செவ்வாய், 31 அக்டோபர், 2017

கடவுளும் சில கேள்விகளும் உங்கள் மனசாட்சியும்!!!

‘கடவுளின் கடவுள்’ என்னும் வலைப்பக்கத்தை[blog] வடிவமைத்து மிகுந்த உத்வேகத்துடன் எழுதிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில், நான் ‘வாங்கிக் கட்டிக்கொள்ள'க் காரணமாக இருந்த பதிவுகளில் ‘கோயிலுக்கா போகிறீர்கள்.....? கொஞ்சம் நில்லுங்கள்!’ என்பதும் ஒன்று.
                  
கருத்துகள், வாசிப்பவர் மனதில் ஆழப் பதிந்திட ஆங்காங்கே சற்றுக் கடுமையான சொற்கள் பயன்படுத்தப்பட்டன. மறுபதிப்பில் அவை தவிர்க்கப்பட்டன.  


நீங்கள் கோயிலுக்குப் போகும் வழக்கம் உள்ளவரா? கீழ்க்காணும் கேள்விகளை உள்வாங்கிக் கொள்ளுங்கள். பதில் அளிப்பது உங்கள் ‘மனசாட்சி’யாக இருக்கட்டும்!
கேள்வி 1:
“கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தவர். அவர் எல்லாம் வல்லவர்; தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார். அணுவிலும் அவர்தான் இருக்கிறார். ஏன்.....உங்களுக்குள்ளேயும் அவர் நிரந்தரமாய்த் தங்கியிருக்கிறார். உங்களைப் படைத்த அவருக்கு உங்களைப் பாதிக்கிற கஷ்ட நஷ்டங்கள் பற்றி அத்துபடியாய்த் தெரிந்திருக்கும். உண்மை இதுவாக இருக்கும் போது, நீங்கள் முறையிட்டால்தான் உங்கள் குறைகளை அவர் போக்குவார் என்று நினைப்பது சரியா? கொஞ்சம் சிந்திப்பீர்களா? ‘அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்’ என்ற ‘வழக்குமொழி’யெல்லாம் வேண்டாம்.

கேள்வி 2:
உங்களுக்கோ உங்களின் சொந்தபந்தங்களுக்கோ நேரிட்ட துன்பங்களைக் களையும்படி நீங்கள் எத்தனை முறை அவரிடம் முறையிட்டிருக்கிறீர்கள்? எத்தனை முறை அவர் உங்கள் வேண்டுகோள்களுக்குச் செவி சாய்த்திருக்கிறார்? ஒரு பட்டியல் போட்டுப் பார்க்கலாம். செய்வீர்களா?

கேள்வி 3:
உங்கள் வேண்டுதல்களில் ஒன்றுகூட நிறைவேற்றப்படாத பட்சத்தில், கடவுளின் கருணை உள்ளம் குறித்து நீங்கள் சந்தேகப்பட்டதில்லையா? தெளிவு பெற முயன்றதில்லையா?

கேள்வி 4:
உங்கள் கோரிக்கைகளில் பல நிறைவேறாமல் மிகச் சில மட்டுமே நிறைவேறும் நிலையில், அவ்வாறு நடப்பது கடவுளின் கருணையால்தான் என நீங்கள் நம்புவது உண்டா? “ஆம்” எனில், பல கோரிக்கைகளை அவர் நிராகரித்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு உங்கள் பதில் என்ன?

கேள்வி 5:
அனைத்திற்கும் மூல காரணமானவர் கடவுள்தான் என்றால், நம்மைத் தாக்குகிற துன்பங்களுக்கும் அவரே காரணம். எனவே, அவரைப் போற்றித் துதி பாடுவது தேவையற்றது என்ற எண்ணம் உங்களுக்கு ஒரு போதும் ஏற்பட்டதில்லையா? ஏன்?

கேள்வி 6:
துன்பங்கள் நேர்வது கடவுளால் அல்ல என்று நீங்கள் நம்பினால், நம்மை இம்சிக்கிற துன்பங்கள் தாமாக வந்தன என்று அர்த்தமாகிறது. நமக்கு உண்டான துன்பங்கள் விலகும் போது அவை தாமாக விலகின எனக் கொள்ளாமல் கடவுளின் கருணையால் அவை நிகழ்ந்தன என்று நம்புகிறீர்கள். அவ்வாறு நம்புவது அறிவுடைமை ஆகுமா?

கேள்வி 7:
ஒட்டு மொத்த மக்கள் சமுதாயத்தின் துன்பம் களையுமாறு பிறருடன் இணைந்து கூட்டுப் பிரார்த்தனை செய்திருக்கிறீர்களா? அம்மாதிரியான வழிபாடுகளால் எத்தனை முறை பலன் கிட்டியிருக்கிறது?

