வெள்ளி, 21 ஏப்ரல், 2017

‘V.V.V.I.G’க்களும் நேர்ந்துகொள்ளுதலும்!!!

லகப் பிரசித்தி பெற்ற அந்தக் கோடி கோடி கோடீஸ்வரக் கடவுளின் கோயிலுக்குத் தன் மனைவி தேவியுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தார் செல்வநாயகம்.

அவர்களின் முகங்களில் கனமான சோகத்தின் அழுத்தமான தழும்புகள்.

இந்தத் தம்பதியரின்  ஆசைக்கும் ஆஸ்திக்கும் ஒரே வாரிசான சிவராசன் பைக் விபத்தில் சிக்கி, மண்டையில் அடிபட்டு உடல் சிதைந்து சுய நினைவு இழந்த கோலத்தில்   மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டான். தீவிர சிகிச்சையில் உயிர் பிழைத்தாலும் கோமா நிலை நீடித்தது. மருத்துவர்கள் கைவிரித்ததோடு சில மாதங்களுக்கு மேல் அவன் உயிர்பிழைத்திருப்பது அத்தனை நிச்சயமில்லை என்றும் சொல்லியிருந்தார்கள். மனித முயற்சி பலனற்றுப்போனதால் செல்வநாயகம் தம்பதியருக்குக் கடவுளின்/கடவுள்களின் நினைப்பு வந்தது.

தினம் தினம் பிரார்த்தனை செய்தார்கள். ஜோதிடர்களின் ஆலோசனைப்படி புகழ்பெற்ற சாமி கோயில்களுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றினார்கள்.

ஒரு V.I.G[Very Important God] கடவுளுக்குத் தங்கத்தில் மார்புக் கவசம் செய்து போட்டார்கள். இன்னொரு V.I.Gக்குத் தங்கக் கிரீடம் அணிவித்தார்கள். லட்சார்ச்சனை கோடியார்ச்சனை என்று எந்தவொரு குறையும் வைக்காமல், தாங்கள் மதித்துத் துதிபாடும் அத்தனை பிரபல சாமிகளையும் மனம் குளிர வைத்தார்கள்.

எதைச் செய்தும் அவர்களின் செல்வ மகன் சிவராசன் கோமா நிலையிலிருந்து விடுபடவில்லை.

மனம் தளராத செல்வநாயகம் தம்பதியர், அன்று V.V.V.I.கடவுளான திருப்பதி ஏழுமலையானைச் சந்தித்து, புத்தம் புதிய ரூபாய் நோட்டுக் கற்றைகளையும் பத்தரைமாற்றுப் பொன் வெள்ளி அணிகலன்களையும் காணிக்கையாகச் செலுத்தி வேண்டுதல் வைக்கப் பயணம் மேற்கொண்டிருந்தார்கள்.

செல்லும் வழியில், ஏழ்மைக் கோலத்தில் ஒரு நடுத்தர வயது ஆணும் பெண்ணும் இவர்களின் சொகுசு வாகனத்தை வழிமறிப்பதுபோல் நின்று கொண்டிருந்தார்கள்.

காரின் கண்ணாடியை இறக்கினார் செல்வநாயகம்.

அவர்கள் அவரை நெருங்கி ஏதோ சொல்ல முற்படுவதற்குள், “ரெண்டு பேரும் நல்லாத்தானே இருக்கீங்க. உழைச்சிப் பிழைக்கலாமே. பிச்சை எடுக்க வெட்கமாயில்லை?” என்று குரலில் சீற்றம் தொனிக்கக் கோபம் காட்டினார் செல்வநாயகம்.

குழந்தையை ஏந்தியிருந்த பெண் பேசினாள்: “சாமி, நாங்க உழைச்சிப் பிழைக்கிறவங்கதான். பிச்சை எடுக்கிற ஜாதியில்ல. உங்ககிட்ட ஒரு உதவிதான் கேட்கிறோம்.”

மௌனம் போர்த்து அவளை வெறித்தார் செல்வநாயகம்.

