ஞாயிறு, 2 டிசம்பர், 2018

இவர்களைக் கடவுள் 100% தண்டிப்பார்?!?!

நாமக்கல் அருகேயுள்ள, மோகனூர் காந்தமலை முருகன் கோயில் எதிரில், சிவமகனூர் அருவுரு திருவுரு சித்தர் பீடங்கள் உள்ளன. இவற்றுக்கான 'நன்னீராட்டு விழா' 30.11.2018 அன்று நடந்திருக்கிறது.

தமிழகத்திலுள்ள ஆயிரக்கணக்கான கோயில்களில், இன்றளவும் 'தெய்வ பாஷை'[?]யான சமற்கிருதத்தில்தான் வழிபாடு நிகழ்த்தப்படுகிறது. உலக அளவில், தாய்மொழிப் பற்றில் தலைசிறந்தவர்கள்[ஹி...ஹி...ஹி!] என்று புகழப்படும் தமிழர்கள் இதனை எதிர்த்துப் போராடாததால், தமிழ்நாட்டில் ஆங்காங்கே அவ்வப்போது நிகழ்த்தப்பெறும் கும்பாபிஷேக[குடமுழுக்கு...தமிழ் பிழைத்துப்போகட்டும்!] நிகழ்வுகளில், சமற்கிருதத்தில் வேதமந்திரங்கள் ஓதப்படுகின்றன.

கடவுள்/கடவுள்கள் விரும்புவதும் வடமொழியிலான வழிபாடே என்பதைக் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துத் தோன்றிய பரம்பரையில் வந்த பச்சைத் தமிழர்கள் ஆணித்தரமாக நம்புகிறார்கள் போலும்!

இன்றெல்லாம் கடவுளராகப் போற்றப்படும் சித்தர்களுக்கான பீடங்களுக்கு.....

தமிழ்நாட்டிலுள்ள ஒரு சிறிய கிராமத்து மக்கள், தமிழ் முறைப்படி நன்னீராட்டு விழா நடத்தியிருக்கிறார்கள் என்பது வியப்பூட்டுவதும் மகிழ்வூட்டுவதுமான அரிய செய்தியாகும்[காலைக்கதிர் நாளிதழ், 01.11.2018].

அபிஷேகம், ஆராதனை போன்றவற்றைத் தவிர்த்து, தமிழ் முறைப்படி நன்னீராட்டு விழா நிகழ்த்திய சிவமகனூர் ஊர் மக்களைப் பாராட்டுவோம்.

சில நூறுகளை உள்ளடக்கிய இந்த ஊர் மக்களைப் பார்த்தாவது, ஏழு கோடிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான தமிழர்கள் திருந்துவார்களா?!

காத்திருப்போம்.