மனதை ஒருமுகப்படுத்தி, அதை நம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான பயிற்சிதான் 'தியானம்' என்கிறார்கள். ஆனால், உடம்பின் இயக்கத்தை முற்றிலுமாய்த் தவிர்த்து மனதை ஒருமுகப்படுத்துவது குறித்துத் தெளிவான விளக்கம் தந்தவர் எவருமில்லை.
தான் வழிபடும் கடவுள் பெயரை மட்டுமே நினைவில் இருத்தித் தொடர்ச்சியாக, குறிப்பிட்ட நேரம்வரை அதை உச்சரித்துக்கொண்டிருப்பது தியானம் என்கிறார்கள். ஆனால், கடவுள் பெயரை உச்சரிப்பதால் பயன் விளையும் என்பது இந்நாள்வரை உறுதிப்படுத்தப்படவில்லை.
தியானம் பற்றிச் சற்றே மனநிறைவு தருவதான ஒரு 'ஜென்' கதையை அண்மையில் படிக்க நேரிட்டது.
நீண்ட நேரம் கண் மூடித் தியானத்தில் ஆழ்ந்துவிடுவது ஜென் குருக்களின் வழக்கமாக இருந்தது. இதன் பொருட்டுத் தம் உறக்கத்தைத் தவிர்த்தலும் உண்டு.
ஆனால், மேற்குறிப்பிட்ட ஜென் குரு மட்டும் இதற்கு விதிவிலக்காக இருந்தார்.
''நீங்கள் ஒரு ஜென் குரு. மற்ற குருமார்களைப் போல நீங்கள் அமர்ந்த கோலத்தில் கண்மூடித் தியானம் செய்வதில்லையே, இது சரியா?'' என்று கேட்டார்கள் அவருடைய சீடர்கள்.
''கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்கிறேன் என்பவர்களால் எவ்விதப் பயனையும் பெறுதல் இயலாது; ஞானி ஆதலும் சாத்தியமில்லை'' என்று புன்னகைத்தவாறே சொன்னார் குரு.
''அவ்வாறாயின் தியானம் செய்வதென்பது ஒரு தவறான நம்பிக்கையா?'' -கேட்டார்கள் சீடர்கள்.
''தவறல்ல. எந்தவொரு செயலையும் 100% மனம் ஒன்றிச் செய்வதே தியானம். ஒவ்வொரு நாளும் நான் செய்கிற செயல்களை ஒருமித்த மனதுடன் செய்கிறேன். ஆடினாலும், ஓடினாலும், உணவு உண்டாலும், தேநீர் அருந்தினாலும், இவை போல எந்தவொரு செயலில் ஈடுபட்டாலும் சிறிதும் கவனச் சிதறல் இல்லாமல் செய்கிறேன். அதனால், முழு ஈடுபாட்டுடன் நான் செய்யும் செயல்களால் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கிறது. எனவே, தனியாகத் தியானம் என்று எதையும் நான் செய்வதில்லை'' என்றார்.
சீடர்கள் முழு மனநிறைவுடன் நன்றி சொல்லி அவரை வணங்கினார்கள்#
------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: 'ஞானம் தரும் ஜென் கதைகள்' என்னும் தலைப்பில் கதைகளைத் தொகுத்தளித்த 'அம்பிகா சிவம்' அவர்களுக்கு. ('கிளாசிக் பப்ளிகேசன்ஸ்', சென்னை - 600 108.)
------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: 'ஞானம் தரும் ஜென் கதைகள்' என்னும் தலைப்பில் கதைகளைத் தொகுத்தளித்த 'அம்பிகா சிவம்' அவர்களுக்கு. ('கிளாசிக் பப்ளிகேசன்ஸ்', சென்னை - 600 108.)