தேடல்!

நம் சம்மதம் இல்லாமலே நம்மைப் பிறப்பித்த கருணைக் கடவுள், நம் சம்மதம் இல்லாமலே சாகடிக்கவும் செய்கிறார். இது அநியாயம்!

Jun 6, 2017

கலியுகக் கவிஞனும் ஒரு திருடனும்!!!


நான் வாழப் பிறந்தவன்.

எனக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச நாட்கள் 36500.
ஆனால்.....
ஒரு முழு ‘ஒருநாள்’கூட
மூச்சு விடாமல் வாழ எனக்கு அனுமதியில்லை.

மண்ணில் ஓடி ஆடியும்
விண்ணில் சிறகடித்துப் பறந்தும்
ஆழ்கடலில் செதில் அசைத்து நீந்தியும் வாழ்வது
என் பிறவி ஆசை
இருப்பினும்.....
இரண்டு கால்களுடன் மட்டுமே படைக்கப்பட்டிருக்கிறேன்

‘பண்டங்கள் கிடைக்கும்போது உண்பது
கிடக்காதபோது உள்ளுறுப்பில் ‘இருப்பு’ வைத்ததை
அசைபோட்டு ஜீரணிப்பது’ என்பது
என் எதிர்பார்ப்பு.
என்னைப் படைத்தவனிடம் அப்படியொரு திட்டமே இல்லை.

என் உடம்பைப் பற்றி எனக்குத் தெரியும்.
எலும்பும் சதையும் நரம்பும் ரணமும் கலந்து செய்த
தோல் போர்த்த  பிண்டம் இது.
என்னவள் சுமந்துகொண்டிருப்பதும்
இப்படியான  ஒரு பிண்டம்தான்.
[கலவையில் வித்தியாசம் இல்லை;
கலக்கப்பட்ட மூலங்களின் சதவீதங்களில் மட்டுமே
சில மாற்றங்கள்].
அந்தப் பிண்டத்தைப் பார்க்கும்போதெல்லாம்
என்னுள் உணர்ச்சிப் பிரவாகம்; கடும் காமக் கிளர்ச்சி.

சதையோடு சதை உரசியும் புணர்ச்சி செய்தும்
உணர்ச்சி தணிக்கிறேன்.
அது தணிந்தபின்.....
“சீச்சீ...ஏனிந்த அசிங்க போகம்?” என்று மனம் விசனிக்கிறது.
ஆனாலும்
அப்படி வாழத்தான் நான் பணிக்கப்பட்டிருக்கிறேன்.

‘இனவிருத்திதான் படைப்பின் அடிப்படைக் கருதுகோள்’
என்பர் இயற்கை ஆய்வாளர்.
அது என்ன கருதுகோளோ, கருமாந்தரமோ?
இந்த வேண்டாத  இனவிருத்திக்காக
நான் ஏன் காலமெல்லாம் ‘விந்துப்பை’ சுமக்க வேண்டும்?

இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ அல்லல் படுபவன் நான்;
நாளும் அல்லலுற்று ஆற்றாது அரற்றுபவன்.

என்னைப் படைத்து மண்ணில்  உலவவிட்டு,
மறைந்திருந்து வேடிக்கை பார்க்கும்
அந்தத் ‘திருடன்’ யார்?

யாரந்தத் திருடன்!
===============================================================================
இந்தக் கவிதையை எழுதியவன் நான். கவிதையில் வரும் ‘நான்’க்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை!

9 comments :

 1. இரசித்தேன் நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. ரசித்தமைக்கு நன்றி கில்லர்ஜி.

   Delete
 2. திருடன் இருக்கிறானா ,அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான் :)

  ReplyDelete
  Replies
  1. அவனைப் பற்றிக் கணக்குவழக்கில்லாமல் கதை சொல்பவர்களுக்கும் அது தெரியவில்லையே!

   நன்றி பகவான்ஜி.

   Delete
 3. இல்லை என்றால் இருக்கிறது எனது அர்த்தம்... ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. நாம் பண்ணும் அர்த்தம் சில நேரங்களில் அனர்த்தம் ஆகிறது!

   நன்றி DD.

   Delete
 4. இது இயற்கைதானே! எல்லா மனிதர்களுக்கும் நிகழ்வதுதானே!!! அந்த இயற்கை திருடன் ஆகுமா??!!!! வரிகளை இருவரும் ரசித்தோம்!

  ReplyDelete
  Replies
  1. இயற்கை என்கிறீர்களா? மிகவும் சரியே. இயற்கை திருடன் ஆகாது.

   ‘எல்லாம் கடவுளின் படைப்பு’ என்னும் ஆன்மிகவாதிகளின் அழுத்தம் திருத்தமான பரப்புரையை மனதில் வைத்து எழுதினேன்.

   நன்றி துளசிதரன். நன்றி சகோ கீதா.

   Delete