புதன், 7 டிசம்பர், 2011

கேள்விகள் [சிறுகதை]

முனைவர் பரமசிவம் படைத்து வழங்கும்.....

                                       உணர்தல். [சிறுகதை]

லட்சோப லட்ச மக்களால் ‘கடவுள் அவதாரம் ‘ என்று போற்றப்படும் அந்த ‘மகான்’ அலங்கரிக்கப் பட்ட’அரியணை’யில் அமர்ந்திருந்தார்.

அவரைச் சுற்றி ‘அரண்’ அமைத்தது போல அவரின் சீடர்கள்.

மகானிடம் ‘அருளாசி’ பெறக் காத்திருந்த மக்கள் வெள்ளம், அரங்கில் நிரம்பி வழிந்தது.

மகான் இன்னும் திருவாய் மலர்ந்தருளவில்லை; அவர் யாருடைய வரவையோ எதிர்பார்த்துக் காத்திருப்பது போல் தெரிந்தது.

மக்கள் வெள்ளத்தை ஊடுருவிக் கொண்டு ஒரு ‘மனிதன்’ அவர் எதிரே வந்து நின்றான். பல நாள் காத்திருந்து, சிறப்பு அனுமதி பெற்று அவரைச் சந்திக்க வந்திருந்தான். ‘இவன் படித்தவன்’ என்று சொல்லத் தக்க தோற்றம் கொண்டவன். ஒரு முறை மகானின் முன்னே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்தான்.

“மகானே, எனக்குள் சில சந்தேகங்கள். விளக்கம் பெறலேன்னா பைத்தியம் பிடிச்சுடும் போல இருக்கு” என்றான்.

வதனத்தில் மெல்லிய புன்னகை படர, ”சொல்” என்பது போல லேசாகத் தலையசைத்தார் மகான்.

“தங்களைப் போன்ற மகான்கள் கடவுள் இருப்பதாகச் சொல்கிறார்கள். மக்களும் நம்புகிறார்கள். ஏனோ என்னால் நம்ப முடியவில்லை. அந்தக் கடவுளை ஒரே ஒரு முறை காட்ட முடியுமா?” என்றான் பணிவான குரலில்.

“கடவுளைப் பார்க்க முடியாது; ஐம்புலன்களால் அறியவும் முடியாது. உணர மட்டுமே முடியும். அதற்கு மனம் பக்குவப்பட வேண்டும்”

“ஒவ்வொரு உடம்புக்குள்ளேயும் ஆன்மான்னு ஒன்னு நுழைஞ்சிட்டு, உடம்பு அழியும் போது வெளியேறுவதா சொல்றாங்களே, அந்த ஆன்மாவையாவது பார்க்க முடியுமா?”

“முடியாது; உணரத்தான் முடியும்”

“கடவுள் ஒவ்வொரு அணுவிலும் ஊடுருவியிருப்பதாகத் தங்களைப் போன்ற ஞானிகள் சொல்றாங்க. என்னுடைய உடம்பிலும் கடவுள் இருப்பார்தானே? அவரைத் தெரிந்து கொள்வதற்கான வழிவகைகளை விளக்கிச் சொல்லுங்கள் மகானே.”

“வழி வகைகள் என்று ஏதும் இல்லை. அவரைச் சோதிப்பது பாவ காரியம். கடவுள் உன்னுள் இருப்பதை உணரத்தான் முடியும்.”

“நன்றி மகானே” என்று அவரைத் தலை தாழ்த்தி வணங்கிவிட்டுக் கேட்டான் அந்த மானுடன், “தங்களைக் கடவுளின் அவதாரம் என்கிறார்கள். அதற்குண்டான ஆதாரத்தைத் தாங்கள் கூறி அருள வேண்டும்.”

மகானின் முகத்தில் சிறிதே சினம் தோன்றி மறைந்தது.

“ எம்மிடம் ஆதாரம் கேட்பது அபவாதம். நாம் அவதாரம் என்பதை உணர மட்டுமே முடியும். உணர முயற்சி செய். ஒரு நாள் அது சாத்தியப்படும்”

”பாவம் புண்ணியம், சொர்க்கம் நரகம், மறு பிறப்பு என்று இப்படி ஏதேதோ சொல்றாங்க. என்னால் நம்ப முடியல. நம்பிக்கை பிறக்க நான் என்ன செய்யணும்? தாங்கள்தான் வழி காட்டணும்.”

