சிலை வைத்துக் கடவுள்களை மனிதர்கள் ஆக்கும் மனிதர்கள்தான், மனிதர்களையும் கடவுளாக்கிச் சக மனிதர்களையே மூடராக ஆக்குகிறார்கள்!!!!!

Wednesday, October 17, 2018

வையகத்து ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு மெய்யான வேண்டுகோள்!!!

ஐயப்ப பக்தர்களே,

ஐயப்பசாமியின் தோற்றம் குறித்தோ, அவரின் அளப்பரிய சக்தி குறித்தோ, அவர் மீதான உங்களின் மெய்யான பக்தி குறித்தோ கேள்வி எழுப்புவது இந்தப் பதிவின் நோக்கம் அல்ல...அல்லவே அல்ல. நம்புங்கள். சபரிமலை ஐயப்பசாமியைத் தரிசிக்கும் வாய்ப்பு, பருவப்பெண்களுக்கு மட்டும் மறுக்கப்படுவது குறித்து என் எண்ணங்களைப் பதிவு செய்வது மட்டுமே.

பத்து முதல் ஐம்பது வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி வழங்காதது ஏன்?

ஐயப்பசாமி பிரமச்சாரிக் கடவுள். அவரைத் தரிசிக்கச் சபரிமலை செல்லும் பக்தர்களும், காமம், குரோதம், வெகுளி, மயக்கம் போன்ற தகாத உணர்வுகளைக் கட்டுப்படுத்த விரதம் இருப்பவர்கள். காம உணர்வைத் தூண்டும் பருவ வயதுப் பெண்கள் சபரிமலைக் கோயிலில் அனுமதிக்கப்பட்டால், சாமியின் பிரமச்சரியம் கலையும்; உங்களின் விரதம் சீர்குலையும் என்று நம்புகிறீர்கள்.

உங்களின் நம்பிக்கை மெய்யானது எனின் ஒரு சந்தேகம்.....

இந்த வையகம், ஒன்று முதல் ஆறு வரையிலான அறிவு படைத்த கோடானுகோடி உயிர்களின் வாழ்விடமாக உள்ளது. சபரிமலையும் ஒரு வாழ்விடம்தான்.

உயிர்களின் இனப்பெருக்கத்திற்கு மூலகாரணமான 'ஆண் - பெண்' புணர்ச்சி மண்ணுலகம் எங்கும் நிகழ்வது போலவே, சபரிமலையிலும் நிகழவே செய்யும்.
சின்னஞ்சிறிய உயிர்களின் சேர்க்கை கண்ணுக்குத் தட்டுப்படா எனினும், பறவைகள், விலங்குகள் போன்றவை புணர்ந்து இன்புற்றிருக்கும் காட்சிகள் நிச்சயம் உங்களின் பார்வையில் படவே செய்யும். விரதம் இருக்கும் உங்களின் மன உறுதியை அம்மாதிரிக் காட்சிகள் சோதிக்காவா? சாமியின் பிரமச்சரியத்தைப் பாதிக்காவா?

''பாதிக்கா'' என்பது உங்களின் பதிலாயின், உரிய முறையில் பாதுகாப்பாக ஆடை உடுத்துவரும் பருவ வயதுப் பெண்களைக் பார்ப்பது மட்டும் எப்படிப் பாதிக்கும்?

என்னதான் மனதைக் கட்டுப்படுத்த விரதம் இருந்தாலும், மனம் என்னும் குரங்கு கடந்த காலங்களில் நீங்கள் பார்த்த, சந்தித்த அழகுப் பெண்களைக் கற்பனை செய்து உங்களின் விரதத்திற்கு மிக மிக மிகக் கொஞ்சமே கொஞ்சமேனும் பங்கம் விளைவிக்காதா?

''விளைவிக்காது'' என்று 100% உறுதிபட உங்களால் உரைக்க இயலுமா?

கடும் விரதத்தால், இரும்பனைய மன உறுதியைப் பெற்றுவிடும் உங்களால், சபரிமலைக்கு வருகை புரியும் பருவ வயதுப் பெண்களை உடன் பிறந்த சகோதரிகளாக நினைக்க முடியும்தானே?

அப்புறம் ஏன் அவர்களின் வருகையை எதிர்க்கிறீர்கள்?!

மாதவிடாய் நிகழ்வு வெகு இயற்கையானது; வயிற்றில் தேக்கி வைத்திருந்து வெளியேற்றும்போது கெட்ட வாசனை பரப்பும் மலம் போன்றது அல்ல. ஆனால், மாதவிடாய்ப் பெண்களைத் தீண்டத் தகாதவர்கள் ஆக்கியதோடு சபரிமலைப் பயணத்துக்குத் தகுதி அற்றவர்களாகவும் ஆக்கிவிட்டீர்கள். உங்கள் செயலில் நியாயம் இருப்பதாகவே கொள்வோம். அந்தச் சில நாட்கள் தவிர்த்து ஏனைய நாட்களில் அவர்களையும் அனுமதிக்கலாமே? 

இனியேனும் சிந்திப்பீர்களா?

இறுதியாக, என்னை வாட்டி வதைக்கும் மனக்குமுறலை ஒளிவுமறைவில்லாமல் வெளிப்படுத்த விரும்புகிறேன்.

இனவிருத்திக்காகக் கருவைச் சுமப்பதான தியாகச் செயல் புரியும் பெண்களிடமிருந்து வெளிப்படும் மாதவிடாய் நீங்கள் நினைப்பதுபோல் அசுத்தமானது என்றால்.....

இந்த 'அசுத்த'ப் பெண்களை படைத்தவர் யார்? 

தான் படைத்த கோடானுகோடி உயிர்களுக்கிடையே, சபரிமலையில்[மட்டும்] நுழையக்கூடாத இழிபிறவியாக இவர்களைப் படைத்ததில் உங்கள் ஐயப்பனின் பங்கு என்ன?

''எதுவும் இல்லை'' என்பது உங்களின் பதிலாயின்.....

அதைச் செய்தவர் வேறு யாரோ ஒரு கடவுள். 

''அவர்...அல்ல அல்ல, அவன் ஒழிக...ஒழிக'' என்று உரத்த குரலில் முழங்குகிறேன்...இனியும் நான் முழங்கிக்கொண்டே இருப்பேன்.

Tuesday, October 16, 2018

'அந்த' எழுத்தாளர் மீது மேலும் ஒரு '#Me Too' பெண் புகார்!!!!!

சற்று முன்னர் ஊடகங்களில்  வெளியான ஒரு செய்தி.....

#ஏற்கனவே, '#Me Too' இயக்கத்தைச் சேர்ந்த பல பெண்களின் பாலியல் தொடர்பான குற்றச் சாட்டுகளால் கதி[மதி]கலங்கி நிற்பவர் 'அந்த'ப் 'பிரபல' எழுத்தாளர். இப்போது, 10 வயதுச் சிறுமி ஒருத்தியும் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளார்#
செய்தி வெளியிட்ட ஊடகங்களில் 'இளைய தலைமுறை'யும் ஒன்று. அந்த ஊடகத்திற்கு[தொலைக்காட்சி], பிரபலத்தின் மீது குற்றம் சுமத்திய சிறுமி அளித்த பேட்டி.....

நிருபர்: உங்க பெயர்?

சிறுமி: பைந்தமிழ்க்கொடி

நிருபர்: வயசு?

சிறுமி:  பத்து

நிருபர்: பிரபல எழுத்தாளர் உங்களை வன்புணர்வு செய்ததாகச் சொல்றீங்க. அந்தத் துயரச் சம்பவம் குறித்து விவரமாகச் சொல்ல முடியுமா?

சிறுமி: அப்போ நான் ஒரு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவி.....

நிருபர்: [அதிர்ச்சியடைந்தவராக] வயசு பத்துன்னு சொன்னீங்க. இப்போ கல்லூரி மாணவின்னு......

சிறுமி: பொறுமையாக் கேளுங்க. அப்போ நான் கல்லூரி மாணவி. அந்த எழுத்தாளருடைய கவிதைகள்னா எனக்கு உசுரு. அவரை நேரில் சந்திச்சிப் பாராட்ட ஆசைப்பட்டேன். அந்த ஆசை ஒரு கட்டத்தில் வெறியாவே மாறிடிச்சு. எங்க ஊர்ப்பக்கம் அவர் வந்தா எப்படியும் சந்திச்சிப் பேசிடறதுங்கிற முடிவோட காத்திருந்தேன்.

நிருபர்: அந்த வெறி எப்போ காதலா மாறிச்சி?

