கடவுளின் ‘இருப்பு’ குறித்து ஆராய்வதும், மூடநம்பிக்கைகளைச் சாடுவதும், மனித நேயம் போற்றும் படைப்புகளை வெளியிடுவதும் இத்தளத்தின் முதன்மை நோக்கங்கள் ஆகும்.

புதன், 23 ஏப்ரல், 2014

விவேகானந்தரின் புரியாத 'கடவுள் கொள்கை'!!!

#"நம் மக்களை வாழ வைப்பது மதமல்ல; தொழில் கல்வியே" என்று அடித்துக் சொன்னவர்; "ஏழைகளுக்கு உணவும் உடையும் வேண்டும். ஜாதிக் கொடுமைகள் ஒழிய வேண்டும்" என்றெல்லாம் மேடைதோறும் முழங்கியவர்;  இந்தியாவைப் புனித மண்ணாகக் கருதியவர்;  இளைய தலைமுறையினரின் சிந்தனையில் புதிய அலைகளை உருவாக்கியவர்...#  என்றிப்படி, விவேகானந்தர் பெற்ற சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால்.....

அவர் கொண்டிருந்த கடவுள் கொள்கை மட்டும் நம்மை மண்டை காய வைக்கிறது!

சிறுவனாக இருந்தபோதே நரேந்திரனுக்கு [விவேகானந்தர்] 'தியானம்' செய்வதில் ஈடுபாடு இருந்ததாம். கடவுளைக் காண வேண்டும் என்ற வெறி அவரை ஆட்டிப் படைத்ததாம்.

காணும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டே 'கடவுள் ஒருவரே' என்ற பிரம்மசமாஜ  கொள்கைகளைக் கடைபிடித்தார் என்கிறது அவர் வரலாறு.

ஒரு கட்டத்தில், அதில் திருப்தியடையாமல், "கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர் உண்மையான வழிபாட்டுக்குச் செவி மடுத்து, பக்தன் முன் தோன்ற வேண்டும்" என்று நினைத்தார்.

" இறைவா, உன் உண்மையான வடிவத்தைக் காண என்னைத் தகுதி உடையவன் ஆக்கு" என்று தினம் தினம் அவரை வேண்டினார். பலன் இல்லை.

அறிஞர்கள், மதத் தலைவர்கள் என்று யாரைக் கண்டாலும், "கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?" என்று கேட்டார். பதில் இல்லை.

கடவுளைப் பார்த்தவர் என்று சொல்லப்படும் ராமகிருஷ்ணரைச்[பரமஹம்ஸர்] சந்தித்த போது அவரிடமும் இதே கேள்வியை முன் வைத்தார்.

ராமகிருஷ்ணர், ‘உன்னை எப்படிப் பார்க்கிறேனோ, உன்னிடம் எப்படிப் பேசுகிறேனோ; அதே போல, கடவுளை உனக்கும் காட்டுகிறேன்" என்றார்.

காட்டினாரா அந்த அவதாரம்?

ஊஹூம்!

தொண்டைப் புற்றுநோயால் அவதிப்பட்டுத் தன் 33 ஆம் வயதில் இறந்த அந்த வினாடிவரை காட்டவில்லை! 39 வயதுவரை வாழ்ந்த இந்த வீரத் துறவி விவேகானந்தரும் அந்த மகான் மூலம் கடவுளைத் தனது   இரு கண்களாலும் பார்த்ததாக அறிவிக்கவே இல்லை.

ஆனால், உணர்ந்ததாக மட்டுமே  சொல்கிறார்.

"உன்னை எப்படிப் பார்க்கிறேனோ, உன்னிடம் எப்படிப் பேசுகிறேனோ அதே போலக் கடவுளைக் காட்டுகிறேன்" என்று சொன்னாரே,  அது என்ன பொய்யா மெய்யா?

100% பொய்தானே?

அவதாரங்கள் இப்படிப் பொய் சொல்வது தகுமா? அடுக்குமா?

இதை விடுங்க.

தன்  குரு  மூலம் 'கடவுளை உணர்ந்தேன்' என்கிறாரே விவேகானந்தர் , அது எப்படிச் சாத்தியமாயிற்று?

அவரே சொல்கிறார். படியுங்கள்.

