வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

நம்புங்கள்...நாய்களும் நம் கடவுள்களே!!!

இந்தியாவில் நாய்க் கடவுளுக்குக்கென்று தனிக் கோவில் உள்ளது. எங்கே?!
வைரவரின் வாகனமாக நாய் இருந்து வருகின்றது.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இராம நகர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நாய்களுக்கு என்று தனிக் கோவில் ஒன்று உண்டு.


மூலஸ்தான மூர்த்தி நாய்தான். மூலஸ்தான மூர்த்தியான நாய்க் கடவுளின் பெயர் ஸ்ரீ நாயிடோலி வீரப்பா.


ஸ்ரீ வீரமஸ்தி கேம்பம்மா என்று ஒரு கிராமிய பெண் தெய்வம் இருக்கின்றார். இக்கிராமிய தெய்வத்தின் ஆலயத்துக்கு அருகில்தான் நாய்க் கடவுளின் ஆலயம் உள்ளது.


கேப்பம்பா கிராமிய தெய்வத்தின் மெய்ப்பாதுகாவலனாக நாய்க் கடவுள் விளங்குகின்றார் என்று கிராம மக்கள் நம்புகின்றனர்.


நாய்க் கடவுளிடம் பக்தர்கள் குறைகளை முறையிடுகின்றனர். அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் ஆலயத்துக்கு மீண்டும் வந்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.


இக்கிராம மக்களுக்கு வருங்காலத்தை எடுத்துரைக்க வல்ல ஒரு தீர்க்க தரிசியாகவும் நாய்க் கடவுள் விளங்குகிறார்.


அதாவது, கிராமத்துக்கு ஏதாவது கேடு அல்லது தீங்கு ஏற்பட உள்ளது என்றால் நாய்க் கடவுள் அதை அறிவிப்பார் என்பது ஐதீகம்.


பிறக்கின்ற குழந்தைகளுக்கு இக்கிராமத்தவர்களில் அநேகர் நாய்க் கடவுளின் பெயரைத்தான் சூட்டுவார்கள். ஆண் குழந்தை என்றால் வீரப்பா என்றும் பெண் குழந்தை என்றால் வீரன்னை என்றும் பெயரிடுவார்கள்.


இந்தியாவில் சாதிக் கொடுமை தலை விரித்தாடுகின்றது. ஆனால் நாய்க் கடவுள் சாதிப் பாகுபாட்டுக்கு எதிரானவராக சித்திரிக்கப்படுகிறார்.


ஏனெனில் நாய்க் கடவுளின் பூசகர்கள் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

நாய்க்கு நினைவஞ்சலி.....!

திங்கள், 22 பிப்ரவரி, 2016

பெண்களுக்குப் பிடிக்காத கதை!!!


‘பெண்களுக்கு...’ என்பதை, ‘மிகச் சில பெண்களுக்கு...’ என்று திருத்தி வாசித்திடுக!


தலைப்பு:                                         தினவு

டைப்பு:                               ‘கத்துக்குட்டி’ பரமசிவம்



“மல்லிகா,   எங்கடி போய்ட்டு வர்றே?”

வீட்டுக்குள் நுழைந்த மகளை முறைத்தபடி கேட்டாள் செல்லம்மா.

“புவனாவைப் பார்த்துட்டு வர்றேன்” என்றாள் மல்லிகா.

“இல்ல, அவ புருஷனைப் பார்த்துட்டு வர்றே. புவனா நேத்தே அவ அம்மா வீட்டுக்குப் போய்ட்டா. உன்கிட்டே சொல்லிட்டுத்தான் போனா. உங்க பேச்சைக் குளியலறையிலிருந்து கேட்டேன்."

மல்லிகா மவுனம் போர்த்து நின்றாள்.

“புருஷனைத் தவிர வேறொருத்தன் மேல ஆசைப்படுறது தப்புடி.”

“நீயும் அந்தத் தப்பைப் பண்ணியிருக்கே. நான் வயசுக்கு வந்தப்புறம்தான் ‘அந்த ஆளு’ உன்னைத் தேடி வர்றதை நிறுத்தினான்.” - அவள் பிரசவித்த வார்த்தைகளின் சூடு, செல்லம்மாவை வெகுவாக வாட்டியது.

மனதைத் தேற்றிக்கொள்ளச் சற்றே அவகாசம் தேவைப்பட்டது அவளுக்கு.

சொன்னாள்: “இளம் வயசிலேயே என் புருஷன், அதான் உன் அப்பன் செத்துட்டான். கொஞ்ச வருஷம் இன்னொருத்தனுக்கு வைப்பாட்டியா இருந்தேன். நான் செஞ்சது தப்புன்னாலும், அதுக்குப் பாவ மன்னிப்பு உண்டு. ஆனா நீ.....

