வியாழன், 31 மார்ச், 2022

மருட்டும் ஆன்மா! மதி மயங்கிச் சீரழியும் மனித இனம்!!

'ஆன்மா' என்று ஒன்று இருப்பது உண்மையானால், மனித இனம் தோன்றுவதற்கு முன்பு அவை எங்கே இருந்தன? 

எப்போது தோன்றின, அல்லது தோற்றுவிக்கப்பட்டன? 

அவை இருந்தது அல்லது, இருந்துகொண்டிருப்பது பூமியிலிருந்து எவ்வளவு தொலைவில்?

எவ்வாறு இயங்கின?... இயங்கிக்கொண்டிருக்கின்றன?

ஒட்டுமொத்த ஆன்மாக்களின் எண்ணிக்கை என்ன?

சென்றடைய வேண்டிய மனித உடம்புகளை ஆன்மாக்கள் தாமே தேர்வு செய்யுமா? 

 "ஆம்" எனில், தேர்வுக்குரிய வழிமுறைகள் யாவை?

ஆன்மாக்கள் தன்னிச்சையாய்ச் செயல்படுவது சாத்தியமா? 

'அல்ல' எனின், இவற்றைக் கண்காணித்து வழிநடத்துவது எது? எவை? யார்? யாரெல்லாம்?

ஆன்மாக்களுக்கு உருவம் இல்லை என்கிறார்கள். 'உருவமே இல்லாதது, நெருப்பில் அழியாதது; நீரில் கரையாதது' என்றெல்லாம் விவரிக்கப்படுவதுமான இவற்றின் இருப்பை எப்படிக் கண்டறிந்தார்கள்?

இவற்றிற்கு உருவம் இல்லையெனினும் ஆற்றலேனும் உண்டா?

அதை இவை எவ்வாறு பெறுகின்றன?

அணுக்களிலிருந்தா, நேரடியாகக் கடவுள் என்று சொல்லப்படுபவரிடமிருந்தா?

.....இவ்வாறாக, ஆன்மாக்கள் குறித்து முழுமையாக அறிந்திடத் தொடுக்கப்பட வேண்டிய கேள்விக் கணைகள் ஏராளமாக உள்ளன.

உண்மை நிலை இதுவாக இருக்க, மதவாதிகளும்,  மகான்கள் எனப்படுபவர்களும், 'அனைத்து மனித உடம்புகளுக்குள்ளும் ஆன்மாக்கள் உள்ளன. உடம்புகள் அழியும்போது அவை வெளியேறுகின்றன. மீண்டும் வேறு வேறு உடம்புக்குள் நுழைகின்றன' என்று  சொன்னார்கள்; சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 

உரிய ஆதாரங்களை இவர்கள் ஒருபோதும் தந்ததில்லை.

இவர்களைத்தான் மனிதர்களில் பலரும் கடவுளுக்கு இணையாக வைத்துப் போற்றி வழிபடுகிறார்கள்.

இந்நாள்வரை, நம் மக்களில் சிலரேனும் மேற்கண்டவை போன்ற கேள்விகளை இவர்களிடம் கேட்டு உரிய விளக்கங்களைப் பெற்றதாகத் தெரியவில்லை. 

ஆனால்.....

மக்களில் பலரும் ஆன்மாக்களின் இருப்பை நம்புகிறார்கள் என்பதும், அதன் விளைவாகப் பல மூடநம்பிக்கைகளின் பிடியில் சிக்குண்டுச் சீரழிகிறார்கள் என்பதும் மனதை வருத்தும் மிகப் பெரிய அவலம் ஆகும்!

==========================================================================

***மிக முக்கியக் குறிப்பு:

இப்போதெல்லாம் என் பதிவுகள் தமிழ்ச்சரத்தில் இணைக்கப்படுவதில்லை. தவறுதலாக, அதன் இடுகைப் பட்டியலில் என் இடுகை இடம்பெற்றிருப்பின், அதைக் 'கிளிக்' செய்யாமல், நேரடியாக இந்த[https://kadavulinkadavul.blogspot.com] என் தளத்திற்கு வருகை தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.


வருகைபுரிவோருக்கு என் நெஞ்சார்ந்த வேண்டுகோள்!

'தமிழ்ச்சரம்'[திரட்டி] என் இடுகைகளை இணைத்துக்கொள்வதில்லை என்று முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது[காரணம் எதுவாகவும் இருக்கலாம்]. என்னுடைய விருப்பமும் இதுவே. 

ஏற்கனவே, பல மாதங்களுக்கு முன்பு, 'என் இடுகைகளை இணைக்க வேண்டாம்' என்று நான் வேண்டுகோள் விடுத்திருந்தும் அது கண்டுகொள்ளவில்லை[இணைப்பைத் துண்டிப்பதற்கான வழிமுறையும் எனக்குப் பிடிபடவில்லை]. எனவே.....

என் இடுகை, தவறுதலாகத் தமிழ்ச்சரத்தில் இணைக்கப்பட்டாலும், அதைச் சொடுக்கி, என் பதிவுகளை வாசிக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டாம் என்றும், என் தளத்திற்கே நேரடியாக வருகைபுரியுமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

தமிழ்ச்சரத்தின் புறக்கணிப்பால் என் தளத்திற்கு வருகைபுரிவோரின் எண்ணிக்கை குறையக்கூடும். அது குறித்தெல்லாம் எனக்குக் கவலை ஏதும் இல்லை.

நான் பதிவுகள் எழுதுவதுவதற்கான முக்கியக் காரணங்கள்.....

நினைவாற்றலை இயன்றவரை தக்கவைப்பதும், எண்ணங்களுக்குக் கட்டுரை வடிவம் கொடுப்பதும், கட்டுரைகளில் தகுதி வாய்ந்தனவற்றை நூலாக்கி அமேசான் கிண்டெலில் வெளியிடுவதும்தான்.

நன்றி.



புதன், 30 மார்ச், 2022

கடவுளும் கந்தசாமியும் கடன்காரர்களும்[பாடம் புகட்டும் பகுத்தறிவுக் கதை]!!!


மிக முக்கியக் குறிப்பு:

தமிழ்ச்சரம் என் இடுகைகளை இணைத்துக்கொள்வதில்லை என்று முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. என்னுடைய விருப்பமும் இதுவே. ஏற்கனவே, பல மாதங்களுக்கு முன்பு, 'என் இடுகைகளை இணைக்க வேண்டாம்' என்று நான் வேண்டுகோள் விடுத்திருந்தும் அது கண்டுகொள்ளவில்லை[இணைப்பைத் துண்டிப்பதற்கான வழிமுறையும் எனக்குப் பிடிபடவில்லை]. எனவே.....

என் இடுகை, தவறுதலாகத் தமிழ்ச்சரத்தில் இணைக்கப்பட்டாலும், அதைச் சொடுக்கி, என் பதிவுகளை வாசிக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டாம் என்றும், என் தளத்திற்கே நேரடியாக வருகைபுரியுமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

நன்றி.



"கந்தசாமி, ஒரு தடவை அம்மன்  கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டுட்டு வாப்பா." - கந்தசாமியின் அம்மா பழனியம்மா சொன்னார்.

"வாழ்க்கையில் மனுசங்க  அனுபவிக்கிற சந்தோசங்களைக் காட்டிலும் படுகிற கஷ்டங்கள்தான் அதிகம். காலங்காலமா இதுதான் நடந்திட்டிருக்கு. கடவுளைக் கும்பிடுறதால இதுல எந்தவித மாறுதலும் உண்டாகல. இதை உங்ககிட்ட பல தடவை சொல்லியிருக்கேன்.  எனக்குச் சுத்தமா கடவுள் நம்பிக்கை கிடையாதுங்கிறதும் உங்களுக்குத் தெரியும். அப்புறம் எதுக்குக் கோயிலுக்குப் போ போன்னு கட்டாயப்படுத்துறீங்க?" -கொஞ்சமாய், செல்லக் கோபம் காட்டினான் கந்தசாமி.

"தொழிலில் நட்டம். வாங்கின கடனைத் திருப்பித் தர முடியல. உன் அப்பா தற்கொலைக்கு முயற்சி பண்ணிட்டார். அவர் உயிர் வாழணும்; தொழிலும் நல்லா நடக்கணும். கோயிலுக்குப் போயி நீட்டிப் படுத்து அம்மனைக் கும்பிட்டா நல்லது நடக்கும்னு நான் நம்புறேன்பா. எனக்கு உடம்பு சரியில்லாததாலதான் உன்னைப் போகச் சொல்லுறேன்....."

சற்றே நிறுத்தி, கலங்கிய கண்களுடன் மகனை உற்று நோக்கிய பழனியம்மா, "பிடிவாதத்தைக் கைவிட்டுட்டுக் கிளம்புப்பா. உனக்காக வேண்டாம்; எனக்காகவும் அப்பாவுக்காகவும் இதைச் செய் கந்தசாமி" என்றார்.

மவுனமாக வெளியேறினான் கந்தசாமி.

அவன் வீடு திரும்பியதும், “கோயிலுக்குப் போனாயா?”  என்று வினவுவது போல் பார்த்தார் பழனியம்மா.

