'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Tuesday, January 31, 2017

கடவுள்...மனிதன்...சாம்பார்...ரசம்...பாயசம்!!!

100% இது நகைச்சுவைப் பதிவல்ல!

“உலோகக் கம்பிக்குள் மின்சாரம் பாய்வதைப் பார்க்க முடியாது; ஆனால், உணர முடியும். அது போல, கடவுளையும் கண்களால் காண இயலாது; உணர மட்டுமே முடியும்” என்றிப்படிச் சொன்னார்கள்... சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் ஆன்மிகவாதிகள்.

‘கனியின் சுவையை அதை உண்ணும்போது உணரலாமே தவிர கண்களால் காண முடியாது[வார்த்தைகளால் விவரிப்பதும் சாத்தியமில்லை]. மலரின் வாசனையை நுகர்வதன் மூலம் உணர இயலுமே தவிர, பார்க்க இயலாது. மென்மையானவற்றைத் தொடுவதன் மூலம் ஒருவித இன்பத்தை உணரக்கூடுமேயன்றி அச்சுகத்தை விழிகளால் காண்பது இயலாது. இன்னிசையில் பெறும் சுகமும் இப்படித்தான்’ என்று இவை போன்ற உதாரணங்களைச் சொல்லிச் சொல்லி, கடவுளைக் காண முடியாது;  உணர மட்டுமே முடியும்’ என்று சாதித்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

கம்பிக்குள் மின்சாரம் பாய்வதைத் பார்க்க முடியாதுதான். ஆனால், அதைத் தொட்டு உணர முடியும். அது போல எதைத் தொட்டால் கடவுள் இருப்பதை உணர்வது சாத்தியப்படும்?

கனியின் சுவையை, அதைச் சுவைப்பதன் மூலம் உணர முடியும்.  பூவின் வாசனையை, அதை நுகர்வதன் மூலம் உணர முடியும். எதைச் சுவைத்தால், எதை நுகர்ந்தால் கடவுளை உணர முடியும்? 

எந்தவொரு பொருளாயினும், அதனுள் ஊடுருவியிருக்கும் சக்தியை அல்லது சுவையை அல்லது மணத்தை அல்லது சுகத்தை ஐம்புலன்கள் வாயிலாக நம்மால் உணர முடிகிறது.

பார்த்தறிய இயலாத சினம், சீற்றம், பொறாமை, இரக்கம் போன்ற உணர்ச்சிகளை, உடம்பில்[குறிப்பாக நரம்புகளில்] நிகழும் அதிர்வுகளின் மூலம் உணர்கிறோம்.
இவ்வாறு, ஐம்புல நுகர்ச்சியின் மூலமோ அதிர்வுகளின் மூலமோ கடவுளை உணர்வதற்கான சாத்தியம் கொஞ்சமும் இல்லை என்பது அறியற்பாலது.

கடவுளை உணர இயலாத நம்மால் நமக்குள்ள ஆறாவது அறிவை மட்டும் உணர்வது சாத்தியமாகிறது. அது எப்படி?

ஐந்தறிவுவரை உள்ள பிற உயிரினங்கள் செய்யாத செயல்களை நாம் செய்வதால்[சோறு சமைப்பது, சாம்பார் ரசம் பாயசம் வைப்பது, புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவது முதலானவை] அது சாத்தியமாயிற்று.

மனிதர்களாகிய நம்மைப் போல அல்லது நம்மைக் காட்டிலும் அறிவுபூர்வமானதும் உயர்வானதுமான செயல்களைக் கடவுள் செய்திருந்தால், அச்செயலின் மூலமாகவேனும் அவரை நம்மால் உணர முடியும்.  அவ்வாறு அவர் செய்திருப்பதற்கான ஆதாரம் ஏதும் இன்றளவும் கிடைத்திடவில்லை. இல்லை...இல்லவே இல்லை.

“இல்லையில்லை. கடவுளின் இருப்பை உணர்ந்ததாக[பார்த்ததாகச் சொல்வது 100% புருடா] அந்த ஞானி சொன்னார்; மகான் சொன்னார்; அவதாரம் சொன்னார்; தூதுவர் சொன்னார்; புதல்வர் சொன்னார்; அவர் சொன்னார்; இவர் சொன்னார்” என்றெல்லாம் பரப்புரை செய்வதும், கடவுளின் பெயரால் எண்ணற்ற மூடநம்பிக்கைகளை வளர்ப்பதும் மனித குலத்துக்குக் கேடு விளைவிக்கும் செயல்களாகும்.

[ஆறாவது அறிவின் ‘அனுமானங்கள்’ வாயிலாக அவரின் இருப்பை உறுதி செய்வதும் சாத்தியமல்ல[தொடர்புடைய பதிவின் முகவரி:  http://kadavulinkadavul.blogspot.com/2016/03/blog-post_93.html ].

எனவே, மேற்குறிப்பிட்ட செயல்களைத் தவிர்த்து,  பொருள்களின்/உயிர்களின் தோற்றம், இயக்கம், அழிவு குறித்தெல்லாம் நடுநிலையுடன் சோர்வின்றி ஆராய்ந்துகொண்டிருப்பதே அறிவுடையோர் ஆற்ற வேண்டிய இன்றியமையாப் பணியாகும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Friday, January 27, 2017

ரூ5.5 கோடியில் தனித் தமிழ்நாடு!

    1. ரப்புரை அவசியமில்லை. எவரும் மேடையேறி முழங்கத் தேவையில்லை. அலைகடலெனத் திரண்டு ஊர்வலம் போவது, உண்ணாநோன்பு இருப்பது, போகுவரத்தை மறிப்பது,  அடிபட்டு உதைபட்டுச் சித்திரவதைக்குள்ளாவது, உயிர்த்தியாகம் செய்வது என்று எந்தவொரு இடும்பை தரும் செயலிலும் ஈடுபட வேண்டாம்.
    2. சுருங்கச் சொன்னால்....
  1. உடம்பில் தூசு படாமல், சின்னஞ்சிறு சிராய்ப்புகூட இல்லாமல், கத்தி ஏந்தாமல், இரத்தம் சிந்தாமல், யுத்தம் ஏதும் நிகழ்த்தாமல் நம்மால் ‘தனித் தமிழ்நாடு’தனைப் பெற்றிட முடியும். 

எப்படி? எப்படி? எப்படி?

