செவ்வாய், 23 டிசம்பர், 2025

நீதிபதிகள் நீதிதேவனால்[இருந்தால்] அனுப்பப்பட்டவர்கள் அல்ல!!!

தமிழ்நாட்டு உயர் நீதிமன்ற நீதிபதியொருவர் சட்டப் புத்தகங்களைப் படித்து, அவற்றில் இடம்பெற்றுள்ள சட்ட விதிகளைப் பின்பற்றி, வழக்குகளில் தீர்ப்பு வழங்குகிறாரோ அல்லவோ, பகவத்கீதை போன்ற புராணப் புளுகுகளை[கிருஷ்ணன் கடவுள் அவதாரமாம். பாரதப் போரில் பாண்டவர்களுக்கு உதவினாராம். அருச்சுனனுக்கு உபதேசம் பண்ணினாராம். அது கீதையாம். இவற்றிற்கெல்லாம் அறிவியல் ஆதாரம் தந்தவன் எவனும் இல்லை]ப் படித்துத் தேர்ச்சி பெற்று, அவற்றை ஆதாரமாகக்கொண்டு தீர்ப்பு வழங்கும் அதிசயம் இங்கு நிகழ்ந்திருக்கிறது. ஒரு வழக்கு குறித்த அவரின் தீர்ப்பு:*

*'பகவத்கீதையை ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் அடக்கிவிட முடியாது. அது பாரத நாகரிகத்தின் ஒரு பகுதி[பாரத நகரிகம் என்று ஒன்று உள்ளதா? அதற்கான ஆதாரங்கள் உள்ளனவா?]. அது ஒரு நீதிநெறிப் புத்தகம்'[இது தீர்ப்பு].

மக்களாட்சி நடைபெறும் நாடு இது. இதை நிர்வகிப்பதற்கென்று, மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

இந்தச் சட்டங்களை ஆதாரமாகக் கொண்டுதான், தொடுக்கப்படும் வழக்குகளுக்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்குதல் வேண்டும். சட்ட விதிகளைப் புறந்தள்ளி, வானளாவிய அதிகாரங்கள் தனக்கு இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு, நீதித் துறைக்குச் சம்பந்தமே இல்லாத புராணக் கதைத் தொகுப்பு நூலை மேற்கோள் காட்டித் தீர்ப்பு வழங்கியிருக்கிறார் ‘அந்த’ நீதிபதி.

‘இங்குள்ள நீதிபதிகளும் மனிதர்கள்தான்; நீதிதேவனால்[இருந்தால்] இங்கு அனுப்பப்பட்டவர்கள் அல்ல’ என்பது சம்பந்தப்பட்ட நீதிபதி[களு]க்குத் தெரியும்; மக்களுக்குத் தெரிந்திருப்பது மிக அவசியம்.

https://www.dinamalar.com/news/tamil-nadu-news/teaching-bhagavad-gita-does-not-make-a-trust-religious-not-ground-to-deny-fcra-registration-madras-high-court/4110749

சீகைக்காய்... தலைக்கு! தாடிக்கும் அதுவே!! ஹி... ஹி... ஹி!!!

ளங்கோ பக்கா ஆத்திகன். சுந்தரம் சுத்த நாத்திகன். இருப்பினும் இருவரும்  மிக நெருக்கமான நண்பர்கள்.

ஊரின்[சிறு நகரம்] வேறு வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் என்றாலும், விடுமுறை நாட்களில் இருவரும் சந்தித்து அளவளாவுவது வழக்கம், அந்தரங்க ரகசியங்களைப் பகிர்வது உட்பட.

அன்று ஞாயிற்றுக் கிழமை. இளங்கோவைப் பார்க்க அவனின் வீடு தேடிப் போனான் சுந்தரம். அவன் கோயிலுக்குப் போயிருப்பதாகச் சொன்னாள் அவனின் புதுப் பெண்டாட்டி.

“நான் வந்துட்டுப்போனதாச் சொல்லுங்க” என்று சொல்லி நகர்ந்தான் சுந்தரம்.

வழியில் எதிர்பாராத விதமாக இளங்கோ எதிர்ப்பட்டான்.

”நீ கோயிலுக்குப் போயிருக்கிறதா உன் பெண்டாட்டி சொன்னாள். உன் நெத்தியில் திருநீறு இல்ல. பொய் சொல்லிட்டு எங்கடா போனே?”

மெலிதான அதிர்ச்சிக்கு உள்ளான இளங்கோ, “வயாகரா வாங்கப் போனேன். இது விசயம் பெண்டாட்டிக்குத் தெரியக்கூடாது. அதனாலதான் பொய் சொன்னேன்” என்றான்.

சற்றே யோசித்த சுந்தரம், “சாமிகிட்டே வேண்டுதல் வைக்கத்தான் நீங்கெல்லாம் கோயிலுக்குப் போறீங்க. இது விசயத்தில் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கக் கருணை காட்டு பகவானேன்னு  அதுகிட்டே வேண்டுதல் வையுங்கடா. எதுக்கு வயாகரா நயாகரான்னு வீண் செலவெல்லாம்” என்று சொல்லிவிட்டு நண்பனின் முகபாவனையைக் கவனித்தான்.

கடும் வாக்குவாதத்திற்கு அவன் தயாராவதை அறிந்து, “பொழுது போகலேன்னுதான் உன்னைத் தேடி வந்தேன். அப்புறமா சந்திப்போம்” என்று நகர்ந்தான்.

கொஞ்சம் தூரம் நடந்து திரும்பிப் பார்த்தபோது, இளங்கோ இவனை முறைத்தவாறே நின்றுகொண்டிருப்பது தெரிந்தது.