எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

செவ்வாய், 17 மே, 2022

இந்திய உளவுத்துறை எச்சரிக்கையும் இல்லாத விடுதலைப் புலிகள் இயக்கமும்!!!

#இலங்கையில் மே மாதம் 18ஆம் தேதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்பு இருந்தவர்கள் குழுவாகச் சேர்ந்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள்காட்டி, தி இந்து நாளிதழ் கடந்த 13ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் இலங்கைப் புலனாய்வுத் துறையினர், இந்தியப் புலனாய்வுத் துறையிடம் விடயங்களை ஆராய்ந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கின்றது.

இது குறித்து இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியைத் தொடர்ந்து, இது சாதாரணமான ஒன்றுதான் என இந்திய உளவுத்துறை, இலங்கைப் புலனாய்வுத் துறையிடம் கூறியுள்ளதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் செய்திக்குறிப்பு மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. எனினும், இந்தத் தகவல் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி, எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இலங்கையிடம் தெரிவிப்பதாக இந்திய உளவுத்துறை கூறியுள்ளது என்று இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது[https://www.bbc.com/tamil/sri-lanka-61454566]#

இது, நேற்று[16.05.2022] அனைத்து முன்னணி நாளிதழ்களிலும் வெளியாகியுள்ள செய்தி.

நம்மை வியப்பில் ஆழ்த்துவது என்னவென்றால்.....

'சாதாரணமான ஒன்றுதான்' என்று சொல்லுகிற உளவுத்துறை, தகவல் உறுதிப்படுத்தப்படாத நிலையில், முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் குழுவாகச் சேர்ந்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள் என்பதை அறிந்துகொண்டது எப்படி?

இலங்கையில் 'விடுதலைப் புலி' இயக்கத்தினர்[அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களும் உள்ளடக்கம்] முற்றிலுமாய் அழிக்கப்பட்டார்கள் என்பது உலகறிந்த உண்மை.

உண்மை இதுவாக இருக்கையில், பிழைப்புக்கு வழி தேடி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கும் தமிழர்கள், குழு சேர்ந்து இலங்கை வந்து தாக்குதல் நடத்தப்போகிறார்கள் என்ற ஒரு செய்தியை இந்திய உளவுத்துறை ஏன் வெளியிட வேண்டும்? 

உரிய விசாரணை நடத்தி எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசிடம் இந்திய உளவுத்துறை தெரிவிக்குமாம். புலியோ பொதுமக்களோ, அவர்களைக் கட்டுப்படுத்துவது இலங்கை அரசின் வேலை. அதில் இந்திய உளவுத்துறை பங்காற்றுவதன் உள்நோக்கம் என்ன?

பங்காற்றும் அளவுக்கு இலங்கைத் தமிழர்கள் இந்தியாவுக்குச் செய்த தீமைகள்தான் என்ன? அவர்கள் இந்தியாவின் எதிரிகளா?

மேற்கண்ட அனுமானச் செய்தி புலிகள் மீது வெறுப்புணர்வை வளர்க்காது. ஏனென்றால், புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருப்பதற்கான ஆதாரம் எதையும் இலங்கை அரசோ இந்திய அரசோ வெளியிட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில்.....

இந்த உறுதிப்படுத்தப்படாத செய்தி, தமிழ் மக்களின் மீது வெறுப்புணர்வை வளர்க்கும், அல்லது, இலங்கையில் அரை வயிற்றுக்குக் கஞ்சிக்கு அல்லாடிக்கொண்டிருக்கும் தமிழர்களைச் சிங்கள அரசு சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தூண்டும் என்பது உளவுத்துறைக்குத் தெரியாதா?

விடை அறிய இயலாத கேள்விகள் இவை!?

ஆழ்ந்து சிந்திக்கத் தெரிந்தவர்கள் இவற்றிற்கு விடை கண்டறிய முயற்சி செய்யலாம்!

==================================================================