சிறுமி: [கோபத்துடன்] இந்தக் குசும்புதானே வேண்டாங்கிறது. காதலெல்லாம் இல்ல. நான் அவருடைய ரசிகையா மட்டுமே இருந்தேன்..... அது வந்து அப்புறம்.....

கொஞ்சம் இடைவெளி கொடுத்துத் தொடர்ந்தார்.....

''எங்க கல்லூரி இலக்கியப் பேரவையில் சொற்பொழிவு நிகழ்த்த வந்திருந்தார் அவர். அவர் பேசி முடிச்சதும் மத்தப் பெண்களோட நானும் ஆட்டோகிராஃப் குறிப்பேட்டை நீட்டினேன். என்னைக் கொஞ்ச நேரம் ஒரு மாதிரியா உத்துப் பார்த்துட்டுக் கையெழுத்து இட்டதோட, தான் தங்கியிருந்த விடுதியின் முகவரியையும் எழுதியிருந்தார். நான் எதிர்பார்த்திருந்த வாய்ப்புக் கிடைச்ச சந்தோசத்தோடு அவர் தங்கியிருந்த அறைக்குப் போனேன். கவிதை நடையில் பேசிப் பேசியே என்னை வசியம் பண்ணிக் கெடுத்துட்டார். அவர் இப்படிப்பட்ட ஆளுன்னு எனக்குத் தெரியாம போச்சு'' என்று சொல்லி, சிறிது நேரம் தேம்பித் தேம்பி அழுதாள் சிறுமி.

ஏற்கனவே எழுப்பிய சந்தேகத்துக்குப் பதில் கிடைக்காத நிலையில் தலையைச் சொறிந்துகொண்டிருந்த நிருபர், ''இப்போ உங்களுக்கு வயசு பத்து. கல்லூரி மாணவியா இருந்தபோது அவர் உங்களைக் கெடுத்துட்டதாச் சொல்றீங்க. கனவு ஏதும் கண்டீங்களா?'' என்றார்.

''கனவல்ல; 100% நிஜம்.''

''குழப்புறீங்களே..."

''குழப்பவெல்லாம் இல்ல. இந்தச் சோகச் சம்பவம் நடந்தது என்னுடைய போன பிறவியில். அப்போ என் வயசு பதினேழு. எழுத்தாளருக்கு முப்பது வயசு[இப்போ 64] இருக்கலாம். அவருக்குத் திருமணமும் ஆகியிருந்தது. என் கற்பை இழந்த அன்னிக்கே, அவர் மீது இருந்த மரியாதை காரணமா, 'என் சாவுக்கு யாரும் காரணம் இல்லே'ன்னு எழுதி வெச்சிட்டுத் தற்கொலை செய்துகிட்டேன். கொஞ்ச வருசங்கள் ஆவியா அலைஞ்சேன். பத்து வருசம் முன்னாடி தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமத்தில் பொண்ணாப் பிறந்தேன். நேத்திக்கு முந்தைய நாள்தான் கடந்த பிறவியில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் என் நினைவுக்கு வந்திச்சி. '#Me Too' இயக்கத்தில் சேர்ந்தேன். எழுத்தாளர் எனக்குச் செய்த துரோகத்தை அம்பலப்படுத்தினேன்'' என்றாள் சிறுமி.

சிறுமிக்கு நன்றி சொன்னதோடு, விதம் விதமான 'போஸ்'களில் அவளைப் படமும் எடுத்துக்கொண்டார் 'இளைய தலைமுறை'த் தொலைக்காட்சி நிருபர்.
=======================================================================''IndiBlogger' இன் முகப்புப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது இப்பதிவு. 


Sunday, October 14, 2018

வெங்காயக் கிரகங்கள்!!!

ஜோதிடப் புரட்டுகள் குறித்துக் கணிசமான பதிவுகள் எழுதியுள்ளேன். அவற்றுடன் ஒப்பிடுகையில் இது மிகச் சிறியதாயினும் கருத்தமைவில் மிகமிகப் பெரியது. தவறாமல் வாசியுங்கள்.

வானியல் குறித்த அறிவியல் வெகுவாக வளர்ந்துள்ள நிலையில்.....

ராகுவும் கேதுவும் சந்திரனை விழுங்கிவிடுவதால் சந்திரன் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை என்றும், அதுவே சந்திர கிரகணம் என்று இன்றளவும் புளுகிக்கொண்டிருக்கிறார்கள் ஜோதிடர்கள்.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவே பூமி வரும்போது, சந்திரன் மீது சூரிய ஒளி  படுவதில்லை. சந்திரன் மீது இருள் படிவதால் அது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை.  இவ்வுண்மை, குறைந்தபட்ச அறிவியல் அறிவு உள்ளவர்களுக்குக்கூடத் தெரியும்.

மற்றபடி, சூரியன், பூமி, சந்திரன் ஆகிய இம்மூன்றுக்குமான இடைவெளிகளிலோ, வேறு இடங்களிலோ பாம்பு பூரான் என்று எந்தவொரு ஜந்துவும் சுற்றிக்கொண்டிருக்கவில்லை.

ராகு கேது என்ற பெயரில் கோள்கள் ஏதும் இல்லை என்று அறிவியலாளர் அறிவித்த பின்னரும், அவை மற்ற கிரஹங்களைப்[கோள்கள்] போல் கண்களால் கண்டறியத் தக்கன அல்ல; அவை நிழல் உருவம் கொண்டவை என்று ஜோதிடர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்வதுபோல், வானவெளியில் நிழல் வடிவக் கோள்கள் ஏதும் இல்லை என்கிறது இன்றைய அறிவியல்[ஆதார நூல்: 'அறிவியல் உண்மைகளும் அரிய செய்திகளும்', மணிவண்ணன் பதிப்பகம், மேற்கு மாம்பலம், சென்னை].

ஆனாலும், அவர்கள் தொடர்ந்து 'ராகுகேது'க்களை இணைத்தே பலன் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்[பெரியார் அடிக்கடி பயன்படுத்திய 'வெங்காயம்'தான் நினைவுக்கு வருகிறது].

ஜோதிடர்கள் பொய் சொல்கிறார்கள்; சொல்லிவிட்டுப் போகட்டும். அலையலையாய் இன்றளவும் அவர்களைத் தேடிச் செல்கிற கூட்டத்தை என்ன பெயர் சொல்லி அழைக்கலாம்?!
------------------------------------------------------------------------------------------------------------------

Friday, October 12, 2018

இந்தத் 'தில்' கிழவனைத் தினமும் நினையுங்கள்!!!

இந்த ஆண்டு[2018], இயற்பியலுக்கான  நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த 'ஆர்தர் ஆஸ்கின்' என்பவர் பெற்றிருக்கிறார். இவரின் வயது 96.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த இவர்,  ”ஆப்டிகல் டிவீசர்ஸ்” எனப்படும் லேசர் தொழில்நுட்பத்தில் நிகழ்த்திய கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெறுகிறார். பரிசுத் தொகையான 6.5 கோடி ரூபாயில்[மூன்று பேருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது] 50 சதவிகிதத்தை இவர் பெறுகிறார்.
சதம் அடிக்க நான்கே ஆண்டுகள் உள்ள நிலையில், இப்படியொரு பரிசைப் பெற்று உலகோரை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் இந்தக் கிழவர். ஆனால், இதை அவர் ஒரு பொருட்டாக மதிக்கவில்லையாம்.

அவருடனான ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட கேள்வியும் அவரின் பதிலும்..... 

“அய்யா நீங்கள் மிகப்பெரிய உலக சாதனை புரிந்திருக்கிறீர்கள். அதற்காக உலகளவிலான அங்கீகாரமும் உங்களுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. எனவே, உங்களை நாங்கள் நேர்காணல் செய்யவேண்டும்.........”
“மன்னிக்கவும். நான் அடுத்த சாதனைக்கான ஆராய்ச்சி அலுவல்களில் மும்முரமாக இருப்பதால் நேர்காணலுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.”  

கிழவர் அப்படியென்ன செய்துவிட்டார்?  