புருஷன் இருக்கும்போதே, அவனுக்குத் துரோகம் பண்ண நினைக்கிறே. இதோ பாருடி.... மற்றதில் எப்படியோ, ஆணுக்காகட்டும் பெண்ணுக்காகட்டும், இந்த விஷயத்தில் கண்டிப்பா ‘போதும்’கிற மனசு வேணும். ‘இன்னும் வேணும்.....இன்னும் வேணும்’னு தினவெடுத்துத் திரிஞ்சா குடும்பம் சிதைஞ்சி சின்னாபின்னம் ஆயிடும். புரிஞ்சுதா.”

“புரிந்தது” என்பதுபோல் தலையசைத்தாள் மல்லிகா.

=============================================================================================

Selva Kumar

முற்பகல் 11:01 (23 நிமிடத்திற்கு முன்)
பெறுநர்: எனக்கு
வணக்கம்.நலமா?
அலைபேசியில் அதிகம் உலவுவதால் தங்களுக்கு பின்னூட்டங்கள் இடுவதில் சிரமம்..மற்றபடி உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசிக்கிறேன்...அருமை...
நண்பரே பின்னூட்டங்கள் தளத்திலேயே இடும் வசதி செய்யக்கூடாதா ?


மீரா செல்வக்குமார் 

பரமசிவம் kaliyugan9@gmail.com

முற்பகல் 11:20 (4 நிமிடத்திற்கு முன்)
பெறுநர்: Selva
நன்றி செல்வக்குமார்.

பின்னூட்ட வசதி செய்வதில் பிரச்சினை ஏதுமில்லை. பிரச்சினைக்குரிய[கடவுள்...மதங்கள்...] பதிவுகளுக்கு வரும் கண்டனங்களை எதிர்கொள்வதற்கான மனப்பக்குவம் எனக்கில்லாததால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறேன்; நேரமும் விரயமாகிறது.

என் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்பதும் ஒரு காரணம்.

எவரையும் அலட்சியப்படுத்தும் எண்ணம் எனக்கு எள்ளளவும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

மீண்டும் நன்றி செல்வக்குமார்.

22 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 11:01 அன்று, Selva Kumar <kumar.selva28769@gmail.com>எழுதியது:

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

இதோ ஒரு மனிதன்! வாருங்கள் இவன் வழி நடப்போம்.

விபத்து அவன் உடலை இரு துண்டாக்கியபோது, “ஐயோ என்னைக் காப்பாற்றுங்கள்” என்று அலறவில்லை; கடவுளை நினைந்து கசிந்துருகிக் கண்ணீர் சிந்தவில்லை; “நான் பிழைப்பது கடினம். என் உடல் உறுப்புகளைத் தானம் செய்யுங்கள்” என்று சக மனிதர்களிடம் கை கூப்பி அழுதான். இது 18.02.2016 ‘தி இந்து’ நாளிதழ்ச் செய்தி.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம், குப்பி கிராமத்தைச் சேர்ந்தவர் ‘ஹரீஷ்’[26]; அங்கிருந்து, தான் வேலை பார்க்கும் பெங்களூருவுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். இவரை முந்திச் சென்ற ஒரு லாரி மோதியதில் ஹரீஷின் உடல் இரண்டு துண்டுகளானது.

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக்கொண்டிருந்த இவரைக் காப்பாற்ற அருகிலிருந்தவர்கள் ஓடி வந்தார்கள். அவர்களிடம், இரு கரம் குவித்துக் கதறி அழுதவாறு ஹரீஷ் சொன்னார், “நான் பிழைப்பது கடினம். என் உறுப்புகளைத் தேவைப்படுவோருக்குத் தானம் செய்யுங்கள்” என்று.

இவரின் இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் சேதம் அடைந்துவிட்டன. ஹெல்மெட் அணிந்திருந்த இவரின் கண்கள் மட்டும் சிதையாமல் இருந்தன.

உயிருக்குப் போராடும் அந்தக் கணங்களில் தன்னையும் தன் உறவுகளையும் அலட்சியப்படுத்தி, தன் உறுப்புகள் பாதிக்கப்பட்டோருக்குப் பயன்பட வேண்டும் என்றெண்ணும் உயர்ந்த உள்ளம் இவருக்கு எப்படி வாய்த்தது?

‘இவர் ஓர் அறிவுஜீவியா, சாமானியரா? ஆத்திகரா, நாத்திகரா? பரம்பரை ஏழையா, பணக்காரரா? படித்த வர்க்கமா, பாமரர் குடியில் பிறந்தவரா?’ என்பன போன்ற கேள்விகளில் எந்த ஒன்றுக்கும் நாம் விடை அறியோம்.