".....அன்று அவர் [ராமகிருஷ்ணர்]தொட்ட போது முற்றிலுமாய் என் புற உணர்வை இழந்தேன்...... வண்டிகள் வந்தன. ஆனால், மற்ற நேரங்களைப் போல் ஒதுங்க வேண்டும் என்று தோன்றவில்லை. அந்த வண்டி எதுவோ அதுவே நான் என்று தோன்றியது. என் கைகால்கள் உணர்வற்றவை போலிருந்தன. சில வேளைகளில் சாப்பிடும்போதே தரையில் சாய்ந்துவிடுவேன். என் தாய் பயந்தார். எனக்குப் பயங்கர நோய் வந்துள்ளது என்று நினைத்தார்...."

அவர் தாய் சொல்வது போல, விவேகானந்தர் மனநோய்க்கு ஆளாகியிருக்கிறார். அதன் காரணமாகத் 'தன் நிலை'  இழந்திருக்கிறார். இவ்வாறு தன்னிலை இழப்பதைக் கடவுளை உணர்ந்த ஒரு நிலை எனக் கருத முடியுமா? 

கடவுளை உணர்ந்ததாகச் சொல்லும் அவர், அவ்வாறு உணர்ந்த அனுபவத்தையாவது பிறர் அறிய / உணர விவரித்திருக்கிறாரா?

இல்லையே!

'ஏழைகளுக்காகக் கடவுள் ஏதும் செய்ததில்லை; அவர் இருப்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை என்று காரசாரமாகப் பேசிய விவேகானந்தர் எப்படி மனம் மாறினார்?

“ஒரு விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத, ஓர் அநாதையின் வயிற்றில் ஒரு கவளம் சோற்றை இட முடியாத கடவுளிடத்திலோ, சமயத்திலோ எனக்குக் கொஞ்சம்கூட நம்பிக்கை கிடையாது” என்றாரே , அப்புறம் எப்படி தான் காணுகிற ஒவ்வொரு பொருளும் கடவுளே என்றார்?

கடவுளின் அவதாரமாகக் கருதப்படும் ராமகிருஷ்ணர், புற்று நோய்க்கு ஆளானது ஏன்? அதிலிருந்து விடுபட முடியாமல் போனது எதனால்?

 “மனிதன் தனது வாழ்க்கையைத் தானே உருவாக்கிக்கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக்கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல” என்று சொல்லித் 'தலைவிதி' தத்துவத்தை எதிர்த்தவர், பின்னர் "மனிதனே கடவுள்" [மனிதனை மனிதனாகவே பார்க்கலாமே. கடவுளை எதற்கு இழுக்கிறார்?] என்கிறார். ஏன் இந்த முரண்பாடு?

கேள்விகள் என்னுடையவை. பதில்கள் உங்களுடையவை; உங்கள் மனப்பக்குவத்திற்கேற்ப.

***************************************************************************************************************
விவேகானந்தர் பற்றிய தகவல்களைப் பெற , பசுமைக்குமாரின் 'விடிவெள்ளி விவேகானந்தர்' [அறிவுப் பதிப்பகம், சென்னை] என்னும் நூலும், இணையப் பதிவுகளும் உதவியாக இருந்தன. சில தகவல்கள் ஏற்கனவே பலராலும் அறியப்பட்டவை.
***************************************************************************************************************
திங்கள், 14 ஏப்ரல், 2014

கடவுளின் மரணம்........... ஓர் அனுமானம்!!!!!!!!!!!!!!!!!!!!!கடவுள்  இருக்கட்டும், முதலில் 'அனுமானம்' என்றால் என்னவென்று புரிந்துகொள்வோம். இதை 'யூகம்', அல்லது, 'உய்த்துணர்தல்' என்றும் சொல்வார்கள்.

'Inference is the act or process of deriving logical conclusions from premises known or assumed to be true'  என்கிறது Wikipedia, the free encyclopedia.         தமிழில்..........

'அனுமானம்' என்பது, 'உண்மை' என அறிந்தவற்றிலிருந்து அறியாதன  பற்றி 'விவாதித்து' ஒரு முடிவுக்கு வருதல்'.

