பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 27 ஏப்ரல், 2024

பதவி இழப்பதற்குள் ‘அந்த’ச் சாதனையை நிகழ்த்துவாரா மோடி?!

நம் நாட்டின் ஜனநாயகத் திருவிழா முடிவு பெறாத நிலையில்.....

தினம் தினம் ஊடகங்களில் வெளியாகும் கருத்துக் கணிப்புகளில் கணிசமானவை, தேர்தலில் வெற்றி பெற்று, மோடி அரியணையைத் தக்கவைப்பார் என்றே அறிவிக்கின்றன.

எனினும், கணிப்புகளில் பெரும்பாலானவை அவர் படுதோல்வி அடைவார் என்றும் பறைசாற்றுகின்றன.

மோடி தொடர்ந்து இந்த நாட்டின் பிரதமராக நீட்டிப்பாரோ அல்லவோ, அது பற்றிக் கிஞ்சித்தும் நமக்குக் கவலையில்லை.

நாம் வெகுவாகக் கவலைப்படுவது.....

உலகின் மிக மிக மிகப் பெரும்பாலான நாடுகளுக்கு, அரசின் சார்பாக அவர் பயணம் மேற்கொண்டுவிட்ட நிலையில், எஞ்சியிருக்கும் சில நாடுகளுக்கும் பயணம்[சுற்றுலா எனினும் ஏற்கத்தக்கதே] செய்து, உலகிலுள்ள அத்தனை நாடுகளுக்கும் சென்று திரும்பிய ஒரே பிரதமராக வரலாற்றுச் சாதனை நிகழ்த்துவார் என்பது நம் பெரு விருப்பமாக இருந்தது; இருக்கிறது.

அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தி முடிப்பதற்குள், தேர்தல் குறுக்கிட்டுவிட்டது என்பது வருந்தத்தக்க நிகழ்வாகும்; முடிவுகள் அறிவிப்பதிலும் காலதாமதம்[ஒன்றரை மாதம். முடிவு தெரியும்வரை நாம் உயிரோடு இருப்போமா என்று நாடெங்கிலும் பல கிழடுகள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பது புலனாய்வுத்துறை அளித்துள்ள தகவல்] ஏற்படலாம்.

இந்நிலையிலும்.....

அந்தவொரு உலக சாதனையை மோடி நிகழ்த்திக்காட்டுதல் வேண்டும் என்பது நம் ஆசை... பேராசை.

அதற்கான வழி?

தேர்தல் முழுமையாக நடந்து முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்படுவதைக் காலவரையின்றி ஒத்திவைக்கலாம்[தேர்தல் நடத்த ஒன்றரை மாதம் எடுத்துக்கொண்டது போல. தேர்தல் ஆணையம் நினைத்தால், தோல்வி பயத்தில் ஜனநாயகத்தைச் சீர்குலைக்க எதிர்க் கட்சிகள் சூழ்ச்சி, முஸ்லிம்கள் சதி என்று தள்ளிவைப்புக்கான காரணங்களையும் அடுக்கலாம்]. அந்தக் கால இடைவெளியில், குட்டிக் குட்டி நாடுகள் உட்பட மோடி செல்லாத எஞ்சியுள்ள நாடுகளுக்கும் சென்றுவரலாம்; சாதனையை முழுமை பெறச் செய்யலாம்.

மிக மிகச் சாமானியனான நமது இந்த ஆலோசனையை ஊடகங்கள் பலவும் மோடியின் கவனத்திற்குக் கொண்டுசெல்லுதல் வேண்டும் என்பது நம் பணிவான வேண்டுகோள்.

வாழ்க மோடி! நிகழ்த்துக உலக சாதனை!!