“கோயிலுக்குப் போகல. கடன் கொடுத்த எல்லாரையும் தேடிப் போனேன். ஒவ்வொருத்தர் காலிலும் விழுந்து கும்பிட்டேன். நமக்குக் கடன் கொடுத்தவங்க ரொம்ப நல்லவங்க. 'உன் அப்பாவைப் பத்தியும் உன்னைப் பத்தியும் எங்களுக்கு நல்லாவே தெரியும். வட்டியைத் தள்ளுபடி பண்ணிட்டு, அசலை மெதுவா சம்பாதிச்சுக் குடுங்க'ன்னு சொல்லிட்டாங்க” என்றான் கந்தசாமி.

அம்மா மவுனமாக நடந்து உள்ளறையிலிருந்த முருகன் படத்தின் முன்னே நின்று கைகூப்பினார்; தழுதழுத்த குரலில் ஏதோ சொல்லத் தொடங்கினார்.

விழிகளில் பாசம் பொங்கி வழிந்திட, பெற்ற தாயை உற்று நோக்கினான் கந்தசாமி; 'பாவம் அப்பாவி அம்மா' என்று மனதுக்குள் முணுமுணுத்தான்.

==========================================================================


'ஜக்கி' காட்டில் கொட்டித்தீர்த்த 'பண மழை'!!!

[பிரதமர், கைகட்டிக்கொண்டு கவனிக்கும் அளவுக்குத் தகுதியுள்ளவரா ஜக்கி?!]

னம்போன போக்கில் புரியாத தத்துவங்கள் பேசிப் பிரபலமாகித் தன்னைச் 'சத்குரு' என்று அறிவித்துக்கொண்ட, கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்த ஜகதீஷ் வாசுதேவ் பற்றிப் பல பதிவுகள் எழுதியுள்ளேன். 

வயதான நிலையிலும்[75?] ஆடம்பரமாக ஆடைகள் உடுத்து, ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம் என்று அமர்க்களப்படுத்தும் இந்தப் போலிச் சாமியாரின் கவர்ச்சிகரமான தோற்றத்திலும், தத்துவம் என்னும் பெயரில் சளைக்காமல் இவர் நிகழ்த்தும் பொய்யுரைகளிலும் மக்களில் பெரும்பகுதியினர் மயங்கிக்கிடப்பது நமக்கு வியப்பை உண்டுபண்ணவில்லை. காரணம், எப்போதுமே உண்மையைக் காட்டிலும் போலிகளின் மீது நம் மக்களுக்குத் தனி மதிப்பு உண்டு.

நம்மைப் பெரும் வியப்பில் ஆழ்த்துவது, நடுவணரசு இந்த நபருக்கு விருதுகள் அளித்துக் கவுரவிப்பதும், இவர் செய்யும் ஏமாற்று வித்தைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும்தான்.

இவரைப் பற்றி எழுத்தாளர்கள் நிறையவே எழுதியிருக்கிறார்கள். அவர்களுள் மதன் அறிவழகனும் ஒருவர்[https://www.meiarivu.com].

'மெய்யறிவு'த் தளத்தில் ஜக்கி குறித்து மிக விரிவாக எழுதியுள்ளார் இவர்[இவருக்கு நம் நன்றி].

அந்தக் கட்டுரையிலிருந்து, ஜக்கி மிகப் பெரும் பணக்காரர் ஆன விதம் தொடர்பான தகவல்களை மட்டும் திரட்டிப் பதிவாக்கினேன் உங்களின் வாசிப்பிற்காக.

                                      *   *   *   *   *

கட்டுரைத் தலைப்பு: 'யாரிந்த ஜக்கி வாசுதேவ்?'

கோவையில் ‘சஹஜ ஸ்திதி யோகா’ என்று அப்போது அழைக்கப்பட்ட தன் வகுப்புகளில் ஆசனங்கள், பிராணயாமக் கிரியாக்கள் மற்றும் தியானம் போன்றவற்றைக் கற்றுக் கொடுத்தார். அதன் மூலம் படிப்படியாகப் பிரபலமானார். ஜக்கியிடம் பணம் குவியத்தொடங்குகிறது. அதுவரை ‘ஜாவா’ மோட்டார் பைக்கில் ஜாவா வாசுதேவாக இருந்தவர் மாருதி காரில் ஜக்கி வாசுதேவாக வலம் வரத்தொடங்கினார்[பின்னர் 'ஹெலிகாப்டர் வாங்கினார்].

1994இல் அந்த இடத்தைப் பதிவு செய்து ஈஷா யோக மையத்தை நிறுவினார் ஜக்கி. அங்கு நிலைகொண்டபின் மேலும் பல ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்தார். தற்போதைய நிலவரப்படி ஏறத்தாழ 400 ஏக்கர் நிலம் நேரடியாகவும் பினாமி பெயரிலும் ஜக்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறுகிறார்கள். ஆசிரமம் நிறுவியதற்குப் பின், இயற்கை எழில் கொஞ்சும் சூழல் மக்கள் மனங்களைக் கவர, யோகா வியாபாரம் செழிக்கிறது. 

‘யோக’ மார்க்கத்தைவிடவும் ‘பக்தி’ மார்க்கம் ரொம்பவே லாபகரமாக இருந்தது. வியாபாரச் சூச்சமத்தைக் கண்டடைந்தவர் அத்தோடு விடுவாரா என்ன?

“ஞானத்தின் பிரம்மாண்டம்” என்ற தலைப்பில் லிங்க பைரவி குறித்துக் கட்டுரை எழுதத் தொடங்கினார். அதாவது அடுத்த புராஜக்டைத் தொடங்கினார். லிங்க பைரவியின் அருமை பெருமைகளை அவிழ்த்துவிட்டார். லிங்க பைரவி வீட்டில் இருந்தால் செல்வமும் ஆனந்தமும் பெருகும் என்றார். பக்தர்களுக்கு ஆவலைத் தூண்டிய பிறகு லிங்க பைரவிக்குக் கோவில் கட்டப் போகிறேன் நிதி வேண்டும் என்றார். வழக்கம் போலப் பக்தர்கள் பணத்தைக் கொட்டிக் கொடுத்தனர். 4.5 கோடி செலவில் லிங்கபைரவிக்குக் கோவில் கட்டும் திட்டத்தை அறிவித்தார் ஜக்கி. ஆனால் வசூல் ஆனதோ 20 கோடி. 

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்தத் தொகையையும் ஜக்கி கோவில் கட்டச் செலவு செய்யவில்லை. கோவில் கட்டுமானப் பொருட்கள் அனைத்தையும் தனியே நன்கொடை பெற்றுக் கட்டி முடித்துவிட்டார். லிங்க பைரவிக்கு என்று வசூலித்த 80 லட்சம் தனி வருவாய். 

லிங்க பைரவிக்கு ஒட்டியானம் செய்ய வேண்டும் என்று தங்கமாக வசூலித்த நன்கொடை என்ன ஆனது என்று கேட்பதற்கு நாதியில்லை. 

ஜக்கி, கடவுள் உருவாவதைக் காண வாருங்கள் என்று விளம்பரம் செய்தார். பிரம்மாண்டமாக விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

கடவுள் உருவாவதைக்[!!!!!] காணவரும் பக்தர்களுக்குக் கட்டணமாக ரூபாய் 7 ஆயிரம், 10 ஆயிரம், 50 ஆயிரம் என்று ஆரம்பித்து 10 லட்சம்வரை வசூலித்தார். 50 ஆயிரத்தில் கட்டணம் செலுத்துபவர்கள் ஜக்கியின் அருகில் இருந்து கடவுள் உருவாவதைக்[!!!!!] காணலாம். 10 லட்சம் செலுத்துபவர்கள் பிரகாரத்தின் உள்ளேயே அதாவது, லிங்கபைரவி அருகில் இருந்தே கடவுள் உருவாவதைக் காணலாம். 

இந்த நேரத்தில் பாஜக அரசு ஜக்கிக்கு விருது கொடுத்தது. இதுவரை யோகா மாஸ்டராக இருந்தவர் ஆன்மீகத் தலைவரானார்; இப்போது, இந்து மதத்தின் ஈடுஇணையற்ற தலைவராகவும் ஆகிவிட்டார்.

ஜக்கியின் ஈஸா யோகா மையப் பகுதி யானைகள் வழித்தடத்தை மறித்துக் கட்டப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் 133 யானைகள் இதன் காரணமாக இறந்துள்ளன. மனிதர்களுக்கும் யானைகளுக்குமான மோதல்கள் சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. ஈஸா யோகா மையம் முழுவதும் மலைகளில் இருந்து தகர்க்கப்பட்ட பாறைகளைக் கொண்டு நிறையக் கட்டமைப்புகளும் அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் ஜக்கியின் பசுமைப் பணிகளைப் பாராட்டி மத்திய அரசின் சுற்றுச் சூழல் துறை 'இந்திரா காந்தி பர்யவரன் புரஸ்கார்' விருதை வழங்கிக் கவிரவித்தது. ஆனால், சோகமான செய்தி என்னவென்றால் ஜக்கி நட்ட மரங்களைத்தான் காணவில்லை.

