வெள்ளி, 29 நவம்பர், 2019

‘மூடநம்பிக்கை’ - சிறு விளக்கமும் இரு சுவாரசியக் கதைகளும்!

மூடம் - அறியாமை.


அறியாமை மற்றும் பகுத்தறிதல் இன்மையால் வெளிப்படும் நம்பிக்கை ‘மூடநம்பிக்கை’ எனப்படும். [Superstitious beliefs are an outcome of ignorance and lack of rational thinking...

‘பகுத்தறிவுக்கு ஒவ்வாத  கட்டுக்கதை, சூன்யம் போன்றவற்றின்மீது மக்கள் கொள்ளும் நம்பிக்கை’ என்றும் சொல்லலாம். [‘Some believe that a superstition is anything that people believe that is based on myth, magic, or irrational thoughts. - dazeinfo[website]

‘அறிவின் துணைகொண்டு, காரணங்களை ஆராயமல் மூதாதையர் சொல்லிப் போனவற்றை நம்புவது’ என்றும் விளக்கம் தருகிறார்கள். [Superstition is credulous belief or notion, not based on reason, knowledge, or experience. -Wikiquote]

சங்கம் மருவிய காலக்கட்டத்தில் இதை ‘இயற்கை இறந்த நிகழ்ச்சி[Super Natural] என்று குறிப்பிட்டார்கள். தங்க முலாம் பூசியிருக்கிறார்கள்!

இராமாயணத்தில் சீதை வான ஊர்தியில் கடத்தப்பட்டது; பாரதத்தில், கடவுளே மண்ணுலகுக்கு வருகை புரிந்து மனிதர்களுடன் உறவாடியது; தேடோட்டியது; சிலப்பதிகாரத்தில், கண்ணகி மார்பகத்தைக் கையால் திருகித் துண்டாக்கி எறிய மதுரை நகரம் தீப்பற்றி எரிந்தது; மதுராபுரிப் பெண் தெய்வம் அவள் முன் தோன்றிப் பேசியது; மணிமேகலையில், அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரத்தால் மக்களுக்கு மணிமேகலை உணவு வழங்கியது போன்ற நிகழ்வுகள் இதற்கு உதாரணங்களாகும்.

நம்பிக்கை[belief]க் குடும்பத்தின் ஓர் அங்கம் மூடநம்பிக்கை[superstition]. ஏனையவை,அவநம்பிக்கை[disbelief], தன்னம்பிக்கை[self cofidance] ஆகியன.

[belief, trust, hope என்னும் மூன்றையும், ‘நம்பிக்கை’ என்றே தமிழ் படுத்துகிறது கூகிள் மொழிபெயர்ப்பு. நாம் நம்பிக்கை என்ற ஒரு சொல்லையே ‘முன் ஒட்டு’ சேர்த்து மாறுபட்ட பொருள்களில் பயன்படுத்துகிறோம். இது பற்றிய விரிவான ஆய்வு இங்கு தேவையில்லை].

“நான் வெல்வேன்” என்று இயல்பாகச் சொன்னால், அது நம்பிக்கை.

“வென்றே தீருவேன்” என்று அடித்துச் சொன்னால், தன்னம்பிக்கை.

“நான் வெல்வேனா?” என்று சந்தேகத்துக்கு இடமளித்தால், அது அவநம்பிக்கை.

“குறுக்கே பூனை வந்தது. நான் தேர்வாகமாட்டேன்” என்று புலம்பினால்  மூடநம்பிக்கை.

மூட நம்பிக்கை என்ற வார்த்தையே தவறு. சரியான நம்பிக்கைதவறான நம்பிக்கை என்றே அறிவியல் சுட்டிக் காட்டுகிறது’ என்கிறது ‘உயிரோசை’, வார இணைய இதழ்.


எந்த அறிவியல் இப்படிச் சொல்கிறது என்பது தெரியவல்லை. ‘அவநம்பிக்கை’,

‘தன்னம்பிக்கை’ ஆகியவை வழக்கில் இருப்பதை, உயிரோசை கருத்தில் 
கொள்ளவில்லை போலும்.

'நம்பிக்கையில் மூட நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, கெட்டிக்கார நம்பிக்கை... 

என்று எதுவும் கிடையாது. சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே ஒரு மூடத்தனம். அதிலே தனியாக ஒரு மூட நம்பிக்கை ஏது?’ என்கிறார் கவியரசு கண்ணதாசன். 

கவிஞரின் கருத்துப்படி, ‘வெல்வேன்’ என்று நம்பியவன் தோற்றுப்போனால், 

அவனின் நம்பிக்கை பொய்த்ததே தவிர, அது மூடநம்பிக்கை ஆகிவிடாது. ‘நான்
வெல்வேனா?’ என்று சொல்லியிருந்தால், அதுவும் நம்பிக்கைதான். ‘பூனை 
குறுக்கே வந்ததால்...’என்று பகுத்தறிவுக்குப் பொருந்தாத ஒரு 
காரணத்தைச் சேர்க்கும்போதுதான் அது மூடநம்பிக்கை ஆகிறது.

##பூமிதோன்றி 4.5 பில்லியன் ஆண்டுகள், பிரபஞ்சம் உருவாகி  14.5 பில்லியன் 

ஆண்டுகள் என்று விஞ்ஞான முறையில் நிறுவியபிறகும், இல்லையில்லை 
கிறிஸ்தவ பைபிளின்படி, இந்தப் பூமியும், பிரபஞ்சமும் உருவாக்கப்பட்டு 
6000 ஆண்டுகள் தான் என்று பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தால், 
அது மூடநம்பிக்கை. 

உடலுறவின் மூலம், ஆணின் விந்தணுவும், பெண்ணின் முட்டையும் 

இணைந்து கருத்தரிக்க முடியாவிட்டாலும், செயற்கை முறையில் அதைச் 
சாதிக்க முடியும் என்ற நிலை உருவான பிறகும்   விரதமிருந்து, விக்கிரகங்களை
வழிபட்டால் தான் குழந்தை கிடைக்கும் என்று நம்புவதும் மூடநம்பிக்கையே.