நெருப்பிலிருந்து புகை வெளியாவதைப் பார்க்கிறோம். இது ஒரு காட்சி அனுபவம். புகையை மட்டுமே காண நேர்கிற போதுகூட  அதற்கு ஆதாரமாக நெருப்பு   இருப்பதை அறிகிறோம்  அல்லவா? இதற்கு 'அனுமானம்'  என்று பெயர். பொருளின் 'தன்மை' பற்றியது இந்த அனுமானம்.

பூவின் வாசம் நம் மூக்கைத் துளைக்கிற போதெல்லாம் அதை வெளிப்படுத்தும் மலர்கள் அருகில் இருத்தல் வேண்டும் என நினைக்கிறோமே, இதுவும் அனுமானம்தான். இது, பொருளின் 'குணம்' குறித்தது.

பொருள்களின் 'தோற்றம்' குறித்தும் அனுமானங்கள் செய்யப்படுவதுண்டு.

ஒரு குயவர் மண், நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தித்  தண்டச்சக்கரம், தட்டுப் பலகை ஆகிய துணைக் கருவிகளைக் கொண்டு பானை வனைவதைப் பார்க்கிறோம். இது, நம் கண்களால் காணுகிற  ஓர் உண்மை நிகழ்வு ஆகும்.

இங்கே  பானை என்பது செயற்கையான ஒரு பொருள். அதாவது, செய்யப்பட்டது.

மண்ணால் செய்யப்பட சிலை; உலோகத்தால் உருவாக்கப்பட்ட பாத்திரம்; பேருந்து; கடிகாரம்; செல்போன்......இப்படி எத்தனையோ  செயற்கைப் பொருள்கள் இம்மண்ணில் உள்ளன. 

இம்மாதிரி செயற்கைப் பொருள்கள் அனைத்தும் மனிதரால் செய்யப்பட்டவை என்பது நாம் அறிந்த உண்மை. அல்லது, பிறர் மூலம் அறிந்த நம்பத்தக்க உண்மை.

இந்த உண்மை அனுபவம் , நம்மால் அறியப்படாத ஒரு பொருளின் தோற்றம் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படுவது உண்டு.

வானில் 'பறக்கும் தட்டு' அல்லது, அது போன்ற ஒன்று உலவுவதைப் பார்க்க நேரிட்டால், அது வழக்கமாக நாம் காணும் இயற்கைப் பொருள்களில் ஒன்றல்ல; முற்றிலும் செயற்கைப் பொருள்தான் என்று நம்புகிற போது அதைச் செய்தது யாராக இருக்கும் என்று சிந்திக்கிறோம்.

அது மனிதர்களின்  செயலல்ல என்பதை அறிகிறோம். மனித அறிவினும் மேம்பட்ட அல்லது அதற்கு இணையான அறிவு படைத்த வேற்றுக்கிரக வாசிகளின் உருவாக்கமாக இருக்கலாம் என எண்ணுகிறோம். இதுவும்  'அனுமானம்' எனப்படுகிறது. பொருளின் தோற்றம் குறித்த அனுமானம் இது.

இந்த அனுமானத்தை, ஆன்மிகவாதிகள் 'கடவுள் இருக்கிறார்' என்று சாதிப்பதற்குப் பயன்படுத்தினார்கள்; பயன்படுத்துகிறார்கள்.

செயற்கை பொருளான பானையைப் 'படைப்பு' என்றார்கள். ஒரு பொருள் படைக்கப்பட்டதென்றால் அதைப் படைத்தவன் இருந்தே தீரவேண்டும் என்றார்கள்.

இக்கருத்தைத்  துணையாகக் கொண்டு, 'இந்தப் பிரபஞ்சம் ஒரு படைப்பு. அதைப் படைத்தவர் கடவுள்' என்றார்கள்; என்கிறார்கள்.

மேம்போக்காகப் பார்த்தால் அவர்கள் வாதம் சரி என்பது போல் தோன்றும். கொஞ்சம் யோசித்தால்..........

ஒரு பொருள் படைக்கப்பட்டதென்றால் அதைப் படைத்தவர் யார் என்று அனுமானிக்க முயற்சி செய்யலாம். அதற்கு முன்னதாக, அது 'படைக்கப்பட்ட' பொருள்தானா என்று கண்டறிவது முக்கியம்.

பிரபஞ்சம் படைக்கப்பட்ட ஒன்றா?

