தேடல்!


Jun 7, 2017

நடமாடும் வெறும் சுமைதாங்கிகளா நாம்!?!?

ஓர் அறிவுஜீவி வழங்கும் அறிவுஜீவிகளுக்கான பதிவு இது!

‘ஜீன்களில் ஏற்படும் மாற்றங்கள்தான் பல கோடி ஆண்டுகளாக நடந்துவரும் பரிணாம வளர்ச்சிக்கு அடிப்படை என்பது பல்லாண்டுகளாக நம்பப்படும் சித்தாந்தம்.

இந்தச் சித்தாந்தத்தைத் தகர்த்தெறிந்திருக்கிறாராம் ‘ரிச்சர்ட் டாக்கின்ஸ்’ என்பவர்.
‘தாம் உயிர்வாழ வேண்டும் என்பதற்காக ஜீன்கள் நடத்தும் தொடர் போராட்டங்களின் விளைவுதான் பரிணாம வளர்ச்சி’ என்பது, இவர் முன்வைக்கும் புதிய சித்தாந்தம் ஆகும்.

இவருடைய சித்தாந்தத்தின்படி.....

‘நமக்காக ஜீன்கள் இல்லை; ஜீன்களுக்காகத்தான் நாம்.  ஜீன்கள் சுயநலம் மிக்கவை. அவை தம்மைத்தாமே பாதுகாத்துக்கொள்கின்றன. தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அவை நம்மை வாகனங்களாகப் பயன்படுத்துகின்றன. நாமெல்லாம் ஜீன்களைச் சுமந்து திரியும் வெறும் சுமைதாங்கிகளே!’

நம் நாடிநரம்புகளில் காம இச்சையைத் தூண்டி, ஆணும் பெண்ணுமாய்க் கலவியில் ஈடுபடத் தூண்டுவதே இந்தப் பொல்லாத ஜீன்கள்தானாம்!

நாளும் நம்மை விரகதாபத்துடன் அலையவிட்டுப் புணர்ச்சியில் ஈடுபடுத்தி நம் இனத்தை விருத்தி செய்வதன் மூலம் தம்மை அழியாமல் காத்துக்கொள்கின்றனவாம் அனைத்திற்கும் மூலமான ஜீன்கள் என்னும் இந்த அணுக்கள்.

நாம் நம் தாத்தா பாட்டி, தாய் தந்தை, சகோதர சகோதரிகள், ரத்த பந்தங்கள் என்று ஒருவர் மீது ஒருவர் பாசத்தைப் பொழிந்து தள்ளுகிறோமே அந்தப் பாசப்பொழிவுக்கு மூல காரணமே இந்த ஜீன்கள்தானாம்.

ஆக, நாம் அன்பு, பாசம், நேசம், காதல், கத்தரிக்காய், பணம், பதவி என்று எதுஎதற்கெல்லாமோ போராடி, அல்லலுற்று அரற்றித் திரிவதை ஒளிந்திருந்து வேடிக்கை பார்க்கும் ‘அந்தத் திருடன் யார்?’ என்று நேற்றைய பதிவில்[கலியுகக் கவிஞனும் ஒரு திருடனும்! http://kadavulinkadavul.blogspot.com/2017/06/blog-post_6.html] கேட்டிருந்தேனல்லவா, அந்தக் கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துவிட்டது. அந்தத் திருடன்...அல்ல, திருடர்கள்.....

ஜீன்கள்...ஜீன்களே!

[நான் ‘அறிவுஜீவி’ன்றது வெறும் ‘பந்தா’தாங்க. கோடானுகோடி ஜீவன்களில் நானும் ஒருத்தனுங்க!]
=============================================================================== 
தொடர்புடைய பதிவு: ‘ஜீன்கள் நிகழ்த்தும் சித்து விளையாட்டு!’  http://kadavulinkadavul.blogspot.com/2015/11/genes.html
================================================================================
நன்றி: ‘ஜீன் ஆச்சரியம்’, விகடன் பிரசுரம்; முதல் பதிப்பு: மே, 2016.