வாட்டி வதைக்கும் வறுமை, தீராத நோய்கள், மதச் சச்சரவுகள், இன மோதல்கள், இயற்கைப் பேரிடர்கள் போன்றவை காரணமாக, உயிர்கள் கடும் துன்பத்திற்கு ஆட்பட்டுச் சித்திரவதைக்குள்ளாவதையும் சீரழிந்து செத்தொழிவதையும், இது போன்ற இன்ன பிற அவலங்களையும் கடவுள் தடுத்து நிறுத்தவில்லை என்பதற்காகக் கடவுளை நொந்துகொண்டதுண்டா? அவ்வாறு நொந்துகொள்வது தவறாகுமா?

கேள்வி 8:
“கோயிலுக்குப் போயி ஆண்டவனை வழிபட்டா, ஒருவித நிம்மதி பிறக்குது; மனசு சுத்தமாகுது.” இது மிகப் பலரின் நம்பிக்கையாக இருக்கிறது. நீங்களும் இதை நம்புகிறீர்களா?

நம்மில் மிக மிகப் பெரும்பாலோர் கடவுளைக் கும்பிடுபவர்கள்தாம். அத்தனை பேர் மனமும் சுத்தமானவையா என்ன? [வழிபடாதவர்களின் மனங்கள் தூய்மையானவை என்று நான் சொல்லவில்லை].

கோயிலுக்குப் போவதைக் கைவிட்டு[இக்கருத்து, தனி விவாதத்திற்குரியது] ஒரு மருத்துவமனைக்குப் போகலாம். அங்குள்ள நோயாளிகள் படும் துன்பங்களைப் பார்க்கும் போது நம் உள்ளம் இளகும்; உருகும்; கெட்ட எண்ணங்கள் அகன்று அது தூய்மை பெறும்.

அனாதை இல்லங்களைப் பார்வையிடலாம். நம்மால் முடிந்த அன்பளிப்புகளை அங்குள்ளவர்களுக்குக் கொடுத்து ஆறுதல் சொன்னால். நெஞ்சில் அன்பு சுரக்கும்; மகிழ்ச்சி நிரம்பும்.

மனநலம் பாதிக்கப் பட்டவர்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சந்திக்கலாம். அவர்களின் பரிதாப நிலை கண்டு கண்ணீர் உகுக்கும்போது மனதில் கருணை பிறக்கும்.

இன்னும், முதியோர் இல்லம்; குழந்தைகள் காப்பகம் என்று நம் உள்ளத்தைத் தூய்மைப் படுத்துகிற இடங்கள் நிறையவே உள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதைத் தவிர்த்து, கோயிலுக்குப் போய்க் கடவுளை வணங்கினால் நிம்மதி கிட்டும்; மனம் தூய்மையடையும் என்று சொல்லப்படுபவை ஏற்கத்தக்கனவா? 

மேற்கண்ட வினாக்கள், கடவுள் வழிபாடு குறித்துச் சிந்தித்தபோது என்னுள் முகிழ்த்தவை. இவற்றிற்கான பதில்களை  நடுநிலை உணர்வுடன் தேடுவது சிறந்த சிந்தனையாளரான உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பயன்படக்கூடும்.

நன்றி.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வெள்ளி, 27 அக்டோபர், 2017

கதைகள் எட்டு வகை!!

என் வாசிப்பு அனுபவத்தின் வாயிலாகக் கதைகளை எட்டு வகையாகப் பாகுபடுத்தியிருக்கிறேன். உங்களின் அனுபவம் மாறுபடலாம். எண்ணிக்கையும் மாறுபடக்கூடும். சும்மா படித்துவையுங்கள்!
ஒன்று:
கதையில் எதிர்பாராத முடிவைக் கொடுத்து வாசகனைக் கவர்தல் ஒருவகை. இம்மாதிரிக் கதைகள் நிறையவே வெளியாகின்றன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை ஒரு பக்கக் கதைகள்.

இரண்டு:
அரைத்த மாவை அரைத்தல். ஏற்கனவே வெளியான கதைகளின் நிகழ்வுகளை மாற்றியமைத்து, கதைமாந்தர்களுக்குப் புதுப்பெயர்கள் சூட்டிப் புதுக்கதை படைப்பது. சுற்றிவளைக்காமல் சொன்னால், ஒருவர் படைத்த கதையின் கருவை இன்னொருவர் திருடுவது. அதாவது, கதைத் திருட்டு! இம்மாதிரிக் கதைகளும் பெருமளவில் வெளியாகின்றன.

மூன்று:
அரைப் பக்கத்தில் அல்லது ஒரு பக்கத்தில் எழுதி முடிக்க வேண்டியதை எட்டு அல்லது பத்துப் பக்கங்களில் பூசி மெழுகுவது. இம்மாதிரி ‘இழுத்தடிப்பு’ வேலையைச் செய்பவர்கள் பெரும்பாலும் பிரபல எழுத்தாளர்களே!

நான்கு:
எத்தனை முறை படித்தாலும் புரியாத படைப்புகள். இப்படி எழுதியே தமிழில் ‘பிரபலங்கள்’ பட்டியலில் இடம் பெற்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்!

ஐந்து:
பாசாங்குக் கதைகள். எதார்த்த வாழ்வில் இடம்பெறாத சோகங்களையும் துயரங்களையும் பூதாகரமாக்கிக் கதைகளை உருவாக்குவது. இவையும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளன.

