வெள்ளி, 15 நவம்பர், 2019

‘வருமுன் உரைத்தல்’ சாத்தியமா?

எழுத்தாளர் சுஜாதாவின்‘கற்பனைக்கு அப்பால்...’ [விசா பப்ளிகேசன்ஸ், தி.நகர், சென்னை. ஐந்தாம் பதிப்பு. ஏப்ரல்,2004]என்னும் நூலைப் படிக்காதவர்களுக்காக இப்பதிவு. நூலில் இது ஒரு சிறு கட்டுரைதான். சுருக்கவோ விரிக்கவோ செய்யவில்லை. அந்த அதிசய மனிதரின் படைப்பில் நான் ஒருவன் கைவைக்க முடியுமா என்ன?!

.எஸ்.பி. என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். எக்ஸ்ட்ரா சென்ஸரி பர்ஸப்ஷன் - புலன் புற உணர்வு - என்று சொல்லலாம். ராஜீவ் காந்தி இறக்கப் போவதை ஒரு நாள் முன்பே தன் உள்ளுணர்வில் உணர்ந்ததாக ஒரு கோஷ்டியே சொல்லிக்கொண்டு அலைகிறது.

என் நண்பர் ஒருவர் தன் மனைவிக்கு இந்த ‘ஈ.எஸ்.பி’ இருப்பதாக நம்புகிறார். “நான் மனசில் என்ன நினைச்சிட்டிருந்தாலும் சொல்லிடறா சார்! ஃபோன் அடிக்கிறதுக்கு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடியே எங்கம்மா ஃபோன் பண்ணப் போறான்னு சொல்லுவா. தவறாம வரும். இது ஈ.எஸ்.பி.யா இல்லையா சார்?”
இம்மாதிரி தினசரி வாழ்க்கையில் பலவிதமான அமானுஷ்யமான நிகழ்ச்சிகளைப் பலர் விவரிப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.

இந்த ஈ.எஸ்.பி., நாய், பூனை போன்ற சில ஜந்துக்களுக்கு இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். என் நண்பர் கிருஷ்ணசாமி,  “நம்ம சீஸர் இருக்கானே, அவன் வந்து இப்ப வீட்டில்தான் இருக்கான். நான் ஆபீஸில் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த உடனே காது இரண்டையும் தூக்கிண்டு வாசல்ல வந்து நின்னுடுவான் சார்!” என்பார்.

“அப்படியா? தினம் அஞ்சு மணிக்கா?”

“இல்ல. நான் எப்பக் கிளம்புறேனோ அப்ப. சில நாள் ஓவர்டைம் பண்ணிட்டுக் கிளம்புவேன். அப்பக்கூட.”

“நீங்க ஆபீஸில் இருக்கும்போது இது காதைத் தூக்குறதை எப்படிக் கண்டுபிடிச்சீங்க?”

“அகஸ்மாத்தா என் மனைவி கண்டுபிடிச்சா. தினம் சீஸர் காதைத் தூக்கிய நேரத்தை நோட்புக்கில் குறிச்சி வைச்சா.”

இதையெல்லாம் விஞ்ஞான ரீதியா ஏற்க முடியுமா?

ஈ.எஸ்.பி.க்கு நீண்ட சரித்திரம் உள்ளது.

நம் புராணங்களில் உபதேவதைகளுக்குகூட இது இருந்திருக்கிறது. நான்காவது வேதமான அதர்வண வேதத்தில் ஈ.எஸ்.பி. முறைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். கேரளாவில் மனத்தின் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஈரப்புடவைகள் எரிவதும் கெட்ட வஸ்துகள் சொரிவதும் சாதாரணமாம்.

இங்கிலாந்து போன்ற தொழில் முன்னேற்ற நாடுகளில்கூட ஈ.எஸ்.பி.யை நம்புகிற பிரமுகர்கள் இருக்கிறார்கள். பரிணாம உயிரியல் தத்துவ ஞானி ஆல்பிரட் ரஸ்ஸல், வாலஸ், வில்லியம் குரூக்ஸ், ராலே பிரபு போன்ற இயற்பியல் நிபுணர்கள், ஆலிவர் லாட்ஜ் போன்ற பெரும் புள்ளிகள் எல்லாம் நம்பியிருக்கிறார்கள்.

