புதன், 31 ஆகஸ்ட், 2022

அமைச்சர் முருகனுக்கு[முருகு>அழகு] இது அழகல்ல!

சென்னையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தாராம்.

அப்போது.....

"விநாயகர் சதுர்த்தி மட்டுமின்றி, பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படுகின்ற அனைத்துத் திருவிழாக்களுக்கும் வாழ்த்துச் சொல்ல வேண்டியது அனைவரது கடமையாக இருக்கிறது.....

நடைமுறை இதுவாக இருக்கையில், முதல்வராக இருப்பவர் அனைத்துப் பண்டிகைகளுக்கும்[பெரும்பான்மையோரால் கொண்டாடப்படுவதால்] வாழ்த்துக் கூறுவதுதான் முறையாக இருக்கும். எனவே, முதல்வர் எந்தப் பாகுபாடும் இல்லாமல் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்" என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

அனைத்துப் பண்டிகைகளுக்கும் வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லியிருக்கலாம். அவ்வாறில்லாமல், "பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படுகின்ற அனைத்துத் திருவிழாக்களுக்கும் வாழ்த்துச் சொல்ல வேண்டியது அனைவரது கடமையாக இருக்கிறது" என்றும் சொல்லியிருக்கிறார்.

இவர் சொல்வது சரியென்றால், இஸ்லாமியர், கிறித்தவர் போன்ற சிறுபான்மை மதத்தவர் கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லத் தேவையில்லை என்றாகிறதே?

முருகன் அவர்கள் கொஞ்சம் முன்யோசனையுடன் பேசியிருக்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது.

மேலும், "தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிக மிகச் சீரழிந்துள்ளது. பெண்கள் நகை அணிந்துகொண்டு வெளியே செல்ல முடியவில்லை” என்றும் கூறியிருக்கிறார்.

பண்டிகை நாளும் அதுவுமாக[பிள்ளையாரின் பிறந்த நாள்; அதாவது, பார்வதி தேவி தன் மேனி அழுக்கை உருட்டி எடுத்து இந்தச் செல்லப் பிள்ளையாரை உருவாக்கிய நாள்] மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இடித்துரை வழங்கியிருக்கிறார் நடுவண் அமைச்சர் அவர்கள்[இந்து தமிழ், 31.08.2022].

* * * * *

முருகன் அவர்களே,

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துச் சொல்லாவிட்டாலும், சட்டம் ஒழுங்கு சரியில்லாவிட்டாலும் நாட்டிலுள்ள அத்தனை மதம் சார்ந்த சாமிகளுக்கான பண்டிகைகளுக்கும் மிச்சம் மீதி இல்லாமல் அத்தனை தலைவர்களும் வாழ்த்துச் சொல்வது வழக்கமாக உள்ளது.

எத்தனை "வாழ்க! வாழ்க! வாழ்க!" சொல்லியும், வாழ்த்துப்பெற்ற பக்திமான்களால் வழிபடப்படுகிற எந்தவொரு கடவுளும் பெண்கள் நகை அணிந்து வெளியே செல்லப் பாதுகாப்புத் தருவதில்லையே, ஏன் என்று கொஞ்சம் சிந்தித்தீர்களா?!

===========================================================================


தமிழுக்குப் பெருமை சேர்க்கும் அமேசான்[கிண்டில்]!

ண்டுதோறும், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் தவிர, தமிழ் மொழியில் வெளியாகும் சிறந்த படைப்புகளுக்கும் பணப் பரிசுகள் வழங்கிச் சிறப்பிப்பதோடு, அதன் வளர்ச்சியிலும் தன் பங்களிப்பைச் செலுத்திவருகிறது அமேசான் வணிக நிறுவனம். அது, தன் தளத்தைத் தமிழிலும் காட்சிப்படுத்தும்[மொழியாக்கம்] வசதியைச் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டுக்கான[2022] போட்டியையும்[pentopublish5] அது அறிவித்திருக்கிறது. அறிவிப்புச் செய்து பல நாட்கள் ஆகிவிட்டன.

அக்டோபர் 10ஆம் தேதிவரை எழுத்தாளர்கள் தம் படைப்புகளை அமேசான் கிண்டிலில் வெளியிடுவதன் மூலம் போட்டியில் பங்கு பெறலாம்.

மற்ற விவரங்களுக்கு, https://www.amazon.in/pen-to-publish-contest/b?ie=UTF8&node=13819037031என்ற முகவரியைக் கிளிக் செய்து உள்நுழைக.

நான் கடந்த 2 ஆண்டுகளாகக் கலந்துகொண்டு வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறேன்[ஹி... ஹி... ஹி!!!] என்றாலும், நான் 2 புதிய நூல்களை வெளியிட இந்தப் போட்டி காரணமாக இருந்தது என்ற வகையில் எனக்கு மகிழ்ச்சியே.

பரிசுக்குரிய படைப்புகளைத் தேர்வு செய்யப்படும் முறை:

The winner will be selected in two phases:

First Round: Each eBook will be rated based on the commercial viability of the eBook (including, without limitation, with regards to the eBook’s sales, borrows and customer feedback). We will look at metrics in a fair and normalized manner.

Final Round: Up to 10 entries will be selected at the end of first round for each language. These will then be read by our eminent panel of judges and scored to identify the winner.


பொதுவாக, அமேசானில் வெளியிடப்பட்ட என் நூல்களை[41]ப் பொருத்தவரை, விற்பனை மிகக் குறைவு; வாடகைக்கு வாங்கி வாசித்துத் திரும்ப ஒப்படைப்போர் எண்ணிக்கையும் குறைவுதான். 'மதிப்புரை' பெறுவது அதனினும் குறைவு.


எனினும், வாசிக்கப்படும் பக்கங்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருப்பதால் மாதந்தோறும் ஒரு தொகையை[எவ்வளவு என்பது பரம ரகசியம்!] அமேசான் என் வங்கிக் கணக்கில் சேர்க்கிறது[நம் தமிழ்நாட்டுப் புத்தக வெளியீட்டாளர்களிடம் கொடுத்தால் பைசா பெயராது. நாம் முதலீடு செய்யும் தொகையும் திரும்பக் கிடைக்காது].


நூலாசிரியனுக்குரிய பங்குத் தொகையை வழங்குவதில் அமேசான் நேர்மையாக நடந்துகொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


பரிசு கிடைக்கிறதோ இல்லையோ, 'நம் படைப்பு, போட்டியில் பங்குபெறும் தமிழ்ப் படைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். அது, இலக்கிய உலகில் நம் மொழிக்குள்ள செல்வாக்கைப் பிறர் அறியச் செய்யும்' என்பது கருத்தில் கொள்ளத்தக்கது.

===========================================================================

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

கேட்கப்படாத கேள்விகளும் தடுக்கப்படாத பிள்ளையார் சதுர்த்தியும்!!!


"பார்வதிதேவி கங்கையில் நீராடியபோது, தன் அழுக்கைத் திரட்டிப் பொம்மையாக்கிக் அந்த ஆற்றில் எறிய, அது யானைத்தலை கொண்ட விநாயகராக வெளிப்பட்டது" என்று அன்று ஒருவன் கதை சொன்னபோதே.....

"மனிதர்களுக்கு உள்ளதுபோல் கடவுள்களுக்கும் உடம்பு உண்டா? அதில் அழுக்குச் சேருமா? சேகரித்த அழுக்கை உருட்டி ஆற்றில் வீசினால் அது கரையுமே தவிர, யானைத் தலை கொண்ட மனிதனாக மாறுமா?" என்று இன்னொருவன் கேள்விகள் கேட்டு மடக்கியிருந்தால், கதை சொன்னவன் காணாமல் போயிருப்பான்.

"அம்மை, தன் மேனி அழுக்கால் உருவாக்கிய பிள்ளையைக் காவலுக்கு நிறுத்தி நீராடியபோது, அங்கு வந்த பரமசிவனைப் பிள்ளை தடுக்க, அதன் தலையைச் சிவனார் கிள்ளி எறிய..." என்று தொடங்கி, வெறும் முண்டமாக நின்ற பிள்ளைக்கு யானைத் தலையை வெட்டிவந்து பொருத்தியதாக முடியும் கதையை ஒருவன் சொன்னபோதே.....