இயற்கை, பசுமை, மரங்கள் என்று இயங்கினாலும் தன் மஹா சிவராத்திரி வருமானத்தை அதற்காக ஒருபோதும் தியாகம் செய்வதில்லை ஜக்கி. தியானங்கள், மந்திர உச்சாடனைகள், இந்தியக் கலாச்சாரத்தைப் பறை சாற்றும் கலை நிகழ்ச்சிகள் என இவ்விழா, பக்தர்களை உற்சாகக் கிளுகிளுப்பின் உச்சத்தைத் தொடவைக்கும். இப்போதெல்லாம் கட்டணங்கள் பல மடங்கு கூடிவிட்டது. 50 ஆயிரம், 1 லட்சம், 1.25 லட்சம் என்று அள்ளுகிறார். அதுமட்டுமின்றி ஜக்கி படங்கள், ஜக்கி படம்போட்ட ‘T’ சர்ட்கள், புத்தகங்கள், நகைகள், ருத்ராட்சம், லிங்கம், லிங்க பைரவி சிலைகள், படிக லிங்கம், வேட்டிகள், மாலைகள், ஊறுகாய், மூலிகை தேயிலை, பிஸ்கட் என்று பெரும் வருமானம் வேறு. இவை எதற்கும் ரசீது கிடையாது. அப்படியே நீங்கள் ரசீது கேட்டால் நன்கொடை ரசீதுதான் வழங்கப்படும்.

பக்தர்களின் வாரிசுகளை அறிவில் சிறந்த மாணவர்களாக உருவாக்கப் போவதாக அறிவித்துப் பள்ளிக்கூடங்கள் நடத்துகிறார் ஜக்கி. தமிழகத்தில் எட்டு ஈஷா வித்யா பள்ளிகளும், ஆந்திராவில் ஒன்றும் என மொத்தம் ஒன்பது பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன. இவற்றில் 8,132 மாணவர்கள் பயில்கின்றனர். ஒவ்வொரு மாணவனுக்கும் லட்சங்களில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

ஜக்கியின் சீடர்கள் இன்று ஆண்களும் பெண்களுமாக 4000 பேர் இருக்கின்றனர். இவர்களில் பலர் தங்கள் சொத்துகளை ஜக்கியிடம் ஒப்படைத்துவிட்டுத் துறவிகளாகவும் ஜக்கியின் சேவகர்களாகவும் வாழ்கின்றனர். 

மத்திய அரசு (2017ஆம் ஆண்டு) நாட்டின் உயர்ந்த விருதான `பத்ம விபூஷண்` வழங்கிக் கவுரவித்தது. அதோடு பிரம்மாண்டமான ஆதி யோகி சிலையைத் திறந்து வைக்க நாட்டின் பிரதமர் மோடி நேரில் வருவதாக அறிவித்தார்[வந்து திறந்துவைத்தார்].

பிரதமர் மோடி நேரில் வருகை தந்து திறந்துவைத்த ஆதியோகி சிலை அமைக்கப்பட்ட இடம் மொத்தம் 44 ஏக்கர் அளவைக் கொண்டது. இந்த நிலம் அச்சு சாமிக் கவுண்டர் என்பவர் வினோபாவேயின் பூமிதான இயக்கத்திடம் ஒப்படைத்து, அது அச்சுசாமிக் கவுண்டரிடம் பண்ணை ஆட்களாக இருந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த 13 குடும்பங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. இன்று அந்த நிலங்கள் அபகரிக்கப்பட்டு ஜக்கியிடம் இருக்கின்றன. அங்குதான் ஆதியோகி சிலை தியான நிலையில் அமர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலத்தை மீட்டுத் தர ராஜ்குமார் என்ற இளைஞர் முயன்றார். அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த செல்வி. ஜெயலலிதாவை(21-1-2008) நேரில் சந்தித்துப் புகார் அளித்து உதவுமாறு கோரினார். புகார் கொடுத்த ஐந்து நாட்களில் (26-1-2008) ராஜ்குமார் கொலை செய்யப்பட்டார்!

பாலியல் குற்றத்தின் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டதாகக் காவல் துறை வழக்குப் பதிவு செய்து பிரச்சனையைத் திசை மாற்றியதாகவும், ராஜ்குமார் அங்குள்ள பழங்குடி மக்களுக்கு உதவி வந்தவர் என்றும், அவர் பழங்குடிகளுக்குப் பஸ் வசதி, பள்ளிக்கூடங்கள் ஏற்பாடு செய்ய உழைத்தவர் என்றும், அதனால் அவருக்கு நீதி வேண்டி ஒத்திசாமி என்ற விவசாயிகள் சங்கத் தலைவர் நீதிமன்றம் சென்று மறுவிசாரணைக்கு முயற்சித்தார். ஹைகோர்ட்டில் மறு விசாரணைக்கான உத்தரவும் வந்தது. ஆனால், சில நாட்களில் ஒத்திசாமி சென்னை லாட்ஜ் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

==========================================================================https://www.meiarivu.com/2020/02/22/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D/

செவ்வாய், 29 மார்ச், 2022

'பூமியின் தோற்றம்'... ஒரு சுவையான 'சுருக்க' வரலாறு!

'ஒரு காலக்கட்டத்தில், சூரிய மண்டலத்தில் உருகிய தீக்கோளமாய் இருந்தது இந்தப் பூமி.

இதை, கரியமிலவாயுவும்,  அண்டவெளியிலுள்ள பிற வாயுக்களும் சேர்ந்த காற்று மண்டலம் சூழ்ந்திருந்தது.

இந்நிலையில், திட்டுத் திட்டாக உருகிக் கிடந்த தீக்கோளமான பூமியின் மேற்பரப்பை விண்கற்கள் தாக்கிய வண்ணம் இருந்தன. அதன் விளைவு.....

பூமியிலிருந்த நீராவி வெளியேறிற்று. இந்த நீராவியுடன் பூமியைச் சுழ்ந்திருந்த வாயுக்கள் பலவும் சேர்ந்து மேகங்களாக மாறின. இதனால், பூமியின் மீதான சூரிய ஒளியின் தாக்கம் குறைந்தது.

மேகங்கள் மழையாக மாற்றம்பெற்றுப் பெய்தபோது, பூமியின் மேற்பரப்பு குளிர்ந்தது; குளிர்ந்துகொண்டே இருந்தது.

தொடர்ந்து மழை பெய்துகொண்டிருக்க, பூமி மேலும் மேலும் குளிர்ச்சி அடையலாயிற்று.

இதன் மேற்பரப்பு குளிர்ந்துகொண்டேபோன நிலையில், பூமியின் உட்பக்கம் முடங்கிக் கிடந்த பெருநெருப்புக் குழம்பு, எரிமலைகளாக வெடித்து வெளியேறிக் குளிர்ந்து, மலை அடுக்குகளும், பள்ளத்தாக்குகளும் உருப்பெற்றன.

அடுத்தடுத்து மழை பெய்துகொண்டிருக்க, திடப்பொருளாக மாறிவிட்ட பூமியின் மேற்பரப்பில் குளங்குட்டைகள், ஓடைகள், ஆறுகள், பரந்த கடல்கள், பனிப்பரப்புகள், பாலைவனங்கள் என்றிவையெல்லாமும் தோன்றின.'

-பூமியின் தோற்றம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து சொன்ன தகவல்களின் மிக மிக மிகச் சுருங்கிய வடிவம் இது.

==========================================================================

உதவி: 'மூதாதையரைத் தேடி...', சு.கி.ஜெயகரன், காலச்சுவடு பதிப்பகம், 2ஆம் பதிப்பு: மே, 2006.

==========================================================================

அமேசான் கிண்டெலில் என் புதிய[39ஆவது] நூல்:


பெண்மணிகளும் 'பொன் அணி'களும் ஒன்றல்ல!: 8 கட்டுரைகள் & 1 கதை (Tamil Edition) Kindle Edition


==========================================================================


என்னை வாழ்த்துங்களேன்!!

யது ஆக ஆக, ஆசைகளின் எண்ணிக்கை குறையலாமே தவிர அதிகரிக்கக் கூடாது. 

'குடு குடு' கிழவன் என்று சொல்லும் அளவுக்கு இல்லை என்றாலும், வாலிபப் பருவத்துச் சுகபோக அனுபவங்களை வெறுமனே அசைபோடும் அளவுக்கு வயதாகிவிட்டது என்பது உண்மைதான்; ஆசைப்படுவதும் குறைவுதான். என்றாலும், எது எதற்கெல்லாமோ ஆசைப்படுகிறேன்.

அந்த 'எது எதற்கெல்லாமோ'வுக்கு ஒரு சிறு பட்டியல்:

*116 அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள்[வயது] உயிர் வாழ்பவர்கள் 2,000,000,000 மக்களில் ஒருவர் மட்டுமே என்கிறது ஒரு புள்ளிவிவரம்[ஆதாரம் சேமிக்கப்படவில்லை]. அந்தப் பட்டியலில் நானும் இடம்பெறல் வேண்டும் என்பது என் ஆசை. என் அந்திமக்கால ஆசைகளில் இதுவே முதலிடம் பெற்றுள்ளது.