ஸைக்சிக் ரிஸர்ச் என்ற துறையும், அதற்கான ‘விஞ்ஞான ரீதியான’ கட்டுரைகள் கொண்ட பத்திரிகைகளும் உள்ளன. இன்றும் அவை பிரசித்தம். அமெரிக்கன் சொஸைட்டி ஃபார் ஸைக்சிக் ரிஸர்ச், பாராசைக்கலாஜிகல் ஃபவுண்டேஷன் போன்ற நிறுவனங்கள் இன்றும் சிறப்பாக உள்ளன.

ஈ.எஸ்.பி. என்பதை, பாரா நார்மல்,  ‘அசாதாரண விஞ்ஞானம்’ என்கிறார்கள். சாதாரண இயற்பியல், வேதியியல், உயிரியல் விதிகளுக்கு அப்பாற்பட்ட அறிவியல் இது என்கிறார்கள். நிசமா?

எல்லாம் ரீல்!

இந்நாள்வரை - இதை நான் எழுதும் தேதிவரை அறிவியல் முறைகளின்படி நிரூபிக்கப் படவில்லை. அறிவியல் ஒரு பொதுச் சொத்து. அதன் பரிசோதனை முறை விரும்புவதெல்லாம் இது ஒன்றே..... “யார் சொல்வதையும் உடனே நம்பாதே. நீயே பரிசோதித்துப் பார்.”

கிருஷ்ணசாமியின் நாய் காதைத் தூக்குகிறது என்றால் உன் நாயும் காதைத் தூக்கியே ஆகவேண்டும். அப்போதுதான் அதை நம்பலாம். ஒரே ஜாதி நாய், ஒரே ஊர், ஒரே சீதோஷ்ணம், ஒரே...எல்லாம் என்ற அந்தப் பரிசோதனையின் களனை, சூழ்நிலையை மறுபடியும் ஏற்படுத்துவதில் தயக்கமில்லை. ஆனால், அந்தப் பரிசோதனை ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு மட்டுமன்றி, எல்லாருக்கும் நிகழ வேண்டும்.

‘மறுமுறைத் தன்மை’[Reproducibility] என்பது அறிவியலுக்கு மிக முக்கியம். உனக்கென்று ஒரு விதி; எனக்கென்று ஒரு விதி என்று ஏதேனும் தென்பட்டால், அந்த விதியைச் சோதித்துப் பார்த்த சூழ்நிலை தவறானதாகும்.

இப்படிப் பார்த்தால் விஞ்ஞானப்படி கிருஷ்ணசாமி தன் நாய் காதைத் தூக்குகிறது என்று நம்ப விரும்புகிறார்; அதற்கேற்ப புள்ளிவிவரம் தயாரித்து உங்களையும் நம்ப வைக்க முயற்சி செய்கிறார்.

1970 களில் ‘யூரி கெல்லர்’[Uri Geiler] என்பவர் சைக்கோ கினஸிஸ் என்கிற முறைப்படி ஒரு ஸ்பூனை முறைத்துப் பார்த்தே அதை வளைப்பதையும், ஒரு கடிகாரத்தை வெறித்துப் பார்த்தே நிறுத்துவதையும் செய்து காட்டினார்; டான்போர்டு ஆராய்ச்சிக் கழகத்தின் அறிவியல் நிபுணர்களுக்கு சவால் வைத்தார்.

அந்தப் பரிசோதனைகளின்போது, சில மாஜிக் நிபுணர்களை ஒளிந்திருந்து பார்க்க ஏற்பாடு செய்தார்கள். ஸ்பூன் வளைந்தது. கடிகாரம் நின்றது. ஆனால், மாஜிக் நிபுணர்கள், இது மனச் சக்தியுமில்லை; ஒரு புடலங்காயும் இல்லை. சாதாரண ‘மாஜிக்’ முறை என்று நிரூபித்து விட்டார்கள்.

இருந்தும், இன்றும் கெல்லரின் சக்தியை நம்புபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சாய்பாபாவை நம்பும் விஞ்ஞானிகள் இருப்பது போல.

ரோமானியர் காலத்திலிருந்து ஒரு சொலவடை உண்டு. மக்கள் ஏமாற விரும்புகிறார்கள்... ஏமாறட்டும்!
===========================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக