அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 13 மே, 2020

‘கொரோனா’வின் சாதனையும் போதனையும்!!!

தொற்று நோய்க் கிருமிகள் நூற்றுக் கணக்கில் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், மிக மோசமான கிருமிகளாகக் கருதப்படும் இபோலா, ’சார்ஸ், ஜிகா, நியா போன்றவற்றைப் பின்னுக்குத் தள்ளி, ‘எனக்கு நிகர் நானே’ என்று ‘வெறியாடல்’ நிகழ்த்தும் ‘கொரோனா’ வைரஸ் கிருமியை அழித்திட, இன்றளவும் எந்தவொரு மருந்தும் பயன்பாட்டுக்கு வரவில்லை.


மனிதர்கள் ஒருங்கிணைந்து செய்யும் கூட்டு வழிபாட்டின் மூலம் கடவுளின் கவனத்தை ஈர்க்கலாம்; எத்தகைய கொடிய துன்பத்திலிருந்தும் விடுபடலாம்’ என்று சொல்லிவந்தார்கள் மதவாதிகள். அவர்கள் சொன்ன கூட்டு வழிபாட்டுக்கு ‘வேட்டு’ வைத்திருக்கிறது கொரோனா.

முன்பெல்லாம், கடும் வறட்சி, கன மழை, சுனாமி என்று எது எதற்கோ கோயில்களில்  யாகம் செய்வது வழக்கமாக இருந்தது. கொரோனா தாக்குதலுக்குப் பிறகு சில கோயில்களில் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில் அனைத்துக் கோயில்களும் இன்று அடைக்கப்பட்டுவிட்டன. மூடப்பட்ட கோயிலுக்குள்தான் மீனாட்சி கல்யாணம் நடத்தப்பட்டது.

இந்துக் கோயில்களில், சாமி தரிசனம் செய்ய வாய்ப்பில்லை; விழாக்கள் இல்லை; விசேட பூஜைகளும் இல்லை என்பதோடு, கிறித்தவ, இஸ்லாமியக் கோயில்களிலும் கூட்டு வழிபாடுகளுக்கு வழியில்லாமல் போனது என்பது இன்று இந்த மண்ணில் நிகழ்ந்த அதிசயம். இந்த அதிசயத்தை நிகழ்த்தியிருப்பது கொரோனா தொற்றுக் கிருமி.

ஒட்டுமொத்த உலகையும் கலங்கடித்துக்கொண்டிருக்கிற கொரோனாவின் பலம், இப்போது இருப்பதைக் காட்டிலும் பல்லாயிரம் மடங்காக அதிகரிக்கவும் செய்யலாம். 

அரும்பாடுபட்டு மருந்துகள் கண்டறிந்து கொரோனாவையும் இன்னபிற கிருமிகளையும் அழித்தொழித்தாலும், எதிர்காலத்தில் இவற்றைவிடவும் அதீத சக்தி படைத்த கிருமிகள் தோன்றி மனித இனத்தைத் தாக்கவும்கூடும்.

பிரபஞ்சத்தில் ஆக்கச் சக்திகளைப் போலவே அழிவுச் சக்திகளும் நிறைந்து காணப்படுகின்றன என்பதையும், இதுவே இயற்கை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அவற்றை நிரந்தரமாகவும் முழுமையாகவும் அழித்துவிட இயலாது என்பதையும் நினைவில் கொள்ளுதல் வேண்டும்[ஆக்கச் சக்திகளும் அழிவுச் சக்திகளும் போர் நிகழ்த்துவதற்கான  ஒரு களம்தான் அண்டவெளி].

ஜாதி, மதம், இனம் என்றிவ்வாறான வேறுபாடுகளையும், கடவுளை வழிபடுதல், விழா எடுத்தல், யாகம் செய்தல் போன்ற மூடநம்பிக்கைகளையும் களைந்து,  மனிதாபிமானம் வளர்த்து, ஆறறிவை வளர்ப்பதில் முழுமையாய் நம்மை ஈடுபடுத்திக்கொண்டால் மட்டுமே அழிவுச் சக்திகளின் தாக்குதலிலிருந்து மனித இனம் தப்பிப் பிழைப்பது சாத்தியமாகும்.
========================================================================