ஆறு:
பொழுதுபோக்குக் கதைகள். இவ்வகைக் கதைகளை இரண்டாகப் பிரிக்கலாம். கதை படிக்கும் வாசகனின் பொழுதை வீணடிப்பது ஒன்று. சூதாடுவது, பந்தயம் கட்டுவது என்பன போல. பின்விளைவு ஏதுமின்றி, வாசகனைச் சிறிது நேரம் மகிழ்ச்சியில் ஆழ்த்துவது மற்றொன்று. இன்னிசை கேட்பது போலவும் இயற்கையை ரசிப்பது போலவும் என்று சொல்லலாம்.

ஏழு:
வாழ்க்கைப் பிரச்சினைகளையோ சிக்கல்களையோ போராட்டங்களையோ இயல்பாகப் படம் பிடிப்பது.

வேலை தேடிச் சோர்ந்துபோன ஒரு பட்டதாரி வாலிபன், பழைய பேப்பர்களும் பிளாஸ்டிக் பொருள்களும் சேகரித்து விற்றுக் கொஞ்சம் சம்பாதிக்க நினைக்கிறான்; காரியத்தில் இறங்குகிறான். முதல் நாளே அடி உதை விழுகிறது. உதைத்தவர்கள், ஏற்கனவே அந்தத் தொழிலைச் செய்துகொண்டிருப்பவர்கள். 

இவ்வகைக் கதைகளே மக்களுக்குப் படிப்பினையும் மிக்க பயன்களும் நல்குபவை; அரிதாகவே வெளியாகின்றன.

எட்டு:
பிரச்சினைகளை எதார்த்தமாகச் சொல்வதோடு, அவற்றிற்குத் தீர்வும் தர முயலும் படைப்புகள். இவை எண்ணிக்கையில் மிக மிகக் குறைவானவை.

அனைத்துப் பிரிவுகளுக்கும் எடுத்துக்காட்டுகள் சேர்த்திருந்தால் பதிவு மிகு பயனுடையதாக அமைந்திருக்கும். நேரமில்லை. மன்னித்திடுக!

வியாழன், 19 அக்டோபர், 2017

பெருமை மிகு தமிழும் சிறுமை மிகு தமிழனும்!!

*டிஜிட்டல் மொழியாக அறிமுகம் செய்யப்பட்ட முதல் இந்திய மொழி நம் தாய்மொழி தமிழ்.

*வேற்றுக் கிரகங்களில் மனிதர்கள் வாழ்கிறார்களா என்று கண்டறிய அனுப்பப்பட்ட விண்கலத்தில் பதிவு செய்யப்பட்ட முக்கிய மொழிகளில் தமிழும் ஒன்று; இந்தி அல்ல.

*சீனா தேசத்து வானொலியில் சீன மொழிக்கு அடுத்துத் தமிழில் ‘வணக்கம்’ சொல்கிறார்கள்.

*ரஷ்ய அதிபர் மாளிகையான ‘கிரெம்ளின் மாளிகை’ என்னும் பெயர் நான்கு மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. அவற்றில் தமிழும் ஒன்று[ரஷ்ய மொழி, சீன மொழி, ஆங்கிலம் மற்றும் தமிழ்].

*உலகில் இப்போதைய மனித இனம் அழிந்து மீண்டும் தோன்றுமாயின் அப்போதைய மனிதர்கள் அறிந்துகொள்வதற்காக அறிவியலாளரால் பாதுகாக்கப்படும் மொழிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளது.

*லண்டன் கேம்பிரிட்ஜில் தமிழ் மொழிக்கென தனித்துறை நிறுவப்பட்டுள்ளது.

*உலகில், ஆறு நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழியாகத் தமிழ் உள்ளது.

*இந்தியாவில், முதன்முதலில் பரிசுத்த வேதாகமம்[பைபிள்] மொழியாக்கம் செய்யப்பட்டது நம் தமிழில்தான்.

*முதன்முதலில் நிலவுக்குச் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் உட்பட விண்வெளி வீரர்களுக்குக் கற்பிக்கப்பட்ட மொழிகளுள் தமிழும் ஒன்று.

*ஆங்கிலத்தை அடுத்து இணைய தளத்தில் அதிக வெப்சைட் மற்றும் பக்கங்களைக் கொண்டது தமிழ் மட்டுமே.

பிற நாட்டவராலும் அறிஞர்களாலும் பெரிதும் போற்றப்படும் தமிழைத் தமிழன் மட்டும் மதிப்பதில்லை.

இதை நினைந்து வேதனைப்படுவதா, வெட்கித் தலைகுனிவதா?!
*************************************************************************************
நன்றி: ராமனாதன் வெங்கட்ராமன்[’பாக்யா’ வார இதழ், அக்டோபர் 20-26]




திங்கள், 16 அக்டோபர், 2017

‘ஜோதிடம்’ பற்றி ‘நாடகத் தந்தை’ சம்பந்த முதலியார்.