இக்கேள்விக்கு விடை கண்ட பிறகல்லவா படைத்தவர் கடவுளா வேறு எவருமா என்று யோசிக்க வேண்டும்?

இது பற்றிச்  சிந்திக்க  ஆன்மிகவாதிகள் ஒருபோதும் முன்வந்ததில்லை. முதலில் கடவுள் என்று ஒருவரைக் கற்பனை செய்துகொண்டு, 'பிரபஞ்சம் ஒரு படைப்பு. அதைப் படைத்தவர் கடவுள்' என்று சொல்லிச் சொல்லிச்  சொல்லிப்  பெரும்பான்மை மக்களை நம்ப வைத்துவிட்டார்கள்.  

நம்ப மறுப்பவர்களைத் தொடர்ந்து சாடிக்கொண்டிருக்கிறார்கள்.

'கடவுள்' படைக்கவில்லையென்றால் வேறு யார் படைத்தது? கல்லும் மண்ணும் மரமும் மனிதர்களும் பிறவும் தாமாகவே தோன்றினவா?' என்று கேள்வி கேட்டு, கேள்வி கேட்பவரின் வாயை அடைக்க முயலுகிறார்கள்.

'அணுக்களின் சேர்க்கையால் பொருள்கள் தோன்றுகின்றன. அவற்றின் இணைப்பிலேதான் உணர்ச்சிகள் பிறக்கின்றன; உயிர்கள் தமக்குரிய சக்தியை / அறிவைப் பெறுகின்றன. மனிதன் ஆறறிவு பெற்றதும் இவற்றின் சேர்க்கையால்தான். இவை விஞ்ஞானம் கண்டறிந்த உண்மைகள். இவற்றிற்கும் மேலான உண்மைகளை அது எதிர்காலத்தில் கண்டறியும் என்பது உறுதி.

அணுக்களைத தோற்றுவித்ததே   கடவுள்தான்  என்று அவர்கள் சமாளித்தால், 'கடவுளைத் தோற்றுவித்தது யார்?' என்று வழக்கமாக முன்னிறுத்தப்படும் கேள்விக்குப் பதில் சொல்ல இயலாமல் அவர்கள் விழி பிதுங்கி  நிற்கிறார்கள். காலங்காலமாய் அந்தவொரு கேள்வியைக் கண்டுகொள்ளாமலே கடவுளின் இருப்பை வலியுறுத்த, 'பானையைக் குயவன் படைத்தான். பிரபஞ்சத்தைக் கடவுள் படைத்தார்' என்று மக்களை மூளைச் சலவை செய்துகொண்டிருப்பது மிகப் பெரிய ஆச்சரியம்.

அவர்கள் பயன்படுத்திய அதே  அனுமான உத்தியைப் பயன்படுத்திக்  கீழ்க்காணுமாறு ஒரு முடிவை நம்மால் அறிவிக்க முடியும்.

பானை என்பது ஒரு படைப்பு. அது அழியக்கூடியது. படைப்பாளியான  குயவனும் அழிந்து  போவான். அது போல, பிரபஞ்சம்  அழியக்கூடியது. அதைப் படைத்த 'படைப்பாளி'யான கடவுளும் ஒருநாள் அழிவது உறுதி.

****************************************************************************************************************** 

கீழ்க்காணும் மேற்கோள்கள் இப்பதிவுக்கு வலிமை சேர்ப்பவை ஆகும்:

'.....பானை இருந்தால் குயவன் என்பது போல், இந்த உலகம் இருப்பதால் அதனைப் படைத்த இறைவன் உண்டு என்று வாதிடும் ஆன்மீக தத்துவத்தை ஏற்க இயலாது. குயவனைக்  கண்டறிய இயலும். ஆனால், இறைவனை எங்கே கண்டறிவது?.....' சார்வாகர்கள் 


'......அனுமானத்தையே முடிவு என அழுத்தமாக கூறுவதனால் அது வெறும் அனுமான ஆய்வாகவோ யூக ஆய்வாகவோ முடிந்துவிடுகிறது. இதில் ஆய்வின் நேர்மைத் தன்மை இல்லாமல் போய்விடுகிறது. எனவே, உலகம் படைக்கப்பட்டது என்பது வெறும் 'யூகக் கோட்பாடுதான்....' கௌதம புத்தர்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

வியாழன், 10 ஏப்ரல், 2014

வயிறார்ந்த நன்றி! [சிறுகதை]

இந்தக் கதையில் எடுப்பான ‘தொடக்கம்’ இல்லை; காதலோ காமமோ இல்லை; ‘விறுவிறு’ நடை இல்லை; ‘புதிர்’ [suspense] இல்லை.....! “பின்னே என்னதான் இருக்கு?” என்கிறீர்களா? 