சூரியன் ஒரு கிரகமல்ல, அது ஒரு நட்சத்திரம், சந்திரனும் ஏனைய கிரகங்கள் போல ஒரு கிரகமல்ல, அது பூமியின் துணைக்கோள் என்று நிறுவிய பின்பும், இல்லையில்லை அவையிரண்டும் நவக்கிரகங்களுக்குள் அடங்கும் என்று நம்பினால் அது அறியாமையால் ஏற்பட்ட மூடத்தனத்தின் உச்சம் ஆகும்.

இப்படிப் பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.##

-[மதுவர்மன், ‘நம்பிக்கைகள் பற்றி ஓர் ஆய்வு’, புதன், ஆகஸ்டு 6.2008]

முத்தாய்ப்பாக, மூடநம்பிக்கையின் தோற்றம் குறித்த ஒரு வரலாற்றுக் குட்டிக்கதை..........

[மிகப்பல ஆண்டுகளுக்கு முன்னர், பகுத்தறிவுப் பிரச்சார இதழில் படித்தது. இதழின் பெயர், கட்டுரைத் தலைப்பு முதலானவை நினைவில் இல்லை]

###வேத, புராண காலங்களுக்கு முன்னரே இந்த மண்ணுலகை ஆண்ட ஒரு மன்னன் தன் மந்திரி பிரதானிகளுடன் கோயிலுக்குச் சென்றான்.

இறைவனின் சந்நிதிக்குள் நுழைய முற்பட்டபோது, வாயில்படியில் கால் இடறித் தரையில் குப்புற விழுந்தான்.

அருகிலிருப்போர் நகைப்பார்களே என்று நினைத்த அவன், தரையில் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்த நிலையிலேயே இறைவனை வழிபட்டு, அசம்பாவிதம் ஏதும் நடவாததுபோல எழுந்து நின்றான்.

இந்த ரகசியத்தைப் பிறர் அறியாமலிருக்க, அடுத்தடுத்த நாட்களிலும் தரையில் நீட்டிப்படுத்த நிலையிலேயே வழிபட்டான். [அப்போதெல்லாம், நின்ற கோலத்தில் வணங்குவதுதான் வழக்கத்தில் இருந்ததாம்].

மன்னனிடம் அதுபற்றி விளக்கம் கேட்கப் பயந்த ஏனையோரும், அவனைப் போலவே ஒட்டுமொத்த அங்கமும் தரையில் படும்படியாக விழுந்து வணங்குவதை வழக்கமாகக் கொண்டார்கள்.. இதுவே பின்னர் அஷ்டாங்க நஸ்காரம்’ எனப்பட்டது.

[‘[8 அங்கங்கள் பூமியில் பதிய செய்யும் நமஸ்காரமே அஷ்டாங்க நமஸ்காரம். இதில் நெற்றி, காதுகள், நெஞ்சு, கைகள் மற்றும் கால்கள் பூமியில் பட, மனதை ஒருநிலையில் வைத்து, பகவத் பாதங்களை நாம் ஸ்பர்சிப்பதாக உருவகம் செய்து வணங்குவது நலம்’] 

இவ்வழிபாட்டு முறை குறித்து, ஓலைச் சுவடிகளிலும் செப்பேடுகளிலும் பின்னர் எழுதி வைத்தார்கள்.

காலப் போக்கில், மன்னர் குலத்தைச் சர்ந்தவர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் இவ்வழிபாட்டு முறையைப் பின்பற்றலானார்கள். இன்றளவும் இம்முறை தொடர்கிறது###

அடுக்கடுக்கான துன்பங்களின் தாக்குதலால் வெகுவாகத் துவண்டுபோன மனிதர்கள், இறைவனின் சந்நிதியில் விழுந்து உருண்டு புரண்டு கவிழ்ந்து படுத்து  அவனிடம் முறையிட்டுத் தம் துயர் தணித்துக்கொண்ட நிகழ்வுகளே காலப்போக்கில் அஷ்டாங்க வழிபாட்டு முறையாக மாறியது என்று சொல்வாரும் உளர்.

ஜென் கதைகளில் ஒன்றான, குரு வளர்த்த பூனை கதையும் இவ்வகையைச் சார்ந்ததுதான். பலரும் படித்திருப்பீர்கள். படிக்காதவர்களுக்கு மட்டும்.....

அது ஓர் ஆசிரமம். அதற்கு ஒரு குரு இருந்தார். சீடர்களும் இருந்தார்கள், தினமும் அவர்களுக்குக் குரு பாடம் எடுப்பது வழக்கம், 

ஒரு நாள் பாடம் எடுக்கையில் அவர் வளர்த்த பூனை குறுக்கும் நெடுக்குமாக நடந்து தொந்தரவு செய்தது, குரு காரணம் ஏதும் சொல்லாமல், சீடர்களிடம் அந்தப் பூனையைப் பிடித்து தூணில் கட்டச்சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பாடம் முடிந்ததும் பூனை அவிழ்த்து விடபட்டது, 

மறுநாள் பாடம் ஆரம்பிக்கையில் மீண்டும் அது தொந்தரவு செய்தது. பூனை தூணில் கட்டப்பட்டது. அதற்கு மறுநாள், பாடம் ஆரம்பிக்கும் முன்னரே அதைத் தூணில் கட்டினார்கள் சீடர்கள். அது தொடர்ந்தது. 

ஒரு நாள் அந்தப் பூனை செத்துப்போனது. வேறொரு பூனையைத் தேடிப் பிடித்து வந்து தூணில் கட்டினார்கள் சீடர்கள்!. குரு அவர்களின் செயலுக்குக் காரணம் புரியாமல் விழித்தார்.    
===========================================================================================

புதன், 27 நவம்பர், 2019

அமேசானில் என் 22ஆவது நூல் வெளியீடு!

அமேசான் கிண்டிலில்[நூல் பதிப்பு & விற்பனைப் பிரிவு] என் 22ஆவது நூல் வெளியாகியுள்ளது என்பதை மிக்க மகிழ்வுடன் அறிவிக்கிறேன். வாய்ப்பு அமைந்தால், அமேசானில் சந்தாதாரராகச் சேர்ந்து இந்நூலை[சிறுகதைத் தொகுப்பு] இலவசமாக வாசிக்கலாம்.

