எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 29 நவம்பர், 2025

நம் பிரதமருக்கு உலகின் உயரமானதொரு[600 அடி] தங்கச் சிலை வைப்போம்!

//தெற்குக் கோவாவில் உள்ள ஸ்ரீ சம்ஸ்தான் கோக்கரன் பர்த்தகலி ஜீவோட்டம் மடத்தின் 550ஆவது ஆண்டினைக் கொண்டாடும் சார்தா பஞ்சாஷ்டமனோத்சவ நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கு வெண்கலத்தால் செய்யப்பட்ட 77 அடி உயர[உலகின் அதிக உயரமான ராமரின் வெண்கலச் சிலை] ராமரின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தார். ஜீவோட்டம் மடம் உருவாக்கியுள்ள ராமாயண நிகழ்வுகளைச் சித்தரிக்கும் பூங்கா தோட்டத்தையும் அவர் திறந்து வைத்தார்.....

சிறப்பு அஞ்சல் தலை & நினைவு நாணயத்தை வெளியிட்டு உரையாற்றிய பிரதமர் மோடி, "இன்று இந்தியா ஒரு கலாச்சார மறுமலர்ச்சியை அனுபவித்துவருகிறது. அயோத்தியில் ராமர் கோயில் மறுசீரமைப்பு, காசி விஸ்வநாதர் கோயில் விரிவாக்கம் & புதுப்பித்தல், உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஸ்வர் கோயில் விரிவாக்கம் ஆகியவை நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு & ஆன்மிகப் பாரம்பரியத்தின் தீவிர மறுமலர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன//[செய்தி*]

ஆன்மிகத் துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தவும், பக்தர்களின் எண்ணிக்கையைப் பெருக்கவும் கோயில்கள் கட்டுதல், விரிவாக்கம் செய்தல், புதுப்பித்தல் என்று மோடி ஆற்றிய/ஆற்றும் பணிகள் அளப்பரியன.

உலகச் சுற்றுலாச் செல்வதற்குச் செலவழிக்கும் நேரத்து இணையாக இதற்குச் செலவழிக்கிறார் என்று உறுதிபடச் சொல்லலாம்.

மேலும், 100% கற்பனைப் படைப்பான ராமாயணத்தின் கதாநாயகன் ராமனை ஒரு கடவுளாக[ஏற்கனவே கடவுள் ஆக்கப்பட்டவன்] மக்களின் மனங்களில் பதியச் செய்ய.....

வெளியூர்ப் பயணங்களில், ஆங்காங்கே உள்ள  பிரபலமான கோயில்களுக்குப் பரிவாரங்களுடன்  செல்லும்போதெல்லாம், அர்ச்சகர்கள் இவருக்கு மலர் மாலை அணிவித்துக் கிரீடம் சூட்டி வரவேற்பதையும், தான் குனிந்து தரை தொட்டு, அல்லது குப்புற விழுந்து சாமி கும்பிடுவதையும், நாட்டு மக்கள் கண்டு மெய் சிலிர்க்கும் வகையில் காணொலியாக்கி, அவற்றை ஊடகங்களில் வெளியிடுதல் போன்ற இவர் ஆற்றிய/ ஆற்றும் இறைத் தொண்டு அளவிடற்கரியது.

சுருங்கச் சொன்னால், இவர் பக்தி நெறி பரப்புவதற்கென்றே கடவுளால் இம்மண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓர் ஆன்மிக ஞானி  என்று உறுதிபடச் சொல்லலாம்.

இத்தகையதொரு அர்ப்பணிப்பாளர் இந்நாள்வரை இந்த மண்ணில் அவதரித்ததில்லை என்பதால்.....

ஒட்டுமொத்த உலகமும் வியக்கும் வகையில், 600 அடி[உலகிலேயே அதிக உயரமானது> வல்லபாய் படேல் சிலை 597 அடி]யில், தங்கத்தால் ஆனதொரு சிலையை நிறுவுவது இந்தியக் குடிமக்களின் கடமை ஆகும்.