ஏதோ இருக்கு! பொறுமைசாலிகள் படிக்கலாம்!


                                                  வயிறார்ந்த நன்றி! 
    ['பசி'யின் படைப்பாக, மார்ச் 1997 'ஓம் சக்தி' மாத இதழில் வெளியானது]

ன்று கண்ணப்பரின் மாளிகையில் ஏழைகளுக்கு அன்னதானம்.

ஆண்டுக்கு ஐந்தாறு தடவையேனும் விசேச நாட்களில் அன்னதானம் செய்வதை வழக்கமாகக் கொண்ட அவரை, அமைச்சர் ஒருவர், “கலியுக வள்ளல்” என்று பாராட்டி நிகழ்வைத் தொடங்கி வைத்துவிட்டுப் போனார்.

உள்ளூர்ப் பிரமுகர்கள் பலரும் நேரிலும் பேசியிலும் புகழ்ந்து தள்ளினார்கள்.   

யார் என்ன புகழ்ந்தும் கண்ணப்பருக்கு மன நிறைவு இல்லை. அவையெல்லாம் மனப்பூர்வமான பாராட்டுகள் அல்ல என்பது அவருக்குத் தெரியும். யாருக்கு அன்னதானம் செய்கிறாரோ அந்த ஏழைகளால் வாயார, மனதாரப் புகழப்படுவதையே அவர் மனம் நாடியது.

தன் உதவியாளர் சுந்தரத்துடன் உணவுக்காகக் காத்திருந்த பிச்சைக்காரர் வரிசையை ஒட்டி நடந்தார்.

அத்தனை பிச்சைக்காரர்களும் எதிரே குவித்து வைக்கப்பட்டிருந்த வகை வகையான உணவுப் பண்டங்களை ஜொள் ஒழுகப் பார்த்துக்கொண்டிருந்தார்களே தவிர, கண்ணப்பரை யாருமே கண்டுகொள்ளவில்லை. இத்தனைக்கும் தம் புகைப்படம் பொறித்த வண்ண வண்ணச் சுவரொட்டிகளைத் தெருத்தெருவாய் ஒட்டச் செய்திருந்தார் அவர்.

“சுந்தரம்.” உதவியாளரை அழைத்தார் கண்ணப்பர்.

“ஐயா.”

“இந்தப் பிச்சைக்காரங்களுக்குக் கொஞ்சமும் நன்றியுணர்ச்சி இல்லை. கவனிச்சீங்களா? அவனவன் திங்கிறதுக்கு அலையுறானே தவிர  என்னை யாருமே கண்டுக்கல.”

யோசித்தார் சுந்தரம். “என்னோட வாங்க” என்று சொல்லி நடந்தார். அவரைப் பின்தொடர்ந்தார் கண்ணப்பர்.

மளிகையின் சுற்றுச் சுவருக்குள் பரந்து விரிந்து கிடந்த புல்வெளியில், சிதறல் சிதறலாக அமர்ந்து பிச்சைக்காரர்கள் பசியாறிக்கொண்டிருந்தார்கள்.

இருவரும், அவர்களைக் கடந்து காம்பவுண்டின் கேட்டை அடைந்தார்கள்; நின்றார்கள்.

வெளியேறிக்கொண்டிருந்த ஒரு பிச்சைக்காரன், “ஐயா, வாய்க்கு ருசியா விருந்து படைச்சீங்க. வயிறு நிறையச் சாப்பிட்டேன். நீங்க தீர்க்காயுசா இருக்கணும்” என்று இரு கரம் கூப்பி வாழ்த்திவிட்டுப் போனான்.

அடுத்து வந்த ஒருவன், “புண்ணியவானே, ரொம்பப் பெரிய மனசு உங்களுக்கு. உங்க குடும்பம் தழைக்கணும்” என்றான்.

