனர்; தொலைக்காட்சியில் இடம்பெறும் ஜோதிடம், வாஸ்து உள்ளிட்ட மூடநம்பிக்கை வளர்க்கும் நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில், சட்ட அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா தலைமையில் சட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டு இந்தச் சட்டத்துக்கு முழு வடிவம் அளிக்கப்படும். மதப் பெரியோர்கள், அரசியல் கட்சியினர், முற்போக்கு அமைப்பினர், மடாதிபதிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வரும் சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்” என்று சித்தராமையா அறிவித்துள்ளார்[தி இந்து 28.09.2017].

சித்தராமையாவின் இந்த அறிவிப்பை முற்போக்குச் சிந்தனையாளர்களும், சமூக ஆர்வலர்களும், முற்போக்கு மடாதிபதிகளும் வரவேற்றுள்ளனர்.

துணிச்சலானதொரு  நடவடிக்கையை மேற்கொண்டுள்ள முதலமைச்சர் சித்தராமையாவை மனதாரப் பாராட்டுகிறோம்.

இந்தப் ‘புண்ணிய பூமி’[?] யான பாரத தேசத்தில் மூடப் பழக்க வழக்கங்களைக் கண்டித்துப் பேசியதற்காகவும் எழுதியதற்காகவும் பகுத்தறிவாளர்கள் கணிசமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இம்மாதிரிப் பழக்க வழக்கங்களை வேரோடு களைந்தெறியச் சட்டம் இயற்றவுள்ள சித்தராமையாவுக்கு, மூடத்தனங்களை நம்பிப் பிழைப்பு நடத்துவோரால் பெரும் தீங்குகள் நேரக்கூடும்; உயிருக்கும் பங்கம் நேரலாம். மிக விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் அவர்களை அன்புடன் வேண்டுகிறோம்.