தமிழ் நாடகக் கலையின் தந்தை என்று போற்றப்படுபவர் பம்மல்.சம்பந்த முதலியார்; நீதிபதி, நாடக ஆசிரியர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறன் வாய்ந்தவர். இவர், தம் சுயசரிதையில்[‘என் சுயசரிதை’, முதல் பதிப்பு 2007, தையல் வெளியீடு, சென்னை] ஜோதிடர்களுக்கும் அதனை நம்புவோர்க்கும் அதிர்ச்சி தரும் தம் வாழ்க்கை அனுபவத்தைப் பதிவு செய்துள்ளார். படியுங்கள்.
#என் தகப்பனாரைப் பற்றிச் சில வார்த்தைகள் எழுத விரும்புகிறேன். அவர் பிறந்தது 1830 ஆம் வருஷம் மார்ச் மாதம் 1ஆம் தேதி ரோகிணி நட்சத்திரம். ஸ்ரீகிருஷ்ணன் பிறந்த ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தபடியால் அவரது அம்மானுக்கு ஏதாவது கெடுதி நேரிடும் என்று சுற்றத்தார் எல்லோரும் பயந்தார்களாம். ஆனால், அப்படி ஏதும் கெடுதி நேரவில்லை. என் தகப்பனார் கூறியது எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இதைக் கவனிப்பார்களாக.  

என் தகப்பனார் தம் முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப் பெண் தேடினார். அவருக்கு வயது முப்பது ஆனபடியால் இரண்டாம் தாரம் கொஞ்சம் வயதான பெண்ணாக இருக்க வேண்டுமென்று விரும்பினார்.

என் தாயாருக்கு அப்போது வயது இருபது. அன்றியும் கொஞ்சம் சிவப்பாயிருப்பார்கள். அவரையே என் தகப்பனாருக்கு மணம் முடிப்பதாக நிச்சயித்தார்கள்.

அக்கால வழக்கின்படி, இருவருடைய ஜாதகத்தையும் எடுத்துக்கொண்டு பிரபல ஜோஸ்யர்களிடம் காட்டியபோது, அவர்கள் எல்லோரும் ‘பெண் ஜாதகத்தின்படி வயிற்றுப் பொருத்தமும் இல்லை; கழுத்துப் பொருத்தமும் இல்லை’ என்று கூறினார்களாம். அதாவது, குழந்தைகள் பிறக்காது; அமங்கலியாய்ப் போய்விடுவாள் என்று அர்த்தம். 

என் தந்தையாரோ, பிடிவாதமாய் என் தாயாரை மணந்தார்.

ஜோஸ்யர்கள் கூறியதற்கு விரோதமாக என் தாயாருக்கு நான்கு பிள்ளைகளும் நான்கு பெண்களும் பிறந்தார்கள். வயிற்றுப் பொருத்தம் இல்லையென்று ஜோஸ்யர்கள் சொன்னது பொய்த்துப்போனது.

கழுத்துப் பொருத்தம் பற்றிக் கவனிக்குங்கால்,  என் தாயார் அமங்கலி ஆகவில்லை. என் தகப்பனாருக்கு 1890 ஆம் வருஷம் சஷ்டி பூர்த்தி ஆனபோது ஒரு மாங்கலியத்திற்கு இரண்டு மாங்கலியங்களாகப் பெற்ற பிறகே இறந்தார்கள்.

யாராவது என் தகப்பனாரிடம் ஜாதகங்களைப் பற்றிப் பேச வந்தால் இந்தக் கதையை அவர் அவர்களுக்குப் பல முறை கூறியதை நான் நேராகக் கேட்டிருக்கிறேன். ஜோஸ்யத்திலும் ஜாதகத்திலும் எனக்குக் கொஞ்சமும் நம்பிக்கை இல்லாதிருப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணம் ஆகும்#

நம்மை ஒத்த சாமானியர்கள் ‘ஜோதிடம் பொய்’ என்று சொன்னால் நம் மக்கள் நம்ப மாட்டார்கள். பம்மல்.சம்பந்த முதலியார் போன்ற பெரியவர்கள்/அறிஞர்கள் சொன்னதை அறிந்த பின்னரேனும் நம்புவார்கள்தானே?!
=====================================================================================

புதன், 11 அக்டோபர், 2017

சட்டங்களால் மூடநம்பிக்கையை ஒழிக்க முடியுமா? -‘தி இந்து’[11.10.2017] தலையங்கம்.

பில்லி-சூனியம் ஏவல் போன்ற மந்திர-தந்திரங்களையும் உடலை வருத்திக்கொள்ளும் நேர்த்திக்கடன்களையும் தடுக்கக் கர்நாடக மாநில அரசு கொண்டுவரவிருக்கும் சட்டம் வரவேற்கத்தக்கது.