'சிறிய பாகங்களைப் பிடித்துக்கொள்வதற்காக ஒரு இடுக்கி (ட்வீஸர்) பயன்படுத்தப்படுவதை,  நாமெல்லாம் 'வாட்ச் ரிப்பேர்', 'மொபைல் போன் ரிப்பேர்' கடைகளுக்குச் சென்றிருந்தால் பார்த்திருப்போம் இல்லையா? அதுபோல நானோ, மைக்ரோ துகள்களில் நடைபெறும் அணு ஆராய்ச்சிகளில் கண்களுக்கே புலப்படாதா ஒன்றைப் பற்றிப் பிடித்துக்கொள்ள ஒரு உபகரணம் வேண்டுமென்பதை உணர்ந்து இவர் தொடங்கிய ஆராய்ச்சிதான் 'ஆப்டிகல் ட்வீஸர்'. லேசர்  உயர் ஒளிக்கற்றைகளைச் செலுத்தி அவை தரும் அழுத்தத்தின்மூலம் பிடித்துக்கொள்ளும் நுட்பத்தைக் கண்டுபிடித்ததுதான் இவரது சாதனை. குறிப்பாக, தற்போது 'லேசர்' மூலம் செய்யப்படும் கண் அறுவைச் சிகிச்சையின் போது பேருதவி புரியும் என்று மருத்துவத்துறை மகிழ்கிறது.
அமெரிக்காவின் பெல் ஆராய்ச்சி மையத்தில் மூத்த விஞ்ஞானியாக இருக்கும் இவர், இயற்பியலின் ஒளியியல்துறையில் மிகப்பெரிய சாதனைபுரிந்து, 96 வயதில் (இவர்தான் உலகிலேயே இதுவரை 'நோபல்' பெற்றிருப்பவர்களில் மூத்த வயதுடையவர்) 2018ஆம் ஆண்டுக்கான பரிசினை (மூன்றிலொருவராகப்) பெற்றிருக்கிறார். இவரிடம் இன்று செய்தியாளர் கேட்டபோதுதான் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
ஆமா, அப்படியென்ன அடுத்த ஆராய்ச்சி?
'சூரியசக்தியினை ஆக்கபூர்வமாக்குவது எப்படி?' என்பதாம்.'
கில்லாடிக் கிழவர்தான்!
நடுத்தர வயதைக் கடந்துவிட்டாலே, நமக்காகக் கதவு திறந்து வைத்துக் காத்திருக்கும் மரணத்தை எண்ணி மனம் கலங்குகிறோம். இந்தக் குடுகுடு கிழவருக்கு மட்டும் சாவுக்கு அஞ்சாத மனதிடமும் கொள்கைப் பிடிப்பும் வாய்த்தது எப்படி?

அது எப்படியானதாகவோ இருந்துவிட்டுப் போகட்டும், தினமும் ஒரு முறையாவது இந்தக் கிழவனை நினைப்போம். சாதி, மதம், சாமி, பூதம், சொர்க்கம், நரகம் என்று சொல்லித் திரியும் சுயநலவாதிகளைப் புறந்தள்ளிச் சுயசிந்தனையுடன், வாய்த்த அற்ப வாழ்நாளை அமைதியாகவும் பயனுள்ள வகையிலும் வாழ்ந்து முடிப்போம்.

நன்றி.

இப்பதிவும், IndiBlogger முகப்புப் பக்கத்தில் இடம் பிடித்துள்ளது.

Wednesday, October 10, 2018

'காதலும் சாதலும்'... கட்டிளம் காளைகளுக்கான கதை!!

திராவகம் பட்டாற்போல் தகித்துக் கொண்டிருந்த தன் இடது கன்னத்தை மீண்டும் மீண்டும் தொட்டுப் பார்த்துக் கொண்டான் பழனிச்சாமி.

அந்த அளவுக்கு ஆக்ரோஷமாக அறைந்துவிட்டாள் விநோதா.

அவள் போகும்போது, ''உன் காதலை நான் ஏத்துக்கலேன்னா செத்துடுவேன்னு எழுதியிருக்கியே, செத்துத் தொலை. காலேஜுக்கு ஒரு நாள் லீவு விடுவாங்க” என்று சொல்லி, அவன் தந்த கடிதத்தைக் கசக்கி அவன் முகத்தில் அடித்தாள்; அவன் இருந்த திசையில் காறி உமிழ்ந்துவிட்டுப் போனாள்.

உடைந்து சிதறிப் போனான் பழனிச்சாமி.

செத்துப் போவதென முடிவெடுத்தான்; யோசித்தான்.

’விஷம் தின்று சாகலாமா? ‘

‘எது விஷம்?’

’அதை எப்படிக் கடையில் வாங்குவது?’

ஒன்றும் புரியாததால் அந்தத் திட்டத்தைக் கைவிட்டான்.

'தூக்கில் தொங்கலாம்’ என்று நினைத்து, அதற்குத் தோதான இடம் அப்போது அமையாததால், அதையும் நழுவ விட்டான்.

அருகிலிருந்த சித்தர் மலையை அண்ணாந்து பார்த்த போது, அதன் உச்சியிலிருந்த செங்குத்துப் பாறை கண்ணில் பட்டது.

அங்கிருந்து குதித்தால், மிச்சம் சொச்சம் இல்லாமல் உயிர் பிரிவது நிச்சயம்.

மலை உச்சியை நோக்கிப் புறப்படத் தயாரானான் பழனிச்சாமி.

“டேய் பழனிச்சாமி, உனக்கு ஃபோன்.” -ஒரு விடுதி மாணவன் அடித் தொண்டையில் கத்தினான்.

ஊர்ந்து போய், ஃபோனை எடுத்தான் பழனிச்சாமி.

“பழனிச்சாமி, கிராமத்திலிருந்து உன் மாமா பேசுறேன். உன் அக்கா வேலம்மா தற்கொலை செஞ்சிட்டாடா. காரணம் நீதான். மூனு வருசப் படிப்பில் ஒரு பாடத்தில்கூட நீ பாஸ் பண்ணலேன்னு உன் காலேஜிலிருந்து கடிதம் வந்துது. அதைப் படிச்சிட்டு, 'அப்பா இல்லாத குடும்பத்தை அம்மாதான் தாங்குறா. கூலி வேலை செஞ்சி தம்பியையும் படிக்க வைக்கிறா. நான் அவளுக்கு ஏதோ கொஞ்சம் ஒத்தாசை பண்றேன். தம்பி நல்லா படிச்சி, வேலை தேடிச் சம்பாதிச்சி அம்மாவுக்கு உதவுவான்; முப்பது வயசான எனக்கும் கல்யாணம் கட்டி வைப்பான்னு காத்திருந்தேன். இப்போ, அந்த நம்பிக்கை சிதறிப் போச்சி. நான் செத்துப் போறேன்’னு எழுதி வெச்சுட்டுத் தூக்கில் தொங்கிட்டா. உடனே புறப்பட்டு வாடா” என்றார் மாமா.

ரிஸீவரும் கையுமாக, நீண்ட நேரம் நெடு மரமாய் நின்றுகொண்டிருந்தான் பழனிச்சாமி.
*************************************************************************************************
கதாசிரியர்? 
வேறு யார்? இந்தக் 'கத்துக்குட்டிதான்'!
************************************************************************************************

இந்தக் கதை 'IndiBlogger' இன் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
நன்றி: 'IndiBlogger'.

Your post "'காதலும் சாதலும்'... கட்டிளம் காளைகளுக்கான கதை!!" is on the IndiBlogger homepage.IndiBlogger donotreply@indiblogger.in

பிற்பகல் 7:37 (1 மணிநேரத்திற்கு முன்பு)
பெறுநர்: நான்

IndiBlogger

Your post is on the IndiBlogger homepage.

Dear pasiparamasivam,
Your post 'காதலும் சாதலும்'... கட்டிளம் காளைகளுக்கான கதை!! has been selected for IndiBlogger's Featured Posts, and is on the homepage of IndiBlogger right now!
Tweet this Share this
If you would like to add the 'Featured Post on IndiBlogger' badge to your post, you may get the badge at the following link:
Keep blogging!

The IndiBlogger Team
Monday, October 8, 2018

'சபரிமலை'...பெண்களுக்குச் சாதகமான தீர்ப்பைப் பெண்களே எதிர்ப்பது ஏன்?!

'10 - 50 வயதிலான பெண்களும் சபரிமலை சென்று ஐயப்பசாமியை வழிபடலாம்' என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஆண்கள் ஊர்வலங்கள் நடத்தியிருக்கிறார்கள் என்பது ஊடகச் செய்தி. கணிசமான அளவில் மகளிரும் கலந்துகொண்டிருக்கிறார்கள் என்பது சுவை கூட்டும் கூடுதல் செய்தி.

பெண்களுக்குச் சம உரிமை வழங்கப்படுவதை இன்றளவில் மிகப் பெரும்பாலான ஆண்கள் ஆதிரிக்கிறார்கள். எனினும், குறிப்பிட்ட வயதுப் பெண்களுக்கான சபரிமலை வழிபாட்டைப் பெரும்பாலான ஆண்கள் மட்டுமல்ல, கணிசமான அளவில் பெண்களும் ஆதரிக்கவில்லை என்பது  பெரும் புதிராக உள்ளது. அந்தப் புதிருக்கான விடை கீழே.....