"கடவுள்கள் குளிப்பார்களா? அம்மை மறைவான இடத்தில் நீராடும்போது, அங்கு வந்த பரமசிவனார், அம்மை நீராடுவது தெரிந்தும் மறைவிடத்தில் நுழைவாரா? முண்டமாக நின்ற பிள்ளைக்கு, வெட்டி எடுத்துவந்த யானைத் தலையைப் பொருத்தாமல் கிள்ளி எடுத்த தலையையே பொருத்தியிருக்கலாமே" என்று பிறிதொருவன் கேள்விக்கணைகள் தொடுத்திருந்தால், கதை சொன்னவன் தலை தெறிக்க ஓடி மறைந்திருப்பான்.

யானைத் தலையுடனான பிள்ளையாரைத் தொழும் மூடப் பழக்கம் தோன்றியிருக்காது.

பிள்ளையார் கங்கையில் பிறந்தவர்[முதல் கதையின்படி] என்பதால் தொடக்கத்தில் கங்கையில் மட்டும் சிலையைக் கரைத்த நிலை மாறிக் கடலிலும் ஆறுகளிலும் குளங்களிலும் கரைக்கும் பழக்கம் உருவாகியிருக்காது; அது சமூக வழக்கமாகவும் மாறியிருக்காது.

கற்பனைதான் என்றாலும், உலக அளவில் எத்தனை எத்தனையோ கடவுள்கள் இருக்க, சிந்திக்கவே தெரியாத சிலரால் கற்பிக்கப்பட்ட இந்தப் பிள்ளையாரைக் கொண்டாடுவதில் நம்மவர்கள் காட்டும் பிடிவாதம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

"இங்கே இஸ்லாம் வளருது, கிறித்தவம் வளருது" என்று நாளும் கவலைப்படுவோர் இம்மாதிரியான மூடப் பழக்கங்களைக் கைவிட்டால் இந்துமதமும் வளரும்[அவர்களிடம் ஒப்பீட்டளவில் மூடநம்பிக்கைகள் குறைவு].

சிலையைத் தூக்கிச் சென்று கரைப்பதற்குப் பதிலாக, ஏழை எளியவருக்குத் தேவையான உடைகளையும், உணவுப் பொருள்களையும் சுமந்து அவர்களை நாடிச் சென்று உதவலாம்.

பேரிடர்க் காலங்களில் குழுக்கள் அமைத்து இயன்றவரை நற்பணிகளைச் செய்யலாம்.

இவ்வாறான மனிதாபிமானச் செயல்களில் ஈடுபட்டால் மட்டுமே இந்துமதம் வளரும்.

மாறாக, வண்ண வண்ணக் களிமண் பிள்ளையார் சிலைகளைப் பல்லாயிரக் கணக்கில் சுமந்து சென்று நீர்நிலைகளில் கரைப்பதால்[ஆண்டுக்கு ஒரு நாள் கரைப்பதால், ஆற்றில் களிமண் சேர்ந்து ஓடும் நீர் மண்ணில் சேமிக்கப்படும் என்பது வெறும் சமாளிப்பு] அவை மாசுபடுவதோடு, மனிதர்களுக்கான பயனுள்ள பொழுதும் வீணாகிறது என்பதைப் பிள்ளையார்ப் பக்தர்கள் மறவாமலிருப்பது அவர்களுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கும் நல்லது!

===========================================================================

திங்கள், 29 ஆகஸ்ட், 2022

எரியுது அடிவயிறு!... ஏழுமலையானுக்கு ரூ100 கோடி நகை அலங்காரம்!!

வ்வொரு புத்தாண்டு நாளிலும் திருப்பதி ஏழுமலையான் சாமியை அலங்கரிக்கப் பயன்படும் நகைகள் பின்வருமாறு:

ப்படியெல்லாம் அலங்கரித்தால்தான் ஏழுமலையான் தன் பக்தர்களுக்கு அருள்புரிவாரா?

பகவானின் மனதில் பரவசம் பொங்கி வழியுமா?

சிலை வடிவில் காட்சிதரும் ஏழுமலையான் என்றேனும் ஒரு நாள், ரூ100 கோடி நகை சுமந்த கோலத்தில் உயிர்பெற்று எழுந்தருளும் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு கண்டு கண்டு இறும்பூது எய்துவோம் என்று பக்தகோடிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்களா?

எதற்காக இந்தக் குழந்தைத்தனமான செயல்?

ஆலோசனை வழங்கிய அந்த அவதாரப் புருஷன் யார்? யாரெல்லாம்?

இவை எவையும் காரணமல்ல; ஏழுமலையானைக் குழந்தையாகப் பாவித்து, அலங்கரித்துக் கொண்டாடுவது காண்போரைக் களிப்பில் ஆழ்த்துவதே காரணம் என்கிறார்களா?

இது உண்மையா?

உண்மை எனின், ரூ100 கோடி அணிகலன்கள் சுமந்த கோலத்தில் ஏழுமலைகளின் அதிபதியைக் கற்பனை செய்தாலே என் அடிவயிறு எரிகிறதே, ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?.....

அடடே... நான் ஒரு நாத்திகன் என்பது மறந்தே போனது.

ஆம்... நாத்திகர்களுக்கு ஏழுமலையான் என்ன, வேறு எந்தவொரு கடவுளையும் பிடிக்காது! 

கந்தல் ஆடையுடன் வாழ்நாளைக் கழிக்கும் பாவப்பட்ட ஜென்மங்கள் நிறைந்த இந்தப் புண்ணிய பூமியில், ஒருவர் மட்டும் கோடி கோடி கோடி ரூபாய் அணிகலன்களுடன் காட்சி தருகிறார் என்றால் அடிவயிறு எரியத்தானே செய்யும்!!!

=========================================================================

***நகைப்பட்டியல் குறித்த தகவல், மறைந்த பத்திரிகையாளர் 'அ.மா.சாமி'அவர்களின் 'சுண்டல்'[நவமணி பதிப்பகம், சென்னை] என்னும் நூலிலிருந்து பெறப்பட்டது.

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

வாழ்க வாழ்கவே 'எ.ப.சா'[எபசா]வும் 'ஓ.ப.செ'[ஒபசெ]வும்!!!

'EPS'[Edappadi Palani Samy] என்னும் 'எடப்பாடிப் பழனி சாமி' ஒரு தமிழர்[ஓ.பன்னீர்செல்வமும் தமிழர்தான்].

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோதெல்லாம் இவர் 'எடப்பாடிப் பழனிசாமி'யாகத்தான் இருந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரான பிறகும் இவர் 'எடப்பாடிப் பழனிசாமி'யே. 

இப்போதும் அவர் அதே 'எடப்பாடிப் பழனிசாமி'தான்; Edappady PalaniSamy அல்ல.

இப்படி, இவர் பெயரைக் குறிப்பிட நேரும்போதெல்லாம் முழுப் பெயரையும் உச்சரிப்பதில் வாய் வலிக்கும், அல்லது நேரம் வீணாகும் என்று கருதினால், 'எ.ப.சாமி' அல்லது 'எபசா'என்று சொல்லலாம்; எழுதலாம்.

தி.நகர்[தியாகராய நகர்], திருச்சி[திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை[மயிலம்] என்றிப்படி எத்தனையோ ஊர்ப் பெயர்களைச் சுருக்கியிருக்கிறோம்.

தி.க., தி.மு.க., அ.தி.முக., பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., கொ.ம.தே.க. என்றெல்லாம் அரசியல் கட்சிகளின் பெயர்களைச் சுருக்கியதும் இந்த சோம்பல் குணத்தின் விளைவுதான்.

இங்கெல்லாம் 'தமிழ் எழுத்து வடிவம்' புறக்கணிக்கப்படவில்லை.

எனவே, எடப்பாடி பழனிசாமியை 'எ.ப.சா'[எபசா]  என்பதில் தவறில்லை.

அ.தி.மு.க.வின் முன்னாள்[?] முதன்மை ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர் செல்வம் அவர்களையும், 'ஓ.பி.எஸ்.' என்பதற்குப் பதிலாக, 'ஓ.ப.செ.'[ஓபசே] என்று அழைக்கலாம்.

ஆக, இவர்களின் பெயர்களை இப்படித் தமிழ் எழுத்து வடிவிலேயே சுருக்கி வழங்குவதுதான் தமிழ் மொழி மரபுக்கும் தமிழின மாண்புக்கும் உரித்தான செயலாகும்[மு.கருணாநிதி அவர்கள் 'மு.க.' ஆனதும் நினைவுகூரத்தக்கது].