*ஐன்ஸ்டீன் இறந்த பிறகு அவருடைய மூளையை எடுத்து ஆய்வுக்காகப் பத்திரப்படுத்திப் பாதுகாக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்ததே. என் மூளையும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுதல் வேண்டும் என்பது என் இலையுதிர் பருவத்து ஆசை!

ஐன்ஸ்டீன் உலகறிந்த அறிவியல் அறிஞர். அறிவியல் தெரியாது என்றாலும் உலகோரால் அறியப்படாத வாழ்வியல் அறிஞன்[ஹி... ஹி... ஹி!!!] நான் என்பது பதிவருலகம் அறிந்ததே.

*எக்காலத்தும் கெட்டுப்போகாத உணவு என்றால் அது தேன் மட்டுமே. என் இறுதி மூச்சுவரை இருதயம் செயலிழப்பதைத்[சாகும் தருணத்தில்] தவிர என் உடம்பின் எந்தவொரு உறுப்பும் கெட்டுச் சீரழியாமல் இருத்தல் வேண்டும் என்பதும் என் அந்திமக்கால ஆசைகளில் ஒன்று. 

*சுறாமீனை எந்தவொரு நோயும் அது சாகும்வரை தாக்க முடியாதாம்[இணையத்தில் வாசித்தது]. அந்த அளவுக்கு அதன் உடம்பில் எதிர்ப்புச் சக்தி அதிகம். தினசரி மூச்சுப் பயிற்சியும் வயதுக்கேற்ற உடற்பயிற்சியும் செய்வதன் மூலம் எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக்கொண்டிருப்பவன் நான்.

அதிகாலையில் கண் விழிப்பதிலிருந்து உறங்கத் தொடங்கும்வரை உண்ணும்போதாகட்டும், வாசிப்பின்போதாகட்டும், மாலை நேர நடைப் பயிற்சியின் போதாகட்டும், இடையிடையே "நான் ஒரு சுறாமீன்... சுறாமீன்... சுறாமீன்" என்று மனதுக்குள் முழக்கமிடத் தவறுவதே இல்லை. 

இப்போதும் சொல்கிறேன்: "நான் ஒரு சுறாமீன்... சுறாமீன்... சுறாமீன்..."

*சரியாகக் காது கேளாதவர்களுக்கு என்று ஒரு கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். அதன் வலப்பக்கக் கண்ணாடியில் ஒரு சிறு திரை இருக்குமாம். எதிரே பேசுவோரின் வார்த்தைகள் அதில் வரிவடிவத்தில் தோன்றுமாம். அதை வாசித்து எதிரில் உள்ளவரின் பேச்சைப் புரிந்துகொள்ள முடியும் என்பதாக ஏதோவொரு நாளிதழில் செய்தி வாசித்தேன்.

என் ஆயுள் முடிவதற்குள் இது பயன்பாட்டுக்கு வந்துவிட வேண்டும் என்பதும் என் முதிர்பருவ ஆசை. 

இப்படி ஆசைப்படக் காரணம், எனக்குக் காது கொஞ்சம் மந்தம். கொஞ்சம்னா?

70%! ஹி...ஹி...ஹி!!!

*பெண்களின் பாதுகாப்புக்கென்று நவீனத் தொழில்நுட்பத்தில் ஆடையொன்றை வடிவமைத்திருக்கிறார்களாம். அதில் மின்சாரம் சேமிப்பப்பட்டிருக்குமாம். கெட்ட எண்ணத்தோடு ஆடவர்கள் அவர்களைத் தொட்டால், தொடும்போது அதிலுள்ள ஒரு விசையை[பட்டன்] தட்டினால் போதும், எதிராளி தூக்கி வீசப்படுவான்.

இப்படியானதொரு ஆடை விற்பனைக்கு வந்து, வயசுப் பெண்கள்[கிழவிகளை யார் சீந்துகிறார்கள்!] அதை அணிந்து பாதுகாப்பாக நடமாடுவதைப் பார்த்துப் பார்த்துப் பார்த்து மகிழ வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. அது இப்போது என் அந்திமக்கால ஆசையாகவும் உள்ளது.

மேற்கண்ட என் ஆசைகள் எல்லாமே நிறைவேறுதற்கு உங்களின் மானசீகமான ஆசி தேவை.

வாழ்த்துங்களேன்.

நன்றி!

==========================================================================

திங்கள், 28 மார்ச், 2022

பதவிக்காகக் கற்பைக் காணிக்கை ஆக்குகிறார்களா நம் பெண்கள்!?!?

"பாலுறவுச் சுகம் தந்து வேலை வாய்ப்பைப் பெறலாமா?"

"பதவி உயர்வுக்கும் இதைப் பயன்படுத்தலாமா?"

'26-30'[வயதினரை அதிக அளவில் உள்ளடக்கியது] பெண்களிடம்[இந்தியாவில்தான்! துல்லியமான எண்ணிக்கை தரப்படவில்லை] இந்தக் கேள்விகளைக் கேட்டபோது, "ஆம்" என்று திட்டவட்டமான பதிலைத் தந்தவர்கள் 7%.

"தரலாம்" என்று பட்டும்படாமலும் சொன்னவர்கள் 10%.

ஆக, ஏதேனும் ஒரு வேலை பெறுவதற்காக, 17% அளவில் உடலுறவுச் சுகம் தரச் சம்மதிப்பவர்கள் இந்தியப் பெண்கள் என்கிறது அந்த ஆய்வு.

மேலும் அந்த ஆய்வில், பெண்களிடையே பாலுறவு நுகர்வு விருப்பம் அதிகரித்துள்ளது என்றும், திருமணத்திற்கு முன்பும், திருமணத்திற்குப் பின்பும் கணவன் தவிரப் பிற ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது நம் பெண்களிடையேயான புரட்சிகர மாற்றம் என்றும் பிரமிக்கிறது கருத்துக் கணிப்பு நடத்திய இதழ்.

இம்மாற்றத்திற்கு, விடலைப் பருவப் பெண்களின் மன முதிர்ச்சி இன்மையும், உரிய முறையில் கற்பின் தேவை, பண்பாடு போன்றவை அவர்களுக்குக் கற்பிக்கப்படாததும் காரணங்களாக உள்ளனவாம்.

2008ஆம் ஆண்டில் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்திய இதழ் 'இந்தியா டுடே'[2022ஆம் ஆண்டிலும் இம்மாதிரியான கருத்துக் கணிப்பை நடத்துமா இந்த இதழ்?!].

இந்தக் கருத்துக் கணிப்பு உண்மையானது எனின், நம் மக்களின் ஒழுக்கம், பண்பாடு போன்றவை கட்டிக் காக்கப்படுதல் வேண்டும் என்று விரும்புவோரைக் கவலைக்குள்ளாக்குகிறது இது.

'இந்தியா டுடே நடத்திய இந்த ஆய்வுக்குப் போதிய ஆதாரங்கள்[பேட்டியளித்த பெண்களின் புகைப்படங்கள், முகவரிகள் தரப்படுதல் முக்கியம்] 'இந்தியா டுடே'வால்   முன்வைக்கப்படவில்லை.

மேலும், பாலுறவு குறித்து நம் பெண்கள் மேற்கண்டவாறு மனம் திறந்து பேசுதல் என்பதும் சாத்தியமில்லை; அதற்கான சூழலும் இங்கு உருவாகவில்லை. 

எனவே, விற்பனை சரிந்த நிலையில், கவர்ச்சிகரமான கணிப்பை வெளியிட்டிருக்கிறது இந்த இதழ்' என்று எண்ணத் தோன்றுகிறது. 

இது குறித்ததொரு கட்டுரையைத் தம் நூலில்['நிலம், பெண்ணுடல், நிறுவனமயம்'] வெளியிட்டுள்ளார் 'செந்தமிழன்' அவர்கள்[பன்மைவெளி வெளியீட்டகம், சென்னை]. 

==========================================================================


சனி, 26 மார்ச், 2022

'கோயில்கள்'... தேவை 'வயாகரா' பிரசாதம்!!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள 'பாபா ரோட் ஷா' கோயிலில் நடைபெறும் திருவிழாவில் பக்தர்களுக்குப் பிரசாதமாக மதுபானம் வழங்கப்படுகிறது[கோயிலுக்கு வரும் பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு 'பிரசாத மதுவை' வாங்கி குடிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது].

பாபாவின் ஆசீர்வாதம் பெறுவதற்காக மதுபானம் வழங்கும் இந்தச் சடங்கு 90 ஆண்டுகளாக நடந்துவருகிறதாம்[நம் ஊர்க்காரர்களுக்குத் தெரியாமல்போனது எப்படி?!]. 