கீழ்க்காணும் தலைப்பைச் சொடுக்கினால் அதன் முன்னோட்டத்தைப் படிக்க முடியும்.

நன்றி.


‘கிளு கிளு’...‘குளு குளு’ கதைகள் (Tamil Edition)
Included with Your Kindle Unlimited
Or ₹71 to buy


செவ்வாய், 26 நவம்பர், 2019

தமிழ் தற்காலிகமாக வாழும்!

#காவல்துறை அலுவலர்கள் அனைவரும் தங்கள் இருக்கையில் பராமரிக்கும் தன்பதிவேடு, முன்கொணர்வு பதிவேடு உள்ளிட்ட அனைத்துப் பதிவேடுகளையும் இனி தமிழ் மொழியில் பராமரித்தல் வேண்டும். 

வருகைப் பதிவேட்டில் தமிழில் கையொப்பம் இடுதல் வேண்டும்.

அனைத்து வரைவுக் கடிதத் தொடர்புகளும், குறிப்பாணைகளும் தமிழில் எழுதுதல் முக்கியம்.

அனைத்துக் காவல் வாகனங்களிலும், ‘காவல்’ என்னும் சொல் இடம்பெறுதல் அவசியம்.

காவல்துறை தொடர்பான அலுவலக முத்திரைகள், பெயர்ப் பலகைகள் தமிழில் இருப்பதும் மிக அவசியம்.

இவ்வாணையை அனைத்துக் காவல்துறை அலுவலர்களும் தங்கள் கவனத்தில் கொள்வதோடு, தம்மிடம் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் உரிய முறையில் அறிவுறுத்துதல் உனடடித் தேவை ஆகும்#

மேற்கண்ட வகையிலானதொரு ஆணையைத் தமிழ்நாட்டுக் காவல்துறைத் தலைவர்[டிஜிபி] திரிபாதி பிறப்பித்துள்ளார்.

தமிழை நாம் அழித்துக்கொண்டிருக்கும் நிலையில்[குறிப்பாக, தம் பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோர்கள்], இது கொஞ்சம் ஆறுதல் தரும் செய்தியாகும்.

கவால்துறை போலவே, அனைத்துத் துறைத் தலைவர்களும் இது போன்றதொரு ஆணையைத் தத்தம் துறை சார்ந்தவர்களுக்கு வழங்குவதோடு, அது நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணித்து, இல்லையெனில் உரிய நடவடிக்கை எடுப்பது மிக மிக அவசியம் ஆகும்.

அனைத்துத் துறை சார்ந்த நூல்களையும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்வதும், அறிவியல் அறிவு வாய்த்தோருக்கு உயரிய பரிசுகள் வழங்கி அவர்களை அறிவியல் நூல்கள் எழுதிட ஊக்குவித்தலும் இன்றியமையாத் தேவைகளாகும்.

அனைத்துத் துறைகளிலும் தமிழைப் பயன்படுத்தினால் மட்டுமே அது வாழும்; வளரும்.
===========================================================================


திங்கள், 25 நவம்பர், 2019

அமேசான் கிண்டிலில் மேலும் ஒரு நூல்!

‘அம்மம்மா...அம்மா!!!’ என்னும் நான் எழுதிய குறுநாவல் அமேசான் கிண்டிலில் வெளியாகியுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.



அம்மம்மா...அம்மா!!!: குறுநாவல் (Tamil Edition)

சனி, 23 நவம்பர், 2019

ஆழ்மனதில் பதிந்த ஆனந்த விகடன் சிறுகதை!

‘முல்லை எம்.வசந்த்’ என்பவரின் படைப்பாக, ஆனந்த விகடனில் [14.04.1985]  வெளியான கதை இது. வாசியுங்கள். ஆண்டுகள் பல கடந்தும் மனதைவிட்டு அகலாத படைப்பு.


தலைப்பு: “போட்டதுதானுங்களே முளைக்கும்”

ரு ஆலமரத்தடியில் சோமனூர் கூடியிருந்தது.

‘டாப்லெஸ்’ ஆக நின்ற முனியப்பனின் கண்கள் சங்கடமாய்ப் புரண்டன.

பஞ்சாயத்துத் தலைவர் ஆதிலிங்கம், ஒரு செருமலை உதிர்த்துவிட்டுச் சொன்னார்: “ முனியப்பா, உங்க காலனிக்குன்னுதான் தனிக் கிணறு ஒதுக்கித் தந்துட்டமே. அப்புறம், ஊர்க் கெணத்துல ஒங்க வீட்டுப் பொம்பள தண்ணி எடுக்கிறது பெரிய அடாவடித்தனம் இல்லையா?”

வாணலியில் அப்பளமாய் நெளிந்தான் முனியப்பன்.

“அது நம்ம ஊருப் புள்ள இல்ல சாமி. கொளத்தூர்லே இருந்து நம்ம வூட்டுக்கு விருந்தாளியா வந்தவ. தெரியாம உங்க கெணத்துல எறச்சிட்டா. அவள நல்லா திட்டிபுட்டமுங்க. பெரிய மனசு பண்ணி.....”

“.....மன்னிக்க முடியாதுப்பா. தண்டனையை வேணுன்னா கொஞ்சம் கொறைக்கலாம்...ம்ம்...”

அபராதத் தொகையைச் சொன்னார் ஆதிலிங்கம். முனியப்பனும் லேசாகத் தலையசைத்தான்.

முனியப்பன் நகரவில்லை: ஆதிலிங்கத்திடம் தலையைச் சொறிந்து நின்றான்; தயக்கத்துடன் சொன்னான். “ஐயா, பெரியவங்க சமூகத்தில் ஒன்னு சொல்லணுமுங்க.....”

“சொல்லு.”

“வயசுக்கு வந்த என் புள்ளகிட்டச் சின்ன எசமான் தாறுமாறா நடந்துக்கிறதும், மெரட்டி உருட்டி அவ வாயை அடைக்கிறதும்.....”

கூட்டம் ஆக்ரோஷித்தது.

“அடி செருப்பால...”

“எங்களப் பத்தியே ‘கம்ப்ளேன்’ கொண்டு வர்றியா...?”

“அவ்வளவும் திமிரு...” -சத்தம் அதிககமாக, முனியப்பன் நடுங்கிப் போய்ப் பின் வாங்க, “சரி...சரி...போவட்டும் விடுங்க...” என்று பஞ்சாயத்தைக் கலைத்தார் ஆதிலிங்கம்.

முனியப்பன் எழுப்பிய பிரச்சினை அனாதையாய் நின்றது!

தலை குனிந்தவாறு நடந்தான்.

ருபது வருடங்கள் கழிந்தன.

பஞ்சாயத்தைக் கூட்டி ஆதிலிங்கம் கேட்டார்:

“என்னவே முனியப்பன்! ஒம் பேரனுக்குத் தெனாவெட்டு கூடிப் போச்சு. டிரான்சிஸ்டரைக் கழுத்தில் மாட்டிகிட்டு, சிகரெட் பிடிச்சிட்டு, சீட்டியடிச்சுட்டு, நெஞ்சை நிமிர்த்தி எங்க தெருவில் அலையறான். எங்க ஓட்டலில் எங்களுக்குச் சமதையா பேப்பர் படிக்கிறான்.....”

முதுமையில் தளர்ந்து ஒடுங்கிய முனியப்பன், இடுங்கிய கண்களால், அதே சமயம் நேர்க்கோட்டில் பார்த்தார். அவர் முகத்தில் லேசான புன்னகை அரும்பியது. பயமின்றி வந்தன வார்த்தைகள்.

“இருபது வருஷம் முந்தி நான் சொன்னபோது நீங்க மதிக்கல... என் வாயைக் கட்டி அனுப்பினீங்க...இப்பவும் என் வாரிசுகள் அடக்கமாத்தான் நடந்துக்கிறாங்க. ஆனா, என் பேரன் விதிவிலக்கா இருக்கான். அவன் ஒடம்புல எங்க பரம்பரை ரத்தம் ஓடல. யாரு ரத்தம் ஓடுதுன்னு உங்களுக்கே தெரியும். நான் என்ன செய்யட்டும்? எங்க வாரிசா இருந்தா நான் ‘கண்ரோலு’ பண்ண முடியும்!”

அவமானத்தில் தலை குனிந்தபடி நகர்ந்தார் ஆதிலிங்கம்!
****************************************************************************************************************

வியாழன், 21 நவம்பர், 2019

ஆகாயக் குறிப்பேடு!!!

நமக்கு ஆகாயம் தெரியும்; குறிப்பேடும் தெரியும். அதென்ன ‘ஆகாயக் குறிப்பேடு?! 


விஞ்ஞானிகள் புதிது புதிதாக எதையெல்லாமோ கண்டுபிடிக்கிறார்கள். அந்த ‘உண்மைகளை’ [கண்டுபிடிப்புகளை]யெல்லாம் அவர்கள் எங்கிருந்து பெறுகிறார்கள்?

இந்த நூற்றாண்டின் மகத்தான கேள்வி இது.

இந்தக் கேள்வியைப் புரிந்துகொள்வதே கடினம். இதற்கான விளக்கம் என் போன்ற சராசரி மனித அறிவு படைத்தவர்களுக்குப் புரியுமா என்ன?

முயற்சி செய்வோம்.

விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படுகிற ‘உண்மைகள்’ இந்தப் பிரபஞ்சத்திற்கு முற்றிலும் புதியவை அல்ல; அவை ஏற்கனவே பிரபஞ்ச வெளியின் எங்கோ ஓரிடத்தில் இருந்தவை; இருப்பவை. மனம் ஒன்றி, தீவிர சிந்தனையில் ஈடுபடும்போது விஞ்ஞானிகளால் அந்த உண்மைகளைக் கிரகித்துக்கொள்ள முடிகிறது” என்கிறார் ஓப்பன்ஹீமா என்கிற அணுசக்தி விஞ்ஞானி.

இதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணம்..........

அமெரிக்காவில் எட்கார் கேசி என்று ஒரு ஃபோட்டோகிராஃபர் 1920 இல் வாழ்ந்தார். ஒரு சமயம் அவருக்குத் திடீரென்று பேசவராமல் போகவே, ஒரு மருத்துவர் அவரை ‘ஹிப்னாடைஸ்’ செய்து குணப்படுத்தினார்.

சில நாள் கழித்து அவருக்கு மீண்டும் பேசவராமல் போனது. அவரை மீண்டும் ஹிப்னாடைஸ் செய்தார் மருத்துவர். ஹிப்னாடைஸ் நிலையிலிருந்த எட்கார் கேசி, தாமே தம் குரல் நிலையை எடுத்துக் கூறி அதற்கான சிறந்த...மருத்துவர் அறியாத சிகிச்சை முறையையும் கூறினாராம்.

அதற்புறம், தாமே சுயமாக ஹிப்னாடைஸ் நிலைக்குச் சென்று, தம்மை நாடி வந்த நோயாளிகள் குணமடவதற்கான வழிகளைக் கூறினாராம். இப்பணியை முப்பதாண்டுகள் தொடர்ந்து செய்தாராம்!

எதிர்கால அரசியல், வருங்கால உலகம், தனிமனித எதிர்பார்ப்புகள் போன்றவை பற்றியெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்ட போது, சுய ஹிப்னாடிசத்தின் மூலம் பதில்கள் சொன்னாராம். அவர் சொன்னவாறே எல்லாம் நடந்ததாம்.

“இந்தத் தகவல்களையெல்லாம் எங்கிருந்து பெறுகிறீர்கள்?” என்று கேட்கப்பட்ட போது, “ஆகாயக் குறிப்பேடுகளிலிருந்து...பிரபஞ்ச வெளியில் தேங்கிக் கிடக்கும் பிரபஞ்ச அறிவுத் தொகுப்பிலிருந்து ” என்றாராம்!
‘பிரபஞ்ச வெளியில் ஊடுருவியிருக்கும் மாபெரும் சக்தியின்பால் முனைப்புடன்  நம் மனதைச் செலுத்துவதன் மூலம் இதை நிகழ்த்துவது சாத்தியம் ஆகலாம்’என்கிறார்களாம் அறிவியல் அறிஞர்கள்.

எட்கார் பேசியின் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் இந்நிகழ்வை என்னால் முழுமையாய் நம்ப முடியவில்லை என்றாலும், தகவல் புதிதாகவும் படிக்கச் சுவையாக இருந்ததால் இங்கே பதிவு செய்தேன்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி எழுதிய ‘எண்ணங்கள்’ என்ற நூலிலிருந்து திருடி...அல்ல, திரட்டியது.

செவ்வாய், 19 நவம்பர், 2019

விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார் மதுரை ஆதீனம்!!!

“ஷீரடி சாயிபாபாவின் அவதாரம்தான் மோடி” என்று மதுரை ஆதீனம் அருணகிரி பேசியிருப்பதாக, ‘இந்து தமிழ்’[19.11.2019] வெளியிட்டுள்ள ‘கருத்திச் சித்திரத்தின் மூலம் அறிந்தேன்.
ஷீரடி சாய்பாபாவின் வரலாற்றை முழுமையாக அறிந்திருந்தால் அவர் ‘அவதாரம்’ அல்ல என்பதை மதுரை ஆதீனம் உணர்ந்துகொண்டிருப்பார்.

அது மட்டுமல்ல, மனிதர்களாகப் பிறந்தவர்களை அவதாரம் ஆக்குவது அறிவுடைமை ஆகுமா என்பது குறித்தும் அவர் சிந்தித்ததில்லை என்பதை நம்மால் அறிய முடிகிறது.

அவரின் நம்பிக்கையின்படி, சாயிபாபா அவதாரம்தான் எனின், ஒரு எளிய மனிதரான, பிரதமர் நரேந்திர மோடியுடன் அந்த அவதாரப் புருசனை ஒப்பிடுவது எத்தனை பெரிய தவறு என்பது ஆன்மிகத்தில் மிகப் பல ஆண்டுகளாக ஊறித் திளைத்த மதுரை ஆதீனமான அருணகிரி அவர்களுக்குத் தெரியாமல் போனது ஏன்?

மோடி அவர்களையும் ஷீரடி சாய்பாபா அவர்களையும் ஒப்பிட்டதன் மூலம், சைவ நெறி பரப்புவதையே தம் முழு நேரப் பணியாகக் கொண்ட அருணகிரி அவர்கள் ஒரு மடாதிபதிக்குரிய கவுரவத்தை இழந்துவிட்டிருக்கிறார்.

கொஞ்சமே கொஞ்சம் சிந்திக்கத் தெரிந்தவர்கள்கூட இவரின் இந்த, மோடி குறித்த துதிபாடலை எண்ணி நகைக்கவே செய்வார்கள்.

இனியேனும், ஒரு கருத்துரையை மக்களின் முன்னர் வைப்பதற்கு முன்பாக மதுரை மடாதிபதி அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
===========================================================================

திங்கள், 18 நவம்பர், 2019

மத நூல்கள் கடவுளின் அருட்கொடையா?

மூடநம்பிக்கை வளர்ப்பில், கடவுளை நம்புகிற அனைத்து மதங்களுக்கும் பங்குண்டு. இவ்வகையில், “இவை  ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.”

டவுளின் ‘இருப்பு’ குறித்த ஆய்வு, நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து நடைபெறுகின்ற ஒன்று; இன்றளவும் முற்றுப்பெறாதது.

மதவாதிகள், கடவுள் உண்டு என்பதற்கான அனுமானங்களை விரித்துரைக்கிறார்களே தவிர, முற்றிலும் ஏற்கத்தக்க ஆதாரங்களை முன்வைத்தாரில்லை.

இந்த லட்சணத்தில், இவர்களின் மூதாதையரில் சிலரோ பலரோ எழுதி வைத்த நூல்களைப் புனிதமானவை என்றும், அவை  கடவுளால் அருளப்பட்டவை என்றும் தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறார்கள்.

'வேதம்[Bible] மனிதர்களால் எழுதப்பட்டதல்ல; புனிதமான அது கடவுள் மொழிந்தது’ என்பது கிறித்தவர்களின் நீண்ட நெடுங்கால நம்பிக்கை. ‘.....the long standing belief by many Christians that the Bible is the pure, unadulterated word of God untouched by human hand.’[wikkipeadia] 

இஸ்லாமியர்களும் இதையேதான் சொல்லுகிறார்கள்

‘குரான் அல்லது திருக்குரான் (குர்-ஆன் அரபி: القرآن‎ அல்-குர்-ஆன்இசுலாமியர்களின் புனித நூல் ஆகும். இது முகம்மது நபிக்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை.’                                                          -Wikkipeadia.

‘வேதங்கள்கடவுளால்  வெளியிடப்பட்டவை’ என்றே இந்துமதவாதிகளும் சொல்கிறார்கள். கடவுள் நேரடியாகச் சொல்லக் கேட்டு எழுதியதாம். [They are supposed to have been directly revealed, and thus are called śruti ("what is heard").]

கேட்டு எழுதிய மகான் ‘வியாசர்’ என்கிறார்கள்.

கடவுளை நம்புகிற எல்லோருமே இந்த மதவாதிகளின் கட்டுக்கதைகளை நம்புவது சாத்தியமில்லை என்பதால், பெரும்பாலோர் நம்புகிறார்கள் என்று முடிவெடுப்பதில் தவறேதுமில்லை எனலாம். 

“வேதம் கடவுளால் அருளப்பட்டது” என்று மதவாதிகள் கூறுவதை நம்மால் மறுக்க முடியுமா?

முடியும். 

இதற்கென ஆதாரங்களைத் தேடி அலைய வேண்டியதில்லை; ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதும் இல்லை. மிக எளிய ஓரிரு கருத்துக்களை முன்வைத்தலே போதுமானது. 

கடவுளைப் போற்றுபவர்கள், அவர் கருணை வடிவானவர் என்பதில் முழு நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

மதநூல்கள் கடவுளின் அருட்கொடை என்பது உண்மையாயின், அனைத்து உயிர்களின் மீதான நேசத்தை அவை வற்புறுத்துமே தவிர, உயிர்வதையை எவ்வகையிலும் அனுமதிக்க மாட்டா.

ஆனால், புனிதமானவை என்று போற்றப்படும் ‘மதநூல்கள்’ என்ன சொல்கின்றன?

கிறித்தவர்களின் வேதமான ‘பைபிள்’ மாமிசம் உண்பதை அனுமதிக்கிறது. அதிச்சியடையாமல் பின்வரும் வாசகங்களைப் படியுங்கள்.

“உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பக் கனியான உன் குழந்தைகளின் மாமிசத்தைத் தின்பாய்”[உபாகமம், 28:53].

“நான் அவர்களைத் தங்கள் குமாரரின் மாமிசத்தையும் குமாரத்திகளின் மாமிசத்தையும் தின்னச் செய்வேன். அவனவன் தனக்கு அடுத்தவனுடைய மாமிசத்தைத் தின்பான்”[எரேமியா, 19.9].

இம்மாதிரியான இன்னும் பல வாசகங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன. [‘மதமும் பகுத்தறிவும்’, மலையாளத்திலிருந்து தமிழில் த.அமலா.  சூலூர் வெளியீட்டகம், கோவை. முதல் பதிப்பு: ஜூலை 2004]

ரிக் வேதத்தில் சித்திரிக்கப்பட முக்கியமான ஐந்து யாகங்களில் ‘நரமேதம்’ ஒன்று. ஆண்மகனைக் கொன்று தீயில் சுட்டெடுத்து உண்கின்ற வழக்கத்தைக் குறிக்கிறது அது. இப்படி இன்னும் எத்தனையோ குலை நடுங்க வைக்கும் தகவல்கள்!

பெரு வெள்ளப் பெருக்கிற்குப் பிறகு[ஊழி வெள்ளம்] ‘நோவா’தான் முதல் யாக பீடத்தை[பலிபீடம்]க் கட்டியதாக பைபிள் கூறுகிறது.

“அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல விலங்குகளிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின் மேல் பலியிட்டான்” [ஆதியாகமம், 8.20].

இதைத் தனக்கே உரிய விளக்கங்களுடன் குர் ஆனும் அங்கீகரிக்கிறது.

“எல்லாச் சமுதாயங்களுக்கும் நாம் பலியை நிச்சயித்திருக்கிறோம்”[குர் ஆன், 22:34]

ஆக, உயிர்வதை பற்றிய இந்த ஆதாரங்கள் மட்டுமே, மத நூல்கள் கடவுளால் அருளப்பட்டவை அல்ல; மனிதர்களால் உருவாக்கப்பட்டவை என்பதை உறுதிப்படுத்துகின்றன.

இந்த நிலவுலகம் பற்றி மத நூல்களில் பதிவு செய்யப்பட்ட கற்பனைக் கதைகளை நீங்கள் அறிந்திருக்கவும் கூடும். அவை பின்வருமாறு:

பூமியிடமிருந்து ஆகாயத்தைப் பிரித்து மேலே உயர்த்தியவன் வருணன் என்கிறது ரிக் வேதம். [பூமியும் ஆகாயமும் முன்னொரு காலத்தில் ஒட்டி உறவாடிக்கொண்டிருந்தன; அவை உடலுறவு கொண்டதன் விளைவாய் உயிர்கள் தோன்றின என்றெல்லாம் மதவாதிகள் நம்பினார்கள்].

பைபிளில் உள்ள ஆதியாகமும் இதையே சொல்கிறது:

“பின்பு தேவன், நீரின் மத்தியில் ஆகாய விரிவு உண்டாகக் கடவது என்றும், அது நீரினின்றும் நீரைப் பிரிக்கக் கடவது என்றும் சொன்னார்; ஆகாய விரிவுக்கு வானம் என்று பெயரிட்டார்.”

குர் ஆன் என்ன சொல்கிறது?

“ஆகாயமும் பூமியும்[அவற்றைப் படைத்த ஆதி நாளில்] ஒன்றுக்கொன்று ஒட்டிச் சேர்ந்தே நின்றன. பின்னர் அவை பிரிக்கப்பட்டன.”

மேற்கண்ட கதைகள், அன்றைய மதவாதிகளின் அறியாமைக்குச் சான்று பகர்கின்றன.

ஆக, மத நூல்களைக் கடவுள் அருளினார் எனப் பகர்வதையும், பறை சாற்றுவதையும் அறிஞருலகம் ஒருபோதும் ஏற்காது.
==========================================================================
2014இல் ‘மூடருலகம்’ என்னும் என் தளத்தில் வெளியானது இப்பதிவு. இதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

ஞாயிறு, 17 நவம்பர், 2019

அய்யா.....இது ‘வேத வாக்கு’ங்க!!!

‘ஸூத்ருசோ.......................................................ப்ரஜபேன்மனும்...’[இரண்டு வரிகள்]
பொருள்: ஓர் அழகிய பெண்ணின் குறியைப் பார்த்துக்கொண்டு பத்தாயிரம் முறை காளிதேவியை நினைந்து மந்திர செபம் பண்ணுகிறவன் தேவகுருவுக்குச் சமம் ஆவான்.

‘சாவம் ஹ்ருதயமாருஹ்ய................................................................’[நான்கு வரிகள்].
பொருள்: சுடுகாட்டில் அம்மணமாகப் பிணத்தின் மார்பில் அமர்ந்துகொண்டு, தன் வீரியத்தில்[விந்து] தேய்க்கப்பட்ட ஆயிரம் எருக்கம் பூக்களினால் மந்திரம் சொல்லிக் காளிதேவியைப் பூசிக்கிறவன் வெகு சீக்கிரம் அரசனாவான்.

‘ரஜ: கீர்ணபகம் நார்யா த்யாயன்யோயுத..................’[இரண்டு வரிகள்]
பொருள்: வீட்டுக்குத் தூரமான பெண்ணின் ரத்தத்தோடு கூடிய பெண்குறியைத் தியானித்துக்கொண்டு பதினாயிரம் உரு[மந்திரம்] செபிக்கிறவன் மதுரமான தன் பாடல்களால் உலகை மயக்கும் வல்லமை பெறுவான்.

‘................................................சவஸ்ய ஹ்ருதி ஸமஸ்திதாம்[நான்கு வரிகள்]
பொருள்: புன்சிரிப்புடன் கூடிய முகத்தை உடையவளான காளிதேவியைத் தியானித்தவாறு, ஒரு பெண்ணைப் புணர்ந்துகொண்டே ஆயிரம் முறை செபிக்கிறவன் சிவபெருமானுக்கு ஒப்பாவான்.

‘ஸ்ருணோதி நூபுராராவம்.............................................................’[நான்கு வரிகள்]
பொருள்: மந்திரம் செப்பிப்பவன், தேவியின் சிலம்பொலியும் சங்கீதமும் கேட்டுக்கொண்டே மந்திரம் செபித்துக்கொண்டிருந்தால், தேவியானவள் மிக்க விருப்புடன் இவனைப் புணர்ச்சி செய்ய வருவாள். புணர்ச்சி முடிந்ததும் இவனுடைய அத்தனை விருப்பங்களையும் நிறைவேற்றுவாள்.

சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள் எழுதிய ‘ஞான சூரியன்’[சாமி புக்ஸ், சென்னை]’ என்னும் நூலில் இவை போன்ற படு படு படு சுவாரசியமான செய்திக் குறிப்புகள் உள்ளன.

முக்கியக் குறிப்பு:
எத்தனை இழிவான வழிகாட்டு நெறிகள் வேதத்தில் உள்ளன என்று சுட்டிக்காட்டுவதல்ல இந்தப் பதிவின் நோக்கம்; நம் மக்கள் பெருமளவில் பங்கு கொள்கிற பல நிகழ்வுகளில் சமஸ்கிருதத்தில் வேதம் ஓதுவதைக் கொஞ்சமும் பொருள் புரியாமல் கேட்டுக்கொண்டிருப்பது தவறு என்பதைச் அழுத்தமாகச் சொல்வதுதான்

புரியாத சமஸ்கிருதத்திற்குப் பதிலாகப் புரிகிற தாய்மொழியைப் பயன்படுத்துவதுதானே அறிவுடைமை?
===========================================================================

வெள்ளி, 15 நவம்பர், 2019

‘வருமுன் உரைத்தல்’ சாத்தியமா?

எழுத்தாளர் சுஜாதாவின்‘கற்பனைக்கு அப்பால்...’ [விசா பப்ளிகேசன்ஸ், தி.நகர், சென்னை. ஐந்தாம் பதிப்பு. ஏப்ரல்,2004]என்னும் நூலைப் படிக்காதவர்களுக்காக இப்பதிவு. நூலில் இது ஒரு சிறு கட்டுரைதான். சுருக்கவோ விரிக்கவோ செய்யவில்லை. அந்த அதிசய மனிதரின் படைப்பில் நான் ஒருவன் கைவைக்க முடியுமா என்ன?!

.எஸ்.பி. என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். எக்ஸ்ட்ரா சென்ஸரி பர்ஸப்ஷன் - புலன் புற உணர்வு - என்று சொல்லலாம். ராஜீவ் காந்தி இறக்கப் போவதை ஒரு நாள் முன்பே தன் உள்ளுணர்வில் உணர்ந்ததாக ஒரு கோஷ்டியே சொல்லிக்கொண்டு அலைகிறது.

என் நண்பர் ஒருவர் தன் மனைவிக்கு இந்த ‘ஈ.எஸ்.பி’ இருப்பதாக நம்புகிறார். “நான் மனசில் என்ன நினைச்சிட்டிருந்தாலும் சொல்லிடறா சார்! ஃபோன் அடிக்கிறதுக்கு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடியே எங்கம்மா ஃபோன் பண்ணப் போறான்னு சொல்லுவா. தவறாம வரும். இது ஈ.எஸ்.பி.யா இல்லையா சார்?”
இம்மாதிரி தினசரி வாழ்க்கையில் பலவிதமான அமானுஷ்யமான நிகழ்ச்சிகளைப் பலர் விவரிப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.

இந்த ஈ.எஸ்.பி., நாய், பூனை போன்ற சில ஜந்துக்களுக்கு இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். என் நண்பர் கிருஷ்ணசாமி,  “நம்ம சீஸர் இருக்கானே, அவன் வந்து இப்ப வீட்டில்தான் இருக்கான். நான் ஆபீஸில் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த உடனே காது இரண்டையும் தூக்கிண்டு வாசல்ல வந்து நின்னுடுவான் சார்!” என்பார்.

“அப்படியா? தினம் அஞ்சு மணிக்கா?”

“இல்ல. நான் எப்பக் கிளம்புறேனோ அப்ப. சில நாள் ஓவர்டைம் பண்ணிட்டுக் கிளம்புவேன். அப்பக்கூட.”

“நீங்க ஆபீஸில் இருக்கும்போது இது காதைத் தூக்குறதை எப்படிக் கண்டுபிடிச்சீங்க?”

“அகஸ்மாத்தா என் மனைவி கண்டுபிடிச்சா. தினம் சீஸர் காதைத் தூக்கிய நேரத்தை நோட்புக்கில் குறிச்சி வைச்சா.”

இதையெல்லாம் விஞ்ஞான ரீதியா ஏற்க முடியுமா?

ஈ.எஸ்.பி.க்கு நீண்ட சரித்திரம் உள்ளது.

நம் புராணங்களில் உபதேவதைகளுக்குகூட இது இருந்திருக்கிறது. நான்காவது வேதமான அதர்வண வேதத்தில் ஈ.எஸ்.பி. முறைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். கேரளாவில் மனத்தின் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஈரப்புடவைகள் எரிவதும் கெட்ட வஸ்துகள் சொரிவதும் சாதாரணமாம்.

இங்கிலாந்து போன்ற தொழில் முன்னேற்ற நாடுகளில்கூட ஈ.எஸ்.பி.யை நம்புகிற பிரமுகர்கள் இருக்கிறார்கள். பரிணாம உயிரியல் தத்துவ ஞானி ஆல்பிரட் ரஸ்ஸல், வாலஸ், வில்லியம் குரூக்ஸ், ராலே பிரபு போன்ற இயற்பியல் நிபுணர்கள், ஆலிவர் லாட்ஜ் போன்ற பெரும் புள்ளிகள் எல்லாம் நம்பியிருக்கிறார்கள்.