இம்மரபையும் மாண்பையும் மறந்து 'ஈபிஎஸ்', 'ஓபிஎஸ்'[ஆங்கில சொற்களைத் தமிழ் வரிவடிவில் எழுதுவதும் ஆங்கிலத் திணிப்பே] என்று குறிப்பிடும் ஊடகக்காரர்கள், இனியேனும் இவர்களை முறையே 'எ.ப.சா.'[எபசா]என்றும், 'ஓ.ப.செ.'[ஓபசெ] என்றும் குறிப்பிட வேண்டும் என்பதோடு, இயன்றவரை தூய தமிழில் செய்திகளை வெளியிடுதல் வேண்டும் என்பதும் என் கோரிக்கையாகும்.

சாமானியனான என்னை மதித்து இந்தக் கோரிகையை ஏற்பார்களா ஊடக முதலாளிகள்?


=========================================================================

சனி, 27 ஆகஸ்ட், 2022

"தமிழன் எனக்குக் கோயில் கட்டியிருக்கிறான்"... புளகாங்கிதப்பட்ட மலையாள நடிகை!!!

மராட்டி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பிரபல நடிகை 'குஷ்பு'வுக்குக் கோயில் கட்டி வழிபட்டவன் தமிழன்.

இப்போது, 'ஹனி ரோஸ்' என்னும் மலையாள நடிகைக்கு ஒரு தமிழன் கோயில் கட்டியிருக்கிறான். இதை அந்த நடிகையே அறிவித்திருக்கிறார். https://www.hindutamil.in/news/cinema/south-cinema/854540-tamilnadu-fan-built-a-temple-for-malayalam-actress-honeyrose.html? -சனி, ஆகஸ்ட் 27 2022

மலையாள 'தொ.கா' ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த நடிகை, “எனது முதல் படத்தில் இருந்தே 'பாண்டி' என்ற ரசிகர் என்னுடன் போனில் பேசி வருகிறார். என் படங்கள் ரிலீஸ் ஆகும்போது பாராட்டுத் தெரிவிப்பார். இப்போது அவர் எனக்குக் கோயில் கட்டியிருக்கிறார். என் பிறந்த நாளுக்கு அவர் பாயாசம் வழங்கி வருகிறார்" என்று கூடுதல் விவரங்கள் தந்து பெருமிதப்பட்டிருக்கிறார்.

எங்கு கோயில் கட்டப்பட்டுள்ளது என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லையாம்[பரிதவிப்புடன் அறியக் காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ் ரசிகர்களில் அடியேனும் ஒருவன்].

'ஒரிஜினல்' கடவுளாகப்பட்டவர் இந்நாள்வரை எவருக்கும் காட்சிதராத காரணத்தாலோ என்னவோ, குரங்கு[ஆஞ்சநேயர்], பாம்பு[நாகதேவன்], நாய், நரி, பன்றி[வராகம்] என்று கண்ட கண்ட விலங்குகளையெல்லாம் கடவுளாக்கி வழிபடலானான் தமிழன்[கடவுள் ஒரே ஒரு முறை காட்சியளித்து அருள்பாலித்திருந்தால் இந்த அவலம் நேர்ந்திருக்காது].

அந்த வரிசையில் அழகழகான நடிகைகளும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். மகிழ்ச்சியே.

ஆனாலும் அந்த நடிகைகள் தமிழச்சிகளாக இல்லையே என்பதுதான் அடிமனதை நெருடுகிறது.

ஆகவே, ஒட்டுமொத்த உலகமும் போற்றிப் புகழும் வகையில், நடிகைகளுக்குக் கோயில் எழுப்பிச் சாதனை நிகழ்த்திய உண்மைத்[ஒரிஜினல்] தமிழ் இளைஞர்களுக்கு நாம் வைக்கும் வேண்டுகோள்.....

"உடனடியாக ஒரு தமிழ் நடிகையைத் தெய்வமாக்குங்கள். அவருக்கு மிகப் பிரமாண்டமானதொரு கோயில் கட்டுவதற்கான பணியைத் தொடங்குங்கள்."

தேவைப்படும் நிதியை வாரி வழங்குவது தமிழராய்ப் பிறந்த அத்தனை பேரின் கடமையாகும்!

வாழ்க நடிகைகள்! வளர்க அவர்கள் மீதான பக்தி மோகம்!!

* * * * *

கீழே, கவர்ச்சிப் புன்னகையுடன் அருள்பாலிப்பவர் கன்னித் தெய்வம்'ஹனி ரோஸ்'!

=========================================================================

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

மலையாள மரியம்மா மரணமும் சிரித்து மகிழ்ந்த சொந்தங்களும்!!!

#கேரளாவில் கோட்டயம் மல்லப்பள்ளியைச் சேர்ந்தவர் மரியம்மா. மறைந்த பாதிரியார் பி.ஓ.வர்கீசின் மனைவியான இவர், வயது மூப்பு காரணமாகக் கடந்த வாரம் காலமானார். அவருக்குக் கிறிஸ்துவ முறைப்படி இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இந்த இறுதிச்சடங்கில், மரியம்மாவின் 9 மகன், மகள்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். அப்போது, அவர்கள் அனைவரும் மரியம்மாவின் உடலுக்கு அருகே அமர்ந்து சிரித்த முகத்துடன் 'குரூப் போட்டோ' எடுத்துக்கொண்டனர்.

இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில், பலரின் விமர்சனத்திற்கும் உள்ளானது. இதற்கு விளக்கம் அளித்துள்ள குடும்ப உறுப்பினர் ஒருவர், வாழும்போது சிறப்பான வாழ்க்கை வாழ்ந்த ரியம்மாளின் ஆன்மா சொர்க்கத்துக்குச் சென்றது என்று தாங்கள் நம்புவதாகத் தெரிவித்துள்ளார். அதன் பொருட்டே சிரித்த முகத்துடன் அவரை வழியனுப்பி வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.# இது செய்தி[24.08.2022].

* * * * *

ரியம்மா சொர்க்கத்துக்குப் போனதாக நம்பி இவர்கள் சிரிக்கிறார்கள்.

சிரித்துக்கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்துடன், மரியம்மா பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்து, ஈ, எறும்பு நெருங்காமல் வளர்த்து ஆளாக்கினாரே அந்த மகன்களும் மகள்களும்கூடச் சேர்ந்து சிரிப்பது எப்படிச் சாத்தியமானது?!

மரியம்மா சொர்க்கம் சேர்வார் என்பதில் அத்தனை நம்பிக்கையா இவர்களுக்கு? அதை ஆதாரங்களுடன் நிரூபித்தால், அப்புறம் எவனும் தப்பே செய்யமாட்டான். இந்த உலகமே 'சொர்க்கம்' ஆக மாறிவிடும். நிரூபிப்பார்களா?[

மரியம்மா போன பிறகு இவர்கள் சிரிக்கிறார்கள். தன்னுடைய உயிர் பிரிகிற அந்தச் சில கணங்களில் உற்றார் உறவினர் என்று அத்தனை பேரையும் பிரிய இருப்பதை நினைத்து நிச்சயம் மனம் கலங்கிக் கண்ணீர் உகுத்திருப்பார் மரியம்மா. அப்போதுகூட அவரைப் பார்த்து இவர்கள் சிரித்திருப்பார்களோ?

மரியம்மாவுக்குத் தான் சொர்க்கம் போவது தெரிந்திருக்காது. இவர்கள், அவர் சுயநினைவோடு இருக்கும்போதே, "நீங்கள் சொர்க்கம் போகிறீர்கள்" என்று சொல்லிச் சிரித்திருந்தால், அவரும் இவர்களுடன் சேர்ந்து சிரித்திருக்கக்கூடும். செய்தார்களா?

மரியம்மா சொர்க்கம் போனாலும், நிரந்தரமாய்க் கர்த்தரின் திருவடிகளிலேயே தங்கியிருந்தாலும் மகிழ்ச்சியே. ஆனால்.....

பிறந்தவர் இறப்பது இயற்கைதான் என்றாலும், முன்னுதாரணமாய் வாழ்ந்துகாட்டிய மதிக்கத்தக்க இந்த மூதாட்டியை இனிக் காணவே முடியாது என்று எண்ணும்போது அழுகை அல்லவா பீறிட வேண்டும். 'சொர்க்கம் உண்டு' என்னும் நம்பிக்கையை மட்டும் உறுதுணையாகக்கொண்டு ஒன்றுகூடிச் சிரிக்கிறார்களே, இவர்களுக்கு மனசாட்சியே இல்லையா?