ஐயப்பசாமி, சபரிமலையில் மட்டுமல்ல, வேறு பல ஊர்களிலும் குடிகொண்டிருக்கிறார்.
ஆரியங்காவில் அரசனாகவும், குளத்துப்புழையில் பாலகனாகவும், எரிமேலியில் தர்மசாஸ்தாகவும், அச்சன் கோயிலில் பூர்ணபுஷ்கலை[?] சமேதரராகவும் இருந்து அருள்பாலிக்கிறார். ஆனால், சபரிமலையில் மட்டும்  நித்திய பிரமச்சாரியாகக் காட்சியளிக்கிறார்{'இந்து தமிழ் [08.10.2018] நாளிதழில் பக்கம் 03இல், சேலம் மாநகர ப.ஜ.க. தலைவர் கோபிநாத்தும், ஐயப்ப சேவா சமாஜ தலைவர் தினேஷ்குமாரும் மற்றும் ஒருவரும் இந்து தமிழுக்கு அளித்த பேட்டியில் இடம்பெற்ற தகவல்}.

தன் பிரமச்சரியம் கலைந்துவிடுதல் கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார் ஐயப்பன். மடக்கிய முழங்கால்கள் இறுகக் கட்டப்பட்டுக் குந்திய நிலையில் அவர் காட்சி தரும் கோலமே அதை உறுதிப்படுத்துகிறது என்கிறார்கள் புராண இதிகாசங்களைக் கரைத்துக் குடித்தவர்கள். ஐயப்பன் கட்டை பிரமச்சாரி என்பதால்.....

குறிப்பிட்ட வயதிலான பெண்கள் அவர் முன் சென்றால் அவரின் பிரமச்சரிய விரதத்திற்குப் பங்கம் விளையும் என்பதே அவர்களுக்கான ஐயப்பன் வழிபாடு மறுக்கப்படுவதற்கான காரணம் ஆகும்.

காரணம் ஏற்கத்தக்கதே[?] என்பதால்.....

உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்கும் போராட்டங்களில் பெண்களும் பங்கு பெறுகிறார்கள் போலும்!

ஐயப்பன் ஒரு கடவுளா? கடவுள்கள் பலரா?

''ஆம்...ஆம்'' எனில், அவர்களைக் குடும்பஸ்தர்கள் என்றும் பிரமச்சாரிகள் என்று பாகுபடுத்துவது சரியா?

அதற்கும் ''ஆம்'' என்பதே பதிலாயின்.....

பருவப் பெண்கள் அவரின்[ஐயப்ப கடவுள்] பார்வையில் பட்டால் பிரமச்சரியம் பறிபோகும் என்று எண்ணுவது ஏற்புடையதா?

மோகினியாய் வடிவெடுத்த[அரக்கனை அழிக்க] விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் மகனாகப் பிறந்தவர் ஐயப்பன்[கையப்பன் என்பதே ஐயப்பன் ஆயிற்று. சிவன் மோகினியைப் புணர விரும்பிப் பின்தொடர்ந்து சென்று கையைப் பற்றியதால் மோகினியின் கையிலிருந்து பிறந்தவர் கையப்பன்] என்பது போன்ற கதைகளையும்  மேற்கண்டவை போன்ற பல தகவல்களையும் ஆன்மிகவாதிகள் பரப்புரை செய்வது நியாயமா?

மேற்கண்டவை போன்ற பல வினாக்களைத் தொடுத்து என்னிடம் அவற்றிற்கான பதில்களை எதிர்பார்க்கிறீர்களா நீங்கள்?

மன்னியுங்கள். 

பன்முகச் சிந்தனையாளரான உங்களுக்கே பதில்கள் தெரியக்கூடும். அறிவில் சிறியனும் வறியனுமான என்னை அருள்கூர்ந்து சீண்ட வேண்டாம்.

நன்றி.

Sunday, October 7, 2018

எது எதுக்கோ மந்திரம் ஓதுறாங்க! இதுகளுக்கு.....?

அங்கிங்கெனாதபடி புதிது புதிதாகக் கோயில் கட்டுகிறார்கள் நம் மக்கள். அத்தனைக்கும் வேத மந்திரம் படித்தவர்களைக் கொண்டு குடமுழுக்குச் செய்கிறார்கள். 'அவர்கள்' ஓதுகிற வேத மந்திரத்தால் கற்சிலை கடவுள் ஆகிறது!

இப்போதெல்லாம், கல்யாணம் பண்ணுறவர்கள் பொண்ணு மாப்பிள்ளையுடன் ஏதாவதொரு கோயிலுக்குப் போய்விடுகிறார்கள். அங்கே 'அவர்கள்' மந்திரம் சொல்லித் தாலி எடுத்துக் கொடுத்தால்தான் பொண்ணு மாப்பிள்ளை சண்டை சச்சரவு இல்லாமல் சந்தோசமாகக் குடும்பம் நடத்துவார்களாம். இன்று இது நம் மக்களில் பெரும்பாலோர் நம்பிக்கை.

கடந்த காலங்களில் புது வீடு கட்டினால், பூசாரி வந்து பூசை பண்ணுவார். பசு மாட்டை வீட்டுக்குள்ளே நடக்க வைப்பார்கள். விருந்துண்டு முடித்தால் விழாவும் முடிந்துவிடும். இப்போதெல்லாம், அவர்கள் வந்து யாகம் வளர்த்து மந்திரம் ஓதுவது வழக்கம் ஆகிவிட்டது. அந்த மந்திரம்,  வீட் டிலிருக்கிற ஆவி, காத்து, கருப்பு, பேய், பிசாசு இத்தியாதிகளையெல்லாம் ஓட ஓட விரட்டியடிக்குமாம்.

அடுத்தடுத்துத் துன்பங்கள் நேர்ந்தால்,  ஏதோ தோஷம் இருப்பதாகப் பலரும் அஞ்சுகிறார்கள். மந்திரம் ஓதினால் அது விலகும் என்று நம்புகிறார்கள்; அவர்களை அழைக்கிறார்கள். அவர்களும், நெய் முதலான பல பொருள்களை நெருப்பிலிட்டுப் புரியாத  மந்திரங்களைச் சொல்லி, கணபதி யாகம், குணபதி யாகமெல்லாம் நடத்திக் காணிக்கை பெற்றுச் செல்கிறார்கள். இந்தச் சடங்கினால்  துன்பங்கள் விலகுமா? நம்மில் எத்தனைபேர் யோசிக்கிறார்கள்? ஊஹூம்! 

சினிமா எடுத்தால் அவர்களின் வருகை அவசியத் தேவை. ஒருவர் ஒரு தொழில் தொடங்கினால் அங்கேயும் மந்திர ஓசை கேட்கிறது.

மந்திரத்தால், கல் கடவுளாகும்; மணம் செய்துகொள்ளும் ஆணும் பெண்ணும் மனம் ஒத்து நீடூழி வாழ்வார்கள்; ஆவி பூதங்களெல்லாம் அஞ்சி ஓடும்; தோஷங்கள் நீங்கும்; செய்யும் தொழில் சிறக்கும் என்றிப்படிக் காலங்காலமாய்ப் பரப்புரை செய்து மக்களை நம்பச் செய்து மூடர்கள் ஆக்கியிருக்கிறார்கள் 'அவர்கள்'. அந்தத் தந்திரசாலிகளிடம் ஒரு கேள்வி.....

ஒரே ஒரு கேள்வி.....

கொலை, கொள்ளை, வழிப்பறி, கடத்தல், வன்புணர்வு, லஞ்சம், ஊழல் என்று இம்மண்ணில் நாளும் பல குற்றச் செயல்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஏதேனும் ஒரு பொதுவிடத்தில் கூடி, நீங்கள்[இங்கே, மந்திரங்கள் ஜெபித்தால் துன்பங்கள் அகலும் என்கிற பிற மதத்தவரும் அடங்குவர்] ஒருங்கிணைந்து மந்திரங்களை ஓதினால் இம்மாதிரிக் குற்றங்கள் நிகழாவா? குற்றம் புரிபவர்கள் அனைவரும்[100%] மனம் திருந்துவார்களா?

கடவுளையே வசியம் செய்து கல்லில் கரைய வைக்கிற அதி புத்திசாலிகள்  நீங்கள்! உங்களால் முடியாதது எது?

ஒரு முறை, ஒரே ஒரு முறை இதைச் சாதித்துக் காட்டுங்களேன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Friday, October 5, 2018

கதறக் கதற...கண்களில் குருதி கசியக் கசிய...ஐயோ!!!