சில கணங்கள் மவுனத்தில் ஆழ்ந்த மகான் சொன்னார்: “முதலில் கடவுள் இருப்பதை உணர முயற்சி செய். கடவுள் இருப்பதை உணர்ந்தால்... நம்பினால், இவற்றையும் உணர முடியும்; நம்ப முடியும்”

“ஆகட்டும்” என்பது போல் தலையசைத்த மனிதன், “கடைசியாக ஒரு கேள்வி ஐயனே. கடவுளை உணரத்தான் முடியும் என்று சொல்கிறீர்கள். தங்களால் பிறருக்கு உணர்த்தவே முடியாதா?”

“முடியாது”.

“தாங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?”

“உணர்ந்திருக்கிறேன்.”

“தாங்கள் உணர்ந்ததைப் பிறர் உணரும்படியாக விளக்கிச் சொல்வது சாத்தியமே இல்லைதானே?”

“சாத்தியமில்லை.”

“தாங்கள் உணர்ந்ததாகச் சொல்லும் கடவுளைப் பிறருக்கு எவ்வகையிலும் உணர்த்த முடியாத போது, கடவுளை நம்பும்படி மக்களை வற்புறுத்துவது எந்த வகையில் நியாயம் ஐயனே?”

மகானின் வதனம் சிவந்தது. உதடுகள் துடித்தன. ”நம்பினால் உனக்கு நற்கதி உண்டு. நம்பாவிட்டால் நரகத்தில் கிடந்து உழல்வாய். போய் வா” என்ரார்.

“போகிறேன். மீண்டும் தங்களிடம் வரமாட்டேன்.என்னை மதித்து என்னோடு உரையாடியதற்கு நன்றி மகானே” என்று சொல்லி விடை பெற்றான் அந்த மனிதன்.

========================================================================




திங்கள், 5 டிசம்பர், 2011

ஒரு நாத்திகன் அழைக்கிறான்.

                                           ஒரு நாத்திகன் அழைக்கிறான்

கடவுள் என்று ஒருவர் இருப்பதாக அனுமானித்து, அவரைப் போற்றி வழிபடுகிற அனைத்து மதங்களுமே, அவருக்குரிய முக்கிய குணங்களில் ஒன்றாகக் ‘கருணை’யைக் குறிப்பிடுகின்றன.

‘கருணை வடிவானவன் கடவுள்’

ஓரளவு சிந்திக்கத் தெரிந்த காலக் கட்டத்தில், பேரழிவுகளை உண்டுபண்ணிய வெள்ளப் பெருக்கு, பெரு நெருப்பு, சூறாவளி, கடல்கோள் [சுனாமி], போன்றவற்றைக் கொடிய தெய்வங்களாகக் கருதி அஞ்சி நடுங்கியது மனித குலம்.

சிந்திக்கும் அறிவு வளர்ச்சி பெற்ற நிலையில், அறிவு வளர்ச்சியில் முன்னிலை பெற்றவர்கள், அனைத்துப் பேரழிவுச் சக்திகளுக்கும் மேலாக எல்லாம் வல்ல ஒரு பேராற்றல் இருப்பதாகச் சொல்லி, அதைக் ‘கடவுள்’ ஆக்கினார்கள்.


அந்தக் கடவுளை, ’வெறும் சக்தி’ எனச் சொல்ல மனமில்லாமல், அன்பு, அருள் [கருணை], பரிவு, இரக்கம், அண்டினோரைப் பாதுகாத்தல் என்று அனைத்து நற்குணங்களையும் அவரின் தனி உடைமை ஆக்கி மகிழ்ந்தார்கள்.

அவரை வழி பட்டால், வாழ்வில் துன்பம் விலகி இன்பம் மலரும் என்று நம்பினார்கள். அறிவு வளர்ச்சியில் பின் தங்கிய...சிந்திக்கும் ஆற்றல் குறைந்த மக்களை நம்ப வைத்தார்கள். அவர்களின் வழி வந்தவர்கள் அவர்கள் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்தார்கள்.

இது, மனித குல வரலாற்றில் கடவுள் நம்பிக்கை உருவானதன் ஆரம்ப நிலை மட்டுமே.