பக்தர்கள் முதலில் 'பாபா ரோட் ஷா'வுக்கு வணக்கம் செலுத்துவார்கள். ஒரு குழுவினர் மதுவைச் சேகரித்து ஒரு பெரிய அண்டாவில் ஊற்றுவார்கள். அண்டாவிலிருந்து பாட்டில்களில் எடுத்துப் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவார்கள்.

***வடை பாயசமோ, கொழுக்கட்டையோ, பொங்கலோ, மட்டன் பிரியாணியோ[அசைவச் சாமிகளுக்கு] முதலில் கடவுள்களுக்குப் படைக்கப்பட்டுப் பின்னர் பக்தகோடிகளுக்கு வழங்கப்படும்போது அவை 'பிரசாதம்' என்று பெயர் பெறுகின்றன.

இன்ப லோகத்தில் மிதக்கச் செய்கிற 'சோம பானம்' அருந்திப் பழக்கப்பட்ட கடவுள்களுக்கு மதுபானம் வைத்து வழிபடுவது ஒரு பெரிய விசயம் இல்லைதான். ஆனாலும், பக்தகோடிகளைப் பொருத்தவரை இது அவர்களைப் பரவசத்தில் ஆழ்த்துகிற நடவடிக்கை ஆகும்.

இதைவிடவும், மதுபானம் போல் மிக எளிதாகக் கடைகளில் வாங்க முடியாத கஞ்சா, அபினி என்று தடை செய்யப்பட்ட சரக்குகளையோ, வயாகரா போன்ற நீண்ட நேர உடலுறவுக்குப் பயன்படுகிற மாத்திரைகளையோ, கடவுள்களுக்குப் படைத்துப் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கினால், அவர்கள் ஆனந்தப் பெருவெள்ளத்தில் மூழ்குவார்கள் என்பது உறுதி.

இதை, இந்தப் புண்ணியப் பூமியிலுள்ள அனைத்துக் கோயில் நிர்வாகங்களும் பரிசீலித்து ஆவன செய்திடல் வேண்டும் என்பது நம் வேண்டுகோள்.

==========================================================================

'காமுகி'களும் கருத்தடை அல்லது கருக்கலைப்புகளும்!!!


குளு குளு உதகை.

மூன்று முறை மணம் முடித்த ஒரு குடும்பத் தலைவி. அவளுக்கு ஒரு குழந்தை மட்டுமே.

மூன்றாவது கணவன் காலமான நிலையில் அவளுக்குக் கள்ளக் காதலர்கள் தேவைப்படுகிறார்கள். சுதந்திரப் பறவை என்பதால் விருப்பம்போல் காம சுகம் அனுபவிக்கிறாள்.

இவ்வகையிலான இவளின் வாழ்க்கை முறை குறித்து விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லை. ஏனென்றால், கட்டுபடியாகாத நிலையில் ஆண்கள் பல பெண்களுடன் உடலுறவு கொண்டு சுகம் அனுபவிப்பது இவ்வுலகில் இயல்பானதும் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவும் இருப்பதுதான். 

ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அவர்கள் அடங்காத ஆசை மனம் கொண்டவர்களாயின், பிறருக்குப் பாதிப்பு இல்லாத வகையில் அந்தரங்க சுகம் தேடி அலைவதில் தவறில்லை என்றுகூடச் சொல்லலாம்.

இதைச் 'சட்டப்படி அல்லாத சமுதாய வாழ்வியல் முறை' என்பது பொருந்தும்.

மேலே குறிப்பிடப்பட்ட உதகைப் பெண் இந்தக் கட்டுப்பாட்டை நினைவில் கொள்ளத் தவறினாள் என்பதால், 'காம வெறி பிடித்த கொலைகாரி' என்னும் அவப்பெயருக்கு ஆளானாள்.

ஆம், தன் கள்ளக் காதலர்களுடனான் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்தது என்பதால்.....

தான் பெற்றெடுத்த குழந்தைக்கு மது கலந்த சோறு ஊட்டினாள் அவள்; அதன் தலையைச் சுவற்றுடன் மோதிக் கொலையும் செய்தாள்.

இது, இன்று[26.03.2022], காலை 06.45 மணி அளவில், 'பாலிமர் தொலைக்காட்சி'யில் வெளியான செய்தி.

கள்ள உறவுக்கு இடையூறு என்பதால், பெற்ற தாயே பிள்ளைக்கு விஷம் கொடுத்தோ, வேறு  வழிமுறைகளைக் கையாண்டோ கொலை செய்வது அபூர்வ நிகழ்வல்ல, அடிக்கடி நிகழ்கிற விபரீதம் என்றாகிவிட்டது.

இம்மாதிரி அவல நிகழ்வுகளைத் தவிர்ப்பதற்கு வழியே இல்லையா?

"உண்டு" என்று உறுதிபடச் சொல்லலாம். அவற்றில் சில.....

*பெண் பார்க்கும் சடங்கின்போது ஆணும் பெண்ணும் தனித்து உரையாடுகையில், பெண் தனக்குக் காம இச்சை அதிகம் என்பதைக் குறிப்பாகவோ  வெளிப்படையாகவோ சொல்லிவிடலாம்[இதை இயல்பாகக் கருதும் காலம் வரும்]. அது அந்த ஆண் ஒரு திடமான முடிவு எடுப்பதற்கு வாய்ப்பாக அமையும்.

*மணமான பிறகு, மிகையளவில் இருந்த பாலுணர்ச்சி பெருமளவில் குறைந்துவிட்டது என்பதை உறுதி செய்த பின்னரே குழந்தை பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.

*உறுதி செய்வது இயலாத நேரங்களில், கருத்தடை முறையைக் கையாளலாம்; கருக்கலைப்பும் செய்துகொள்ளலாம்.

*குழந்தை அல்லது குழந்தைகளைக் கணவன் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு, 'அது' விசயத்தில் முழுத் திருப்தி அளிக்கும் ஏற்றதொரு கள்ளக் காதலனுடன் ஓடிப்போகலாம்.

*கணவனை விவாகரத்துச் செய்துவிட்டு, தனித்து வாழும் 'சுதந்திர வாழ்க்கை முறை'யைத் தேர்வு செய்யலாம்.

யோசித்தால், இன்னும் ஆகச் சிறந்த நல்ல வழிவகைகளைக் கண்டறிதல் சாத்தியப்படக்கூடும்.

ஆக, மேலே குறிப்பிட்ட வகையினான பெண்கள், அந்தரங்கச் சுகபோக வாழ்க்கை முறை குறித்துத் திருமணத்திற்கு முன்னரே  'சுயபரிசோதனை' செய்துகொள்வது அவர்களுக்கு நல்லது; சமுதாயத்திற்கும் நன்மை பயப்பதாக அமையும்.

வாழ்க பெண்ணினம்!

==========================================================================


வெள்ளி, 25 மார்ச், 2022

பக்தி வெறியருக்குக் குட்டுகள்! பகவானுக்கும் குட்டு வைத்த நீதியரசர்!!

"கடவுளைக் காட்டி நீதியின் கண்களை மறைக்க முடியாது."

"போதுமான அளவுக்குக் கோயில்கள் இருக்கு. இன்னுமா கடவுள் கோயில் கட்டச் சொல்கிறார்?!"

"கடவுளே வந்து ஆக்கிரமிப்புச் செய்தாலும் நீதிமன்றம் தடை விதிக்கும்."

                                          *   *   *   *   *

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் அமைந்துள்ள ஒரு அம்மன் கோவிலில், பொதுச் சாலையை ஆக்கிரமித்துக் கட்டுமானம் மேற்கொண்டுள்ளதாகவும், இந்தக் கட்டுமானம் தங்களுக்கு உரிய இடத்திற்குச் செல்லும் வழியைத் தடுக்கும் வகையில் உள்ளதாகவும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாப்பாயி என்பவர் மாவட்ட நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கோவில் தரப்புக்கு எதிரான உத்தரவைப் பிறப்பித்தார். அதனை எதிர்த்துக் கோவில் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். 

விசாரணையின் முடிவில், குறிப்பிட்ட அந்தப் பொதுப் பாதையில் கோவில் நிர்வாகம் கட்டியிருக்கும் அனைத்துக் கட்டுமானங்களையும் இரண்டு மாதங்களில் அப்புறப்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 

அதே சமயம் இந்த உத்தரவில் நீதிபதி சில கருத்துக்களையும்[மேலே இடம்பெற்றுள்ளவை] பதிவு செய்துள்ளார்.

இது, இன்றைய[25.03.2022] பிற்பகல் செய்தி[https://www.dailythanthi.com/News/State/2022/03/25160803/Even-if-God-occupies-public-space-the-court-will-order.vpf].

கடவுளின் பெயரால் பக்தர்கள் செய்யும் அடாவடித்தனங்களால், பெரிதும் மனவேதனைக்கு உள்ளான நிலையில்தான் மேற்கண்டவாறு கடும் கண்டனங்களை நீதியரசர் தெரிவித்திருக்கிறார்.

நம் நீதிபதிகள் அவ்வப்போது இம்மாதிரியான குட்டுகளைப் பக்தி வெறியர்களுக்கு வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை.