''சிறுமியின் கண்களில் ரத்தம் கசிந்த நிலையிலும், கயவர்கள் 10 வயதுச் சிறுமியைக் கதறக் கதறக் கற்பழித்துக் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கிறார்கள்'' - சிறுமியைச் சீரழித்துக் கொன்ற 3 கயவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்த நீதிபதி இவ்வாறு கண்கலங்கக் கூறினார். கேட்டவர் நெஞ்சங்கள் பதைபதைத்தன[தினத்தந்தி, 05.10.2018].

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள காமாட்சிபுரம் என்னும் ஊரில்தான்[01.12.2014இல்] இந்தக் கொடூரம் நிகழ்ந்துள்ளது.

வயதான தன் பாட்டியின் ஆதரவில் வளர்ந்தவள் 5ஆம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த இந்தச் சிறுமி. தனியளாக உறவினர் வீட்டுக்குச் சென்றபோது, சோளக்காட்டுக்குக் கடத்தப்பட்டு வன்புணர்வு செய்யப்பட்டுக் கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டிருக்கிறாள்.

''மிருகங்கள்கூட குட்டிகளிடம் இவ்வாறான ஈனச் செயலில் ஈடுபடுவதில்லை'' என்று வேதனைப்பட்டிருக்கிறார் நீதிபதி.

'உலகம் எத்தனை பொல்லாதது என்று புரியவைத்து அரவணைத்து அன்பு பாராட்டி, வளர்த்து ஆளாக்குவதற்குப் படித்த பெற்றோர்கள் இல்லை; எத்தனை பேர் சேர்ந்து எத்தனை முறை வன்புணர்வு செய்தாலும் ஏனென்று கேட்க எவருமில்லை. ஆதரவுக்கரம் நீட்ட அக்கம்பக்கத்தாரும் இல்லை' என்பது தெரிந்துதான் உள்ளூர்க் காலிகள்{ஓடைப்பட்டிக் காவல்துறையினரின் விசாரணையில், காமாட்சிபுரம் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த சுந்தர்ராஜ்[29], இராபின்[எ]ரவி[27], குமரேசன்[23] ஆகிய மூவரும்}  இந்த இழிசெயலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

சபரிமலை ஐயப்பன் பக்தையான இவள், மாலை போட்டு விரதமும் இருந்திருக்கிறாள். லட்சோபலட்சம் பக்தர்களால் வழிபடப்படும் உலகப் புகழ் பெற்ற சாமியான ஐயப்பன், ஒரு குக்கிராமத்தில், 10 வயதில் தனக்கொரு பக்தை இருப்பதை மறந்துவிட்டார்; அபலையின் கூக்குரல் கேட்டு அபயக்கரம் நீட்டத் தவறிவிட்டார்[கடவுளே ஆயினும் அவ்வப்போது மறதி ஏற்படுவது இயற்கை என்றறிக!].

''ஐயப்பனை ஏன் வம்புக்கு இழுக்கிறாய்? இந்த நிகழ்வுக்கும் ஐயப்ப சாமிக்கும் சம்பந்தம் இல்லை. இவள் முற்பிறவிகளில் செய்த பாவங்களுக்குக் கிடைத்த தண்டனை இது'' என்று சில புண்ணிய ஆத்மாக்களும் பக்தகோடிகளும் வாதம் புரியக்கூடும்.

அவர்களின் வாதம் மிக மிக மிகச் சரியானதே!

இவளும், இந்நாள்வரை இவளைப் போல வன்புணர்வுக்கு உள்ளான ஆயிரக்கணக்கான அப்பாவிச் சிறுமிகளும் பெண்களும், முற்பிறவிகளில் செய்த பாவங்களுக்கான பலன்களை இப்பிறவிகளில் அனுபவிக்கிறார்கள் என்பது அறியத்தக்க உண்மை.

அனுபவிக்கட்டும். விதிவிலக்காக.....

நம்மில், மேற்கண்ட புண்ணிய ஆத்மாக்களையும், பக்தகோடிகளையும் போலப் பிறவிதோறும் புண்ணியம் மட்டுமே செய்தவர்கள் இருக்கிறார்கள.  காமாட்சிபுரத்துச் சிறுமிக்கு நேர்ந்த அவலம் அவர்களின் வீட்டுச் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் நேராது; ஒருபோதும் நேராது; நேரவே நேராது. காரணம்..... 

அவர்கள் வழிபடும் கடவுள்  அவர்களை ஒருபோதும் கைவிட மாட்டார் என்பதே!!! ஹ...ஹ...ஹ!!!
--------------------------------------------------------------------------------------------------


Thursday, October 4, 2018

நான் தீர்க்கதரிசி!!!!!

''சாத்தானே சக்தி வாய்ந்த கடவுள். அவரையே நான் வழிபடுகிறேன்'' என்று சொன்ன நம்பர் 1 அறிவுஜீவி மானுடன்[தீர்க்கதரிசி] நானாகத்தான் இருப்பேன்[என் பழைய சில பதிவுகளை வாசித்து அறிந்திடுக].

நம் முன்னோர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கடவுள் மிக மிக மிக.....நல்லவர் என்பதால், நோய், வறுமை, முதுமை, மரணம் என்பன போன்ற நாம் அனுபவிக்கும் கணக்கற்ற துன்பங்களுக்கு அவர் காரணமல்ல; அனைத்துக் கெட்ட நிகழ்வுகளுக்கும் 'சாத்தான்' என்னும் தீய சக்தியே மூலகாரணம் என்பது என் நம்பிக்கை[இக்கருத்தை ஏற்கனவே என் பதிவுகளில்  வலியுறுத்தியுள்ளேன்].

நல்லவரான கடவுளைக் கருத்தில் கொள்ளாமல் தீமையின் வடிவமான சாத்தானைத் தொழுது வாழ்தலே[பேரழிவுகளுக்குக் காரணமான நீரையும் நெருப்பையும் காற்றையும் கடவுள்களாக்கி நம் மூதாதையர் வழிபட்டதை நினைவுகூர்க] மனிதகுலம் சுகித்திருப்பதற்கான ஒரே வழி என்றும் தெளிவுபடுத்தியுள்ளேன்[சாத்தான் கெட்டவரே ஆயினும், மனப்பூர்வமாய் அவரைப் புகழ்ந்து வழிபடும்போது கருணை வடிவினராய்  மாறிவிடுவார் என்பதை உய்த்துணர்க].

நான் பரிந்துரைத்த இவ்வழியை மனிதகுலம் முன்னரே உணர்ந்து  பின்பற்றியிருந்தால், இம்மண்ணில் எண்ணற்ற மதக்கலவரங்கள் நடந்திரா. கணக்குவழக்கற்ற மனித உயிர்கள் பலியாகியிரா. மனிதகுலத்திற்கு வேறு எவ்விதத் தீங்கும் நேர்ந்திராது என்பதையெல்லாம் நுணுகி ஆராய்ந்து அறிந்திடுக.

சாத்தான் வழிபாட்டை அனைத்து மதத்தவரும் ஏற்றிருந்தால்.....

'இந்துக் கோயில்கள் சாத்தானின் இருப்பிடம்' என்று மத மோதல்களை ஏற்படுத்தும் வகையில் கிறித்துவ மதபோதகர் மோகன் சி.லாசரஸ் பேசியிருக்க மாட்டார்[ஊடகங்களிலும், தமிழ் தினசரி[03.10.2018] உட்பட, பல நாளிதழ்களிலும் இது குறித்த செய்தி வெளியாகியுள்ளது. கோவை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உட்படப் பல ஊர்களில் 11 வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளன]. லாசரஸ் பேச்சு....
https://youtu.be/MMPHDD2xxHo

லாசரஸ் அவர்களை மேற்கண்டவாறு பேசத் தூண்டியது தூயவரான கடவுள் அல்ல; வேறு எதுவுமல்ல;  சாத்தானே என்பது என் உறுதியான நம்பிக்கை. இந்துக் கோயில்களில் குடியிருப்பதாக அவர் குறிப்பிட்ட சாத்தான், அவர் நாக்கிலும் குடியேறியிருந்ததை அவர் அறிந்திடவில்லை.

இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. ''இந்துக் கோயில்கள் குறித்து நான் அவதூறாக ஏதும் பேசவில்லை; என்னைப் பேச வைத்தது என் நாவில் குடியேறியிருந்த சாத்தானே'' என்று வருத்தம் தெரிவிப்பதன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம்.

அன்பர்களே,

இனியும் இம்மாதிரி கெட்ட நிகழ்வுகள் இம்மண்ணில் இடம்பெறாமலிருக்க.....