இதை எதிர்த்து, ‘கடவுள் பொய்; இயற்கையே மெய்’ என்று எதிர்வாதம் எழுந்தது; மதங்கள் உருவானது பற்றியெல்லாம் சொல்லப் புகுந்தால், அது நீளும்.

அதை விவரிப்பது நம் நோக்கமன்று.


‘கடவுள் கருணை வடிவானவர்’ என்று சொல்லப் பட்டதை...சொல்லப் படுவதை விவாதிப்பது மட்டுமே நம் விருப்பம்.

இது பற்றி விவாதிக்கத்தான் இன்றைய மதவாதிகளையும் ஆன்மிகவாதிகளையும் அன்போடு அறைகூவி அழைக்கிறோம்.

அனைத்து மத குருமார்களே, பரப்புரையாளர்களே, ஆன்மிகச் செம்மல்களே........

நீங்கள் நம்பும் கடவுள் கருணை வடிவானவர் என்பதற்கு, உங்கள் முன்னோடிகள் சொல்லிப் போன அதே காரணங்களைத்தான் நீங்களும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.


‘இன்பங்கள் நிறைந்த உலகைப் படைத்து,அந்த இன்பங்களைத் துய்க்கும்
பேற்றை உயிர்களுக்கு வழங்கியவர் கருணை வடிவான கடவுள்’ என்று சொன்னார்கள். நீங்களும் சொல்கிறீர்கள்.

நீங்கள் படைத்த கடவுளைப் போலவே.....ஏன், அவரை விடவும் நீங்கள் கருணை நெஞ்சம் படைத்தவராக இருக்கலாம். நாம் மறுக்கவில்லை. ஆனாலும், நாம் எழுப்புகிற வினா ஒன்று உண்டு.


இந்த உலகில் பிறந்து வாழும் மனிதர்களை உள்ளடக்கிய உயிர்கள் அனுபவிப்பது இன்பம் மட்டும்தானா? துன்பமும்தானே?


இவற்றில் எது அதிகம்?

நடுநிலை உணர்வுடன், ஒரு முறையேனும் சீர்தூக்கிப் பார்த்ததுண்டா?


கருணைக் கடலான உங்கள் கடவுள் நிகழ்த்திய அற்புதங்களை நெஞ்சுருகச் சொல்லிச் சொல்லி, ஆனந்தப் படுவதற்கும், அவன் பெருமைகளை வியந்து துதி பாடுவதற்கும், விழாக்கள் நடத்திக் குதூகளிப்பதற்குமே உங்களுக்கு நேரம் போதவில்லை. இதற்கெல்லாம் ஏது நேரம்?!

இப்போதாவது சிந்தியுங்கள்.

உயிர்கள்...மனிதர்கள் அதிகம் அனுபவிப்பது இன்பத்தையா, துன்பத்தையா?
[அவையவை...அவரவர்கள் முற்பிறவிகளில் செய்த பாவ புண்ணீயத்தைப் பொறுத்தது என்ற அனுமானம் வேண்டாம். எதார்த்தத்தைக் கருத்தில் கொள்ளுங்கள். கண்ணால் காணும் நடைமுறை வாழ்க்கையைக் கணக்கில் வையுங்கள்]

“இன்பமே’ என்பதுதான் உங்கள் பதிலாக இருக்கும் என்பதை நாம் அறிவோம்.

இயற்கை அழகை அனுபவிப்பது இன்பம். அது எழுப்பும் இன்னோசைகளைக் கேட்பது இன்பம். உண்பது இன்பம். உறங்குவது இன்பம். நறுமணங்களை நுகர்வது இன்பம். ஆண் பெண் இணைவது மகத்தான இன்பம். மழலைச் செல்வங்களைத் தழுவுவது அலுக்காத இன்பம்........

இவை அனைத்திற்கும் மேலாக...........................


உள்ளம் உருக, உடம்பு சிலிர்க்க, நா தழு தழுக்க ‘அவன்’ கருணையை நாளெல்லாம் பாடிப் பாடிப் பரவசப்பட்டுப் பெறுகிற ‘பேரின்பம்!

இப்படி நீங்கள் இடும் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, உயிர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் பற்றிச் சிந்தித்ததுண்டா?


சிந்தியுங்கள்; நாமும் சிந்திப்போம்.


அடுத்த பதிவில் பட்டியலிடுவோம்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~