இன்று மரியம்மா. நாளை இவர்களால் வெறுக்கப்படுகிற ஒரு 'மேரியம்மா' இறந்துபோனால்.....

"மேரியம்மா நரகத்துக்குச் சென்றுவிட்டார்" என்று உள்ளம் பூரித்துச் சிரிப்பார்களோ?!

* * * * *

சோகம் சூழ்ந்த நேரத்தில் சிரித்து மகிழும் மரியம்மாவின் சொந்தபந்தங்கள்:


வியாழன், 25 ஆகஸ்ட், 2022

'ஓஷோ' சொன்ன ஒரு 'ஹி... ஹி... ஹி!!!' கதை!

'ஒரு நகரத்தில், ஒரு கடையின் முன்பு இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள்.

அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களில் ஒரு பத்து வயதுச் சிறுவனும் இருந்தான்.

அங்கு வந்த ஒரு மனிதர், "அவர்கள் யார்?" என்று சிறுவனிடம் கேட்டார்.

"இருவரில் ஒருவர் என் தந்தை" என்றான் சிறுவன்.

"உன் தந்தையும் இன்னொருவரும் எதற்காக அடித்துக்கொள்கிறார்கள்?"

"அந்த இருவரில் என் தந்தை யார் என்பதை முடிவு செய்யத்தான்[இருவருக்குமே சிறுவனின் தாயுடன் உறவு இருந்திருக்க வேண்டும். மரபணுச் சோதனையும் அப்போது இல்லை] சண்டையிடுகிறார்கள்" என்றான் சிறுவன்'

இத்துடன் கதையை முடித்துவிட்டார் ஓஷோ.

இதன் மூலம் அவர் சொல்லவந்தது மிகப் பெரிய கடவுள் தத்துவம்.

ஓஷோ சொல்கிறார்.....

"இவ்வகையில்தான் மதவாதிகள் நூற்றாண்டுக் காலமாகக் கடவுளைக் கண்டறிவதில் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உயர்ந்த தத்துவக் கோட்பாடுகளையெல்லாம் உருவாக்கியிருப்பதாக அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மை என்னவென்றால், அவர்களைப் பற்றியே அவர்களுக்கு ஏதும் தெரியாது."

ஓஷோ மேலே சொன்ன 'சிறுவன்' கதை எதார்த்தமானது அல்ல என்றாலும், கடவுள் குறித்த, மனிதர்களின் அறியாமையை வெளிப்படுத்துவதற்கு அது உதவுகிறது என்று சொல்லலாம்.

'செக்ஸ் சாமியார்' என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஓஷோவின் தத்துவ விளக்கங்கள் பெரும்பாலும் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்துவனவாக இருப்பினும், சிந்திக்கத் தூண்டும் வகையிலும் அவர் கருத்துரைகளை வழங்கியிருக்கிறார்.

நம்ம ஊர், 'கடவுளின் குரு' ஜக்கி வாசுதேவுடன் ஒப்பிட்டால், ஓஷோ எவ்வளவோ தேவலாம்! ஜக்கி, 'நடை, உடை, பாவனை, போதனை' என்று எல்லாவற்றிலுமே 'ஓஷோ' வைக் 'காப்பி' அடிக்கிறார் என்பது அறியத்தக்கது!!


===========================================================================

உதவி: 'ஈஸா உபநிஷத உரை', நர்மதா பதிப்பகம், சென்னை; 1995.

புதன், 24 ஆகஸ்ட், 2022

மறவாதீர் 'விநாயகி'யை! தேடுவீர் திருநங்கைப் பிள்ளையாரை!!

ரவிருக்கிறது விநாயகர் சதுர்த்தி விழா, ஆகஸ்டு இறுதியில்.

பிள்ளையார் பக்தர்கள் அதைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

'பிள்ளையார்ப் பிரியன்' என்ற வகையில் அவர் குறித்த அரிய, கவனத்தில் கொள்ளத்தக்க சில தகவல்களை முன்வைப்பது அடியேனின் கடமையாகும்.

* * * * *

*எந்தவொரு செயலைத் தொடங்கும்போதும் முதலில் வழிபடத்தக்க கடவுளான விநாயகருக்கு, ரணமோசன விநாயகர், உச்சிஷ்ட விநாயகர், உத்தண்ட விநாயகர், ஊர்த்துவ விநாயகர் என்றிப்படி 32 பெயர்கள் உள்ளன என்பதை அறிவீர்களா பிள்ளையார் பக்தர்களே?

32 வகைப் பிள்ளயார்களின் குழுப் பட்டியலைத் தளத்தின் தலைப்புப்[Header] படமாக வைத்துள்ளேன். அத்தனைப் பிள்ளையார்களுக்கும் தனித் தனியே களிமண்ணில் சிலைகள் செய்து புனித நீரில் கரைப்பது அதிக அளவில் புண்ணியம் சேர்க்கும் என்பதை அறிவீராக.

விநாயகர் என்பவர் ஆண்பால் இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். பெண்பால் இனத்தவராக 'விநாயகி' இருப்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இவர், கணேஷினி, பிள்ளையாரினி, பெண் கணேசா என்னும் பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சிலைகள் நிறுவி[தமிழ்நாட்டிலும் சிலைகள் உள்ளன] வணங்கப்படும் பெண் தெய்வமாக இவர் உள்ளார் https://www.bbc.com/tamil/india-62645093[24.08.2022]. இவருக்கும் சிறப்புச் செய்திட மறவாதீர் பக்தர்களே.

ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும்போதெல்லாம், கிரிக்கெட் விநாயகர், நடன விநாயகர், கொரோனா விநாயகர், என வித்தியாசமான விநாயக வடிவங்களையும் உருவாக்கி வழிபட்டுச் சிறப்புச் செய்வதும் நிகழ்கிறது.

அவ்வகையில்.....

'திருநங்கைப் பிள்ளையார்' என்று ஒருவர் இருப்பதும்[ஏற்கனவே ஆண் விநாயகரும், பெண் விநாயகரும் இருக்கிறார்கள்], இந்தப் புண்ணிய பாரதத்தில் எங்கேனும் சில இடங்களில் அவருக்குச் சிலைகள் நிறுவி வழிபடுவதும் வழக்கத்தில் இருக்கக்கூடும்.

அவருடைய இருப்பையும் தேடிக் கண்டறிந்து சிலைகள் செய்து புனித நீரில் கரைத்து வழிபடுவது உங்கள் கடமை என்பதையும் மறவாதீர்!

வாழ்க பிள்ளையார்! வாழ்க பிள்ளையாரினி! வாழ்க திருநங்கைப் பிள்ளையார்!

வளர்க பிள்ளையார் பக்தி!!

========================================================================

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

'அந்த' 4 நாட்களில் 'உங்கள் கடவுள்' என்ன செய்துகொண்டிருந்தார்?

ருவன் மனதில் கட்டுக்கடங்காத காமம் குமிழி விட்டுக் கொந்தளித்துக்கொண்டிருந்தது. அதைத் தணிப்பதற்கு ஒரு பெண் கிடைக்காமல் தவியாய்த் தவித்துக்கொண்டிருந்தான்.

ஊரை ஒட்டிய காட்டுப் பகுதியில் இருந்தது அவன் வீடு. அவன் மட்டுமே அதில் இருந்தான்.

விறகு சேகரிக்க வந்த ஒரு சிறுமி தாகம் தணிக்கத் தண்ணீர் கேட்டு அவனின் வீட்டு வாசலில் வந்து நின்றாள். தன் பல நாள் தாகத்தைத் தணிக்க உரிய நேரம் வந்ததாக நினைத்து அவளை வீட்டுக்குள் தூக்கிப்போனான் அவன். தாகம் தணிப்பதில் தீவிரம் காட்டினான். 

அவனிடமிருந்து தப்பிச்செல்லும் போராட்டத்தில் அவள் தோற்றுப்போனாள். 

அவனின் தாகம் தணிந்தது.

தாகம் முற்றிலுமாய்த் தணிந்துவிட்ட நிலையில் அவனின் மன நிலை என்னவாக இருக்கும்?

"ஒரு சின்னஞ்சிறு பெண்ணின் வாழ்வைச் சீரழித்துவிட்டோமே" என்று சில கணங்களாவது வருந்துவான்தானே?