இப்படியாக, உண்டு முடித்த அத்தனை பேருமே வரிசையில் நின்று கண்ணப்பரை வாழ்த்திவிட்டுப் போனார்கள்.

கண்ணப்பரின் முகத்தில் திருப்தி படர்ந்திருப்பதைக் கண்ட சுந்தரம் சொன்னார்: “பசியோட இருப்பவன் முன்னால வகை வகையா தின்பண்டங்களைக் குவிச்சி வெச்சா அவன் கவனமெல்லாம் பண்டங்கள் மேலேதான் இருக்கும். பசி தணிஞ்சப்புறம்தான் நன்றி, விசுவாசம், பாராட்டு, பக்தி எல்லாம்.”

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@வியாழன், 3 ஏப்ரல், 2014

நீதி ‘காக்கும்’ நீதியரசர் சதாசிவம்!

மேதகு நீதியரசர் சதாசிவம் அவர்களின் அண்மைக்காலத் தீர்ப்புகள் மட்டுமல்ல, அவர் வழங்கிய கடந்த காலத் தீர்ப்புகளும்கூட அவர் நீதி காப்பதில் பேரரசர் என்பதற்குச் சான்று பகர்வனவாகும். 1997 ஆம் ஆண்டின் ஓர் அபூர்வ வழக்கில் அவர் வழங்கிய ‘அறிவாண்மை மிக்க தீர்ப்பை’ நீங்கள் அறிந்திருக்கலாம்; மறந்திருக்கலாம்; அறியாதவர்களும் இருக்கக்கூடும். நம் எல்லோருக்குமான பதிவு இது.


ழக்காளர் பெயர் சாரதா; தமிழ் இலக்கியத்தில் ‘டாக்டர்’ பட்டம் பெற்றவர். பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்.

இவரும் தேவேந்திரகுல வேளாளர்[தலித்] வகுப்பைச் சேர்ந்த திரு பி.தண்டபாணி என்பவரும் 1985இல் திருமணம் புரிந்துகொண்டனர். 1988இல் வேலை கோரி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் திருமதி சாரதா பதிவு செய்தார்.

1990இல் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பித்தார்.

அவர் தாழ்த்தப்பட்டவர் அல்லர் என்று அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

‘தலித் சான்றிதழ்’ கோரி சமூக நலத்துறைக்கு விண்ணப்பித்தார் சாரதா. அவர் கோரிக்கை ஏற்கப்படவில்லை. அதன்பிறகுதான் நிவாரணம் தேடி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

சாதி ஒழிப்புக்கு முதற்படியாக உள்ள கலப்புத் திருமணம் புரிந்தோர் வாழ்க்கையில் தடைக் கற்களை ஏற்படுத்தலாமா? உற்சாகமும் ஊக்குவிப்பும் ஏற்படுத்த வேண்டியது சாதி ஒழிப்பில் ஈடுபாடுள்ள அரசின் தலையாய கடமை அல்லவா? அந்தக் கடமை, உரிமை ஆகும் வகையில் பிரகடணம் செய்யப்பட்டது உயர்நீதி மன்றத் தீர்ப்பின் மூலம்.

அந்தத் தீர்ப்பை வழங்கியவர், அப்போதைய, சென்னை உயர்நீதி மன்ற மேதகு நீதியரசர் சதாசிவம் அவர்கள்.

“ தலித் வகுப்புக்கான சலுகைகளைப் பெறுவதற்காகவே இப்பெண் ஒரு தலித்தை மணந்துகொண்டதாக வைத்துக்கொண்டாலும் அதில் என்ன தவறு இருக்க முடியும்?” என்று தம் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். 

‘அறிவாண்மை மிக்க தீர்ப்பு இது’ என்று தினமணி நாளிதழ் தலையங்கம் தீட்டியது குறிப்பிடத்தக்கது.

நீதி காப்பதில் பேரரசராக விளங்குபவர் மேதகு சதாசிவம் அவர்கள் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகம் இல்லை.

“நீதியரசர் சதாசிவம் நீடு வாழ்க!” என்று போற்றத் தோன்றுகிறது எனக்கு.

உங்களுக்கு?

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

நன்றி:         ‘ஓம் சக்தி’ மாத இதழ், மார்ச் 1997.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx