புதன், 6 செப்டம்பர், 2017

மகா புஷ்கரமும் மகா மகா துஷ்டத்தனமும்!!!

குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்கிறாராம். அதற்குக் காவிரி நீரை வீணடித்து ஒரு விழாவாம். பக்தியின் பெயரால் இங்கே இதுவும் நடக்கும்; இன்னும் எதுவேண்டுமானாலும் நடக்கக்கூடும்!

இன்றைய[06.09.2017] நாளிதழ்களில் மனம் பதறத் தூண்டும் ஒரு செய்தி.....

#144 ஆண்டுகளுக்குப் பிறகு, குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம்பெயர்வதை முன்னிட்டு நடைபெறவுள்ள காவிரி மகா புஷ்கரம் திருவிழாவுக்காக மேட்டூர் அணையிலிருந்து 10 தினங்களுக்குக் [12ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை] தினம் தினம் 10000 கன அடி வீதம்[குறைந்தபட்சம்] தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று பக்தர்கள் தமிழக அரசை வற்புறுத்தியுள்ளனர்#

வற்புறுத்தியவர்கள் சாமானிய பக்தர்கள் அல்ல; காஞ்சி காமகோடி பீடாதிபதியும் அவரின் பரிவாரங்களும்தான்.
தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது?

பிரபஞ்சப் பொருள்களும் உயிர்களும் உருவாவதற்கும் இயங்குவதற்கும் ஆதாரமாக இருக்கின்ற மூலப் பொருள்களுள்[பஞ்ச பூதங்கள்] நீரும் ஒன்று. அவ்வளவுதான். நீர்[கங்கை, காவிரி...] புனிதமானது. அதில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பதெல்லாம் ஏமாற்றுப் பேர்வழிகள் கட்டிவிட்ட கதை. மகா புஷ்கரம்[புனித நீராடிப் பாவங்களைப் போக்குதல்] மகா மகா புஷ்கரம் என்றெல்லாம் பொய்யுரைத்து இனியும் மக்களை அறிவிலிகள் ஆக்க வேண்டாம்’ என்று எம் போன்றவர்கள் சொல்ல நினைப்பதைச் சொல்லி அவர்களைத் திருத்துமா இந்த அரசு?

குரு பகவான்   இடம்பெயர்கிறாரா? பெயர்ந்துவிட்டுப் போகட்டும். அதற்கு எதற்கு  ஒரு விழா? என்று கேள்வி எழுப்ப வேண்டும். எழுப்புமா?

வானில் சுற்றுபவை[நவக்கிரகங்கள்] உயிரற்ற கோள்கள். இன்னும் எவ்வளவு காலத்துக்கு அவற்றைக் கடவுள்கள் என்று சொல்லுவீர்கள்? திருந்தவே மாட்டீர்களா?என்று கேட்கலாம். கேட்குமா?

மக்கள் குடிக்கவும் குளிக்கவும் போதிய நீரில்லை; பாசனத்துக்கும் வழிபிறக்கவில்லை[ஓரளவு மழை பெய்துள்ள நிலையில் மேட்டூர் அணையில் பாதி அளவே நீர் உள்ளது. முழுக் கொள்ளளவை எட்டிய பிறகு{குறைந்தபட்சம் 80 அடியைக் கடந்த பின்னர்} பயன்படுத்துதல் வேண்டும்]. இந்நிலையில், ‘பகவானுக்குப் பத்து நாள் விழா. பெருமளவில் நீர் வேண்டும்’ என்கிறீர்களே,  பாவிகளா! இது அநியாயம் அல்லவா! என்று சாடலாம். சாடுமா?

குருபகவானைக் கடவுள் என்கிறீர்கள். அவர் நினைத்தால், காவிரியில் வெள்ளம் பொங்கிப் பெருக்கெடுத்து ஓடச் செய்யலாம். மகா புஷ்கரம் என்ன, மகா மகா மகா புஷ்கர விழாகூட எடுக்கலாம். அவரிடம் சொல்லிக் கொட்டோ கொட்டென்று மழை கொட்டச் செய்யுங்கள் என்று அறிவுறுத்தலாம். செய்யுமா?

மேற்குறிப்பிட்ட  எதையும் செய்யாமல்..... 

குடிக்க நீரில்லாமலும், கும்பி நிரப்ப உணவில்லாமலும் வாழப் பழகிவிட்டவர்கள் நம் மக்கள். மக்களைக் காட்டிலும் மகேசன்களுக்குப் பணி செய்வதே முக்கியம். குருபகவான் மட்டுமா, இன்னும் சனி, ராகு-கேது என்று பல பகவான்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கும் விழா எடுங்கள். தினம் தினம் பத்தாயிரம் கன அடியென்ன  அதற்கு மேலும் தண்ணீர் திறந்துவிடக் காத்திருக்கிறோம் என்று காஞ்சி காமகோடி பீடப் பரிவாரங்களின் வேண்டுகோளைச் சிரமேற்கொண்டு இந்த அரசு செயல்படவும் கூடும்.

என்னதான் செய்யப்போகிறது இந்த அரசு?!

புஷ்கரம் விழாவின் தொடக்க நாளான 12.09.2017 வரை காத்திருப்போம்.
=====================================================================================