“வெளியூரிலிருந்து ஏழுமலையானைத் தரிசிக்க வந்தோம். பஸ்ஸில் வரும்போது, என் புருசனின் சட்டைப் பையிலிருந்த பணம் முழுக்கத் திருடு போயிடிச்சி. டிக்கட் எடுக்கப் பணமில்லை. நடு வழியில் கண்டக்டர் இறக்கி விட்டுட்டார். ஊருக்குத் திரும்பிப் போகக் கையில் பைசா இல்ல. ஒரு நூறு ரூபா கொடுத்து உதவுங்க. உங்க முகவரியும் கொடுங்க. ஊருக்குப் போனதும் பணத்தை அனுப்பிடுறோம். எங்களை நம்புங்கய்யா” என்றாள் அவள்.

அவளின் உடல்மொழியும் பேச்சும் நம்பும்படியாகத்தான் இருந்தன. ஆனால், செல்வநாயகம் நம்பவில்லை. “இப்படிப் பொய் சொல்லிப் பிச்சை கேட்க வெட்கமா இல்ல?   போங்கம்மா. விலகிப் போங்க.” -அவர் சீறிவிழ வாகனமும் சீறிப் பாய்ந்து வேகமெடுத்தது.

எடுத்துச்சென்ற பணக் கட்டுகளையும் நகைநட்டுகளையும் உண்டியலில் சேர்த்துவிட்டு, உலகின் நம்பர் 1 பணக்காரக் கடவுள் ஏழுமலையானின் தரிசனத்தையும் முடித்துக்கொண்டு சொந்த ஊருக்குப் புறப்பட்டபோது செல்வநாயகத்தின்  கைபேசி ஒரு சோகச் செய்தியை ஒலிபரப்பியது.

“சிவராசன் செத்துட்டான்.”

பாசமுள்ள பெற்றோராக, செல்வநாயகமும் தேவியும் கண்ணீர்விட்டு அழுதார்கள்; சிறிதுநேரத் தேம்பலுக்குப் பிறகு சற்றே மனம் தேறினார்கள்.

“எத்தனை சாமியை வேண்டிகிட்டோம். எத்தனை நேர்த்திக்கடனை நிறைவேத்தினோம். எந்தச் சாமியும் கண் திறக்கலியே” என்று வீடு போகும்வரை அங்கலாய்த்துக்கொண்டே இருந்தாள் தேவி. அதையே மனத்தளவில் மீண்டும் மீண்டும் சொல்லி வேதனைப்பட்டார் செல்வநாயகம். இடையிடையே, “பாவம் அந்த ஏழைகள். ஒரு நூறுதானே கேட்டாங்க. கொடுத்து உதவியிருக்கலாமோ?” என்று யோசிக்கவும் செய்தார்.
===============================================================================

16 கருத்துகள்:

  1. எனக்கென்னவோ... அந்த V.V.V.I. கடவுள்தான் மாறு வேடத்தில் வந்து மிஸ்டர். செல்வநாயகத்தை மைக் டெஸ்டிங் செய்திருப்பார் என்று எனது வெளி... ஸாரி உள்மனது சொல்கிறது நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. ஏமாற்றுப் பேர்வழிகளும் ,கடவுள்களும் ...மனிதனின் இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டுதான் இன்னும் பிழைப்பை ஒட்டிக் கொண்டிருக்கின்றன :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் பிழைப்புக்காக எதையும் செய்பவர்கள்.

      நன்றி பகவான்ஜி.

      நீக்கு
  3. கடவுள் மனுஷ ரூபத்தில்ன்னு சொல்வாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வழங்கிய கருத்துரைக்கும் நன்றி ராஜி.

      நீக்கு
  4. பக்தர்களை சோதிக்க ஏ.....ஏ....ழு மலை யான் மனித உருவம் எடுத்து வருவார் என்பது உண்மையாகவுல்ல போச்சு.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுள் உதவமாட்டார் என்பது தெரிந்த பிறகுதான் அவருக்குப் புத்தி தெளிந்ததோ!?

      நன்றி வலிப்போக்கன்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. பாராட்டுரைக்கு நன்றி நண்பரே.

      நீக்கு
    2. கில்லர்ஜியின் நகைச்சுவையை ரசித்து மகிழ்ந்ததற்கும் நன்றி.

      நீக்கு