அப்படி வருந்தும் மனம் அவனுக்கு இருந்தால் நிச்சயமாக அவனை "அவனும் மனிதன்தான்" என்று சொல்லலாம்.

இது, என் கற்பனையில் உருவான நிகழ்வு.

இப்போது ஓர் உண்மை நிகழ்வு உங்களின் கவனத்திற்கு.

பீகார் மாநிலத்தில், 'பக்சர்' மாவட்டத்தில் 'முரார்' காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமம்.

அந்தக் கிராமத்தின் 13 வயதுச் சிறுமி ஒருத்தி வீட்டு வேலையாக வெளியே செல்கிறாள். 6 பேர் அடங்கிய காலிகள் கூட்டம் அவளைப் பாட்னாவுக்குக் கடத்திச்சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்துப்[2 காலிகள் அதில் குடியிருந்தவர்கள்] பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்துகிறார்கள்.

இப்போது மேலே கேட்கப்பட்ட கேள்வியை["ஒரு சின்னஞ்சிறு பெண்ணின் வாழ்வைச் சீரழித்துவிட்டோமே என்று சில கணங்களாவது வருந்துவான்[ர்கள்]தானே?] இங்கும் கேளுங்கள்.

முதல் தடவை வன்புணர்வு செய்த உடனேயே[வெறி தணிந்த நிலை] ஆறு பேரும் மனம் இரங்கிச் சிறுமியை விடுவித்திருப்பார்கள் என்று நம்பத் தோன்றுகிறதுதானே? ஆனால், அது நடந்திடவில்லை.

ஆறு கயவர்களும் 4 நாட்கள்  அவளைக் கூட்டு வன்கொடுமை நிகழ்த்திச் சித்திரவதைக்குள்ளாக்கினார்கள்.

6 பேரில் ஒருவன்கூட மனிதன் இல்லை; 100% மிருகங்கள். 

மனிதர்களில் நல்லவர்கள் இருக்கிறார்கள். தம் உயிரைப் பணயம் வைத்து இவ்வாறு பாதிக்கப்படும் பெண்ணுக்கு உதவுபவர்களும் உள்ளனர். ஆனால்.....

ஒரு தனி வீட்டில் சிறுமி அடைக்கப்பட்டிருந்ததால் இந்தக் கொடூர நிகழ்வைக் காணும் வாய்ப்பு எவருக்கும் அமையவில்லை.

மனிதர்களுக்கு வாய்க்கவில்லை என்பது சரி. கருணை வடிவான ஈஸ்வரன், கிருஷ்ணன், கர்த்தர், அல்லா[ஹ்] என்று உலகறிந்த கடவுள்கள் ஏராளமாக இருக்கிறார்களே, அவர்களில் ஒருவரின் பார்வையில்கூடவா இந்த அதி பயங்கர அவலக் காட்சி தட்டுப்படவில்லை?!

தாங்கள் படைத்த உயிர்களைப் பாதுகாப்பதைத் தவிர்த்து, தினம் தினம் வேறு என்னதான் செய்துகொண்டிருக்கிறார்கள் இந்தக் கடவுளர்கள்?!

                                          *   *   *   *   *

***சிறுமியின் உடல்நிலை மோசமாகிவிட்ட கட்டத்தில்தான் அந்த ரவுடிக் கும்பல் அவளை அழைத்துச் சென்று தும்ரான் ரயில் நிலையத்தில் சேர்த்தது, அவள் எப்படியெல்லாமோ சிரமப்பட்டுத் தன் வீடு சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தது என விரிவான செய்தி அறிய விரும்புவோர்  https://www.msn.com/en-in/news/other/minor-gang-raped-by-6-men-for-4-days-in-bihar-abandoned-at-railway-station/ar-AA10Vmxf?ocid=msedgdhp&pc=U531&cvid=7d310a11dc85489da1dce5b3c1376a73 என்னும் முகவரிக்குச் செல்லலாம்.

===========================================================================

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

'அல்லா' என்றொரு கடவுள் இருந்தால்.....

து கற்களால் மட்டுமே கட்டப்பட்ட அலங்கரிக்கப்படாத குடியிருப்பு; சின்னஞ்சிறு கற்கோட்டை என்றுகூடச் சொல்லலாம்.

சிகரங்களுக்கிடையே மலைச் சரிவில் கட்டப்பட்டிருந்ததது அது.

கீழே, மலை இடுக்குகளில் உற்பத்தியாகிச் சலசலத்து ஓடிவரும் ஒரு நீரோடை.

அந்தச் சிறிய கல் வீட்டில் குடியிருந்த இரு பெண்களும், குழந்தைகளும்[மூன்று பேர்] துணி துவைக்கவும் காய்கறிகளைச் சுத்தப்படுத்தவும், ஆனந்தமாக நீராடி நாள் முழுக்கப் புத்துணர்ச்சியுடன் இருக்கவும் அவர்களுக்குப் பயன்படுவது அந்த அழகிய நீரோடைதான்.

அவர்கள் இரண்டு மாடுகளை வளர்க்கிறார்கள். தங்களுக்கு உணவு தயாரிப்பதற்கு முன்பே அந்த வாயில்லாத ஜீவன்களுக்குத் தீனி போட அவர்கள் தவறுவதில்லை.

அவர்கள் ஒரு கழுதையையும் வளர்க்கிறார்கள்.

அவர்கள் வாழ்வது மலைப் பிரதேசம் என்பதால், தொலைவிலுள்ள ஊர்களுக்குச் சென்று வாங்கும் பொருள்களை வீட்டுக்குக் கொண்டுவர உதவுவது அதுதான்.

அதை மேய்ப்பது, இடம் மாற்றிக் கட்டுவது எல்லாம் மூன்று வாண்டுகளின் வேலை. ஜாலியாய் அதன் மீது சவாரி செய்து குதூகலிப்பதும் உண்டு.

பெண்மணிகள் இருவரும் சமையல் வேலையில் ஈடுபடும்போது அவர்களுக்கு இவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

அடுப்பு மூட்டக் காய்ந்த புல்கற்றைகளை எடுத்துவருவது, விறகு சுமந்துவருவது, எடுபிடி வேலை செய்வது என்று ஓயாமல் இயங்குகிறார்கள். முகச் சுளிப்புக்கோ சலிப்புக்கோ அவர்கள் இடம்தருவதில்லை என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

சமையல் முடிந்ததும், பாத்திரங்களையும் பண்டங்களையும் உண்ணும் அறைக்கு எடுத்துச் சென்று, ஒன்றாக அமர்ந்து உண்டு மகிழ்கிறார்கள்.

சுற்றுப்புற மலைச் சிகரங்களின் அழகையும், நீரோடை தவழும் பள்ளத்தாக்கின் எழிலையும் எவ்விதத் தடையும் இல்லாமல் நாளும் ரசித்து இன்புறுவதோடு, ஒரு முன்னுதாரணக் குடும்பமாகவும் திகழும் இவர்களின் வாழ்வில் எந்தவொரு இடையூறும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று நம் மனம் கவலை கொள்வது தவிர்க்க இயலாததாக உள்ளது. காரணம்.....

இவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த மலைப்பிரதேசம் ஆப்கானிஸ்தானில் உள்ளது. 

இஸ்லாம் என்னும் ஒரு மதத்தையே சார்ந்தவர்களாயினும், தலீபான் என்றும் சன்னி என்றும்,  ஷியா என்றும், 'ஐ.எஸ்' என்றும் பல பிரிவினராய்ச் சிதைந்து, அன்றாடம் மோதிக்கொள்ளும் இவர்களில் எவருடைய பார்வையும் இந்த மலை வாழ் குடும்பத்தின் மீது விழுந்துவிடக் கூடாது என்பதே நம் ஆதங்கம். 
'அல்லா' என்றொரு கடவுள் இருப்பது உண்மையானால், அமைதியாய் வாழும் இந்தக் குடும்பத்தையும், இது போன்ற மலைவாழ் குடும்பங்களையும் அவர் பாதுகாப்பாராக!

மேலே விவரிக்கப்பட்ட நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தும் 'வர்ணனை இல்லாத' காணொலி[இதைத் தயாரித்தவர்/தயாரிக்க உதவியவர் குடும்பத்தின் தலைவராக இருக்கக்கூடும்]:

===========================================================================




சனி, 20 ஆகஸ்ட், 2022

மிதிபட்டுச் சாகும் பக்தர்கள்! 'முன்யோசனை' செய்யாத மோடியும் யோகியும்!!

