சரவணனும் குமாரும் ஓர் உள்ளாடை நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதிகள். சென்னையில் நடைபெறவிருந்த அகில இந்தியக் கருத்தரங்கு ஒன்றில் இருவரும் பங்கேற்க இருந்தார்கள். ஒரு நாள் முன்னதாகவே சென்னை சென்று விடுதியொன்றில் அறையெடுத்துத் தங்கினார்கள்.
அது முன்னிரவு நேரம். அவர்கள் சொல்லியபடி சிற்றுண்டியும் தேனீரும் வாங்கிவந்த விடுதிப் பையன், “சார், வேறு எதுவும் வேணுமா?” என்றான்.
“எதுவும் வேண்டாம்” என்றான் சரவணன்.
“எது வேணுன்னாலும் சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் விடுதிப் பையன்.
புத்தகம் வாசித்துக்கொண்டிருந்த சரவணனிடம், “எது வேணுன்னாலும்னு சொன்னானே, அந்த எது என்னன்னு புரிஞ்சுதா?” என்று கேட்டான் குமார்.
“புரிஞ்சுது.” - சுவாரசியமில்லாமல் பதிலிறுத்தான் சரவணன்.
“சரவணா, குட்டி வேணும்னு அவனைக் கூப்பிட்டுச் சொல்லட்டுமாடா?” -தயக்கத்துடன் கேட்டான் குமார்.
“வேண்டாம்.”
“இது விசயத்தில் எனக்கு முன் அனுபவம் இல்ல. உனக்கும் அப்படித்தான்னு நினைக்கிறேன். ஒரு தடவை அனுபவிச்சிப் பார்க்கலாம்டா.”
“வேண்டாம்” என்றான் சரவணன்.
“நல்லா யோசனை பண்ணிச் சொல்லுடா.”
“உனக்கு வேணும்னா சொல்லிக்கோ. எனக்கு வேண்டாம். இது விசயத்தில் நான் பலவீனமானவன். ஒருத்திகிட்டே போனா, ஒரு சில நிமிசங்களில் கதை முடிஞ்சுடும். அப்புறம் நாள் கணக்கில் ஏண்டா போனோமுன்னு வருத்தப்படுவேன்.”
“இது விசயத்தில் நீ பலவீனமானவன்னு எப்படிச் சொல்லுறே?”
“சுய அனுபவம்தான்.”
“சுய அனுபவம்னா...?” -புரிந்தும் புரியாதது போல் கேட்டான் குமார்.
“சுய அனுபவம்னா, சுய இன்ப அனுபவம்தான். இதைக்கூட நான் நினைக்கிறபடி திருப்தியா அனுபவிக்க முடியறதில்ல.” -அவனின் வார்த்தைகளில் இனம் புரியாத வருத்தம் ஊடுருவியிருந்தது.
பரிவுடன் அவனின் தோள் வருடிய குமார், “99.99% ஆண்பிள்ளைகளுக்கு இந்தப் பலவீனம் இருக்கு. கவலைப்படத் தேவையில்ல. மருந்துக் கடைகளில் இதுக்குன்னு ஊசி மருந்து, மாத்திரை, ஆயின்மெண்ட் எல்லாம் இருக்கு. அதுகள்ல எதையும் உபயோகிச்சித் திருப்தியா செய்யலாம். வாங்கி வரட்டுமா?” என்றான்; ஆவலுடன் சரவணனின் பதிலை எதிர்பார்த்தான்.
“வேண்டாம்.” என்றான் சரவணன்.
“ஏண்டா?”
“மாத்திரையையோ, ஆயின்மெண்ட்டையோ உபயோகிச்சித் திருப்தியா செய்யலாம்னு நீ சொல்லுறே. இங்கே இருக்கிறவளுக வர்றவன்கிட்டே எல்லாம் படுத்துப் படுத்து, உடம்பும் மனசும் மறத்துப் போனவளுக. இவளுக நம்ம கிட்ட எதிர்பார்க்குறது பணம் மட்டும்தான். நம்ம கிட்ட திருப்தியை எதிர்பார்க்காத ஒருத்திகூட உடலுறவு வெச்சிக்கிறதால நாமும் முழுத் திருப்தி அடைய முடியாது. அந்தத் திருப்தி நமக்குப் பெண்டாட்டியா வர்றவகிட்டே மட்டுமே கிடைக்கும்.....” -சொல்லி நிறுத்திச் சற்றே யோசனையில் ஆழ்ந்தான் சரவணன்.
இவன் பேச்சு, குமாரையும் கொஞ்சம் சிந்திக்கத் தூண்டியிருப்பதை அவனின் முகபாவனை காட்சிப்படுத்தியது. “மேலே சொல்லுடா” என்றான் அவன்.
“நீ சொல்லுற ஊசி மருந்து, மாத்திரை, ஆயின்மெண்ட் எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கிப் பயன்படுத்தலாம். மனப் பயிற்சியும், வேறு சில அந்தரங்கப் பயிற்சிகளும் இருந்தா இதெல்லாம் தேவைப்படாமலும் போகலாம்” என்று உறுதிபடச் சொன்ன சரவணன், “இந்தா, மனசைக் கட்டுப்படுத்த இதிலுள்ள பாடல்களைப் படி. கல்யாணத்துக்கு முந்தி ஒவ்வொரு இளைஞனும் படிக்க வேண்டிய புத்தகம் இது” என்று தான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தைக் குமாரிடம் நீட்டினான். அது.....
சித்தர் பாடல்களின் தொகுப்பு நூல்!