நாம் அறிந்தது, ‘இவர் ஒரு மனிதர். மனிதத்தின் மொத்த உருவமாக வாழ்ந்து மடிந்த ஒரு மாமனிதர்’ என்பது மட்டுமே.

ஞானிகளையும் மேதைகளையும் வகை வகையான கடவுளர்களையும் போற்றுகிறோமோ இல்லையோ, ‘ஹரீஷ்’களைப் போற்றி, முழு மனிதர்களாய் வாழ முயல்வது நம்மவரின் தலையாய கடமையாகும்.
=============================================================================================

  





ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

‘அது’க்கு அது ஆகாத ஜாதி!.....‘இது’க்குமா?!

கைப்பேசியின் அழைப்பு.

“அலோ...” சொன்னார்  அறிவழகன்.

“தலைவரே, நான் குமார் பேசுறேன். நம்ம ஜாதிப் பொண்ணு  அமுதா  ‘அந்த’ ஜாதிப் பயலோட மலைக் கோயிலுக்குப்  போற பஸ்ஸில் ஒன்னா உட்கார்ந்திருக்கா. ரெண்டு பேரும் நெருங்கிப் பழகுற விசயத்தை உங்ககிட்டே சொல்லியிருக்கேன். கல்யாணம் பண்ணிக்கப் போறாங்களோன்னு சந்தேகமா இருக்கு” என்றான் குமார்.
“இது சம்பந்தமா அமுதாவோட அப்பன் காளியப்பன்கூட ஃபோனில் பேசியிருக்கேன். நீ உடனே புறப்பட்டு வா. நம்ம ஆட்களோட அவரையும் கூட்டிட்டுக் கோயிலுக்குப் போவோம். அவனைக் கடத்திட்டுப் போய் விசாரிப்போம்.” -கொதிக்கும்  நெருப்பு வார்த்தைகளை உதிர்த்தார் அறிவழகன்.

காளியப்பனை, அவர் வீட்டில் சந்தித்து,  கலந்தாலோசித்த பின்னர் அவர்கள் புறப்பட ஆயத்தமானபோது,  அமுதாவே அங்கு வந்து சேர்ந்தாள்.

எதிர்பாராத அதிர்ச்சியை உள்வாங்கிக்கொண்ட அறிவழகன், அமுதாவை விசாரிக்கும்படி காளியப்பனுக்கு ஜாடை காட்டினார்.

“ஏதோ சர்டிஃபிகேட் வாங்கக் காலேஜ் போறதா சொல்லிட்டுப் போனே. வாங்கிட்டியா?” என்றார் காளியப்பன்.

“வாங்கிட்டேன். முதல் வகுப்பில் பாஸ் பண்ணியிருக்கேன்.”

“அப்புறம், வேற எங்க போனே?””

“மலைக் கோயிலுக்குப் போனேன். அப்பா,  நான் என் கிளாஸ்மேட் கலைச்செல்வனைப் பத்தி உங்ககிட்டே சொல்லியிருக்கேன். ரொம்ப நல்லவன்; புத்திசாலி. நான் எம்.எஸ்ஸி. முதல் வகுப்பில் தேறியிருக்கேன்னா அதுக்கு அவன்தான் காரணம். அவனை நான்  மலைக் கோயிலுக்கு அழைச்சிட்டுப் போயி மாதொருபாகன் முன்னிலையில் அவனுக்கு ராக்கி கட்டினேன். தாழ்த்தப்பட்ட ஜாதிப் பையனைக் காதலிக்கிறதுதான் தப்பு. சகோதரனா ஏத்துக்கிறதுகூடத்  தப்பாப்பா?” -சொல்லி முடித்தபோது அவளின் பார்வை அறிவழகனின் முகத்தில் பதிந்திருந்தது. 

அவர் பார்வையோ தரையில் தாழ்ந்து கிடந்தது!
=============================================================================================

வியாழன், 4 பிப்ரவரி, 2016

பெண்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்காத வார இதழ்?!?!

‘இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் வார இதழ்’ என்று ஒரு காலத்தில் நம் நாடாளுமன்றத்திலேயே பேசப்பட்ட பத்திரிகை இது.....

1947இல் இந்த வார இதழ் தொடங்கப்பட்டது.

இதன் ஆசிரியர், பணம், புகழ், பட்டம் போன்றவற்றை அறவே வெறுத்தவர்; பெயருக்குப் பின்னால் எம்.ஏ.,பி.எல்., என்று எப்போதும் போட்டுக்கொள்ளாதவர்; தம்மைப் பற்றி ஒரு வரியோ, தபால்தலை அளவு புகைப்படமோ தம் இதழில் வெளிவர அனுமதிக்காத பெருந்தகை.