ஸைக்சிக் ரிஸர்ச் என்ற துறையும், அதற்கான ‘விஞ்ஞான ரீதியான’ கட்டுரைகள் கொண்ட பத்திரிகைகளும் உள்ளன. இன்றும் அவை பிரசித்தம். அமெரிக்கன் சொஸைட்டி ஃபார் ஸைக்சிக் ரிஸர்ச், பாராசைக்கலாஜிகல் ஃபவுண்டேஷன் போன்ற நிறுவனங்கள் இன்றும் சிறப்பாக உள்ளன.

ஈ.எஸ்.பி. என்பதை, பாரா நார்மல்,  ‘அசாதாரண விஞ்ஞானம்’ என்கிறார்கள். சாதாரண இயற்பியல், வேதியியல், உயிரியல் விதிகளுக்கு அப்பாற்பட்ட அறிவியல் இது என்கிறார்கள். நிசமா?

எல்லாம் ரீல்!

இந்நாள்வரை - இதை நான் எழுதும் தேதிவரை அறிவியல் முறைகளின்படி நிரூபிக்கப் படவில்லை. அறிவியல் ஒரு பொதுச் சொத்து. அதன் பரிசோதனை முறை விரும்புவதெல்லாம் இது ஒன்றே..... “யார் சொல்வதையும் உடனே நம்பாதே. நீயே பரிசோதித்துப் பார்.”

கிருஷ்ணசாமியின் நாய் காதைத் தூக்குகிறது என்றால் உன் நாயும் காதைத் தூக்கியே ஆகவேண்டும். அப்போதுதான் அதை நம்பலாம். ஒரே ஜாதி நாய், ஒரே ஊர், ஒரே சீதோஷ்ணம், ஒரே...எல்லாம் என்ற அந்தப் பரிசோதனையின் களனை, சூழ்நிலையை மறுபடியும் ஏற்படுத்துவதில் தயக்கமில்லை. ஆனால், அந்தப் பரிசோதனை ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு மட்டுமன்றி, எல்லாருக்கும் நிகழ வேண்டும்.

‘மறுமுறைத் தன்மை’[Reproducibility] என்பது அறிவியலுக்கு மிக முக்கியம். உனக்கென்று ஒரு விதி; எனக்கென்று ஒரு விதி என்று ஏதேனும் தென்பட்டால், அந்த விதியைச் சோதித்துப் பார்த்த சூழ்நிலை தவறானதாகும்.

இப்படிப் பார்த்தால் விஞ்ஞானப்படி கிருஷ்ணசாமி தன் நாய் காதைத் தூக்குகிறது என்று நம்ப விரும்புகிறார்; அதற்கேற்ப புள்ளிவிவரம் தயாரித்து உங்களையும் நம்ப வைக்க முயற்சி செய்கிறார்.

1970 களில் ‘யூரி கெல்லர்’[Uri Geiler] என்பவர் சைக்கோ கினஸிஸ் என்கிற முறைப்படி ஒரு ஸ்பூனை முறைத்துப் பார்த்தே அதை வளைப்பதையும், ஒரு கடிகாரத்தை வெறித்துப் பார்த்தே நிறுத்துவதையும் செய்து காட்டினார்; டான்போர்டு ஆராய்ச்சிக் கழகத்தின் அறிவியல் நிபுணர்களுக்கு சவால் வைத்தார்.

அந்தப் பரிசோதனைகளின்போது, சில மாஜிக் நிபுணர்களை ஒளிந்திருந்து பார்க்க ஏற்பாடு செய்தார்கள். ஸ்பூன் வளைந்தது. கடிகாரம் நின்றது. ஆனால், மாஜிக் நிபுணர்கள், இது மனச் சக்தியுமில்லை; ஒரு புடலங்காயும் இல்லை. சாதாரண ‘மாஜிக்’ முறை என்று நிரூபித்து விட்டார்கள்.

இருந்தும், இன்றும் கெல்லரின் சக்தியை நம்புபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சாய்பாபாவை நம்பும் விஞ்ஞானிகள் இருப்பது போல.

ரோமானியர் காலத்திலிருந்து ஒரு சொலவடை உண்டு. மக்கள் ஏமாற விரும்புகிறார்கள்... ஏமாறட்டும்!
===========================================================================

செவ்வாய், 12 நவம்பர், 2019

விகடனுக்கு[வார இதழ்]க் கதை எழுதுறது ரொம்ப ரொம்பச் சுலபம்!!!

தரத்தில் மட்டுமல்லாமல், விற்பனையிலும் நம்பர் 1 ஆகத் திகழும் ‘ஆனந்த விகடன்’ வார இதழ், சில வாரங்களுக்கு முன்பு கீழ்க்காணும் வகையிலான வேண்டுகோளை முன்வைத்திருந்தது.

சாயிபாபா பற்றிய தங்களின் அனுபவங்களை வாசகர்களும் அனுப்பலாயினர். அவற்றை..... 

என்னும் தலைப்பின் கீழ் விகடன் வெளியிட்டுவந்தது. தொடர்ந்து வாசிக்க நேர்ந்தாலும் விமர்சனம் எழுதுவதைத் தவிர்த்தேன்.


அண்மையில்[தேதியைக் குறித்துவைக்கவில்லை] வெளியான புதிய விகடனில் மேற்கண்டதொரு[நகல் பதிவு] கதையையும் வாசித்தேன்.

சாயிபாபா, கரையும் தன்மையுள்ள இரண்டு மண்குடங்களை வாங்கி[வேக வைத்த குடங்கள் கிடைக்கவில்லையோ?!], அவற்றில் தண்ணீர் நிரப்பிச் செடிகளுக்கு ஊற்றியதாகச் சொல்லப்படும் நிகழ்வை அறிந்து மேனி சிலிர்த்தேன்.

இந்தக் கதையை எழுதிய பாபா பக்தர் அபாரக் கற்பனைத் திறன் வாய்த்தவர் என்பதில் எள்முனையளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.

இதைவிடவும் சிறந்த கதைகளை உங்களாலும் படைத்திட இயலும்.

இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிடுங்கள். தாள் எடுத்துப் பதிவு செய்து விகடனுக்குத் அனுப்புங்கள்.

உங்கள் படைப்பை விகடன் பிரசுரிப்பதோடு பெரும் தொகையைச் சன்மானமாகவும் வழங்கும்.

வாழ்க விகடன்! வளர்க பாபா புகழ்!!
=======================================================================