"கடவுளே ஆக்கிரமிப்புச் செய்தாலும் தடை விதிப்போம்" என்று நீதிபதி சொல்லும் அளவுக்கு இவர்களின் அடாவடித்தனங்கள் அதிகரித்திருக்கின்றன.

இது அறிவியல் யுகம். இவர்கள் மட்டும் காட்டுமிராண்டிகளாகவே இருந்துகொண்டிருக்கிறார்கள்!

==========================================================================


வியாழன், 24 மார்ச், 2022

பெண் குழந்தை பெறத் தடை விதிப்பார்களா தலீபான்கள்!?!?

[தடை விதிக்கப்பட்ட, பிரபல பெண் செய்திப் வாசிப்பாளர்]

'ஆப்கானிஸ்தானில், பெண்களுக்கான கல்வி நிறுவனங்களில், 6ஆம் வகுப்புகளுக்கு மேலாக[beyond] பிற வகுப்புகளைத் தொடங்குவதற்கு அந்த நாட்டை ஆளும் தலீபான் அரசு தடை விதித்துள்ளது'[In a surprise decision the hardline leadership of Afghanistan’s new rulers decided against opening educational institutions to girls beyond Grade 6, a Taliban official said on March 23 on the first day of Afghanistan’s new school year].

மேற்கண்டது 23.03.2022இல் வெளியான புதிய செய்தி. https://www.thehindu.com/news/international/in-11th-hour-decision-taliban-hold-to-ban-on-girls-education/article65251802.ece 

இங்கு கவலைக்குரிய விசயம் என்னவென்றால்.....

'இனி பெண்களுக்குச் சுதந்திரம் அளிக்கப்படும்' என்று ஒரு நாள் அறிவிக்கிறார்கள் தலீபான்கள். அடுத்த சில நாட்களில் அதற்கு எதிர்மறையான அறிவிப்பு வெளியாகிறது.

இதன் மூலம், பெண்களுக்குக் கல்வி அளிப்பதையோ, அலுவலகங்களுக்குச் சென்று அவர்கள் பணி புரிவதையோ, ஆண்களுக்குச் சமமாக வேறு துறைகளில் பங்காற்றுவதையோ அவர்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது.

பெண்களை அனுமதிப்பதால் கெடுதிகள் விளையும் என்று அஞ்சுகிறார்கள் என்று நம்ப முடிகிறது.

இந்த அச்சத்திலிருந்து அவர்கள் விடுபடுவதற்கான வழி உள்ளது. அது.....

'எந்தவொரு குடும்பத்தினரும் இனி பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தல் கூடாது' என்று ஒரு சட்டம் இயற்றிவிடலாம். 

'இதைச் செய்தால் அங்கே பெண்களே இல்லாத நிலை உருவாகுமே, அவர்கள் இல்லாமல் இனவிருத்திக்கு என்ன செய்வது' என்று ஆப்கானிஸ்தானியர் எவரும் கவலை கொள்ளத் தேவையில்லை. 

ஆண் பிள்ளைகளைப் பெற்றுத் தருவதற்கான பெண்களை[ஆண் பிள்ளைகளைப் பெறுவது மட்டுமே இவர்களுக்கான வேலை]  பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடுகளுக்குச் சென்று ஆண்கள் மணமுடித்துத் திரும்பலாம்.

குழந்தை பெற்றுத்தரும் மனைவிமார்களின் எண்ணிக்கை குறையும்போதெல்லாம் இந்த வழிமுறையைக் கையாளலாம் என்பது ஆப்கானிஸ்தான் தலீபான் தலைவர்களுக்கு நாம் வழங்கும் அரிய யோசனை.

இந்தச் செய்தி எவ்வகையிலேனும் தலீபான்களைச் சென்றடைதல் வேண்டும் என்பது நம் பெருவிருப்பம்!

வாழ்க தலீபான்கள்! வெல்க அவர்களின் 'அறநெறி' ஆட்சி!!

==========================================================================

Credit: A

புதன், 23 மார்ச், 2022

நிறையாத வயிறுகளும் நிறைவேறாத காதல்களும்!

 "மலர்....." -அழைத்தான் பக்கவாட்டு இருக்கையிலிருந்த இளங்குமரன்.

"சொல்லுங்க குமரன்" -கணினியை நோட்டமிட்டவாறே சொன்னாள் மலர்.

"டீ குடிச்சிட்டு வருவோம், வா" என்றான் அவன். 

"எனக்குத் தேனீர் குடிக்கிற பழக்கம் இல்லைன்னு உங்களுக்குத் தெரியும்தானே?"

"இன்னிக்கி ஒரு நாள் மட்டும்... எனக்காக."

"உங்களுக்காகவா?....." -சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்த மலர், பக்கவாட்டில் பார்த்தாள். புறப்படத் தயாராக நின்றுகொண்டிருந்தான் இளங்குமரன். 

அவள் எழுந்தாள்.

இருவரும் இணைந்து நடந்தார்கள்.

சிற்றுண்டிச்சாலையை அடைந்ததும் அருகருகே இருந்த இருக்கைகளில் அமர்ந்தார்கள். 

பணியாளரிடம் சொல்லி இரண்டு தேனீர் வரவழைத்தான் அவன்.

"என்கிட்டே ரகசியமா ஏதோ சொல்ல நினைக்கிறீங்க. அதைப் புரிஞ்சிட்டுத்தான் நீங்க கூப்பிட்டவுடன் கேள்வி கேட்காம கிளம்பி வந்தேன். சொல்லுங்க குமரன்." - மலரின் முகத்தில் மெலிதான புன்னகையும் சந்தேக ரேகைகளும் இழையோடின.

"வந்து மலர்... அது வந்து..."

"விசயத்துக்கு வாங்க."

"உன்னை நான் காதலிக்கிறேன்; கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்."

அவனின் இந்த விருப்பத்தை ஏற்கனவே அனுமானித்திருந்த மலரின் முகத்தில் சலனம் ஏதுமில்லை. உணர்ச்சியற்ற தொனியில் பேசத் தொடங்கினாள். "என் அப்பாவும் அம்மாவும் விவசாயக் கூலிகள். பரம்பரைக் கூலிகள்னும் சொல்லலாம்....."

குறுக்கிட்டான் இளங்குமரன், "அதெல்லாம் எனக்குப் பொருட்டல்ல மலர். ஆறு மாசப் பழக்கத்தில் உன்னை முழுசாப் புரிஞ்சிட்டிருக்கேன். நீ சம்மதிச்சா....."

'நான் சொல்லுறதை முழுசா கேட்டுக்குங்க" என்று இடைமறித்த மலர், தொடர்ந்து பேசினாள்: "எங்க பரம்பரையே விவசாயக் கூலிகள்னு சொன்னேன் இல்லையா? இன்னும் சொல்லுறேன். படிப்பறிவில்லாத என் அப்பாவும் அம்மாவும், ஊர் சுத்திப் பார்க்குறது,  சினிமா போறது, ஆசைப்பட்டபடி எல்லாம் உடை உடுத்துறதுன்னு சராசரி மனுசங்களுக்கான எந்தவொரு சந்தோசத்தையும் அனுபவிச்சதில்ல.  சரியாச் சாப்பிட்டும் சாப்பிடாமையும் வந்த வருமானத்தை மிச்சப்படுத்தி என்னைப் படிக்க வைச்சாங்க....."

குரலில் லேசான பதற்றம் தொற்றிக்கொள்ளவே, சற்று நேரம் பேசுவதை நிறுத்திய அவள், "நான் வேலைக்குச் சேர்ந்து ஆறு மாசம் ஆகுது. இந்த ஆறு மாசமாத்தான்  என்னைப் பெத்தவங்க வயிறு நிறையவும் வாய்க்கு ருசியாகவும் சாப்பிடுறாங்க. இனியும் அது தொடரணும். கவுரவமா உடை உடுத்தணும்; தினமும் தொலைக்காட்சி பார்க்கணும்; நல்ல சினிமாப் படம் வந்தா போய்ப் பார்க்கணும்; வருசத்தில் ஒரு தடவையாவது சுற்றுலாப் போகணும்" என்றாள்;  கோப்பையிலிருந்த தேனீரை உறிஞ்சிச் சுவைக்க ஆரம்பித்தாள்.

அவள் பருகி முடிக்கும்வரை காத்திருந்த இளங்குமரன் சொன்னான்: "இதுக்கெல்லாம் நம் திருமணம் ஒரு தடையாக இருக்காது மலர்."

"இருக்காதுன்னு இப்போ நீங்க சொல்லுறீங்க. கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு கணவனாகவும் இப்படி உங்களால சொல்ல முடியுமா குமரன்? முடியுமோ முடியாதோ, சிக்கலில் மாட்டிக்க நான் விரும்பல. எனக்கு இப்போ இருபத்தி நாலு வயசு ஆகுது. இத்தனை வருசமும் என்னைப் பெத்தவங்க எனக்காகவே வாழ்ந்திருக்காங்க. இருபத்தி நாலு வருசம் இல்லேன்னாலும், ஒரு நாலு வருசமாவது அவங்களுக்காக மட்டுமே நான் வாழ விரும்புறேன். அதனால....."