“ஏழுமலை வாசா! வெங்கடேஸ்வரா! 14.9 கிலோ எடையில் தங்க சாலிக்கிராம ஹாரம் மற்றும் 4.65 கிலோ எடையில் 5 வரிசை கொண்ட தங்கக் காசு மாலை ஆகியவற்றை உனக்குக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறோம்” என்றிப்படி, இன உணர்வு கொண்ட அத்தனை தமிழர்களும் [ஏழுமலையானிடம்] கோரிக்கை வைத்தால் போதும்[ஆகும் செலவை இன உணர்வுள்ள அத்தனை தமிழர்களும் பகிர்ந்துகொள்ளலாம்]. அவர் நம் கோரிக்கையை நிறைவேற்றுவார்.

நாம் தனித் தமிழ்நாடு பெறுவது 100% உறுதி.

இதை எப்படி நம்புவது என்கிறீர்களா?

இன்றைய நாளிதழில்[‘தின வணிகம்’, 26.01.2017] வெளியான கீழ்வரும் செய்தியைப் படியுங்கள்.

செய்தியின் தலைப்பு: தெலுங்கானா மாநிலம் உதயம் எதிரொலி. ஏழுமலையானுக்கு ரூ.5.5 கோடி தங்க நகைகள் காணிக்கை

செய்தியின் சாரம்: #ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ள முதல்வர் கே.சந்திரசேகர ராவ், தெலுங்கானா மாநிலம் உருவானால்[ஏழுமலையான் உருவாக்கிக் கொடுத்தால்] திருப்பதி ஏழுமலையானுக்கு 14.9 கிலோ எடையில் தங்க சாலிக்கிராம ஹாரம் மற்றும் 4.65 கிலோ எடையில் 5 வரிசை கொண்ட தங்கக் காசு மாலை ஆகியவற்றை ஏழுமலையானுக்குக் காணிக்கையாக வழங்குவதாக நேர்ந்துகொண்டார்[போராட்டக்காரர்கள் பலரின் உயிர்த் தியாகமும் இவரின் உண்ணாநோன்பும் பலன் தரவில்லை என்று நினைத்தார் போலும்!]. கோரிக்கை நிறைவேறியதால், நேர்ந்துகொண்டபடி காணிக்கையை வழங்க உள்ளார். இதன் மொத்த மதிப்பு 5.5 கோடியாகும்#

5.5 கோடி ரூபாய்க்காக ஏழுமலையான் ஒரு மாநிலத்தை உருவாக்கித் தந்தார் என்றால், அதே தொகைக்கு[கூடுதல் காணிக்கை குறித்துக் கலந்தாலோசிப்போம்] நமக்குத் ‘தனி நாடு’ பெற்றுத் தருவார் என்பதில் கிஞ்சித்தும் ஐயத்திற்கு இடமில்லை!
===============================================================================

Thursday, January 26, 2017

கத்தியின்றி இரத்தமின்றித் ‘தனித் தமிழ்நாடு’ பெறுவது எப்படி?!

ரப்புரை அவசியமில்லை. எவரும் மேடையேறி முழங்கத் தேவையில்லை. அலைகடலெனத் திரண்டு ஊர்வலம் போவது, உண்ணாநோன்பு இருப்பது, போகுவரத்தை மறிப்பது,  அடிபட்டு உதைபட்டுச் சித்திரவதைக்குள்ளாவது, உயிர்த்தியாகம் செய்வது என்று எந்தவொரு இடும்பை தரும் செயலிலும் ஈடுபட வேண்டாம்.

சுருங்கச் சொன்னால்.....

உடம்பில் தூசு படாமல், சின்னஞ்சிறு சிராய்ப்புகூட இல்லாமல், கத்தி ஏந்தாமல், இரத்தம் சிந்தாமல், யுத்தம் ஏதும் நிகழ்த்தாமல் நம்மால் ‘தனித் தமிழ்நாடு’தனைப் பெற்றிட முடியும். 

எப்படி? எப்படி? எப்படி?

“ஏழுமலை வாசா! வெங்கடேஸ்வரா! 14.9 கிலோ எடையில் தங்க சாலிக்கிராம ஹாரம் மற்றும் 4.65 கிலோ எடையில் 5 வரிசை கொண்ட தங்கக் காசு மாலை ஆகியவற்றை உனக்குக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறோம்” என்றிப்படி, இன உணர்வு கொண்ட அத்தனை தமிழர்களும் [ஏழுமலையானிடம்] கோரிக்கை வைத்தால் போதும்[ஆகும் செலவை இன உணர்வுள்ள அத்தனை தமிழர்களும் பகிர்ந்துகொள்ளலாம்]. அவர் நம் கோரிக்கையை நிறைவேற்றுவார்.

நாம் தனித் தமிழ்நாடு பெறுவது 100% உறுதி.

இதை எப்படி நம்புவது என்கிறீர்களா?

இன்றைய நாளிதழில்[‘தின வணிகம்’, 26.01.2017] வெளியான கீழ்வரும் செய்தியைப் படியுங்கள்.
செய்தியின் தலைப்பு: தெலுங்கானா மாநிலம் உதயம் எதிரொலி. ஏழுமலையானுக்கு ரூ.5.5 கோடி தங்க நகைகள் காணிக்கை

செய்தியின் சாரம்: #ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ள முதல்வர் கே.சந்திரசேகர ராவ், தெலுங்கானா மாநிலம் உருவானால்[ஏழுமலையான் உருவாக்கிக் கொடுத்தால்] திருப்பதி ஏழுமலையானுக்கு 14.9 கிலோ எடையில் தங்க சாலிக்கிராம ஹாரம் மற்றும் 4.65 கிலோ எடையில் 5 வரிசை கொண்ட தங்கக் காசு மாலை ஆகியவற்றை ஏழுமலையானுக்குக் காணிக்கையாக வழங்குவதாக நேர்ந்துகொண்டார்[போராட்டக்காரர்கள் பலரின் உயிர்த் தியாகமும் இவரின் உண்ணாநோன்பும் பலன் தரவில்லை என்று நினைத்தார் போலும்!]. கோரிக்கை நிறைவேறியதால், நேர்ந்துகொண்டபடி காணிக்கையை வழங்க உள்ளார். இதன் மொத்த மதிப்பு 5.5 கோடியாகும்#

5.5 கோடி ரூபாய்க்காக ஏழுமலையான் ஒரு மாநிலத்தை உருவாக்கித் தந்தார் என்றால், அதே தொகைக்கு[கூடுதல் காணிக்கை குறித்துக் கலந்தாலோசிப்போம்] நமக்குத் ‘தனி நாடு’ பெற்றுத் தருவார் என்பதில் கிஞ்சித்தும் ஐயத்திற்கு இடமில்லை!
===============================================================================


Tuesday, January 24, 2017

இந்தத் ‘தத்துப்பித்து’ப் பதிவுக்கு +446510 [G+1] கள்!?!? {24.01.2017, காலை 10.35 வரை}

Aug 22, 2016


உலகின் நம்பர் 1 தத்துவச் சிறுகதை![பதிவின் நகல்]

தோலும் சதையுமாய் நடமாடிய காலத்திலும் சரி, பிரபஞ்சத்தின் ஓர் அணுப்புள்ளியான இப்பூமண்டலத்திலிருந்து விடுபட்டு, சூக்கும தேகத்துடன் வெளி மண்டலத்தில் பிரவேசித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் சரி, பரம்பொருளைப் பற்றிய சிந்தனையிலிருந்து நான் கிஞ்சித்தும் விடுபடவே இல்லை.