சாத்தானைப்  போற்றிப் புகழுந்திடுவீர்!! துதிபாடி மகிழ்ந்திடுவீர்!!!

''போற்றி போற்றி! சாத்தானின் திருவடி போற்றி!!''..... ஹி...ஹி...ஹி!!!
=======================================================================


Tuesday, October 2, 2018

கடவுளை மற! 'கக்கன்' அவர்களை நினை!!

#திரு.கக்கன் அவர்களை அமைச்சராகவும் அமைச்சர் பதவியில் இல்லாமலும் நான் பார்த்துப் பழகியிருக்கிறேன். எப்போதும் எளியவராகவே வாழ்ந்து காட்டிய பெருந்தகை அவர். அவரிடம் நான் கற்றது இந்த எளிமைதான்.

நானும் அவரும் ஒரு சமயம் ஒரே ரெயில் பெட்டியில் பயணம் செய்ய நேர்ந்தது. பயணம் முடிந்து மதுரை விருந்தினர் விடுதியில் ஒன்றாகத் தங்கினோம்.

நான் அக்காலத்தில் மிகவும் ஆடம்பரப் பிரியனாய் இருந்தேன். எலெக்ட்ரிக் ஷேவரில்தான் முகச்சவரம். ஒடிகோலன் கலந்த 'after shave lotion', ஸ்நோ, பவுடர் இத்யாதிகளுடன் நான் இருப்பதைப் பார்த்துக் களங்கமில்லாமல் ஒரு குழந்தைபோல் சிரித்தார் திரு.கக்கன்.

''என்னங்க, சவரம் பண்றதுக்கு இவ்வளவு சிரமப்படணுமா?'' என்று சொல்லி, ஒரு பிளேடை எடுத்தார்; குறுக்கில் பாதியாக உடைத்தார்; ஒரு பாதியால் மழமழவென்று சவரம் செய்து முடித்தார். ஒரு கீரல், ஒரு வெட்டு, சிறு ரத்தக் கசிவு என்று எதுவும் இல்லாமல் அவர் சவரம் செய்த லாகவத்தை நான் பெரிதும் ரசித்தேன்.

அவர் சொன்னார்: ''இது நான் ஜெயிலில் இருந்தபோது பழகினது. அரை பிளேடு போதும். அஞ்சு நிமிசத்தில் சவரம் பண்ணி முடிச்சுடலாம்.''

அவரின் இதமான குரலும், கள்ளமில்லாச் சிரிப்பும் எப்போதும் என்னால் மறக்க முடியாதவை.
மேற்கண்ட நிகழ்வை நினைவுகூர்ந்தவர் மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன். நூல்: ஜெயகாந்தனின், 'யோசிக்கும் வேளையில்...'; ஶ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை - 6000 017.
------------------------------------------------------------------------------------------------------------------
பதிவின் தலைப்புக்காக ஜெயகாந்தனைக் கோபிக்காதீர். ''கடவுளை மற. மனிதனை நினை'' என்னும் பெரியோர் வாக்கில், மனிதனை நீக்கி, கக்கன் அவர்களை இணைத்தவன் நான்...நான்தான்! என்னை நீங்கள் கோபிக்கலாம்; நிந்திக்கலாம்!!

முழுச் சோம்பேறியாய், மூக்குப் பிடிக்கத் தின்னுட்டு, வெற்று உபதேசம் பண்ணினவனையெல்லாம் கடவுள் அவதாரம்கிறான்; கடவுள்ங்கிறான்! பெரிய பெரிய பதவி வகித்தும் நேர்மை தவறாம வாழ்ந்த கக்கன் அவர்களை நான் 'மனிதன்' என்கிறேன். இது தவறல்லவே?

Monday, October 1, 2018

'அவர்கள்' கடவுளின் சாதி!!!

பணக்காரன் ஏழையாவதும், ஏழை பணக்காரன் ஆவதும் நடைமுறை சாத்தியமாக உள்ளது. சாதியைப் பொரு[று?]த்தவரை இந்த 'மேல் கீழ்'களில் மாற்றங்கள் நிகழ்ந்ததே இல்லை!

'அவர்கள்', அன்று முதல் இன்றுவரை 'மேல் சாதி'க்காரர்கள்தான். இருந்துவிட்டுப் போகட்டும். சாதி குறித்து விமர்சிக்க அல்ல இந்தப் பதிவு. வேறு எதற்கு?

ஒரு மடத்தின் தலைவராக இருந்த ஒரு மனிதரை[நல்லவர்தான்] 'மகா பெரிய மனிதர்' என்றார்கள் 'அவர்கள்'[நம்பர் 1 'மசாலா' வார இதழ்க்காரர்கள்]. அவரையே பின்னர் 'மகான்' ஆக்கினார்கள்; 'அவதாரம்' என்றெல்லாம் சொல்லிச் சொல்லிப் பெருமிதப்பட்டார்கள். காலப்போக்கில்.....

'நடமாடும் தெய்வம்' என்று பரப்புரை செய்ததோடு, மேலான 'கடவுள்' என்றே உருவகம் செய்தார்கள்[மனிதர்களைத் 'தூதுவர்' என்றும் 'புதல்வர்' என்றும் சொன்னவர்களை இவர்கள் மிஞ்சிவிட்டார்கள்! இவற்றையெல்லாம் கண்டிக்கும் துணிவு,  இங்குள்ள ஆன்மிகப் பேச்சாளர்களுக்கோ, பெத்த பெரிய எழுத்தாளர்களுக்கோ, கட்சித் தலைவர்களுக்கோ இல்லை].

இன்றளவும் அதை உறுதிப்படுத்தும் வகையிலான கற்பனைக் கதைகளை ஓயாமல் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆக.....

உயர்ந்த சாதிக்காரர்களாக இருந்த அவர்கள் இப்போது 'கடவுளின் சாதி'க்காரர்களாக ஆகிவிட்டார்கள்.

நானும் மேல் சாதிக்காரன்தான்[அவர்களுக்குக் கொஞ்சமே கொஞ்சம் கீழே!]. எனக்கும் 'கடவுள் சாதிக்காரன்' ஆவதற்கு ஆசைதான். ஆனால்.....

என் சாதியில் ஏழை பணக்காரன், நல்லவன் அயோக்கியன், மூடன் அறிஞன், தற்குறி இலக்கியவாதி என்று பல்வகைப்பட்ட மனிதர்களும் இருக்கிறார்களே தவிர, மகா பெரிய மனிதர் என்றோ, மகான் என்றோ, அவதாரம் என்றோ குறிப்பிடும்படியான 'மனிதர்' எவருமே இருந்ததில்லை; இப்போதும் இல்லை. 

இக்காரணத்தால், மேல் சாதிக்காரனான எனக்குக் கடவுள் சாதிக்காரனாகும் தகுதி இல்லாமல் போனது.

உங்களின் சாதி எது? 

எதுவாகவோ இருக்கட்டும், உங்களவரில் மகா பெரியவர்கள் என்றோ, மகான்கள் என்றோ, அவதாரங்கள் என்றோ போற்றுவதற்கான தகுதி உள்ளவர்கள் இருப்பின், அவர்களில் ஒருவரையேனும் கடவுள் ஆக்குங்கள். பரப்புரையின் மூலம் மக்களின் மனங்களில் அவரை நிலைநிறுத்துங்கள். இதன் மூலம்.....

இதுவரை உங்களின் சாதி எதுவாக இருப்பினும், இனியேனும், மிக மிக மிக மிக மிக உயர்ந்த கடவுள் சாதியைச் சேர்ந்தவராக நீங்கள் கருதப்படுவீர்கள். அது உங்களுக்குப் பெருமை. அதை நினைந்து நீங்கள் பெருமிதப்படலாம்.

நன்றி.

[கலப்பு மணம் குறித்த என் இளமைக்காலக் கனவைக் கருவாகக் கொண்டு நான் எழுதிய கதையை{பழசுதான்}   இணைத்திருக்கிறேன் வாய்ப்பு அமைந்தால் வாசியுங்கள்].

#காளைப் பருவத்தில், காதலித்துக் கடிமணம் புரியும் ஆசை எனக்கும் இருந்தது. ஆனால், அழகான பெண்களைச் சந்தித்த போதெல்லாம் என் பார்வை அவர்களின் கவர்ச்சிப் பிரதேசங்களில் சஞ்சரிக்க, உணர்ச்சி நரம்புகளில் காமம் சுரந்ததே தவிர, மனதில் காதல் அரும்பியதே இல்லை. “ஏன், எனக்கு மட்டும் இப்படி?” என்று கேட்டு நான் அடிக்கடி வருத்தப்பட்டதுண்டு. இனி, மேலே படியுங்கள்..........


