தலைப்பைப் பார்த்து முகம் சுளிக்க வேண்டாம்.
இதில் பெரிய தத்துவமே அடங்கியுள்ளது.
வறட்டுத் தத்துவம் அல்ல; வாழ்க்கைத் தத்துவம்.
கவலைப்படுதலில் பல நிலைகள் உள்ளன. அவரவர் மனப்பக்குவத்தைப் பொருத்துச் சிறிய கவலைகள் பெரிதாகவும், பெரிய கவலைகள் அதனினும் பெரிதாகவும் உணரப்படக்கூடும்.
"கால் செருப்பு கண்டமாகி ஆறு மாசம் ஆச்சு; புதுசு வாங்க வசதி இல்ல."... "ஒரு செல்ஃபோன் வாங்க வக்கில்ல."... "சுற்றுலா போனதில்ல"... என்றிப்படிக் கவலைப்படுவோர் உள்ளனர். -செருப்பில்லாமலும், செல்ஃபோன் இல்லாமலும், சுற்றுலா போகாமலும் காலத்தைக் கடத்திட முடியும் என்பதால், இவை போன்றவை சிறிய ரகக் கவலைகள் ஆகும்.
படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காதது; செய்த தொழிலில் எதிர்பாராத இழப்பு; வயசாகியும் கல்யாணம் ஆகாதது; கட்டிகிட்ட கணவன் மனைவிக்கிடையே பிரச்சினைகள் என்று இவையும், இவற்றை ஒத்தவையும் அற்பமானவை அல்ல என்பதோடு அலட்சியம் செய்ய இயலாத பெரிய ரகக் கவலைகள்.
சிறியவையும் பெரியவையுமான கவலைகள் அயராமல் செய்யும் முயற்சிகளாலோ, அறிய இயலாத காரணங்களாலோ தீர்ந்துவிடக்கூடும்.
அடுத்தடுத்துத் தாக்கும் தீராத நோய்களின் தாக்குதலால் சித்திரவதைக்கு உள்ளாவது; கடத்தப்பட்டப் பெண் பிள்ளையை ஆண்டுக்கணக்கில் தேடியும் கிடைக்கப்பெறாமல் அழுத கண்களுடன் செத்துச் செத்துப் பிழைத்துக்கொண்டிருப்பது போன்றவை தீரவே தீராத கவலைகள்.
இவற்றைத் தீர்த்திட.....மகான்களோ, அவதாரங்களோ, ஞானிகளோ வழிகாட்டியதில்லை.
இந்தத் தீராத கவலைகளிலிருந்து முற்றிலுமாய் விடுபட மக்கள் இரண்டு வழிகளைத் தேர்வு செய்கிறார்கள்.
ஒன்று: இயன்றவரை மனதைத் திடப்படுத்திக்கொண்டு மரணத்தின் வரவுக்காகக் காத்திருப்பது.
இரண்டு: தற்கொலை[மனத்திடம் இல்லையாயின்] செய்வது.
இவை இரண்டு வழிகளுமே கருணைக்கடலான கடவுள் காட்டியவை.
வாழ்க கடவுள்கள்! வளர்க பக்தி!!

