புதன், 24 ஆகஸ்ட், 2022

மறவாதீர் 'விநாயகி'யை! தேடுவீர் திருநங்கைப் பிள்ளையாரை!!

ரவிருக்கிறது விநாயகர் சதுர்த்தி விழா, ஆகஸ்டு இறுதியில்.

பிள்ளையார் பக்தர்கள் அதைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

'பிள்ளையார்ப் பிரியன்' என்ற வகையில் அவர் குறித்த அரிய, கவனத்தில் கொள்ளத்தக்க சில தகவல்களை முன்வைப்பது அடியேனின் கடமையாகும்.

* * * * *

*எந்தவொரு செயலைத் தொடங்கும்போதும் முதலில் வழிபடத்தக்க கடவுளான விநாயகருக்கு, ரணமோசன விநாயகர், உச்சிஷ்ட விநாயகர், உத்தண்ட விநாயகர், ஊர்த்துவ விநாயகர் என்றிப்படி 32 பெயர்கள் உள்ளன என்பதை அறிவீர்களா பிள்ளையார் பக்தர்களே?

32 வகைப் பிள்ளயார்களின் குழுப் பட்டியலைத் தளத்தின் தலைப்புப்[Header] படமாக வைத்துள்ளேன். அத்தனைப் பிள்ளையார்களுக்கும் தனித் தனியே களிமண்ணில் சிலைகள் செய்து புனித நீரில் கரைப்பது அதிக அளவில் புண்ணியம் சேர்க்கும் என்பதை அறிவீராக.

விநாயகர் என்பவர் ஆண்பால் இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். பெண்பால் இனத்தவராக 'விநாயகி' இருப்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இவர், கணேஷினி, பிள்ளையாரினி, பெண் கணேசா என்னும் பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சிலைகள் நிறுவி[தமிழ்நாட்டிலும் சிலைகள் உள்ளன] வணங்கப்படும் பெண் தெய்வமாக இவர் உள்ளார் https://www.bbc.com/tamil/india-62645093[24.08.2022]. இவருக்கும் சிறப்புச் செய்திட மறவாதீர் பக்தர்களே.

ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும்போதெல்லாம், கிரிக்கெட் விநாயகர், நடன விநாயகர், கொரோனா விநாயகர், என வித்தியாசமான விநாயக வடிவங்களையும் உருவாக்கி வழிபட்டுச் சிறப்புச் செய்வதும் நிகழ்கிறது.

அவ்வகையில்.....

'திருநங்கைப் பிள்ளையார்' என்று ஒருவர் இருப்பதும்[ஏற்கனவே ஆண் விநாயகரும், பெண் விநாயகரும் இருக்கிறார்கள்], இந்தப் புண்ணிய பாரதத்தில் எங்கேனும் சில இடங்களில் அவருக்குச் சிலைகள் நிறுவி வழிபடுவதும் வழக்கத்தில் இருக்கக்கூடும்.

அவருடைய இருப்பையும் தேடிக் கண்டறிந்து சிலைகள் செய்து புனித நீரில் கரைத்து வழிபடுவது உங்கள் கடமை என்பதையும் மறவாதீர்!

வாழ்க பிள்ளையார்! வாழ்க பிள்ளையாரினி! வாழ்க திருநங்கைப் பிள்ளையார்!

வளர்க பிள்ளையார் பக்தி!!

========================================================================