ங்கே ‘காளைப் பருவம்’ என்று நான் குறிப்பிடுவது கல்லூரிகளில் படித்த நாட்களை.

பட்ட மேற்படிப்பை முடிக்கவிருந்த தருணத்தில் அந்த இலட்சியம் என்னைச் சிக்கெனப் பற்றிக்கொண்டது.

கலப்பு மணம்! “என் ஜாதிப் பெண்ணின் கழுத்தில் கனவிலும் தாலி கட்ட மாட்டேன்” என்று என்னைச் சபதம் மேற்கொள்ள வைத்தது இந்த இலட்சியம்தான்.
இப்படியொரு இலட்சியத்தை நான் சுமப்பதற்குக் காரணமாக இருந்தவர் எங்கள் கல்லூரி முதல்வர் மாணிக்கவாசகர்.

இரண்டாம் ஆண்டின் இறுதி வேலை நாளில் நடைபெற்ற ‘பிரியா விடை’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அவர்தான் இப்படியொரு இலட்சிய நெருப்பை, நான் உட்படப் பல மாணவர்களின் அடிமனதில் பற்ற வைத்தார்.

“சமுதாயத்தைச்  சீரழித்துக்கொண்டிருக்கும் பீடைகளில் சாதி வேறுபாடு மிக முக்கியமானது. அதை வேரோடு பிடுங்கி அழிக்கவேண்டுமென்றால் கலப்பு மணங்கள் பெருக வேண்டும். உங்களில் எத்தனை பேர் கலப்பு மணம் புரியப் போகிறீர்கள்? அந்த உயர்ந்த நோக்கத்தை இலட்சியமாகக் கொண்டவர்கள் எழுந்து நின்று மனம் திறக்கலாம்” என்று சொல்லி அமர்ந்தபோது மாணவர்கள் பலர் வீறுகொண்டு எழுந்து நெஞ்சு நிமிர்த்திச் சபதம் ஏற்றார்கள். அந்த ‘லட்சிய புருஷர்’களில் நானும் ஒருவனாக இருந்தேன்.

முதல்வர் மேடையிலிருந்து இறங்கி வந்து ஒவ்வொருவராகக் கை குலுக்க, மாணவிகள் [அவர்களில் யாரும் சபதம் ஏற்கவில்லை] கரவொலி எழுப்ப, அரங்கில் உற்சாகம் கரை புரண்டது.

ஆனால், அடுத்த சில நிமிடங்களில் சக மாணவன் குணசீலனின் பேச்சால் கரை புரண்ட உற்சாகம் காற்றோடு கலந்து மறைய, அங்கு இனம் புரியாத சோகம் பரவியது.

அவன் சொன்னான்: “எனக்கும் கலப்பு மணம் புரிய ஆசைதான். ஆனால்.....” என்று சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்தி, எல்லோருடைய முகங்களிலும் கேள்விக்குறி தொக்கி நிற்பதைக் கவனித்துத் தொடர்ந்தான்.......

“நான் ச.......ஜாதியில் பிறந்தவன். என் ஜாதியைக் காட்டிலும் அந்தஸ்து குறைந்த ஜாதி இந்த நாட்டில் இல்லை.  தாழ்த்தப்பட்ட மற்ற ஜாதிக்காரர்கள்கூட எங்களை  மதிப்பதில்லை. மண உறவும் வைத்துக்கொள்வதில்லை. நான் கலப்பு மணம் செய்துகொள்ள ஆசைப்பட்டால் அது நிறைவேறுமா?”

முதல்வர் உட்பட அங்கிருந்தவர்களில் எவருக்குமே இதற்கான பதில் தெரிந்திருக்கவில்லை.

அனைவரும் சோகம் சுமந்து பிரியா விடை பெற்றோம்.

நான் கணக்கு வழக்கில்லாமல் காதல் கவிதைகள் படித்திருக்கிறேன். கொஞ்சம் கவிதைகளும் பல கதைகளும் எழுதியிருக்கிறேன்.

காதலிப்பது என்று கோதாவில் இறங்கியபோது அந்தக் கவிதைகளும் கதைகளும் எனக்குக் கை கொடுக்கவில்லை.

நான் ஆசைப்பட்ட அழகுப் பெண்களுடன் நெருங்கிப் பழக முற்பட்ட போதெல்லாம், அவர்களின் கவர்ச்சிப் பிரதேசங்களில் என் பார்வை படர, என் உணர்ச்சி நரம்புகளில் காமம் சுரந்ததே தவிர காதல் அரும்பியதே இல்லை.

அது தனிக்கதை. இப்போது வேண்டாம். கலப்பு மண லட்சியம் காணாமல் போன கதையை மட்டும் இப்போது சொல்லி முடித்துவிடுகிறேன்.

படிப்பு முடிந்து சொந்த ஊர் போய்ச் சேர்ந்தபோதே, நான் ஏற்றிருந்த ‘கலப்பு மண’ லட்சியம் என் அடிமனதின் எங்கோ ஒரு மூலையில் பதுங்கிவிட்டது. காரணம்.........

என் கல்யாண விசயத்தில் என் அப்பா போட்ட 'வெடிகுண்டு'.

“இதோ பாருடா பரமு, நிலத்தை அடகு வெச்சுக் கடன் வாங்கித்தான் உன்னைப் படிக்க வெச்சேன். சீக்கிரம் ஒரு வேலையைத் தேடிட்டு இந்தக் கடனை அடைக்கிற வழியைப் பாரு. நிலத்தை மீட்ட அப்புறம்தான் உனக்குக் கல்யாணம் காட்சியெல்லாம்.”

இதற்கப்புறமும் கலப்பு மணக் கனவைச் சுமந்து திரிவது மிகவும் சிரமமாகத் தெரிந்தது.

இரண்டு மாத கடின முயற்சியின் பலனாகக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தேன். ஒரு மாத ஊதியம் வாங்கியவுடனே அடிமனதில் பதுங்கியிருந்த கலப்பு மண லட்சியம், வெண்ணிற ஆடைத் தேவதையாய் என்னைச் சுற்றிவர ஆரம்பித்தது.

அப்பாவுக்குத் தெரியாமல், ஒரு தரகரைச் சந்தித்து என் இலட்சியத்தை எடுத்துரைத்தேன்.

”முடிச்சுடலாம்” என்றவர், சில கேள்விகளை முன் வைத்தார்.

“பொண்ணு ரொம்ப அழகா இருக்கணுமா, இல்ல ‘தேவலாம்’ போதுமா?”

“வேறு ஜாதின்னா..... தாழ்த்தப்பட்ட வகுப்பா இருந்தாலும் பரவாயில்லையா?”

“வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கணுமா, வேண்டாமா?”

எனக்குள், இலட்சியம் இருந்த இடத்தை இப்போது குழப்பம் கைப்பற்றியது.

“யோசித்துச் சொல்வதாகத் தரகரை அனுப்பி வைத்தேன்.

அப்புறமென்ன, கல்லூரியில் பாடம் நடத்திய நேரம் போக மிச்ச நேரமெல்லாம் இதே சிந்தனைதான்.

சபதம் போட்ட சக மாணவர்களில் எத்தனை பேருக்குக் கல்யாணம் ஆகியிருக்கும்? எல்லாமே கலப்பு மணமாக இருக்குமா? என்ற கேள்விகளும் அவ்வப்போது தலை காட்டின. குணசீலனை நினைத்தும் மனம் வருத்தப்பட்டது.

மாதங்கள் கரைந்துகொண்டிருந்தன.

ஒரு ஞாயிற்றுக் கிழமையின் காலைப் பொழுதில் தந்தை அழைத்தார்.

“பரமு, உனக்காக நான் பட்ட கடனை நீ அடைக்க வேண்டியதில்லை. அதுக்கு ஒரு வழி பிறந்துடிச்சி” என்று செல்லமாக என் முதுகில் தட்டினார்; சொன்னார்:

“பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருப்பா. நமக்குத் தூரத்துச் சொந்தம். நீ மறுத்துப் பேச மாட்டேங்கிற நம்பிக்கையில் வாக்குறுதி குடுத்துட்டேன். வர்ற தையில் கல்யாணம். பொண்ணு அம்பது பவுன் நகையோட, அம்பதாயிரம் பொட்டிப் பணத்தோட நம்ம வீட்டு வாசல்படி மிதிக்கப் போறா. உன் எதிர்கால மாமனார் போன வாரமே உனக்காக ஒரு புல்லட் பைக் புக் பண்ணிட்டார். சந்தோசம்தானே?”

நான் ஒரு வாரம்போல மனத்தளவில் துக்கம் அனுஷ்டித்தது என்னவோ உண்மை. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய் மனதைத் தேற்றிக்கொண்டேன்.

அடுத்த பிறவியில் என் கலப்பு மண இலட்சியத்தை நிறைவேற்றுவதாகச் சபதம் செய்துகொண்டேன். [சிரிக்கிறீங்கதானே? வேண்டாங்க. கடவுள் நமக்குப் பல பிறவிகளைக் கொடுத்தது வேறு எதுக்கும் இல்லீங்க. இந்த மாதிரி நிறைவேறாத இலட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ளத்தான்].

அப்புறம்?

அப்புறமென்ன, ராயல் என்ஃபீல்டு புல்லட்டில் [அந்தக் காலத்தில் இதுக்கு இருந்த மவுசு சொல்லி மாளாதுங்க] புது மனைவியோடு ஒவ்வொரு விடுமுறையிலும் உல்லாசப் பயணம்தான். “உல்லாச உலகம் எனக்கே சொந்தம்னு” அப்போ அடிக்கடி முணுமுணுத்த பாடலை இப்பவும் முணுமுணுக்கிறேன்னா பாருங்களேன்.........

இங்கே ஒரு குறுக்கீடு..........

“ஏய்யா, ‘கனவில் கரைந்த என் காதல் கல்யாண ஆசை!’னு தலைப்பே கொடுத்திட்டியே. அப்புறம் எதுக்கு இந்த வழவழா கொழகொழா கதை?"ன்னு நீங்க இப்போ கோபப்படுறீங்கதானே?

கொஞ்சம் பொறுங்க. நான் சொல்ல வந்ததைக் கடைசியா சொல்லி முடிச்சிடுறேன். அதைச் சொல்லத்தான் நீட்டி முழக்கிய இந்த என் இலட்சியக் கதை.

ஒரு ஞாயிற்றுக் கிழமை நாளில், என் இளம் இல்லக் கிழத்தியோடு ஏற்காடு மலையைச் சுற்றிப் பார்க்கப் போயிருந்தேன்.

முதலில் லேடீஸ் சீட் போனோம். அங்கேதான் எதிர்பாராம குணசீலனை அவன் மனைவியுடன் சந்தித்தேன். கை குலுக்கிக் கொண்டோம்.

அவன் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, ‘உன் இலட்சியம் நிறைவேறிடிச்சிதானே?”

என்ன சொல்வது?

அசடு வழிய, “தோத்துட்டேன்” என்றேன்.

“அன்னிக்கே சொன்னேன் இல்லையா? எனக்கும் தோல்விதான். இவள் என் ஜாதிக்காரிதான்” என்றபடி தன் மனைவியைத் தொட்டுக்காட்டிச் சிரித்தான்.

படிப்பை முடித்த பிறகு ஏற்பட்ட அனுபவங்களைப் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டிருந்தபோது அதைக் கவனித்தேன்.

அவன் மனைவிக்கு ஒரு கால் ஊனம்.

“குணசீலன், நீ ஜெயிச்சுட்டே” என்றேன்.

முதலில் ஏதும் புரியாமல் விழித்தாலும் என் பாராட்டுக்கான காரணம் புரிந்தபோது, “இது இல்லேன்னா அது. அது இல்லேன்னா இது. வாழ்க்கையில் இலட்சியங்களுக்கா பஞ்சம்?” என்று சொல்லி வாய்விட்டுச் சிரித்தான்; விழிகளில் அன்பு பொங்க ஊனமுற்ற தன் துணைவியின் தோள்களை வருடிக் கொடுத்தான். இப்போது...........

என்னைவிடச் சற்றே உயரம் குறைந்த அவன், நான் அண்ணாந்து பார்க்கும் வகையில் விஸ்வரூபம் எடுத்திருந்தான்.

பிரிய வேண்டிய கட்டம் வந்ததும் இரு கரம் குவித்து வணக்கம் சொன்னேன்.

அது வெறும் சம்பிரதாயமான வணக்கம் அல்ல; லட்சியப் பிடிப்புள்ள ஓர் உன்னத மனிதனுக்கு நான் செலுத்திய மரியாதையின் வெளிப்பாடு.#

Friday, September 28, 2018

'வசவு'களை மானாவாரியாய் எனக்கு வாரி வழங்கிய பழைய இடுகை!!!

பதிவின் தலைப்பு:                    கடவுளின் 'தன்விவரக் குறிப்பு'!

1] பெயர்: ...................................கடவுள்.


2] சிறப்புப் பெயர்கள்:............     சொல்லி மாளாது!
[பக்தர்கள் சூட்டியவை]              [’ஆதி மூலன்’,  'ஆபத்பாந்தவன்’
                                                           ‘கருணைக் கடல்’ என்றிவ்வாறான     
                                                             நாமங்களையும், மதம்
                                                             சார்ந்த பெயர்களையும் நினைவு
                                                             கூர்க]

3] பிறந்த தேதி:...........................தான் அவதரித்த அந்தப் புனித
                                                             மான நாளைக் கண்டறிய, யுக      
                                                             யுக யுகங்ளாக ...கோடி கோடி 
                                                             கோடி ஒளி ஆண்டுகளாகச் 
                                                             சிந்தித்துக் கொண்டிருக்கிறார்
                                                             கடவுள்.

4] கல்வித் தகுதி:......................அனைத்தும் அறிந்தவர்.

5] தொழில்:..............................அளந்தறிய இயலாத, விரிந்து
                                                           பரந்த ‘வெளி’யில் கணக்கில் 
                                                           அடங்காத கோள்களையும் 
                                                           நட்சத்திரங்களையும் பிற
                                                           வற்றையும் படைத்து உலவச்
                                                           செய்து, அவ்வப்போது அவற்றை 
                                                           மோத விட்டு, அவை வெடித்துச் 
                                                           சிதறும் கண்கொள்ளாக் காட்சி
                                                           யைக் கண்டுகண்டு ரசிப்பது.      
                                                     
                                                           மண்ணுலகில், உயிர்கள் ஒன்றோடு
                                                           ஒன்று மோதித் துன்புற்று அழிவதை
                                                           யும், வறுமை, நோய் போன்றவற்றால்                                                                               சித்திரவதைக்கு  உள்ளாவதையும்                                                                           வேடிக்கை பார்ப்பது.                                 
                                                                 
6] நண்பர்கள்:..........................காணிக்கை செலுத்தியும், நேர்த்திக் 
                                                          கடன்களை நிறைவேற்றியும், “இதைக் 
                                                          கொடு...அதைத் தா” என்று தொல்லைக்கு
                                                          உள்ளாக்காதவர்கள்.

7] நல்ல நண்பர்கள்:.............    அடுக்கடுக்கான வேதனைகளுக்கு
                                                          உள்ளானாலும் கடவுளை ஏசாமல்
                                                          “எல்லாம் என் தலைவிதி” என்று 
                                                          தன்னைத்தானே நொந்து கொண்டு    
                                                          நடைப் பிணமாய்க் காலம் கழிப்ப
                                                          வர்கள்.

8] எதிரிகள்:.............................கடவுள் இல்லை என்று சொல்லி, 
                                                         மூடநம்பிக்கைகளைச் சாடும்
                                                         நாத்திகர்கள் அல்ல.

                                                         கடவுளைக் காப்பதாகச் சொல்லிக்
                                                         கொண்டு, மாற்று மதத்தவர்களைக்
                                                         கொன்று குவித்து, அவர்களின் 
                                                         சொத்துகளை நாசப்படுத்தி, மிருகங்
                                                         களாய்த் திரியும்  மதவெறியர்கள்.

9] நிரந்தர எதிரிகள்:............    “நானே கடவுள்” என்று சொல்லித்
                                                         தினவெடுத்து அலையும் புதுப்
                                                         புது ‘அவதாரங்கள்’.

10] இப்போதைய கவலை:        தம் படைப்பில் நேர்ந்த தவறுகளை
                                                         நீக்குவதற்காக, மனிதனுக்குத் தந்த
                                                         ஆறாவது அறிவை, அவன் தன் 
                                                         சுயநலத்துக்காகப் பயன்படுத்துவது.

11] நிரந்தரக் கவலை:.........    படைத்தல், காத்தல், அழித்தல் 
                                                        ஆகிய தமக்குரிய முத்தொழிலை
                                                        இன்னும் எவ்வளவு காலத்துக்குச்
                                                        செய்வது?*************************************************************************************************
மிக முக்கிய குறிப்பு:
கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவர் மனதைப் புண்படுத்துவது மட்டுமே இப்பதிவின் நோக்கம்; அவருடைய பக்தர்களின் மனங்களை அல்ல...அல்லவே அல்ல!