த்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவிலுள்ள பாங்கே பிஹாரி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், மூச்சுத்திணறி இருவர் பலியானதுடன் 6 பேர் நிலை கவலைக்கிடமாகிவிட்டது// -இது இன்றைய செய்திhttps://www.hindutamil.in/news/india/844132-2-dead-in-up-krishna-jayanthi-stampede-2.html [20 Aug, 2022]

ஜென்மாஷ்டமிக்காக, மதுராவிற்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் வந்திருந்தார். இந்த தகவலைக் கேள்விப்பட்டு அதிர்ந்ததோடு, பலியானவர்களுக்குத் தன் ஆழ்ந்த அஞ்சலியையும் தெரிவித்தாராம்.

கோயில்களில், விசேட நாட்களில் நடக்கும் சிறப்புப் பூஜைகளின்போது பக்தர்கள் முட்டிமோதிக்கொண்டு தரிசனம் செய்ய முயற்சிப்பதும், பலவீனமானவர்களும் நோய்வாய்ப்பட்டவர்களும் மிதிபட்டுச் சாவதென்பதும் அவ்வப்போது ஊடகங்களில் வெளியாகிற செய்தி.

இம்மாதிரிச் செய்திகள் பிரதமர் மோடி, முதலமைச்சர் யோகி போன்ற அதிகாரம் படைத்தவர்களைச் சென்றடைகிறது என்பது உறுதி. அவர்களும் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கத் தவறுவதில்லை.

இரங்கல் தெரிவிப்பது மாமூலான சமுதாயச் சடங்கு என்பதைத் தவிர இதனாலெல்லாம் பயனேதும் இல்லை என்பது மேற்கண்டவர்களுக்குத் தெரியும். பக்தர்களுக்குப் புத்தி புகட்டி, இம்மாதிரியான அவலங்கள் இனியும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது இவர்களின் கடமை.

இத்தகைய கடமை குறித்த சிந்தனையே இவர்களுக்கு இல்லை என்பது மனதை வேதனைக்குள்ளாக்கும் உண்மை.

* * * * *

09.08.2022இல் மேற்கண்டது போன்ற நிகழ்வு   ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தின் சிகார் நகரக் கோயிலில் இடம்பெற்றபோது பிரதமருக்கு நான் எழுதிய மடலை மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்.

[இதை என்னைப் போன்ற சாமானியர்கள் எழுதுவதால் பயன் ஏதும் இல்லை என்பதால், தகுதியுள்ள எவரேனும் இப்பரிந்துரையை உரிய முறையில் கொண்டுசேர்ப்பார்கள் என்பது என் நம்பிக்கை].

மடல்:

#.....பக்தர்களிடையே ஏன் இந்த அவசரம்?

காத்திருந்த அத்தனை பேருக்கும் தரிசனம் தராமல் சாமி ஓடி ஒளிந்துகொள்ளுமா?

அந்தக் கோயிலில் இருக்கும் சாமி உலகில் வேறு எங்கும் இருக்கும்தானே. சாவகாசமாக அங்கு சென்று தரிசித்துக் கோரிக்கை வைக்கலாம். இது ஏன் அவர்களுக்குத் தெரியவில்லை?

சக பக்தர்களைத் தங்களின் கால்களால் மிதித்துக் கொல்லும் கொலை பாதகச் செயலைச் செய்துவிட்டுச் சாமி தரிசனம் செய்து புண்ணியம் தேட நினைக்கிறார்களே, கிடைப்பது புண்ணியமா, பாவமா?

இவர்களெல்லாம் பக்தர்களா, படு பாதகர்களா?

கிஞ்சித்தும் சிந்திக்கும் அறிவே இல்லையா?

இவ்வாறான கேள்விகளைப் பக்தர்களிடம் இந்தச் சிறியேனைப் போன்ற சாமானியர்கள் கேட்பதால் எந்தவொரு பயனும் விளையப்போவதில்லை என்பதால் இந்தியப் பிரதமர் அவர்களுக்கு இப்பதிவைக் காணிக்கை ஆக்குகிறோம்.

பிரதமர் அவர்களே,

சிகார் நகரக் கோயிலில், நெரிசலில் மிதிபட்டு இறந்தவர்களுக்காக அனுதாபம் தெரிவித்திருக்கிறீர்கள். அது தங்களின் மனிதாபிமானத்தைக் காட்டுகிறது.

இது தேவைதான் எனினும், இம்மாதிரி அனுதாபம் தெரிவித்தல் இனியும் இத்தகைய அவலங்கள் நிகழாமல் தடுக்குமா?

நிச்சயமாக இல்லை.

இது தங்களுக்கும் தெரியும்.

அனுதாபம் தெரிவிப்பதோடு, பிரதமர் என்ற வகையில், சாமி தரிசனத்துக்காக நாள் கணக்கில் காத்திருந்து வாழ்நாளை வீணடிக்கும் பக்தர்களிடம் மேற்கண்ட கேள்விகளை நீங்கள் கேட்பீர்களேயானால்[ஊடகங்கள் அதைப் பரப்புரை செய்யும்] பலன் கிட்டும் என்பது நிச்சயம்.

இப்படிக் கேள்விகள் கேட்டுப் பக்தர்களைத் திருத்துவதோடு, கோயில் நிகழ்வுகளையும் மாற்றி அமைப்பதும் மிக அவசியம் ஆகும்.

விடியற்காலையில்தான் நடை திறக்கிறார்கள். அதுவரை அதைச் சாத்தி வைப்பது ஏன்?

நாளெல்லாம் பக்தர்கள் தங்களின் குறை சொல்லிப் புலம்புவதைக் கேட்டுக் கேட்டுக் கேட்டுச் சோர்ந்துபோன சாமிக்கு ஓய்வு அளிப்பதற்காகவா? 

நிச்சயமாக இல்லை.

அனைத்தையும் படைத்த கடவுள்தான் அனைத்துக் கோயில்களிலும் வேறு வேறு உருவில் குடிகொண்டிருக்கிறார் என்கிறார்கள். அவரைப் பொருத்தவரை 'இது நல்ல நாள்', 'இது கெட்ட நாள்', 'இது நல்ல நேரம்', 'இது கெட்ட நேரம்' என்ற வேறுபாடுகள் கிடையாது. 

ஆகவே, நடை சாத்தும் வழக்கத்தைக் கைவிட்டு, எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும் சந்நிதியைத் திறந்து வைத்தல் வேண்டும். அதன் மூலம், இடர்ப்பாடு இல்லாமல் பக்தர்களால் சாமியைத் தரிசிக்க முடியும்.

இது நடைமுறை ஆக்கப்பட்டு எல்லா நேரமும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது சாத்தியப்படுமானால்.....

சாமி தரிசனத்துக்காக வரிசையில் கால்கடுக்க நின்று நின்று நின்று நேரத்தை வீணடிப்பதும், பக்தர்களைப் பக்தர்களே உயிர்ப்பலி கொடுக்கும் கொடூரமும் தவிர்க்கப்படும் என்பதைத் தங்களின் கவனத்துக்குக் கொண்டுவருவதில் பக்தன் என்றில்லாமல், ஒரு மனிதாபிமானி என்ற வகையில் என் கடமையைச் செய்தவன் ஆகிறேன்.

நன்றி பிரதமர் அவர்களே!#

===============================================================================

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

'கடவுள் நம்பிக்கை'யால் விளையும் தீமைகள்!!!


*டவுள் கண்களால் பார்க்க முடியாதவர் என்று சொல்லப்படுவதால், கண்களால் பார்க்க முடியாதவை என்று கருதப்படுகிற ஆவி, பேய், பிசாசு போன்ற தீய சக்திகள் இருப்பதாக நம்பி, மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் மனிதர்கள்; அவற்றிடமிருந்து தற்காத்துக் கொள்ளத் தேவையற்ற பல சடங்குகளைச் செய்து அறிவையும் பொருளையும் நேரத்தையும் வீணடிக்கிறார்கள்.

*நாம் உறும் துன்பங்களுக்கும் இன்னல்களுக்கும் இயற்கை நிகழ்வுகளும், வாழ்க்கைச் சூழலும், சிந்தித்துச் செயல்படுவதில் உள்ள குறைபாடுகளுமே காரணம் என்பதைப் புரிந்துகொள்ளாமல், இவை அனைத்திற்கும் விதி, அல்லது, நாம் செய்த பாவ புண்ணியங்கள் காரணம் என நம்புகிறார்கள். இதனால் சிந்திக்கும் ஆற்றல் படிப்படியாகச் சிதைவுறுகிறது. 