பரம்பொருள் எனப்படும் அந்த ஆண்டவன், கோடானுகோடி அண்டங்களை உள்வாங்கிக்கொண்டு, வரையறைகளுக்குக் கட்டுப்படாமல் விரிந்து...மிக மிக மிக விரிந்து பரந்து கிடக்கும் இந்தப் பிரபஞ்ச வெளியில் எங்கே இருக்கிறான்?

அறியும் பேரார்வத்துடன் நான் பயணித்துக்கொண்டிருந்தேன். 

பருப்பொருளாகிய தேகத்தை நான் ஏற்கனவே இழந்துவிட்டிருந்ததால், இங்கே ‘நான்’ என்று நான் குறிப்பிடுவது நுண்பொருளான ஆன்மாவைத்தான்.

பஞ்ச பூதங்களின் சேர்க்கையில் உருவான கோள்களையும், நட்சத்திரங்களையும் இன்ன பிறவற்றையும் கடந்து  நான் பயணித்துக்கொண்டிருந்தேன். என்னுடன் ஏராள ஆன்மாக்கள்.

பிரபஞ்ச வெளியின் ஒரு திக்கில் கன்னங்கரிய இருள். மிகப் பெரும் பரப்பை அது ஆக்கிரமித்துக்கொண்டிருப்பது போல் தோன்றியது. அந்த வெளியில்தான் நரகம் இருப்பதாக ஆன்மாக்கள் நடுங்கும் குரலில் முணுமுணுத்தன.

இன்னொரு திக்கில் ஒளி வெள்ளம். அதை ஏறிட்டுப் பார்ப்பதே அசாத்தியமாகத் தோன்றியது. அங்கேதான் சொர்க்கம் இருப்பதாக ஆன்மாக்கள் சொல்லிக்கொண்டன.

செய்த பாவபுண்ணியங்களுக்கேற்ப, அனிச்சைச் செயலாய் ஆன்மாக்கள் பிரிக்கப்பட்டு ஏதாவது ஒரு வெளியில் செலுத்தப்பட்டன. எனக்குப் பிரகாச வெளி.

அவ்வெளியில் நுழையாமல் நான் தயங்கி நின்றேன்.

“ஏன் நிற்கிறாய்? தொடர்ந்து செல்” அசரீரியாய் ஒரு குரல் ஒலித்தது. அந்த வினாடிவரை நான் கேட்டறியாத முற்றிலும் மாறுபட்ட ஒலி அது. அது என்ன மொழி என்ற கேள்வி தேவையற்றுப்போனது.

“நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்” என்றேன்.

“அவரைச் சந்திக்க விரும்பினால் நீ சொர்க்கத்தை இழக்க நேரிடும்.”

“சம்மதம். ஒரே ஒரு முறை கடவுளைச் சந்திக்க முடியும் என்றால் நான் நரகம் புகவும் தயார்" என்றேன் திடமான குரலில்.

என் பின்னால் அணிவகுத்து நின்ற ஆன்மாக்கள் என்னைப் பைத்தியமாக எண்ணிப் பரிதாபப்பட்டன.

“கடவுளைச் சந்தித்த பிறகு நீ மீண்டும் பூமண்டலத்தில் பிறந்து அல்லல்பட நேரிடும்” என்றது அசரீரி.

மீண்டும் “சம்மதம்” சொன்னேன்.

“அதோ தெரிகிறதே இருளற்று ஒளியற்று நிறமற்று ஒரு பரந்த வெளி, அதைக் கடந்தால் ஞான வெளி தென்படும். அதையும் கடந்தால் சூன்ய வெளி. அதன் மையப் புள்ளியில் நீ கடவுளைச் சந்திப்பாய். செல்லலாம்.” -அசரீரி.

ஞான வெளியில் என் பயணம் தொடர்ந்தது. தூரம் எவ்வளவு; கால அளவு என்ன என்பவற்றையெல்லாம் என்னால் கணிக்க இயலவில்லை. ஆனாலும் பயணித்தேன்...பயணித்தேன்...பயணித்தேன்.

ஒரு கட்டத்தில், ஞான வெளியைக் கடந்து சூன்ய வெளியில் நுழைந்துவிட்டதை என்னால் உணர முடிந்தது. அது சாத்தியமானது எப்படி என்பதையும் என்னால் அறியவோ உணரவோ இயலவில்லை.

சூன்யத்தின் மையப் புள்ளியை நான் நெருங்கியிருக்க வேண்டும். “மானிட ஆன்மாவே நில்” என்ற குரல் என்னை ஆணியடித்தாற் போல் நிற்க வைத்தது.

“நான் கடவுள் பேசுகிறேன்.  என் தோற்றம்; அதற்கான காரணம்; அது நிகழ்ந்த காலம் போன்றவையெல்லாம் பிறர் அறியக்கூடாத ரகசியங்கள். அவை பற்றி ஆராயத் தலைப்பட்டால் மனித மூளை ஸ்தம்பித்துவிடும். எனவே, நீ வந்த நோக்கத்தைச் சொல்” என்றார் கடவுள்.

நான் சிலிர்த்தேன்; சொன்னேன்: “பூமண்டலத்திலிருந்து  வருகிறேன்...”

சொல்லி முடிப்பதற்குள் கடவுள் குறுக்கிட்டார். “அறிமுக ஆலாபனைகள் தேவையில்லை. விசயத்துக்கு வா.”

“நீங்கள் ஒருவர்தானே கடவுள்?” -நான் கேட்டேன்.

‘பக்’கென்று சிரித்தார் கடவுள்; சொன்னார்: “ஆமாம்.”

“பரம்பொருளே, தங்கள் படைப்பில் எத்தனையோ அதிசயங்கள்; பிரமிக்க வைக்கும் விசித்திரங்கள் உள்ளன. தங்களின்  கருணைக்குப் பாத்திரமானவை கணக்கில் அடங்காத உயிரினங்கள். அவற்றில் மனித இனமும் ஒன்று. இந்த மானுட ஜாதிக்கு ஆறறிவைத் தந்தீர்கள். அது உங்களைப் பற்றிச் சிந்திக்க வைத்தது. பெரும்பான்மை மனிதர்களுக்கு உங்களின் ‘இருப்பு’ குறித்து ஏதும் புரியவில்லை. ஆனால், மகான்கள் என்று சொல்லப்படும் சிலர் மட்டும் தங்களை உணர்ந்ததாக மட்டுமல்ல, பார்த்ததாகவும் சொல்லியிருக்கிறார்களே. அது சரியா எம்பெருமானே?” 

“அதெல்லாம் பிரமை. என்னை உணர்வதோ பார்ப்பதோ மானிட இனத்தவர்க்குச் சாத்தியமே இல்லை.”

”உண்மை இதுவாக இருக்க, உங்கள் பெயரில் ஆளாளுக்கு ஒரு மதத்தை உருவாக்கிக்கொண்டு, என் மதமே மெய்; உன்னுடையது பொய் என்று பரப்புரை செய்து, பெரும் பெரும் கலவரங்களைத் தூண்டி, கணக்கு வழக்கில்லாமல் அப்பாவி மக்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். இனியேனும் இவ்வகை அவலங்கள் நிகழாதிருக்கத்  தாங்கள் அருள் புரிய வேண்டும்” -சொல்லி முடித்து, வெறுமையான சூன்ய வெளியில் தன்னந்தனியனாய்த் தலை வணங்கி நின்றேன் நான்.

கண நேர மவுனத்திற்குப் பின்னர் பேசலானார் கடவுள்: “மானிட ஆன்மாவே, நான் சொல்வதை உன்னிப்பாகக் கேள்.....

ஓர் ஏவுகணை. நானே உருவாக்கியது என்று வைத்துக்கொள். அதன் கனபரிமாணங்கள் உங்களின் கணித அளவைகளுக்குக் கட்டுப்படாதவை. அது எக்காலத்தும் பழுதடையாது; அழியாது. அதன் ஆயுள் என்னுடைய ஆயுள் போல.

அதை முடுக்கிவிட்டால் நேர்க்கோட்டில் செல்லும். எது குறுக்கிட்டாலும் அதைத் துளைத்துக்கொண்டு சென்றுகொண்டே இருக்கும்.

அது ஊடுருவும் வேகம், வாயு வேகமல்ல; ஒளியின் வேகமல்ல; மனிதர்களின் மனோ வேகமும் அல்ல; என்னுடைய மனோ வேகம்.

பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியிலிருந்து நான்...நானே முடுக்கிவிடுவதாக வைத்துக்கொள்.

அண்டவெளிகளிலுள்ள அனைத்தையும் அது ஊடுருவிப் பாய்கிறது...பாய்ந்துகொண்டே இருக்கிறது.

இப்படிப் பாய்ந்து செல்லும் ஏவுகணை என்றேனும் ஒரு நாள் இந்தப் பிரபஞ்சத்தின் எல்லையைத் தொடக்கூடுமா? பிரபஞ்சத்துக்கு எல்லை உண்டா? எல்லை என்று ஒன்று இருந்தால், அந்த எல்லைக்கப்புறம் இருப்பது என்ன? பிரபஞ்சம்தானே?

பிரபஞ்சம்...எல்லை...பிரபஞ்சம்...எல்லை...பிரபஞ்சம்...எல்லை...ஹே!...என்ன மாயம் இது என்று உனக்கு வியக்கத் தோன்றுகிறது அல்லவா?” -சொல்லி நிறுத்திய கடவுள், சற்றே இடைவெளிக்குப் பின்னர் தொடர்ந்தார்.

“ஏ மானுட ஆன்மாவே, நான் சொல்லியவற்றைத் தெற்றெனப் புரிந்துகொண்டாய்தானே? இனி நீ பூமண்டலம் செல்லுவாய். மீண்டும் மனிதனாகப் பிறப்பாய்.....

நீ என்னிடம் கேட்டறிந்தவற்றை உன் மனித குலத்திடம் சொல். மதவாதிகளிடம் அழுத்தம் திருத்தமாகச் சொல். பிரபஞ்ச வெளிக்கு எல்லையுண்டா என்று கேள்....எல்லோரிடமும் கேள். திகைத்துத் திருதிருவென்று விழித்து நிற்கும் அவர்களிடம், இந்தவொரு எளிய கேள்விக்கே விடை தெரியாத நீங்கள் கடவுள் பற்றிக் கதை கதையாய் அளக்கிறீர்கள். உன் கடவுள் என் கடவுள் என்று அடித்துக்கொண்டு சாகிறீர்கள். இது வடிகட்டின முட்டாள்தனம் அல்லவா என்று கேள்...கேள்...உன் ஆயுள் முழுக்கக் கேட்டுக்கொண்டே  இரு. மூடர்கள் திருந்துகிறார்களா பார்ப்போம்.”

சொல்லி முடித்து மோனத்தில் ஆழ்ந்தார் கடவுள்.

சூன்ய  வெளியிலிருந்து விடுபட்டுத் தெறித்து மண்ணுலகில் வந்து விழுந்தேன்.

“சூன்யம்...பிரபஞ்சம்...எல்லை...” என்று என் வாய் முணுமுணுத்துக்கொண்டிருந்தது.

“டேய், என்னடா இது? பில்லி சூன்யம்னு தூக்கத்தில் பிதற்றிகிட்டிருக்கே. எழுந்திரு. விடிஞ்சி வெகு நேரம் ஆச்சு” என்று என்னைப் பெற்றவள் தட்டி எழுப்ப, பதறியடித்துக்கொண்டு எழுந்தேன்.
===============================================================================
ஆனந்த விகடனின் ‘பொன் விழா’[1980] ஆண்டுப் போட்டியில் பங்கேற்று நிராகரிக்கப்பட்ட  சிறுகதை இது. 

‘உலகின் நம்பர் 1 தத்துவச் சிறுகதை’ன்னு தலைப்புத் தந்தது.....?

ஹி..ஹி..ஹி... நானேதான். 

கொஞ்சம் படித்ததும் உங்களுக்குப் புரிந்திருக்கும்   இது நான் கிறுக்கிய ‘தத்துப்பித்து'க் கதை என்று!

வருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க  நன்றி.

Sunday, January 22, 2017

என்று தணியும் இந்தச் ‘சதை’ மோகம்?! [தலைப்பு புதுசு! படைப்பு பழசு!!]

ணத்துக்காகவோ பிற பயன்களுக்காகவோ கொள்ளும் உடலுறவு ‘விபச்சாரம்’[சதை வணிகம்] எனப்படும். இதை, உலகின் பழைமையானதொரு தொழில் என்பார்கள்.[Prostitution is the business or practice of engaging in sexual relations in exchange for payment[1][2] or some other benefit. Prostitution is sometimes described as commercial sex.....It is sometimes also referred to as "the world's oldest profession" -Wikipedia

#இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பே எகிப்துஇந்தியாபாபிலோனியாகிறீஸ் ஆகிய நாடுகளில் விபச்சாரம் ஒரு தொழிலாக அங்கீகாரம் பெற்று விட்டது. மெஸபடோமியாவில் கி.மு.2300 இல் விலைமாதர்கள் மிகுந்த சுறுசுறுப்புடன் இத்தொழிலைச் செய்ததாகக் குறிப்புகள் உண்டு. 

ஏதென்ஸ் நாட்டில் சட்டமேதை ஸோலன், சிவப்புவிளக்குப் பகுதிகள் இயங்குவதற்குச் சட்டத்தில் வழிவகுத்தார். 

18ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பால்வினைத் தொழில்(விபச்சாரம்) வெளிப்படையாகத் தலையெடுத்தது. அங்கு இராணுவத்துக்கும், பங்கு மார்க்கெட்காரர்களுக்கும்  பிரத்தியேகமாக விலைமாதர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவ்வகை விலைமாதர்களிடம் மற்றவர்கள் உறவுகொள்ள இயலாது.# - விக்கிப்பீடியா[தமிழ்]

அயல்நாடுகளில் ‘தொழில் வரி’ செலுத்தும் அளவுக்கு வருவாய் மிக்க தொழிலாக இது இருந்திருக்கிறது![Both women and boys engaged in prostitution in ancient Greece.[20] Female prostitutes could be independent and sometimes influential women. They were required to wear distinctive dresses and had to pay taxes]

‘நம் இந்தியத் திருநாட்டில் பாலியல் தொழிலாளர்களில் 40% சிறுமியர்கள்..’ என்பது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தியாகும்{.....A CBI statement said that studies and surveys sponsored by the ministry of women and child development estimated that about 40% of all India's prostitutes are children.[88]}

மேற்கண்ட தகவல்கள் இப்பதிவிற்கான ஒரு முன்னோட்டம்தான். காலந்தோறும் இத்தொழிலை ‘ஒழித்துக்கட்ட’ விதிக்கப்பட்ட தடைகள் குறித்தும், அவற்றைக் கடந்து இது வளர்ந்த விதம் குறித்தும் சேகரித்த தகவல்களின் தொகுப்பே இப்பதிவு.
*கி.மு.594 இல் ‘சாலோன்’ என்பவரால்[Solon (/ˈslɒn, ˈslən/GreekΣόλων; c. 638 – c. 558 BC) was an Athenian statesmanlawmaker] சட்டம் இயற்றப்பட்டு, விபச்சாரம் ஒரு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஏசு கிறிஸ்துவின் பிறப்புக்குப் பின்னர் 600 ஆண்டுகள்வரை அவை நடைமுறையில் இருந்தன; காலப்போக்கில் மறைந்தன.

*கி.பி 5ஆம் நூற்றாண்டில் இத்தொழிலைப் பரவவிடாமல் அடக்கி ஒடுக்க முனைந்தான் ஐஸ்டினியன் என்னும் மன்னன். ‘தியோடரா’ என்னும் பெயருடைய விலைமகளை மணந்து பிறருக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தானாம்!

*தியோடரா நல்ல புத்திசாலி. சீர்திருத்த மனம் கொண்டவள். ஒரே ஒரு நாள் இரவில் 500 விலைமகளிரைச் சிறையில் அடைத்தாள்; ஆடவர் நுழையாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. விலைமகளிருக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டது.

அதன் பிறகு அதிர்ச்சிதரும் சம்பவங்கள் நடந்தன. சில பெண்கள் தற்கொலை செய்துகொண்டார்கள். பலரின் மனநிலை பாதிக்கப்பட்டது!

*13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு மன்னன் ஒன்பதாம் ‘லூயி’ அனைத்து விலைமகளிரையும் நாடு கடத்தினான். விபச்சாரத்துக்குத் துணைபோகும் நபர்களைச் சிறையில் தள்ளினான். அப்புறம்  நடந்தது?

காலப்போக்கில், புதிய புதிய விபச்சாரிகள் நகரில் நுழைந்துவிட்டார்கள்! மிகவும் ரகசியமாகத் தொழில் செய்தார்கள்.  சதை வணிகம் ஓஹோ என்று வளரத் தொடங்கியது!

*1347ஆம் ஆண்டில், சிசிலி நாட்டைச் சேர்ந்த அரசி ஜேன்1[13 வயது] மிகக் கடுமையான சட்டங்களை இயற்றினாள்.

அவை பின்வருமாறு:

1.சதை வணிகத்தில் ஈடுபடுபவர்கள், வலது தோளில் சிவப்பு முடிச்சு போட்ட அங்கியை அணிய வேண்டும். அவர்கள் வீதிகளில் நடமாடக்கூடாது. ஒதுக்கப்பட்ட விடுதிகளில் தங்கியிருக்க வேண்டும்.

2.குறிப்பிட்ட விடுதிகளில் தங்கியிருக்க ஆண்களுக்கு அனுமதி இல்லை. இன்னும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

3.இந்த விதிகளை மீறும் குற்றவாளிகள், நாற்சந்தியில் நிறுத்தப்பட்டு சவுக்கால் விளாசப்படுவார்கள். தொடர்ந்து குற்றம் புரிபவர் நாடு கடத்தப்படுவார்கள்.

4. ஒவ்வொரு சனிக்கிழமையும் மருத்துவரிடம் உடல் பரிசோதனை செய்துகொள்ளுதல் வேண்டும்.

5.வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் தொழில் செய்தல் கூடாது.

6.யூதர்கள் விபச்சாரிகளை அணுகுதல் கூடவே கூடாது.

*ஆறாவது சார்லஸ் மன்னன் காலத்தில், பொது மகளிர் வெள்ளை நிற உடை உடுத்துக் கைகளில் வெள்ளை நிற ரிப்பன் கட்டியிருத்தல் கட்டாயம். இவர்கள் தெருவுக்கு வருவதாயின், இவர்களின் முன்னே ஒருவர் முரசறைந்து செல்ல வேண்டும். இவர்களுக்கு வருமான வரி விதிக்கப்பட்டு, அவ்வருமானம் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது.

*ஐரோப்பிய நாடுகள் மட்டுமன்றி, இந்திய நாட்டிலும் கணிகையருக்கென்று தனிக் குடியிருப்புகள் இருந்தன. அவர்களுக்கென்று தனியே சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன.

*தமிழகத்தில் ‘பொட்டுக் கட்டும்’ வழக்கம் வெகு பிரசித்தம். பொட்டுக்கட்டிய தேவதாசிகளைக் ‘கடவுளர் மனைவி’யாக்கிக் கோயில் குருக்களும் தர்மகர்த்தாக்களும் ஆசைதீர அனுபவித்தார்கள்.

