புதன், 3 ஜூலை, 2019

மழைக்காக 'யாகம்' செய்வோர் கவனத்திற்கு!

தினம் தினம் நாளிதழ்களைப் பிரித்தால் அந்தக் கோயிலில் யாகம், இந்தக் கோயிலில் ஜபம் என்பன போன்ற அடுக்கடுக்கான செய்திகள் கடுப்பேற்றுகின்றன.

யாகம் செய்து, அதனால் மழை பொழிந்ததற்கான ஆதாரமோ வரலாறோ நம்மிடம் இல்லை. இது இன்றெல்லாம் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து யாகம் செய்பவர்களுக்குத் தெரியாமலில்லை. தெரிந்தும் செய்கிறார்கள் என்றால், அதற்கான நோக்கம்.....

தற்செயலாக மழை பெய்தால், தாங்கள் செய்த யாகத்தால்தான் அது நிகழ்ந்தது என்று சொல்லி மக்களிடம் பக்தி உணர்வைப் பெருக்குவதும், அதை வைத்துக் கௌரவமாகப் பிழைப்பு நடத்துவதும்தான்.

யாகம் செய்வதால் மழை பெய்யும் என்பது உண்மையானால் மாதம் மும்மாரி பெய்விக்கலாமே? ஒட்டுமொத்த உலகமும் பயன் பெறுமே!

பெய்விப்பார்களா?

யாகம், ஜபம் என்று விளம்பரம் தேடுவோருக்கு நாம் வழங்கும் ஆலோசனை ஒன்று உண்டு. அது.....

உங்களால் இயன்ற அளவுக்கு ஆங்காங்கே உள்ள குட்டைகளையும் குளங்களையும் தூர்வாரி ஆழப்படுத்துங்கள். மழை பெய்தால் அவற்றில் அதிக அளவில் நீரைச் சேமிக்கலாம்.

வற்றிய கிணறுகளைத் தோண்டி ஆழப்படுத்துங்கள். கொஞ்சமேனும் நீர் ஊறும். குடிப்பதற்கு மட்டுமேனும் அது பயன்படும்.


==================================================================================