-சொல்லி நிறுத்தி, இளங்குமரனின் முகத்தை உற்றுநோக்கியவாறு சொன்னாள் மலர்: "நாலு வருசம் போகட்டும். அப்போ உங்களுக்குக் கல்யாணம் ஆகாம இருந்தா, 'நான் உன்னைக் காதல் கல்யாணம் செய்துக்க விரும்புறேன். உனக்குச் சம்மதமா'ன்னு கேளுங்க, பதில் சொல்லுறேன்."

சட்டென அவள் மீதான தன் பார்வையைத் திசை திருப்பினான் இளங்குமரன்; தேனீருக்குக்கான பணத்தைக் கொடுக்கக் கல்லாவை நோக்கி நடந்தான்.

அவனுக்காகக் காத்திராமல் விரைந்து நடந்து தன் இருக்கையை அடைந்தாள் மலர்!

==========================================================================

திங்கள், 21 மார்ச், 2022

சிற்றின்ப நுகர்வுக்கா சிறுமியர்கள்!? மரித்ததா 'மனிதப் பாசம்'!?!?

காதல் கத்தரிக்காய் பண்ணிக்கொண்டு கூத்தடிக்கும் கும்பல்கள்; கடவுளே கதி என்று விழாக்கள், விசேடப் பூஜைகள் என்று காலம் கழிக்கும் பக்தக் கோடிகள்; பக்தர்களின் பக்கப்பலத்தோடு கற்பனைக் கடவுள்களைக் காப்பாற்றக் கதைப்பதையே தொழிலாகக் கொண்ட மதவாதிகள்; இன்னும், அரசியலில் ஆதிக்கம் செலுத்துவோர், ஆன்மிகம் பரப்புவோர், அறிவியல் வளர்ப்போர் என்று வகை வகையான மனிதத் தொகுப்புகளின் வாழ்விடமாக உள்ளது இந்த மண்ணுலகம். 

இங்கு வாழ்வோர் அத்தனைப் பேரும் மனிதர்கள்தான். இவர்களில் 'மனிதப் பாசம்' உள்ளவர்கள் எத்தனைப் பேர்?

இவர்கள் பெரும்பாலானவர்களாக இருந்து, பிள்ளைப்பாசம் உள்ளவர்களாகவும் இருந்திருந்தால்  சிறார் விபச்சாரம் முளைவிட்டிருக்குமா? நாளும் பொழுதுமாக வளர்ந்துகொண்டிருக்குமா? கற்பனை செய்ய இயலாத அளவுக்குப் பால்மணம் மாறாத சிறுமிகள்  சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் அக்கிரமம் தொடர்ந்துகொண்டிருக்குமா?

கேள்வி கேட்கத் தெரிகிறது நமக்கு. பதில் தெரிவதில்லை. நம்மால் முடிந்தது சில சொட்டுக் கண்ணீரை அவர்களுக்குக் காணிக்கையாக்கிச் சில நிமிடத் துக்கம் அனுசரிப்பது மட்டுமே.

வாசிப்பைத் தொடருங்கள்.

'சிறார் விபச்சாரம்':

*தாய்லாந்தில் 12 வயதிற்குட்பட்டோரின் சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களின் எண்ணிக்கை 6 லட்சம். 18 வயதிற்குட்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடி என்று வைத்தாலும் விபச்சாரத்தில் ஈடுபட்டிருப்போர் அதில் 10 விழுக்காடு[%]. குழந்தை விபச்சாரத்தின் சொர்க்கமான தாய்லாந்தில் 3 லட்சம் குழந்தைகளுக்கு எயிட்ஸ்! 

*ஆர்மைன் என்ற தாய்லாந்து சிறுமி விபச்சாரத்தில் தள்ளப்படும்போது அவளுக்கு வயது 12; பருவத்திற்குக்கூட வரவில்லை. கடற்கரையோர உணவு விடுதியில் நல்ல வேலை வாங்கித் தருகிறோம் என்று பொய் சொல்லி அவளது ஏழைப் பெற்றோரை ஏமாற்றி விபச்சாரத்திற்குப் பெயர் போன புக்கேட் நகரில் கொண்டுவந்து விற்றுவிட்டார்கள் விபச்சாரத் தரகர்கள். “ஒரு இரவிற்குக் குறைந்தது 3 பேர். எல்லோரும் அமெரிக்கர்கள், ஜப்பானியர்கள், ஐரோப்பியர்கள் தான்"என்கிறாள் ஆர்மைன். இரண்டு ஆண்டுகள் இந்த நகரத்தில் உழன்ற பின் அவளை மீட்டெடுத்தது காவல் துறை. ஆனால் அதற்குள் ஆர்மைன் எயிட்ஸ் நோயாளியாக ஆகிவிட்டாள்.

*புண்ணிய பூமியாம் இந்தியாவில் 4 லட்சம் சிறுவர் சிறுமிகள், பிலிபைன்ஸ் 60,000 பேர், பிரேசிலில் 2.5 லட்சம் பேர் என்று லட்சக்கணக்கில் பாலியல் தொழில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

*அநேகமாக எல்லா ஏழை நாடுகளும், முன்னால் சோசலிச நாடுகளும் ஐரோப்பிய அமெரிக்க காம வெறியர்களுக்கு விருந்துபடைக்கும் மையங்களாகவே உள்ளன.

*வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று நம்பி ஏமாந்து விபச்சாரத்தில் தள்ளபட்ட டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த ஓர் இளம் பெண்ணின் போட்டியை பீஇபீ.சி தொலைக்காட்சி ஒளிபரப்பியது. "அவர்கள் என்னை அடித்தார்கள்; சூடுவைத்தார்கள்; பட்டினி போட்டார்கள். 5 நாட்களுக்கு மேல் என்னால் தாக்குபிடிக்க முடியவில்லை. கடைசியில் என் தன்மானத்தையும் கன்னித் தன்மையையும் வெறும் 25 டாலருக்கு இழந்தேன் என்று கண்களில் நீர் வழியக் கூறினாள் அந்தப் பெண்.

*நேபாளத்திலிருந்து சிறுமிகளும், பெண்களுமாக ஆண்டுக்கு 7,000 பேர் பம்பாய் சிவப்பு விளக்குப் பகுதிக்கு இறக்குமதியாகிறார்களே, எப்படி? 

நேபாளத்திலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ஒரு 14 வயதுச் சிறுமியை பம்பாய் விபச்சார விடுதி ஒன்றில் வைத்து 3 வாரம் சித்திரவதை செய்தார்கள். அவள் எதிர்த்து நின்றாள். பிறகு ஓர் இருட்டறையில் அவளை ஓரு நல்ல பாம்புடன் சேர்த்து அடைத்தார்கள். அச்சத்தில் உறைந்து போனாள். இரண்டு நாட்கள் கழிந்தன. முன்றாம் நாள் இணங்கினாள்.

*"ருமேனியாவுக்குப் போனேன். கேட்பாரில்லாத பெண்கள் யாரென்று தேடினேன். அவர்களை விலை பேசி வாங்கினேன். பிறகு அவர்களை அழைத்து வந்து பெல்ஜியத்தில் விற்றுவிட்டேன். பிறகு அவர்கள் பல கைமாறினார்கள். எனினும், கேட்பதற்கு ஒரு நாதியும் கிடையாது. தொழில் ரொம்பச் சுலபம், ஒரு கிலோ ரொட்டியை விற்பது போலத்தான்” என்று தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்தான் ஒரு கங்கேரிய விபச்சாரத் தரகன்

*பாலுறவு என்றால் என்னவென்றே தெரியாத, அதற்குரிய பருவமும் வராத சிறுவர்களும், சிறுமிகளும் விபச்சாரத்திற்கு உட்படுத்துவதன் சமூக விளைவுகள் என்ன? 

சில ஆண்டுகள் இத்தகைய பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டபின் ஒருவேளை அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்கள் மனநிலை என்னவாக இருக்கும்? வாழ்க்கை மதிப்பீடுகள் என்னவாக இருக்கும்? 

“திரும்பவும் எங்கள் நாட்டுக்குப் போய் என்ன செய்வது? குடும்பத்தோடு பட்டினி கிடப்பதா? ஆணாயிருந்தால் எவனையாவது கொலை செய்துவிட்டுப் பணம் திருடியிருப்பேன். பெண் என்பதால் விபச்சாரி ஆகிவிட்டேன்” என்றாள் பம்பாய் விடுதி ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட ஒரு நேபாளப்பெண்.

*மாஸ்கோ, பம்பாய் விபச்சார விடுதிகளிலிருந்து தமிழ் நாட்டுக்கு மீட்டுக் கொண்டவரப்பட்ட பெண்களில் சிலர் திரும்பவும் அங்கேயே சென்று விட விரும்பினர். காரணம் .....

“இந்த நகரத்திற்கு அந்த நரகமே மேல்" என்பது தான் அவர்களது பதில்.