*தாசி வீடுகளுக்குக் கடவுள் சிலைகளைக் கொண்டுபோகும் வழக்கம்கூட நடைமுறையில் இருந்ததுண்டு!

*1635ஆம் ஆண்டில், விலைமாதரின் தலைகளை மொட்டையடித்து நடுத்தெருவில் நிறுத்தி, சவுக்கால் அடிக்கும் வழக்கமெல்லாம் இந்த நாட்டில் இருந்திருக்கிறது.

மேற்கண்டவை போல எத்தனை எத்தனையோ சட்டங்கள் இயற்றப்பட்டு, சதை வணிகர்கள் தண்டிக்கப்பட்டும்கூட, ‘அந்த’த் தொழிலை அடியோடு ஒழித்துவிட இயலவில்லை. நாகரிகம், கலை, பக்தி போன்ற  போர்வைகள் போர்த்து, புதிய புதிய உத்திகளைக் கையாண்டு அது நாளும் வளர்க்கப்பட்டு வருகிறது.

***********************************************************************************************************************
உதவி:
1. கூகிள்.

2. Wikipedia

3.‘மதம், மாந்திரீகம், மருத்துவம்’, பா. கலைச்செழியன், பல்கலைப் பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு, ஆகஸ்டு, 1999.

***********************************************************************************************************************


Thursday, January 12, 2017

எட்டி உதைத்த ராமகிருஷ்ணக் கடவுளும் உதைக்கவிருக்கும் ஜக்கி வாசுதேவும்!!!

அழகான தாடி மீசையுடன் வகைவகையாய் ஆடை உடுத்து, அசத்தும் சொல்லாடல் மூலம் ஆன்மிகம் வளர்க்கும் ஜக்கி வாசுதேவ், இன்றைய ‘தி இந்து’[12.01 2017] நாளிதழில் ‘விவேகானந்தரைக் கொண்டாட ஒரு நாள்’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதியிருக்கிறார்.
கட்டுரையின் நோக்கம், கடவுளின் ‘இருப்பு’ குறித்துக் கண்ட கண்ட சாமியார்களிடமெல்லாம் கேள்விகள் கேட்டு அலைந்துகொண்டிருந்த விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்து ஞானம் பெற்ற கதையை[!]ச் சொல்வதே ஆகும்.

“கடவுள்! கடவுள்!” என்கிறீர்களே, அதன் பொருளென்ன? அதற்கு சாட்சி என்ன?” என்று ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் கேட்டாராம் விவேகானந்தர். “நானே சாட்சி இதைவிட உனக்கு வேறு என்ன சாட்சி வேண்டும்? நான் இங்கு இருக்கிறேன்” என்பது  மகான் பரமஹம்சரின் பதில்.

முற்றிலும் எதிர்பாராத இந்தப் பதிலைக் கேட்டதும் நரேன் எனப்படும் விவேகானந்தரால் வாதிட முடியவில்லை என்கிறார் நம் ‘சத்குரு’ ஜக்கி.

‘சாட்சி’ என்கிறார்; ‘நானிங்கு இருக்கிறேன்’ என்கிறார் ராமகிருஷ்ணர். பொருள் புரியாமல் நாம் திகைக்கிறோம்.

திகைப்பிலிருந்து நம்மை விடுவிக்கும் முகமாக, தொடர்கிறது ஜக்கியின் கதை.

“கடவுள்! கடவுள்! என்று பேசுகிறீர்களே, உங்களால் அதை[’அதை’ என்றுதான் சத்குரு சொல்கிறார்]க் காட்ட முடியுமா?” என்றார் விவேகானந்தர்.

“உனக்கு அதைக் காணும் துணிச்சல் இருக்கிறதா?” என்றார் ராமகிருஷ்ணர்.

“இருக்கிறது. காட்டுங்கள்” என்றார் விவேகானந்தர்.

கொஞ்சமும் எதிர்பாராத வகையில் தனது கால்களை விவேகானந்தரின் நெஞ்சில் வைத்தார் குரு. குருவின் ஸ்பரிசம் நெஞ்சுப் பகுதியில் பட, சொல்லொணாத அனுபவத்தை உணர்ந்தார் விவேகானந்தர்; அந்த ஆனந்த நிலைக்குப் பொருள் தெரியாமல் தவித்தார்; கண்களில் கண்ணீர் மல்க வார்த்தைகளின்றி உறைந்தார்.....

இப்படியாக, விவேகானந்தர் பெற்ற சுகானுபவத்தையும், குருவுக்கு அவர் பெருமை சேர்த்த வகையினையும் விவரித்துச் செல்கிறார் ஜக்கி.

இந்தக் கதையின் மூலம் ராமகிருஷ்ணரைக் கடவுள் ஆக்கியிருக்கிறார் அவர்.

அவர் கடவுள்  என்றால், புற்று நோய்க்கு ஆளாகி அந்தக் கடவுள் செத்துப் போனாரே, அது ஏன் என்னும் கேள்விக்கு சத்குரு ஜக்கி பதில் சொல்வாரா?

விவேக்கை எட்டி உதைத்து இன்பசாகரத்தில் மூழ்கடித்த அவர் கருணை வடிவான கடவுள் ஆயிற்றே,  இன்னும் எத்தனை எத்தனை ஆயிரம்...பல்லாயிரம் பேருக்கு இந்தச் சுகத்தை வழங்கினார்? ஜக்கியிடம் புள்ளிவிவரம் உள்ளதா? 

ராமகிருஷ்ணர் ஒரு சராசரி மனிதனாக உணவுண்டு, உறங்கி, சிறுநீர் பெய்து, மலம் கழித்து வாழ்ந்தவர். அப்புறம் எப்படி அவர் கடவுளானார்?

அவருக்கும் இரண்டு கைகள் உண்டுதானே? தொட்டிருக்கலாம்; தடவியிருக்கலாம். நெஞ்சில் கால் பதித்தது ஏன்?

இப்படி, இன்னும் எத்தனையோ கேள்விகளை நம்மால் கேட்க முடியும். பதில் சொல்ல ஜக்கி தயாரா?

“ராமகிருஷ்ணர் எட்டி உதைத்தார். உதைபட்டவருக்கு இன்பலோகம் தெரிந்தது என்று கதை சொல்லும் ஜக்கி வாசுதேவ்.....

‘கடவுள்...கடவுள்!’ என்கிறீர்களே, அந்தக் கடவுளை உங்களால் காட்ட முடியுமா?” என்று எவரேனும் கேட்டால், கேட்டவரை உதைப்பார்; கேட்போரையும் உதைப்பார்;  காலமெல்லாம் எட்டி எட்டி எட்டி உதைத்துக்கொண்டே இருப்பார். 