‘மனிதாபிமானமற்ற  தீய நடைமுறைகள்[பில்லி-சூனியம்] தடை, ஒழிப்பு மசோதா-2017’ மாநில அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றிருக்கிறது. விரைவில் சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தப்படும். சமூகத்தில் நிலவும் மூடப்பழக்கங்களைக் களைய சட்டம் மட்டும் போதாதுதான். ஆனால், மனிதாபிமானமற்ற சடங்குகளையும் பழக்கங்களையும் கட்டுப்படுத்தச் சட்டம் இயற்றுவது நிச்சயம் பலன் தரும்.

அப்பாவிகளையும் சமூகத்தின் அடித்தட்டு மக்களையும் சுரண்டுகிற, அவர்களுடைய சுயமரியாதைக்குப் பங்கம் நேரச் செய்கிற நடவடிக்கைகளைத் தடுப்பதுதான் இந்த மசோதாவின் முக்கிய நோக்கம்.

எப்பேர்ப்பட்ட பிணியாக இருந்தாலும் மந்திரத்தின் மூலமே குணமாக்கிவிடலாம் என்ற மூட வழக்கங்கள், ஆவிகளின் சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்று காரணம் காட்டி நிறைவேற்றப்படும் செயல்கள் போன்றவற்றையும் தடை செய்கிறது இந்த மசோதா.

இவற்றில் சிலவற்றை இந்திய தண்டனையியல் சட்டமும் குற்றச் செயல்களாகப் பட்டியலிடுகிறது. அதே சமயம் சோதிடம், வாஸ்து, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மதச் சடங்குகள், ஆன்மிகப் பாடங்கள் போன்றவற்றை இந்த மசோதா தடை செய்யவில்லை.

மதப் பழக்கங்களுக்கும் மூடநம்பிக்கைப்படியான நடைமுறைகளுக்கும் இடையே மெல்லிய கோடு கிழிக்கிறது மசோதா. மகாராஷ்டிரத்தில் ஏற்கனவே பில்லி-சூனியங்களுக்கும் இதர தீய நடைமுறைகளுக்கும் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. இதனால் அங்கே மூடநம்பிக்கைகள் குறைந்துவிட்டனவா என்பது தெரியாது. ஆனால், இவற்றை எதிர்க்கும் மக்களுக்கு இச்சட்டங்கள் நிச்சயம் வலுச்சேர்க்கும். பகுத்தறிந்து பார்க்கும் ஆற்றல் இல்லாததாலும் அறியாமையாலும்தான் மக்கள் இந்தச் சடங்குகளை ஏற்கின்றனர்.

சில சடங்குகளைப் பற்றிப் படிக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. இந்த மசோதா தடை செய்யும் சடங்குகளில் ஒன்று ‘உருளு சேவா’ அல்லது ‘மட்டி ஸ்நானா’.

பெரிய விருந்து வைத்து அதில் உயர் சாதியினர் சாப்பிட்ட எச்சில் இலைகள் மீது மேலுடை இல்லாமல் உருண்டு, பிறகு இலைகளைத் தலையில் சுமந்து சென்று அகற்றிவிட்டு நீர்நிலைகளில் நீராடினால் தோல் வியாதிகள் குணமாகும் என்பதே இந்தச் சேவா.

உருளுகிறவர்களில் சிலரும் உயர் சாதியினர் என்றாலும் ஒடுக்கப்பட்ட மக்கள்தான் இதில் அதிகம் ஈடுபடுகின்றனர். அறிவியலும் மருத்துவமும் வளர்ந்த பிறகும் இப்படிப்பட்ட நம்பிக்கைகளைத் தொடர்வதும் அதில் அப்பாவிகளை ஈடுபடுத்துவதும் சரியல்ல.

எவற்றையெல்லாம் பகுத்தறிவற்றவை என்று கருதுகிறோமோ அவற்றையெல்லாம் இப்படிச் சட்டம் இயற்றித் தடுத்துவிடுவதா என்று சிலர் கேட்கக்கூடும். மனிதாபிமானமற்றது, கொடூரமானது, அப்பாவிகளைக் கொண்டு நிறைவேற்றப்படுவது, பணத்துக்காக உயிரைப் பணயம் வைப்பது போன்ற பழக்கங்களைத் தடுத்துத்தான் தீர வேண்டும். பேயை விரட்டுவதாகக் கூறிப் பெண்களைச் சகட்டு மேனிக்கு அடித்து உதைப்பதை நியாயப்படுத்த முடியுமா?

கல்வியும் விழிப்புணர்ச்சியும்தான் மக்களை இந்த இழிவுகளிலிருந்தும் ஆபத்துகளிலிருந்தும் மீட்க முடியும். மக்களுடைய வாழ்க்கையையும் சுகாதாரத்தையும் சுயமரியாதையையும்  பாதிக்கும் எந்தவொரு சடங்காக இருந்தாலும் அதைச் சட்டம் இயற்றித் தடுப்பது எல்லா அரசுகளின் கடமையாகும்.
===================================================================================== 

திங்கள், 9 அக்டோபர், 2017

கெடுக்கப்பட்டவள் பாவி! கெடுத்தவர்கள்?!

குட்டையும் நெட்டையுமாய் வரிசைகட்டி நிற்கும் கவின்மிகு கட்டடங்களையும், எதிரும் புதிருமாய் அணிவகுத்துச் செல்லும் வண்ண வண்ணக் ஊர்திகளையும், நடமாடும் நவநாகரிக மனிதர்களையும் கண்டு ரசித்து, மனித குலத்தின் அதிரடி அறிவியல் வளர்ச்சியை வியந்தவாறே அந்த நகரத்தின் நீண்ட பெரிய வீதியின் வழியாக அரூப வடிவில் சென்றுகொண்டிருந்தார்கள் இறைவனும் இறைவியும்.

கொஞ்சம் இடைவெளியில் தன்னவரைப் பின் தொடர்ந்த இறைவி, திடீர்ப் பாய்ச்சலில் அவரைத் தடுத்து நிறுத்தி, “அங்க பாருங்க” என்று ஒரு குப்பைத் தொட்டியின் அருகே, சிக்குப் பிடித்த பரட்டைத் தலையும் உடம்பு முழுக்க அழுக்குத் திட்டுகளுமாக, நைந்து கிழிந்த ஆடையுடன் காட்சியளித்த ஒரு பெண் உருவத்தைச் சுட்டிக் காட்டினார்.

முகம் சுழித்த இறைவன்,  “சே, மனித நடமாட்டம் மிகுந்த தெருவில் இப்படி முக்கால் நிர்வாணமாக நிற்கிறாளே, பெண்ணா இவள்?” என்று கோபத்தில் முகம் சிவக்கக் கேட்டார்.

“பார்த்தவுடனே முழுப் பைத்தியம்கிறது அப்பட்டமாத் தெரியுது. பெண்ணான்னு கேட்கிறீங்களே? இவளைப் பைத்தியம் ஆக்கியது யாருன்னு கேளுங்க” என்றார் இறைவி.

அசடு வழிந்த இறைவன், “சரி, சரி. சொல்லு” என்றார்.

“உங்க ஆசீர்வாதத்தோட நாலு காலிப் பசங்கதான் இவளை இந்த நிலைக்கு ஆளாக்கினாங்க”

வெகுண்ட இறைவன், கண்கள் சிவக்க, "என்ன உளறுகிறாய்?” என்றார்.

“உளறவில்லை. நடந்ததைச் சொல்றேன். ஆத்திரப் படாம கேளுங்க” என்ற இறைவி, குரலில் விரக்தி தொனிக்கச் சொல்லத் தொடங்கினார்.

“இவளுக்கு அப்போ பதினாறு வயது. மக்கள் நடமாட்டம் குறைந்த தெருவில் இவள் தனியே போன போது, நான்கு 'காலிகள்’ இவளைக் கடத்திப் போனாங்க. தனி அறையில் அடைச்சி, அவங்களோட காம வெறிக்கு இவளை இரையாக்க முயற்சி பண்ணினாங்க.........................ஐயோ........என்னைக் காப்பாத்துங்களேன்னு அலறித் துடிச்சி கூக்குரல்  எழுப்பினா இவ. இவள் கற்பைக் காப்பாத்த யாருமே முன் வரல......

.....கடவுளே....ஏ ஏ ஏ.........ஓ ஓ ஓ கடவுளே.....நீயாவது என்னைக் காப்பாத்துன்னு வெறியர்களின் பிடியிலிருந்து விடுபடப் போராடிகிட்டே, அழுது புலம்பி அபயக்குரல் எழுப்பினா. துடிதுடிச்சி, ஓடோடிப் போயிக் காப்பாத்த வேண்டிய நீங்களும் இவளைக் காப்பாத்தல; என்னையும் தடுத்துட்டீங்க; அந்த வினாடியே மோனத்திலும் மூழ்கிட்டீங்க. சாதாரண மனுசங்களுக்கு இந்த மோனமும் தியானமும் தேவைப் படலாம். முழுமுதல் கடவுளான நீங்க எதுக்கு அடிக்கடி மோனத்தில் மூழ்கிக் கிடக்கிறீங்கன்னு எனக்குப் புரியல..........

...அது கிடக்கட்டும். உங்க மெத்தனத்தால நடக்கக் கூடாத ஒரு கொடூரம் நடந்து முடிஞ்சி போச்சி. சூதுவாது அறியாத ஒரு இளம் வயசு அப்பாவிப் பொண்ணைச் சீரழிச்சி, சித்திரவதை பண்ணி, அந்த நாலு கயவர்களும் நடுத் தெருவில் அலைய விட்டுட்டாங்க. இதுதான் நடந்தது.

தனக்குக் ‘கடவுள் தந்த பரிசை’ நினைச்சி நினைச்சி எந்நேரமும் சிரிச்சிட்டே தெருத் தெருவா அலையற இந்தப் பைத்தியகாரியைப் பாருங்க; ரெண்டு கண்ணாலயும் நல்லா பார்த்து ரசிங்க” என்று குரல் தழுதழுக்க, விழிகளில் அருவியாய் நீர் வழிந்திட, சிரமப் பட்டுச் சொல்லி முடித்தார் இறைவி.

