எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 19 ஜூலை, 2018

'மோகினி' தோசம்!!!

'10லிருந்து 50 வயது வரையிலான பெண்களை அனுமதித்தால் சபரிமலைக் கோயிலின் புனிதம் கெட்டுவிடும்' என்று அறிவிப்புச் செய்திருக்கிறது சபரிமலை நிர்வாகக் குழு[தேவம்சம் போர்டு] இது இன்றைய ஊடகச் செய்தி[பாலிமர் தொலைக்காட்சியில் நண்பகல் 02.00 மணிச்செய்தி].
2016 ஆம் ஆண்டிலேயே, சபரிமலைக் கோயிலில் வயது வேறுபாடின்றி அனைத்துப் பெண்களும் நுழைந்து வழிபடுவதற்கு அனுமதிக்க உத்தரவிடுமாறு இளம் வழக்கறிஞர் மன்றம் ஒன்று வழக்குத் தொடுத்தது.

அது குறித்த விசாரணையில், எல்லாத் தரப்புப் பெண்களும் அங்கு சென்று வழபடலாம் என்று கேரள அரசு அறிவித்தது.

நீதிமன்றமும், கோயிலுக்குச் சென்று வழிபடும் உரிமை ஆண்களைப் போலவே அனைத்து வயதுப் பெண்களுக்கும் உண்டு என்று அண்மையில் அறிவித்துள்ளது. ஆனாலும். தேவசம் போர்டு பிடிவாதமாக, 10 முதல் 50 வயது வரையிலான பெண்களின் நுழைவால் கோயிலின் புனிதம் கெடும் என்று அறிவித்திருக்கிறது.

புனிதம் என்றால் தூய்மை, தெய்வீகத்தன்மை என்று அகராதிகள் பொருள் தருகின்றன.

கோயிலில் நிலவும் புனிதத்தன்மையை, அதாவது, தெய்வீகத்தன்மையை அற்ப மனித ஜாதிப் பெண்களின் நுழைவு முற்றிலுமாய்ப் போக்கிடும் என்றால், அது கோயிலும் அல்ல; அங்கு குடியிருப்பவர் கடவுளும் அல்ல.

குறிப்பிட்ட வயதுப் பெண்களின் நுழைவால் கோயிலின் புனிதத்தன்மை கெடும் என்பது உண்மையானால்.....

ஐயப்பனைக் காட்டிலும் மூத்த கடவுளான ஏழுமலையானின் திருப்பதிக் கோயிலின் புனிதத்தன்மை முற்றிலுமாய்க் கெட்டழிந்திருக்க வேண்டும்.

ஐயப்பனின் சகோதரக் கடவுளான[வேறு வேறு அவதாரங்கள் என்றும் சொல்கிறார்கள்] பழனி முருகனின் கோயிலும் புனிதத்தை இழந்திருக்க வேண்டும்.

இது குறித்துச் சபரிமலைக் கோயில் குழுவினர்[தேவசம் போர்டு...தமிழில்?] ஏன் சிந்திக்கவில்லை? சிந்திக்கத் தவறிய அவர்களுக்குப் பிற கோயில்களின் பூசாரிகள்[?] ஏன் அறிவுறுத்தவில்லை?

பெண்கள் நுழைந்தால்தான் புனிதம் கெடுமா? அவர்கள் கோயிலின் எல்லைக்கு அப்பால் நின்று வழிபட்டால் கெடாதா? கடவுள் என்பவரால் அருளப்பட்ட புனிதத்தன்மை பிரபஞ்ச வெளியெங்கும் பரவிக் கிடக்கிற ஒன்றல்லவா? அதற்கு எப்படி இவர்கள் வரம்பு கட்டுகிறார்கள்?

பெண்கள் கோயிலுக்குள் நுழைந்தால் மட்டும்தான் புனிதம் கெடுமா? அவர்கள் மீது உராய்ந்த காற்று பட்டால்கூட அது கெட்டுவிடுமே. என்ன சொல்கிறார்கள் அவர்கள்?

மாதவிடாய்ச் சுழற்சியை[இயல்பானது] அவர்கள் சுட்டிக்காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது. அது உண்மையாயின், அவர்கள் அறியாமையின் உச்சத்தைத் தொட்டவர்கள் ஆவார்கள்.

கோயிலுக்குள் செல்பவர்கள் மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள அவரின் அனைத்துப் பக்தர்களுக்கும்[பெண்கள் உட்பட] சொந்தமானவர்தானே ஐயப்பன்? அப்புறம் ஏன் கோயில் என்னும் ஒரு குறுகிய எல்லைக்குள் அவரை அடைத்து வைத்துப் பெண்கள் நெருங்கினால் புனிதம் கெடும் என்கிறார்கள்?

ஐயப்பனை ஈன்றெடுத்தவர் மோகினி[திருமாலின் அவதாரம்] என்னும் பெண்தான். கடவுளாயினும் அவரும் பெண்தானே? அந்தப் பெண்ணுக்குப் பிறந்த ஐயப்பன், ஏதேனும் ஒரு தோசத்துடன் பிறக்காமல் புனிதத்தின் மறு வடிவமாய்ப் பிறந்தது எப்படி? அவருக்குரிய கோயிலின் புனிதத்தன்மை பெண்களால் பறிபோகும் என்று சொல்வது எவ்வகையில் நியாயம்?

இந்த அறிவியல் யுகத்திலும், மாதவிடாய்ச் சுழற்சியைக் காரணம் காட்டியும், கோயிலின் புனிதம் கெட்டுவிடும் என்று புலம்பியும் குறிப்பிட்ட வயதுப் பெண்களைத் தேவசம் போர்டு அனுமதிக்க மறுப்பது ஏற்புடையதல்ல.
------------------------------------------------------------------------------------------------------------------