எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 27 ஜூலை, 2018

இந்தப் புண்ணிய பூமியில்தான் 'இது'வும் நிகழ்ந்தது!!

'அவர்கள்' நான்கு வர்ணத்திற்குள்ளும் வராதவர்கள்; தீண்டப்படாத சூத்திரச் சாதி மக்களையும்விடக் கீழானவர்கள்; 'பஞ்சமர்கள்'.

அவர்கள் ஓட்டு வீடுகளில் வசித்தல் கூடாது; காலில் செருப்பு அணியக்கூடாது; பெண்கள் இடுப்புக்கு மேலே எந்தவொரு ஆடையும் உடுத்துதல் கூடாது. 

இளம் பெண்களின் மார்பகங்கள் பெரிதாக ஆக, விதிக்கப்பட்ட அதற்குரிய வரியைச் செலுத்துதல் வேண்டும்.
ஆண்கள் தோளில் துண்டு போடக்கூடாது. முழங்காலுக்குக் கீழே ஆடை எதுவும் உடுத்துதல் ஆகாது. [நாயடி அல்லது புலையன் ஒருவனை ஒரு உயர் மேல்மட்டச் சாதிக்காரன் [பிராமணன] பார்க்க நேரிட்டால் அவன் தீட்டுப்பட்டவனாகக் கருதப்படுவான்.  இங்ஙனம் தீட்டுப்பட்டவன் ஆற்றிலோ, குளத்திலோ மூழ்கி நீராடித் தன்னைச் சுத்திகரிக்க வேண்டும்”.
(A. Sreedhara Menon – Social and cultural History of Kerala – 1979 – Page 68 – as quoted by Dr. Ivy Peter)

அந்த இன மக்கள் இம்மாதிரிக் கொடுமைகளுக்கு உள்ளானது கன்னியாக்குமரியை உள்ளடக்கிய அன்றைய திருவிதாங்கூர் மாவட்டத்தில்.

இச்சூழலில் இடம்பெற்ற ஓர் உண்மை நிகழ்வின்  சுருக்கம் பின்வருமாறு:

திருநெல்வேலியில்,  'அந்த'ச் சாதிப் பெண்கள் மேலாடை உடுத்த அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அந்த ஊரைச் சார்ந்த பெண்ணொருத்தி இரணியலைச்[இங்கு, பெண்களுக்கு மேலாடை உடுத்த அனுமதியில்லை] சேர்ந்த அதே சாதி இளைஞனுக்கு மணம் செய்விக்கப்படுகிறாள்.

இரணியலில் இருக்கும் கணவன் வீட்டுக்குப் புறப்படும்போதே,  அவளின் உறவினர்கள் மேலாடையை அகற்றிவிட்டுச் செல்லுமாறு வற்புறுத்துகிறார்கள்.

அவளோ, ''எல்லோரும் என் மார்பகங்களைப் பார்ப்பார்கள். அதை என்னால் சகிக்க முடியாது'' என்று சொல்லி, அதை அகற்றாமலே கணவன் ஊரான இரணியலுக்குச் செல்கிறாள்.

மேலாடையை அகற்றுமாறு அந்த ஊர் மேல் சாதிக்காரர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். உடன்படாத அந்த 'ரோஷக்காரி' அதை உடுத்திய நிலையிலேயே கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்கிறாள்.

அவள் செத்தொழிந்த பின்னரும் அதை அகற்றும் முயற்சியில் 'அவர்கள்' ஈடுபடுகிறார்கள். பெண்ணின் கணவன் அழுது புலம்பி வேண்டுகோள் விடுத்தும் அவர்கள் செவி சாய்க்கவில்லை. 

பரிதாபத்துக்குரிய அந்த இளம் பெண்ணின் மேலாடை அகற்றப்பட்டு, அவளின் மார்பகங்களை எல்லோரும் பார்த்த பின்னரே அவள் அடக்கம் செய்யப்படுகிறாள்.

இது அன்றைய நிகழ்வு.

நெஞ்சுருக வைக்கும் நடையில் இதைச் சிறுகதையாக வடித்தெடுத்தவர், மறைந்த எழுத்தாளர் சு,சமுத்திரம் அவர்கள்.

கதையின் முழு வடிவம் நினைவில் இல்லை. என் நடையில் அதை வடித்தெடுத்தால் அதன் சிறப்புக்குப் பங்கம் விளையும் என்பதால் கதைக்கான நிகழ்வை மட்டும் தந்திருக்கிறேன்.

இது கடந்த கால நிகழ்வுதான், ஆயினும்,  மறத்தற்கரியது.

இந்நிகழ்வை மட்டுமல்ல, இம்மாதிரிக் கொடும் பாதகங்களுக்கு அடித்தளம் இட்டவர்களையும்  மறத்தல் சாத்தியம் அல்ல.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனியேனும், இந்த மண்ணில் நல்லவை மட்டுமே நடக்கட்டும்.
========================================================================