*தாங்க இயலாத இழப்புகளையோ, விடுபட முடியாத இடுக்கண்களையோ எதிர்கொள்ளும்போது, எல்லாம் 'அவன்' செயல் என்றெண்ணி அவனைச் சரணடைகிறார்களே அல்லாமல், அவற்றைத் தாங்கிக்கொள்ளும் மனத் திண்மையை மேம்படுத்திக்கொள்ள முயலுவதில்லை கடவுளை நம்புகிறவர்கள்.

*இயற்கை, எளிதில் விடுவிக்க இயலாத பல 'புதிர்'களை உள்ளடக்கியது. 'ஏன்?, எப்படி?, எப்போது?' போன்ற வினாக்களை எழுப்பி, சளைக்காமல் சிந்தித்துக்கொண்டே இருந்தால்தான் அப்புதிர்களை ஒவ்வொன்றாக விடுவிப்பதன் மூலம் அறிவை வளர்த்துக்கொள்ள முடியும்[மனித வாழ்வை மேம்படுத்தும் வகையிலான பல கண்டுபிடிப்புகளை அறிவியலாளர்கள் நிகழ்த்தியது இவ்வகைச் சிந்தனையால்தான்]; அந்த அறிவால் தொடர் துன்பங்களைக் களைவது, ஆயுளை நீட்டிப்பது போன்ற பயன்களைப் பெறுதல் சாத்தியமாகும். எல்லாம் கடவுளின் செயல் என்று நம்புவது இம்முயற்சிக்கு வைக்கும் முற்றுப்புள்ளி ஆகும்[மிகப் பெரும்பாலான விஞ்ஞானிகள் கடவுளைப் பொருட்படுத்தாதவர்கள் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது].

*கடவுளைக் கொண்டாடி வழிபடுவதால் இந்நாள்வரை மக்களுக்கு எந்தவொரு நன்மையும் விளைந்ததில்லை என்பதை உணர மறுக்கிறார்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள்[தற்செயலாக விளையும் நன்மைகளைக் கடவுளின் செயல் என்று போற்றுவது வழக்கமாகியுள்ளது]. காரணம், கடவுளை நிந்தித்தால் தண்டிக்கப்படுவோம் என்னும் அச்ச உணர்வு அவர்களின் மனங்களில் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதுதான்.

*"நான் கடவுளை நேரில் பார்த்தவன்", "நனே கடவுள்", "நான் கடவுளின் குரு" என்றிப்படிப் பொய்யுரைத்துக் கோடி கோடியாய்ப் பணம் சம்பாதித்த அயோக்கியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணம் கடவுள் பித்துதான்.

*கடவுள் நம்பிக்கையால்தான் மதங்கள் உருவாயின என்பதும், அவை மூட்டிய கலவரங்களால் கோடிக்கணக்கான மனித உயிர்கள் பலியிடப்பட்டன என்பதும் மறக்க இயலாததும், மறக்கக்கூடாததுமான கொடூர நிகழ்வுகளாகும்.

*கடவுளை வழிபட்டால் நன்மைகள் விளையும் என்ற நம்பிக்கை திணிக்கப்பட்டதால், அவரைத் துதிபாடத் தம் நேரத்தையும் பொருளையும் நிறையவே செலவழித்தார்கள்/செலவழிக்கிறார்கள் மக்கள். இதனால், க மனிதர்களுக்கு உதவும் இரக்கக் குணம் போதிய அளவுக்கு வளர்ச்சியடையவில்லை.

*இவ்வுலகம் மட்டுமல்லாது, இங்கு வாழும் பல உயிரினங்களும் மனிதருக்காகவே கடவுளால் படைக்கப்பட்டவை என்று சில மதங்கள் மக்களை நம்ப வைத்ததால், அவ்வுயிர்கள் ஈவிரக்கம் இல்லாமல் வதைக்கப்படுகின்றன; உணவாக்கப்படுகின்றன.

*மதவாதிகள், தங்களின் 'மத நூல்கள்[வேதங்கள்] கடவுள்களால் வழங்கப்பட்டவை என்று அன்று முதல் இன்றுவரை ஆணித்தரமானதொரு பொய்யைச் சொல்லிச் சொல்லிச் சொல்லி, அம்மதங்களைப் பின்பற்றுவோரை நிரந்தர மடையர்கள் ஆக்கிவிட்டார்கள். அதற்கு அவர்களுக்கு உதவிகரமாக அமைந்தது கடவுள் நம்பிக்கைதான். 

***கடவுள் நம்பிக்கையால் பெரும் தீங்குகள் விளைந்தன என்னும் மேற்கண்ட கருத்துரைகளை அலட்சியப்படுத்தி, "கடவுள் நம்பிக்கையால்தான் மக்கள் நல்லவர்களாக வாழ்கிறார்கள்; தவறு செய்ய அஞ்சுகிறார்கள்" என்று ஆன்மிகர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்கான நம் பதில்:

கொடூரமான குணம் வாய்ந்த உயிரினங்களுக்கிடையே, அமைதியாகவும் பிற உயிரினங்களைத் துன்புறுத்தாமலும் வாழ்கிற உயிரினங்களும் உள்ளன. மனிதர்களிலும் இப்படி வாழ்பவர்கள் உள்ளனர். இது இயற்கையாய் அமைந்த வாழ்வியல் முறையாகும். இது தவிர, மக்கள் நல்லவர்களாக வாழ்வதற்குச் சீரிய சிந்தனையாளர்களின் கருத்தாக்கங்களும், கடவுளை முன்னிலைப்படுத்தாத சில சமயங்களின் வழிகாட்டலும் காரணங்களாக அமைந்தன என்றும் சொல்லலாம்.

எனவே, கடவுள் எனப்படுபவருக்கும் மக்கள் நல்லவர்களாக வாழ்வதற்கும் எள்ளத்தனைத் தொடர்பும் இல்லை என்பதும், கடவுள் நம்பிக்கையால் தீமைகளே மிக மிக அதிகமாக விளைகின்றன என்பதும் அறியத்தக்கனவாகும்.

===========================================================================

வியாழன், 18 ஆகஸ்ட், 2022

கவர்ச்சியாக ஆடை உடுத்தும் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை!!!

கேரளா, கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டி அருகே ஒரு 'முகாம்' நடைபெற்றது. ஏற்பாடு செய்தவர் 'சிவிக் சந்திரன்' என்னும் எழுத்தாளர். 

முகாமில் கலந்துகொண்டவர்களில் கவர்ச்சியாக உடை உடுத்த ஒரு பெண்ணும் இருந்தார்.


முகாம் முடிவடைந்த பிறகு, பங்கேற்பாளர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றபோது, எழுத்தாளர் சந்திரன் அந்தக் கவர்ச்சி உடைக்காரியைப் பிடித்து இழுத்து தொடக் கூடாத இடத்தில் தொட்டாராம்.

பெண் அளித்த புகாரின்பேரில் வழக்குத் தொடுக்கப்பட்டு, அது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

முன்னதாக, தனக்கு முன்ஜாமீன் கோரி நீதிபதியிடம் மனு கொடுத்தார் சந்திரன். பெண்ணின் சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

எதிர்ப்பை நிராகரித்த மாவட்ட செசன்ஸ் நீதிபதி கிருஷ்ணகுமார், "புகார் தரும் பெண் பாலியல்  உணர்வைத் தூண்டும் வகையில் ஆடை அணிந்திருந்ததால், இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 354(ஏ) (பாலியல் துன்புறுத்தல்)-இன் கீழ், குற்றச்சாட்டை முதன்மையாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறி எழுத்தாளர் சந்திரனுக்கு முன் ஜாமீன் வழங்கினார். இது அண்மைச் செய்தி[இந்தியன் எக்ஸ்பிரஸ்]  https://www.bbc.com/tamil/india-62586095

"குற்றம் சாட்டப்பட்டவரின் முன் ஜாமீன் மனுவுடன் அளிக்கப்பட்டுள்ள ஒளிப்படங்கள், புகார் அளித்தவரே பாலுணர்வைத் தூண்டும் வகையில் ஆடை அணிந்திருப்பதை வெளிப்படுத்துகின்றன" என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

புகாரளித்த பெண்ணின் ஒளிப்படங்களை அந்தப் பெண்ணே சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார் என்பதும் ஊன்றிக் கவனிக்கத்தக்கதாகும்.

*****ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நீதிமன்றத் தீர்ப்புக்குக் காரணமாக அமைந்த 'அந்த'ப் பெண்ணின் கவர்ச்சிப் படங்களை 'இந்தியன் எக்ஸ்பிரஸ்'[நாளிதழ்] வெளியிடாதது இளவட்டங்களைப் பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கக்கூடும்[குடு குடு கிழங்களையும்தான்]!


கவர்ச்சி மோகத்திலிருந்து விடுபட இயலாத பெண்கள் இனி, கவர்ச்சியாக உடை உடுத்துவதைத் தவிர்த்து, அதை ஈடு செய்யும் வகையில் கண்களில் அதிகபட்சக் கவர்ச்சி காட்டிப் பொது இடங்களில் நடமாடலாம் என்பது அடியேனின் பரிந்துரை ஆகும்!

 ஹி... ஹி... ஹி!!!

===========================================================================

புதன், 17 ஆகஸ்ட், 2022

'ஹர் கர் திரங்கா' (Har Ghar Tiranga)?!?!?!


நான் இந்தியத் தமிழன் என்பது எனக்குத் தெரியும்.

நடுவில் அசோகச் சக்கரம் பொறித்த, காவி, வெள்ளை, பச்சை ஆகிய  நிறங்களுடன் வடிவமைக்கப்பட்ட மூவண்ணக் கொடி என் தேசத்தின் கொடி என்பதை நான் அறிவேன்.

நாட்டின் விடுதலை நாளை உள்ளடக்கிய மூன்று நாட்களில் வீடுதோறும் தேசியக் கொடி ஏற்றப்படுதல் வேண்டும் என்னும் நடுவணரசின் அறிவுறுத்தலையும் நான் அறிந்தே இருந்தேன்.

என் வீட்டில் கொடி ஏற்றி அதற்கு மரியாதை செலுத்தி மகிழ்ந்தேன்.

மூன்று நாட்கள் முடிந்ததும் அக்கொடியை உரிய முறைப்படிக் கையகப்படுத்தி, அதை மடித்து வைப்பது பற்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொண்டிருந்தேன்.

இவை தவிர, நம் தேசியக் கொடி குறித்த வரலாற்றைக்கூட அத்துபடியாய் என் மனதில் பதித்து வைத்திருந்தேன். ஆனால்.....

கடந்த சில நாட்களாக, அனைத்து ஊடகங்களிலும் ஒலித்துக்கொண்டே இருந்ததே 'ஹர் கர் திரங்கா'... இதற்கான பொருளை மட்டும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட என்னால் தெரிந்துகொள்ளவே இயலவில்லை.

தேசப் பற்றை ஆண்டுதோறும் புதுப்பிக்கும்போதுகூட இந்தியைத் தவறாமலும் மறவாமலும் திணித்துவிடுகிறார்கள்[மறந்தும் 'ஹர் கர் திரங்கா'வை மாநில மொழிகளில் 'மொழியாக்கம்' செய்யவே இல்லை] நம் ஆட்சியாளர்கள்.


அவர்கள் அதி புத்திசாலிகள்!

'ஹர் கர் திரங்கா'!!

========================================================================


கள்ளக் காதலும் கணவனின் 'அந்த' உறுப்பை'க் கொதிநீரில் குளிப்பாட்டிய காரிகையும்!!!

ண்களுக்கும் 'கற்பு' உண்டு.

மணமான பிறகு காதல் மனைவியைத் தவிர இன்னொருத்தியைக் கனவிலும் மருவிச் சுகம் காணுதல் கூடாது என்பது தமிழர் பண்பாடு.

இப்பண்பாட்டை மறந்து பெண் பித்தர்களாக அலையும் காமுகர்களும்  இருக்கவே செய்கிறார்கள் அவர்களில் ஒருவர்தான்.....

தங்கராஜ்.


தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இவர், உடன் பணிபுரியும் பெண்ணுடன் திருட்டு உடலுறவுச் சுகம் அனுபவிப்பதை வழக்கமாக்கியுள்ளார்.

இவரின் பாசத்திற்குரிய மனைவி பிரியா எவ்வளவோ கண்டித்தும் தன் காமக்கிழத்தியுடனான தொடர்பை இவர் துண்டிக்கவில்லை.

பொறுமையின் எல்லையைக் கடந்த பிரியா ஒரு நாள் நள்ளிரவில்.....

ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்தார். கொதித்துக்கொண்டிருந்த அந்தச் சுடுநீரை, மல்லாந்த நிலையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த தங்கராஜுவின் அந்தரங்க உறுப்பின் மீது கொட்டிக் கணவன் மீதிருந்த கோபத்தைக் கொஞ்சமே கொஞ்சம் தணித்துக்கொண்டார். அப்புறம்?

அப்புறம் என்ன, காவல்துறைக்குப் புகார் அனுப்பிவிட்டுத் தன் குஞ்சிக்கு மருத்துவம் பார்க்க மருத்துவமனை சென்றார் தங்கராஜு.

பிரியாவைக் கைது செய்தது காவல்துறை.

கணவனின் அடாத செயலால், அளவிறந்த மன உளைச்சலுக்கு ஆளானதால்தான் இப்படியொரு தவிர்க்க இயலாத குற்றத்தைப் பிரியா செய்தார் என்பதால் காவல்துறை இவரை உடனடியாக விடுதலை செய்வதோடு, அப்பாவி மனைவிக்குத் துரோகம் இழைத்ததற்காகத் தங்கராஜுவைக் கைது செய்திடல் வேண்டும். 

இதற்காக நாட்டிலுள்ள அனைத்து மகளிர் அமைப்புகளும் ஒருங்கிணைந்து போராடுவது வரவேற்கத்தக்கதாகும்.

செய்வார்களா?! 
=========================================================================

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

ஒரு மாமனிதரும் 'மாநிலம்'[உலகம்] போற்றும் நீதியரசரும்!!!

கீழ்க்காண்பது கொஞ்சம் மணித்துளிகளுக்கு முன்னரான செய்தி['பாலிமர்' தொலைக்காட்சி. நேரம்: 03.45 பிற்பகல்]:

#என் மகனைப் பள்ளியில் சேர்க்க, 'இவன் சாதியற்றவன்' என்னும் சான்றிதழ் தேவை" என்னும் கோரிக்கையுடன் வட்டாட்சியரிடம் விண்ணப்பம் அளித்தார் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ''மனோஜ்' என்பவர். இவர் கோரிக்கையை அவர் ஏற்காததால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் இவர். 

இரு வாரங்களுக்குள் சான்றிதழ் வழங்கிட நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு இணங்க வட்டாட்சியர் அவர்கள் மனோஜ் அவர்களின் மகனுக்குச் 'சாதியற்றவர்' என்னும் சான்றிதழை வழங்க ஒப்புக்கொண்டார்#

இச்செய்தி என்னை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பதிவுலக நண்பர்களுடன் பகிர்கிறேன்.

"இப்போதெல்லாம் யார் சார் ஜாதி பார்க்குறாங்க" என்று மனசாட்சியை அடகு வைத்துப் பொய் சொல்லித் திரியும் நம்மிடையே, ஜாதியற்ற மனிதராகத் தன்னை அறிவித்து, வருங்காலச் சந்ததியினருக்கு வழிகாட்டியாய் விளங்கும் இந்த 'மனோஜ்' என்னும் மாமனிதரை வாயாரவும் மனதாரவும் போற்றிப் புகழ்ந்து கொண்டாடுவோம்.

ஓர் உண்மை மனிதரின் கோரிக்கையை நிறைவேற்றிய உயர் நீதிமன்ற நீதியரசர் அவர்களையும் போற்றி நன்றி பாராட்டுவோம்,

வாழ்க மனோஜ்! வாழ்க நீதியரசர்[பெயர் தெரியவில்லை]!!

===========================================================================

இந்த அரிய நிகழ்வு தொடர்பான செய்தியைக் கூகுளில் தேடிப் பெறும் முயற்சி வெற்றி பெறவில்லை. 'மனோஜ்' அவர்களின் புகைப்படத்தை வெளியிடுவதும் சாத்தியமில்லாமல் போனது.