இறைவன் மவுனமாக நடக்கத் தொடங்கினார்.

ஒரே தாவலில் அவரை வழி மறித்த இறைவி, “இப்படிக் கொடூரமா தண்டிக்கப்படுற அளவுக்கு இவள் செஞ்ச குற்றம்தான் என்ன? சொல்லுங்க” என்றார்.

“கடந்த பிறவிகளில் இவள் செய்த பாவம்” உணர்ச்சியற்ற குரலில் சொன்னார் இறைவன்.

“அப்படி என்ன பெரிய பாவம்?”

“அதை ஒரு சில வார்த்தைகளில் சொல்ல முடியாது. அது நீ.........ண்.....டதொரு பாவபுண்ணியச் சங்கிலித் தொடர். எப்போதெல்லாமோ செய்த பாவங்களுக்கு எந்தெந்தப் பிறவியில் தண்டனை அனுபவிக்கணும்கிறது ஏற்கனவே விதிக்கப் பட்டது. கேட்கப்படுற ஒவ்வொரு கேள்விக்கும் கணக்குப் பார்த்துப் புள்ளிவிவரம் தர்றது என்னுடைய வேலை இல்லை. இந்தப் பைத்தியக்காரி பாவம் பண்ணினவள். அதுக்கான தண்டனையை இந்தப்பிறவியில் அனுபவிக்கிறாள். அவ்வளவுதான்.”

இனியும் பேச விரும்பாதவர் போல் நடையில் வேகம் காட்டினார் இறைவன்.

”நில்லுங்க.”

கடும் சீற்றத்துடன் வெளிப்பட்ட அந்த வார்த்தை இறைவனின் செவிகளில் பேரிடியாய் இறங்கி மேலும் நகரவிடாமல் ஆணி அடித்தாற்போல் அவரை நிற்க வைத்தது.

“இவள் செய்த பாவத்துக்கு தண்டனை அனுபவிக்கிறாள். சரி........... இந்தப் புத்தம் புது மலரை, நாள் கணக்கில் அனுபவிக்கிற அதிர்ஷ்டம் அந்த நாலு மனுச நாய்களுக்கும் வாய்ச்சுதே, அந்தச் சுகத்துக்கு அவங்க கடந்த பிறவிகளில் செய்த புண்ணியம்தான் காரணமா? அந்தப் புண்ணியம் என்னன்னு சொல்லுங்க” என்றார் இறைவி.

இப்படியொரு கேள்வியைச் சற்றும் எதிர்பாராத இறைவன், கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி, நின்ற இடத்திலேயே மீண்டும் மோனத்தில் புதையுண்டார்!
=====================================================================================

வெள்ளி, 6 அக்டோபர், 2017

பெருந்தன்மை ‘மிக்கவர்’ பெரியாரா, கல்கியா?

பெரியாரை நேரில் சந்தித்துத் தன் மகளின் திருமணத்துக்கு அழைத்தார் எழுத்தாளர் கல்கி. கட்டாயம் மண விழாவில் கலந்துகொள்வதாக வாக்குறுதி அளித்தார் பெரியார். ஆனால்.....
முகூர்த்த நேரத்துக்கு அவர் போகவில்லை. கல்கியின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது.

அன்று மாலை, கல்கியின் நெருங்கிய உறவுக்காரர்கள் அரட்டையில் ஈடுபட்டிருந்தபோது, எவரும் எதிர்பாராத வகையில் பெரியார் வருகை புரிந்தார். மகிழ்ச்சியுடன் வரவேற்ற கல்கி, “ஏன் முகூர்த்த நேரத்துக்கு வரவில்லை?” என்று உரிமையுடன் கேட்டார்.

“நான் கறுப்புச் சட்டைக்காரன். நீங்கள் ஆஸ்திகர். தாலி கட்டும்போது எதிரில் கறுப்பு ஆடை அணிந்து நான் உட்கார்ந்திருந்தால் உங்களுக்கெல்லாம் சங்கடமாக இருந்திருக்கும். அதனால்தான், விழா முடிந்த பிறகு இந்த நேரத்தில் வந்தேன்” என்றார் பெரியார்; மணமக்களையும் வாழ்த்தினார். அப்போது.....

ஒருவர் பெரியாரிடம் திருநீற்றுத் தட்டை நீட்ட, பெரியாரும் சங்கடப்படாமல் திருநீறு எடுத்து மணமக்களின் நெற்றியில் பூசி மீண்டும் வாழ்த்தினார். புகைப்படக் கருவிகள் அந்தக் காட்சியைச் சுட்டுத் தள்ளின.

மறுநாள், ‘கல்கி’ இதழின் அட்டைப் படம் கல்கியின் அனுமதிக்காக அவர் முன் வைக்கப்பட்டது. அட்டையில், பெரியார் மணமக்களை வாழ்த்தித் திருநீறு பூசும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

“அட்டையைத் தயார் செய்தது யார்?” என்று விசாரித்தார் கல்கி.