உதைபடுவது தமிழனுக்குப் புதிய அனுபவம் அல்லவே!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கீழ்க்காணும் முகவரிகளில் இந்தக் குருவையும் சீடரையும் பற்றிக் கூடுதல் தகவல்களை அறியலாம். தவறாமல் படியுங்கள்.

http://kadavulinkadavul.blogspot.com/2012/08/58.html
http://kadavulinkadavul.blogspot.com/2015/06/blog-post_9.html
http://kadavulinkadavul.blogspot.com/2016/03/blog-post.html

Monday, January 9, 2017

“அதுதான் தப்புன்னா, இதுகூடவா தப்பு?”

பணபலமும் ஆள்பலமும் கொஞ்சமே கொஞ்சம் ‘தில்’லும் இருந்தால் போதும், தினம் தினம் 'காதல்' பண்ணலாம். ஜாதி ஒரு பொருட்டே அல்ல!

கைபேசியின் அழைப்பு.

“அலோ...” சொன்னார்  மனோகர்.

“தலைவரே, நான் குமார் பேசுறேன். அமுதா நம்ம ஜாதிப் பொண்ணு. ‘அந்த’ ஜாதிப் பயலோட மலைக் கோயிலுக்குப்  போற பஸ்ஸில் ஒன்னா உட்கார்ந்திருக்கா. ரெண்டு பேரும் காதலிக்கிறாங்கன்னு காலேஜ் பசங்க பேசிக்கிறாங்க. இது விசயத்தை ஏற்கனவே உங்ககிட்டே சொல்லியிருக்கேன். இப்போ சாமி சந்நிதியில் கல்யாணம் பண்ணிக்கப் போறாங்களோன்னு சந்தேகமா இருக்கு” என்றான் குமார்.

“பல தடவை எச்சரிக்கை பண்ணியும் அமுதாவோட பழகுறதை அவன் நிறுத்தல. இது சம்பந்தமா அமுதாவோட அப்பன் காளியப்பன்கூட ஃபோனில் பேசிட்டேன். நீ உடனே புறப்பட்டு வா. காளியப்பனைச் சந்திப்போம். அடியாட்களோட அவரையும் கூட்டிட்டுக் கோயிலுக்குப் போவோம். அவனைக் கடத்திட்டுப் போயிக்  காலி பண்ணிடலாம்.” -கொதிக்கும்  நெருப்பு வார்த்தைகளை உதிர்த்தார் மனோகர்.
காளியப்பன் வீடு.

சற்று நேரக் கலந்தாலோசனைக்குப் பிறகு அவர்கள் புறப்பட ஆயத்தமானார்கள். அப்போது அமுதாவே அங்கு வந்து சேர்ந்தாள்.

எதிர்பாராத அதிர்ச்சியை உள்வாங்கிக்கொண்ட மனோகர், அமுதாவை விசாரிக்கும்படி காளியப்பனுக்கு ஜாடை காட்டினார்.

“மலைக் கோயிலுக்குப் போயிருந்தியா?” -மகளை முறைத்தபடி கேட்டார் காளியப்பன்.

“ஆமாப்பா. நான் என் கிளாஸ்மேட் கலைச்செல்வனைப் பத்தி உங்ககிட்டே சொல்லியிருக்கேன். ரொம்ப நல்லவன்; புத்திசாலி. நான் பி.எஸ்ஸி. முதல் வகுப்பில் தேறினதுக்கு அவன்தான் காரணம்.  இப்போ பி.ஜி.யிலேயும் எனக்குக் கிளாஸ்மேட். அவனை நான் கூடப் பிறக்காத சகோதரனா நேசிக்கிறேன். நாங்க ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறதா யாரோ வதந்தியைக் கிளப்பிவிட்டிருக்காங்க. அதனால மலைக்கோயிலுக்குப் போயி நண்பர்கள் முன்னிலையில் கலைச்செல்வனுக்கு ‘ராக்கிக் கயிறு’ கட்டிட்டேன். தாழ்த்தப்பட்ட ஜாதிப் பையனைக் காதலிக்கிறதுதான் தப்புன்னா, சகோதரனா ஏத்துக்கிறதுகூடத்  தப்பாப்பா?”

-சொல்லி முடித்து மனோகரை உற்று நோக்கினாள் அமுதா. அவரின் பார்வை தரையில் தாழ்ந்து கிடந்தது; முகத்தில் அசடு வழிந்துகொண்டிருந்தது.
===============================================================================

Wednesday, January 4, 2017

‘கள்ளப் புணர்ச்சி’ .....கணினியுகக் குடும்பக் கதை!

[இது நடந்த கதையல்ல; இனி நடக்கவிருக்கும் கதை!]


“மன்னிச்சுடுங்க மாப்பிள்ளை.”
“நீங்க  தப்பு ஏதும் பண்ணலியே மாமா?”

“என் மகள் பண்ணின தப்புக்கு நான் மன்னிப்புக் கேட்கிறேன்.”

“மன்னிப்பெல்லாம் வேண்டாம். ஏன்னா, கல்யாணத்துக்கு முந்தி நானும் தப்புப் பண்ணினவன்தான். அதை நானே உங்ககிட்டே சொல்லியிருக்கேன். இது இண்டர்நெட் யுகம். ‘அது’ விசயத்தில் தப்புப் பண்ணாம வாழ்றது ரொம்பச் சிரமம். அதனாலதான், உங்க மகளின் கற்பு பத்திக் கவலைப்படாம அவளைக் கட்டிகிட்டேன். கல்யாணத்துக்கு அப்புறம் ஒருத்தருக்கொருத்தர் துரோகம் பண்ணாம வாழ்ந்தா போதும்னு நினைக்கிறவன் நான்.”

“அது உங்க பெருந்தன்மை. அந்தப் பெருந்தன்மையை என் மகள் மறக்காம இருந்திருந்தா உங்க வீட்டு மாடியில் குடியிருந்த அந்தப் பொறுக்கியோட ஓடியிருக்க மாட்டா.....”

“..........”

“ஓடிப்போனவ, அவன் ஒரு அயோக்கியன்னு தெரிஞ்சி திரும்பி வந்துட்டா; இப்போ எங்களோடதான் இருக்கா. உங்ககிட்டே மன்னிப்புக் கேட்டுக்கிறேன், பெரிய மனசு பண்ணி அவளை நீங்க ஏத்துக்கணும் மாப்பிள்ளை.”

“ஏத்துக்க நான் தயார்தான். ஆனா, அவ மறுபடியும் இன்னொருத்தனோட ஓடிப்போக மாட்டாங்கிறது என்ன நிச்சயம் மாமா?”

“அவகிட்ட சத்தியம் வாங்கிடலாம் மாப்பிள்ளை.”

“காமம் ரொம்ப ரொம்பப் பொல்லாதது. இது  விசயத்தில் சத்தியமெல்லாம் நிற்காது மாமா. உங்களுக்குத் தெரியாதது இல்ல. ஒரு பொண்ணு, புருசன் இருக்க இன்னொருத்தனோடு ஓடிப் போறான்னா அதுக்குக் காரணம் அவ புருசனேதான். அந்த விசயத்தில் அவன் அவளைத் திருப்திபடுத்தாததுதான் காரணம். உங்க மகளை நான் சரியாப் புரிஞ்சிக்கல. தப்பு என் மேலேதான் மாமா. ஆனா ஒன்னு.  ‘போதாது’ன்னு ஜாடைமாடையா அவ சொல்லியிருந்தாக்கூட, வயாகரா, நயாகரா, ஆயின்மெண்ட்டு, நைட்பில்ஸ், ‘ரப்பர்பேண்ட்’னு எதையாவது உபயோகிச்சி அவளோட எதிர்பார்ப்பை நிறைவேத்தியிருப்பேன்.”

“ஒரு பெண்டாட்டி, புருசன்கிட்டே இதையெல்லாம் சொல்ல முடியுமா மாப்பிள்ளை?”

“காலம் ரொம்பவே மாறிடிச்சி. ஆண்களைப் போலவே பொண்ணுகளும் எல்லார்த்தையும் தெரிஞ்சி வெச்சிருக்காங்க. மருத்துவர்கிட்டேயும் வக்கீல்கிட்டேயும் மட்டுமல்ல, ‘இது’ விசயத்தில் புருசன் பெண்டாட்டிக்குள்ளேயும் ஒளிவுமறைவு இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். உங்க மகள்கிட்டே நேரடியாப் பேசுவேன். இனியும் நல்லதே நடக்கும்னு நம்புவோம். நீங்க கிளம்புங்க. ஊருக்குப் போனதும் அவளை, அதான்... என் பெண்டாட்டியை அனுப்பி வையுங்க மாமா.”

“மாப்பிள்ளை நீங்க...நீங்க...”

”நான்...நான் ஒரு மனுசனா வாழ நினைக்கிறவன்.  அவ்வளவுதான். போய்வாங்க மாமா.” 
===============================================================================

Sunday, January 1, 2017

ஒரு கதை சொல்லி வாழ்த்துகிறேன்!

“ஏங்க, உங்களைத்தானே?”

“சொல்லு.”

“என்ன செய்துட்டிருக்கீங்க?”

“புத்தாண்டும் பொங்கலும் வரப்போகுதில்லையா, வாழ்த்து அனுப்பிட்டிருக்கேன்.”

“நீங்க வாழ்த்தலேன்னா புத்தாண்டும் பொங்கலும் கோவிச்சுக்காது. கட்டடக் காண்ட்ராக்டர் நம்ம பையனுக்கு வேலை போட்டுத் தர்றதா சென்னை போய்ட்டு வந்து சொன்னீங்களே, அவருக்கு அதை நினைவுபடுத்தி ஒரு ஃபோன் பண்ணுங்க. இல்லேன்னா மெஸேஜ் அனுப்புங்க.”

“பெரிய மனுஷங்க சொன்ன சொல்லைக் காப்பாத்துவாங்க. ஃபோனு கீனுன்னு நச்சரிச்சா கடுப்பாயிடுவாங்க. காரியம் கெட்டுடும். நீ சும்மா இரு.”

“ஏங்க, உங்களைத்தானே?”

“சொல்லு.”

“என்ன செய்துட்டிருக்கீங்க?”

“பிறந்த நாள் வாழ்த்து அனுப்பிட்டிருக்கேன்.”

“நீங்க வாழ்த்தலேன்னா யாரும் அற்பாயுசில் போயிடமாட்டாங்க. பொழப்புக் கெட்ட மனுஷன் நீங்க. நம் செந்தில் விசயமா காண்ட்ராக்டருக்கு ஒரு தகவல் அனுப்பத் துப்பில்ல. வாழ்த்து அனுப்பறாராம் வாழ்த்து. எதிர்த்த வீட்டுக்காரர் பட்டணம் போறாராம். காண்ட்ராக்டரைச் சந்திச்சி நினைவுபடுத்திட்டு வரச் சொல்லுங்க.”

“வர்றவன் போறவன்கிட்டே எல்லாம் சொல்லி அனுப்பறானேன்னு அவர் கோவிச்சுக்குவார். தொணதொணக்காதே. வாயை மூடிட்டிரு.”

“ஏங்க, உங்களைத்தானே?”

“வெளிநாடு போறவருக்குப் பயணம் சிறக்கணும்னு வாழ்த்து எழுதிட்டிருக்கேன்.”

“இதோ பாருங்க, இனியும் இப்படிக் கிறுக்குத்தனமா ஏதாச்சும் பண்ணிட்டிருந்தீங்கன்னா என்கிட்ட ரொம்பவே வாங்கிக் கட்டிக்குவீங்க. உடனே புறப்பட்டுப் போயி, அவரைச் சந்திச்சிப் பேசிட்டு வாங்க.”

“அவர் என் பால்ய நண்பர். வாக்குத் தவறாதவர். கண்டிப்பா உதவுவார். இனியும் இதப்பத்தி நீ பேசினா நான் பொல்லாதவன் ஆயிடுவேன்.”

“ஏம்மா, உன்னைத்தானே?”

“உங்க முதுகுப் பக்கம்தான் காய் நறுக்கிட்டிருக்கேன். சொல்லுங்க.”

“நம்ம காண்ட்ராக்டர் ஃபோன் மெஸேஜ் அனுப்பியிருக்கார். படிக்கிறியா?”

“நீங்களே படிங்க.”

“அன்புள்ள வேலாயுதத்துக்கு, நலம்; நலமறிய அவா. நீங்கள் அனுப்பிய வாழ்த்துகள் எல்லாம், நான் தங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தன. உங்கள் மகனின் வேலைக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். அவனை அழைத்துக்கொண்டு உடனே நேரில் வாருங்கள்.”

“வாழ்த்துச் செய்தி அனுப்பறது வீணான வேலைன்னு இத்தனை நாளும் நினைச்சிட்டிருந்தேன். அது ரொம்பப் பெரிய தப்பு. என்னை மன்னிச்சுடுங்க.”

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரபல[?] வார இதழில் வெளியான, இந்தக் கத்துக்குட்டி எழுத்தாளனின் கதை இது !

அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துகள்!