*கடத்தப்படும் சிறுவர்கள் சிலர் ஓரினச் சேர்க்கைத் தொழிலுக்குத் தள்ளப்படுகிறார்கள். சிறுமிகள், ரூ.75 ஆயிரத்துக்கு பாலியல் தொழில் நடத்துவோருக்கு 4 மாத ஒப்பந்தத்தில் விற்கப்படுகிறார்கள். பாலியல் தொழில் நடத்துவோர் சிறுமிகள் மூலம் ரூ.4 லட்சம்வரை சம்பாதிக்கிறார்கள்.

*ஆந்திரத்தில் இருந்து ஒராண்டுக்கு முன் புனேவுக்கு கடத்தப்பட்ட 11 வயது சிறுமி பல்வேறு பாலியல் கொடுமைகளுக்கு ஆளானார். அவர் கடைசியில் எய்ட்ஸ் நோயால் அண்மையில் இறந்துவிட்டார்” என்றார் ஆந்திரத்தின் ஆள் கடத்தல் தடுப்பு மைய அதிகாரி ஒருவர்.

*கர்நாடகத்தில் 2007ஆம் ஆண்டில் மட்டும் 2 லட்சம் பெண்கள் பாலியல் தொழிலுக்காக வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்பட்டுள்ளனர் என்ற திடுக்கிடும் புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. இவர்களில் 25 சதவிகிதம் பேர் 18 வயதுக்குக் குறைவான பெண்கள் மற்றும் ஆண்கள்.

==========================================================================

நன்றி:

https://devapriyaji.wordpress.com/2009/11/27/881/


ஞாயிறு, 20 மார்ச், 2022

ஹிஜாப் அணிதலும் முகம் மறைத்தலும்!

'ஹிஜாப்' அணிவது, வெகு சூடான விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், "இதை அணிவோர் முகத்தையும் மூடிக்கொள்கிறார்களே, சில நேரங்களில் அணிபவர் ஆணா, பெண்ணா என்று அறிய இயலாத நிலையில், குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு இது உதவுவதாக இருக்குமே" என்று சொல்ல நினைக்கும் சமரச மனப்பான்மை கொண்டவர்களும்கூட வாய் திறப்பதில்லை.

நீதி மன்றத்தின் பரிசீலனையில் உள்ளது இது என்பதோடு, 'இது மதச் சிறுபான்மையினர் பிரச்சினை; நாம் தலையிடுதல் கூடாது' என்னும் எச்சரிக்கை உணர்வும் முக்கியக் காரணமாக உள்ளது.

இந்நிலையில்..... 

இஸ்லாமியரின் பழக்கவழக்கங்கள், கட்டுப்பாடுகள் ஆகியன பற்றியும் தன் கருத்துகளை இப்பதிவில் முன்வைத்துள்ளார். விரும்பினால் அவற்றையும் வாசித்தறியலாம். 

நன்றி!

                                        பதிவு:

#ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக் குறைவே. பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்பு பாதிக்கப்படும் என்று அஞ்சுவதுதான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இதுதான் காரணம்.

முகத்தையும் ஒரு பெண் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள் எனும்போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். எனவே, முகத்தையும் மறைத்துக்கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.

ஆண்கள்கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவர்களது சுய ரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லாவிட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்ட வேண்டும்.

மேலும், முகத்தையும் மறைக்கக் கட்டளையிட்டால் முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி முஸ்லிமல்லாத பெண்களும்கூடத் தவறு செய்யும்போது முகத்தை மறைத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படும். அப்படியும் சில பகுதிகளில் நடப்பதை நம்மால் அறிய முடிகின்றது.

பெண்கள் மட்டுமின்றி தவறான செயல்களில் ஈடுபடும் ஆண்கள்கூட பெண்களைப் போல் முகம் மறைத்துப் பல தவறுகளைச் செய்யக்கூடிய நிலமையும் ஏற்படலாம்.

எனவேதான், முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை.

நபித்தோழியர் எவரும் தாங்கள் யார் என்று அடையாளம் தெரியாத வகையில் முகத்தை மறைத்துக்கொண்டதில்லை என்று வரலாற்று நூற்களில் காண்கிறோம்.

கொடுக்கல், வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபடக் கைகள் வெளியே தெரிவது மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக்கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும். இதனால்தான் மணிக்கட்டுவரை கைகளை மறைத்துக்கொள்வதற்கு  இஸ்லாம் அனுமதிக்கிறது.#

முகம் அறியாத நண்பருக்கு நம் நன்றி!

==========================================================================

சனி, 19 மார்ச், 2022

சொர்க்கம் மூன்று! நரகமும் மூன்றே!!

*பைபிளின்படி.....  பல சந்தர்ப்பங்களில் அவர் தனது தீர்க்கதரிசிகளுக்குச் சொர்க்கத்தைக் காட்டினார் (ஏசாயா 6; எசேக்கியேல் 1; டேனியல் 7: 9-10; 2 கொரிந்தியர் 12: 1-4; வெளிப்படுத்துதல் 1: 4-5). கடவுள்[கர்த்தர்] இப்போது சொர்க்கத்தில் ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.[https://turk-sinema.ru/ta/fortune-telling/est-rai-ili-ad-sushchestvuet-li-ad-i-rai-iz-vospominanii-amerikanskogo.html]

'கிறிஸ்தவர்கள் நரகம் என்பது பாவம் செய்பவர்கள் தண்டனை பெறும் துன்பமான இடம் என்று நம்புகின்றனர்.' https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

மேற்கண்ட ஆதாரத்தைக் கொண்டு, சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் இருப்பைக் கிறித்தவம் உறுதிப்படுத்துகிறது என்பதையும், அவற்றைக் கர்த்தர் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது.

*சொர்க்கத்தின் தலைவன் உடலெல்லாம் கண்கள்(???) கொண்ட இந்திரன். (இந்திரனைப் பற்றிய கதைகளைப் படித்தவர்கள், உண்மையில் இவர் எப்படிச் சொர்க்கத்தின் அதிபதி ஆனார் என்று ஆச்சர்யபடுவார்கள்). https://yauwanajanam.activeboard.com/t41671314/topic-41671314/?page=1&sort=oldestFirst

நரகம் (சமசுகிருதம்:नरक, நரகா) என்பது இந்துத் தொன்மவியலின் அடிப்படையில் பூமியில் பிறக்கும் உயிர்களில் பாவங்கள் செய்த ஆன்மாவிற்குத் தண்டனை விதிக்கும் உலகமாகும். இதன்[நரகம்] அரசராக யமன் உள்ளார். பாவ புண்ணியங்களைக் கணக்கிடும் பணியாளனாகச் சித்ரகுப்தன் உள்ளார்[https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)

இந்த ஆதாரங்களின் மூலம், இந்துமதத்தினரும் 'சொர்க்கம்-நரகம்' என்பதில் நம்பிக்கை உள்ளவர்கள் என்பதை அறியலாம்.

*‘மக்கள் சிலர் தாங்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனையாக நரகத்தில் நெருப்பினால் தீண்டப்பட்டு, அவர்களின் சருமத்தின் நிறமே மாறிவிடும். பிறகு அல்லாஹ் அவர்களைத் தன் தனிக்கருணையினால் சொர்க்கத்தில் அனுமதிப்பான். அவர்கள் நரகத்தில் இருந்து விடுதலை அடைந்தவர்கள் என்று சொல்லப்படுவார்கள் என நபி(ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

"இஸ்லாம் மார்க்கத்தின்படி, சொர்க்கம், நரகம் எல்லாம் உண்டு"[https://ne-np.facebook.com/thouheedjamath/videos/]

***மேலே இடம்பெற்றுள்ளவை சொர்க்கம், நரகம் ஆகியன பற்றிய ஆதாரங்கள். 

இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தால், ஒரு சொர்க்கமும் ஒரு நரகமும் இருப்பதாக நாம் நினைத்துக்கொண்டிருப்பது தவறானது ஆகும். 

கர்த்தர்தான் சொர்க்கத்தின் தலைவர் என்கிறார்கள் கிறித்தவர்கள். அதன் தலைவர் இந்திரன்தான் என்கிறார்கள் இந்துமதத்தினர். இஸ்லாமியரோ, அல்லாஹ்தான் தலைவர் என்கிறார்கள். எனவே, இவர்களின் கூற்றுப்படி, மூன்று சொர்க்கங்கள் உள்ளன என்றாகிறது. சொர்க்கங்கள் மூன்று எனின், நரகங்களும் மூன்றே என்பது உறுதியாகிறது. 

இவை மும்மூன்றோ முப்பது முப்பதோ எவ்வாறோ இருந்து தொலையட்டும். நம் கவலை நாத்திகர்களைப் பற்றித்தான்.

சொர்க்கத்தில் அனுமதிக்கப்படாத நாத்திகர்கள், மூன்றில் எந்த ஒரு நரகத்தில் கிடந்து வதைபடுவார்கள்?

மூன்றில் எது கொஞ்சமே கொஞ்சமேனும் தேவலாம்?

பதில், மதவாதிகளுக்கு மட்டுமே தெரியும்! ஹி... ஹி... ஹி!!!
==========================================================================