தம்மையோ, தம் இதழையோ பாராட்டி எழுதப்படும் கடிதங்களை விடவும் கடுமையாகச் சாடி எழுதப்படும் மடல்களையே கடிதம் பகுதியில் விரும்பி வெளியிடுவார்.

‘சுட்டி’ என்று ஒரு கையடக்கச் சிற்றிதழ். அது, இந்த இதழ் கையாளும் வணிக உத்திகளைக் கடுமையாகச் சாடி ஒரு கட்டுரை வெளியிட்டது. அதை வரி பிசகாமல் முழுமையாகத் தன் பத்திரிகையில் மறு பிரசுரம் செய்தார் இவர். ஒரு நூறைத் தாண்டுவதற்கே முக்கி முனகிக்கொண்டிருந்த அந்தச் சுட்டியின் விற்பனை 19 ஆயிரம், இருபதாயிரம் என்று எகிறியது!

“நாலு பேர் தாக்கி எழுதும்போதுதான் வாசகரிடையே பிரபலம் ஆகிறோம்; புத்துணர்ச்சி பெறுகிறோம்” என்று அடிக்கடி சொல்வாராம் இவர்.

‘ரிலீஸ்’ திரைப்படங்களை ஓசியில் பார்த்தால் நடுநிலையாக விமர்சனம் எழுத முடியாது என்ற கொள்கையுடைய இவர், தியேட்டரில் நுழைவுச் சீட்டு வாங்கிப் படம் பார்த்து விமர்சனம் எழுத வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தாராம் தம் நிருபர்களுக்கு.

சட்டம் படித்த இவர், வக்கீலாகத் தொழில் செய்ய விரும்பவில்லை. பிரசண்ட விகடனில் தம் கதைகள் வெளியானதில் பெற்ற உற்சாகத்துடன் தம் நண்பர் பார்த்தசாரதி அவர்களுடன் இணைந்து புதிய இதழ் ஒன்றைத் தொடங்கினார்.

தொடக்கத்தில், மாதம் மும்முறை வெளியான அது பின்னர் வார இதழாக மாறியது.

ஆரம்ப காலத்தில், பெரியவர்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு இதழில் இளமை ஊஞ்சலாடியது என்னவோ உண்மை[இப்போது?!]. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் உள்ளடக்கத்தை, ஒரு சீரியஸ் கதை, காதல் கதை, குடும்பக் கதை, கிரைம் கதை, கிராமியக் கதை என்று மாற்றிக்கொண்டது.

“ஒரு நல்ல கதை எழுதணும்னா முதலில் ஒரு நல்ல கதையைப் படிக்க வேண்டும்” என்பாராம் தம் உதவி ஆசிரியர்களிடம்.

இவர் அடிக்கடி உதிர்க்கும் சொற்றொடர், “எல்லாம் ஆண்டவன் செயல்” என்பது. அடிக்கடி எழுதிப் பார்ப்பது, ‘ஓம் முருகா’!

இவர் பெரும் செல்வந்தர் குடியில் பிறந்தவர். ஆயினும் மிக மிக எளிமையானவர்.

திருக்குறளும் கீதையும் இவரின் இரண்டு கண்களாம்; சுவாமி சின்மயானந்தாவுடன் நெருக்கமானவர்; அவருடன் யாத்திரை செல்வதை மிகவும் விரும்பியவர்; கர்ம யோகி; மிகவும் கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்ந்தவர்.

இவரின் பத்திரிகை அலுவலகத்தில் பெண்கள் நுழையக் கூடாது என்பது எழுதப்படாத ஒரு விதியாக இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். [இப்போதைய நிலையை யாம் அறியோம்].

இவர் யாரென்பதையும், இவர் தொடங்கி நடத்திய அந்த வார இதழ் எது என்பதையும் அனுமானித்திருப்பீர்கள்.

அந்த ‘இவர்’.....
16.04.1994இல்[70 வயதில்] காலமான எஸ்.ஏ.பி.அண்ணாமலை அவர்கள். 

வார இதழ்.....’குமுதம்’!
=============================================================================================

டிசம்பர், 2015இல் எழுதி முடித்த பதிவு இது. இனம்புரியாத தயக்கத்தால் தாமதம் ஏற்பட்டது.

சில முக்கிய தகவல்களைத் தந்த நூல்: முக்தா சீனிவாசன் அவர்களின், ‘இணையற்ற சாதனையாளர்கள்’, திருக்குடந்தைப் பதிப்பகம், சென்னை.