“இந்த அட்டைப் படத்துடன் கல்கி இதழ் வெளியானால், அது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டுபண்ணும்; இதழ் விற்பனையும் அதிகரிக்கும் என்ற எண்ணத்தில் துணை ஆசிரியர்தான் அட்டையைத் தயாரித்தார்” என்ற பதில் கிடைத்தது.

சினம் கொண்ட கல்கி, “சபை நாகரிகம் கருதி மணமக்களுக்குத் திருநீறு பூசிய ஓர் உதாரண புருஷரான பெரியாரைக் கேவலப்படுத்த இதைவிடக் கீழான வழி ஏதுமில்லை” என்று கடிந்துகொண்டார்; கல்கி இதழின் அட்டைப் படத்தையும் மாற்றியமைக்க உத்தரவிட்டார்.
=====================================================================================
நன்றி: ‘பாக்யா’ வார இதழ் அக்டோபர் 06 - 12; 2017[‘உங்கள் கே.பாக்யராஜ் பதில்கள்’].


புதன், 4 அக்டோபர், 2017

சாமி என்னடா சமயம் என்னடா சாகப் பிறந்த மானிடனே?![பழசு!]

நான் எழுதியவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த பதிவுகளுள் இதுவும் ஒன்று. உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆயினும்,  படிக்கத்தக்கதே!
னைத்து உலகங்களையும் உயிர்களையும் படைத்தவர் கடவுள்[என்கிறார்கள்].

நம்மைப் படைத்தவரும் அவரே.

நாம் வேண்டிக்கொண்டதால் கடவுள் நம்மை மனிதராகத் தோற்றுவிக்கவில்லை. அதாவது, நம் சம்மதம் இல்லாமலே இவ்வுலகில் பிறந்து  இன்பதுன்பங்களை அனுபவிக்கச் சபித்திருக்கிறார் என்று நான்  சொன்னால் அதை உங்களால் எளிதில் மறுக்க முடியாது.

அவர் படைத்துவிட்டார்.

வேறு வழியின்றி நாம் வாழ்கிறோம்.

வயது முதிர்ந்த நிலையிலோ அதற்கு முன்னதாகவோ நாம் செத்தொழிவது  100% உறுதி.

இது தெரிந்திருந்தும் நம்மில் எவரும் செத்து மடியத் தயாராயில்லை.

ஆசை...‘இன்னும் வாழ வேண்டும்’ என்னும் பேராசைதான் காரணம். ஆசைப்பட வைத்தவரும் அந்தப் பேரருளாளன்தான்!

இந்த ஆசை காரணமாக, சாவை நினைத்து அஞ்சுகிறோம்; மனம் கலங்குகிறோம்; மரணமில்லாப் பெருவாழ்வை எண்ணி நாளும் ஏங்குகிறோம். ஆனாலும், சாவு நம்மை விட்டு வைப்பதில்லை; ஓட ஓட ஓட விரட்டி ஒரு நாள் ‘காவு’ கொள்கிறது.

இந்தச் சாவுக்கான காரணக் கர்த்தா யார்?

நம்மில் மிகப் பெரும்பாலோர் நம்புகிற...நாள்தோறும் போற்றித் துதி பாடுகிற கடவுள்தானே?

நம் சம்மதம் இல்லாமலே நம்மைப் பிறப்பித்த கருணை வடிவான கடவுள், நம் சம்மதம் இல்லாமலே சாகடிக்கவும் செய்கிறார்.

இவர் மட்டும் ஆதியும் அந்தமும் இல்லாதவர்; என்றும் இருப்பவர். எந்தவொரு கெடுதியும் இவரை அணுகாது; அணுகவும் முடியாது, அணு முதல் அண்டம்வரை அனைத்தையும் ஆள்பவர் இவரே என்பதால்.

ஆனால், மானுடப் பதர்களான நமக்கும் பிற உயிர்களுக்கும் மட்டும் அற்ப ஆயுள். அதிலும் அடுக்கடுக்கான துன்பங்களின் தாக்குதல். இனி என்ன ஆவோம் என்று தொடர்ந்து சிந்திக்கவே இடம் தராத கொடூரச் சாவு.

இப்படிப்பட்ட பரிதாபத்திற்குரிய ஜீவன்களாகக் கடவுள் ஏன் நம்மைப் படைக்க வேண்டும்?

படைப்புத் தொழிலைக் கைவிட்டு, வெறும் சூன்யத்தில் கலந்து மோனத் தவத்தில் ஆழ்ந்து கிடக்கலாமே? உயிர்களற்ற வெறும் பிண்டமான அண்டத்தைக் கண்டு ரசித்துக் காலம் கழிக்கலாமே? அதை விடுத்து.....

உயிர்களைப் பரிதவிக்கச் செய்யும் பாவச் செயலை ஏன் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்?

தனக்கொரு நீதி; தன்னால் படைக்கப்படும் உயிர்களுக்கு ஒரு நீதி என்றிருக்கும் இந்த நபரையா மக்கள் இத்தனை காலமும் வழிபட்டார்கள்? இனியும் வழிபடப் போகிறார்கள்?!

தங்களின் வருகைக்கு நன்றி.
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000