மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மனித நேயத்தை ஊட்டி வளர்த்தால்...சாதி, மதம், கடவுள் ஆகியவற்றின் தேவை முற்றிலும் ஒழியும்.

Sunday, April 16, 2017

அந்நாள் பிரதமர்[?] ஓமந்தூர் ராமசாமி ‘ரெட்டி’யாரின் ‘இன’ப்பற்று!

சென்னை மாகாணத்தின் பிரதமராக[அன்று, முதல்வர் பிரதமர் என்று அழைக்கப்பட்டார்] இருந்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். அவரைப் பற்றி யுகபாரதி[குங்குமம் வார இதழ், 21004.2017] எழுதிய கட்டுரையிலிருந்து.....
#ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்றே விமர்சிக்கப்பட்டார். அவர் தமிழரல்ல; தமிழ்மொழியைக் காக்கக்கூடியவரல்ல என்னும் கருத்துகள் தமிழ்த் தேசியவாதிகளால் பரப்பப்பட்டன. அவற்றையெல்லாம் அவர் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. காலம் கனியும்போது பதில் சொல்லலாம் என்று காத்திருந்தார்.

காலமும் கனிந்தது.

திருப்பதி மலைக்குச் சென்ற ஓமந்தூரார் பிரார்த்தனை முடிந்து மலையிலிருந்து கீழே இறங்கினார். நகரிலிருந்த ஓலைச்சுவடி நிலையத்தைப் பார்வையிடச் சென்றார்.

கூடியிருந்தவர்கள் அவரைச் சொற்பொழிவாற்றச் சொன்னார்கள். சம்மதித்த அவர், பேசத் தொடங்கினார்.....தமிழில். கூடியிருந்தவர்கள் “தெலுங்கில் பேசுங்கள்” என்று கூச்சலிட்டார்கள்.

“நான் தமிழன். தமிழில் மட்டுமே என்னால் பேச முடியும். தெலுங்கில் சில வார்த்தைகள் தெரியும் என்பதால் நான் தெலுங்கன் ஆகிவிட மாட்டேன். என் அம்மாவுக்கு முன்னூறு அல்லது நானூறு கொச்சையான தெலுங்குச் சொற்கள் தெரியும். அவர் பெற்ற பிள்ளையான நான் என்னுடைய தாய்மொழி தெலுங்கு என்று சொல்ல மாட்டேன். என் மொழி தமிழ்; நான் தமிழன் என்று சொல்லிக்கொள்ளவே விரும்புகிறேன்” என்றார் ஓமந்தூரார்#

ஒவ்வொரு மாநிலத்துக்கும் அரசு சின்னம் ஒன்று வேண்டும் என்ற எண்ணம் துளிர்த்தபோது தமிழக அரசின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தைத் தேர்வுசெய்தவர் ஓமந்தூரார். ‘சமயச் சார்பற்ற ஒரு அரசாங்கத்தின் சின்னமாக இந்துக் கோயில் கோபுரத்தை எப்படி வைக்கலாம்?’ என்று பிரதமர் நேரு வரை புகார் போனது. ‘கோபுரம் என்பது சமயச் சின்னம் மட்டும் அன்று. அது தமிழ்ப் பண்பாட்டின் சின்னம். எங்கள் மாநிலத்தின் தனிச் சிறப்பாக உலகம் போற்றும் திராவிடக் கட்டடக் கலையின் அடையாளம்’ என்று பதில் அளித்தபோது பிரதமரால் அதை மறுக்க முடியவில்லை. அந்தச் சின்னத்தின் கீழே, ‘சத்தியமேவ ஜெயதே’ என்று எழுதியதும் ஓமந்தூரார்தான். அதைத்தான் அண்ணா முதல்வராக இருந்தபோது, ‘வாய்மையே வெல்லும்’ என்று தமிழ்ப்படுத்தினார். தான் எழுதியதற்குத் தகுந்தமாதிரியே வாய்மையான வாழ்க்கையை ஓமந்தூரார் வாழ்ந்து காட்டினார். இவரது நேர்மையான நடவடிக்கைகள் காங்கிரஸ் காரர்களையே அதிர்ச்சியடைய வைத்தது. இவரை எப்படியாவது அந்த நாற்காலியை விட்டு நீக்கிவிடத் துடித்தனர். தானே பதவி விலகி, அன்றைய தினமே வடலூர் ராமலிங்க அடிகள் மடத்துக்குப் போய் குடியேறியவர் ஓமந்தூரார். அதன்பிறகும் பல்வேறு பதவிகள் அவரைத் தேடி வந்தன. எதையும் அவர் ஏற்கவில்லை' -http://www.noolulagam.com/2013/09/25/167942/

பதவியில் இருக்கும்போது மட்டுமல்ல, பதவியிலிருந்து விலகி, தன் சொந்த ஊரான ஓமந்தூருக்குக் கிளம்பும் கடைசி நொடிவரை நேர்மையின் இலக்கணமாகத் திகழ்ந்தார் ஓமந்தூரார். பதவியை இழந்தவுடனே தான் தங்கியிருந்த கூவம் மாளிகையை அன்று பிற்பகலுக்குள் காலி செய்தார்.

அறவுணர்வு படைத்தவரும், நேர்மையாளரும், சீரிய தமிழ் நெஞ்சினருமான இவரைத் “தமிழ் வாழ்க! தமிழினம் வாழ்க!!” என்று மேடைதோறும் வாய் கிழிய முழங்குகிற, மாய்ந்து மாய்ந்து ஏடுகளில் எழுதுகிற தமிழன் அடியோடு மறந்துபோனான் என்பது மிகப் பெரும் அவலம் ஆகும்.
===============================================================================

கட்டுரை எழுதிய யுகபாரதிக்கும் அதை வெளியிட்ட குங்குமம் இதழுக்கும் நம் நன்றி.

11 comments :

 1. காங்கிரசில் இருந்து கொண்டு ,அவர் செய்தது சாதனைதான் என்று சொல்ல வேண்டும்:)

  ReplyDelete
  Replies
  1. மறக்க முடியாத, மறக்கக் கூடாத சாதனையாளர்.

   நன்றி பகவான்ஜி.

   Delete
 2. Replies
  1. அவர் சாதனையை என்றும் மறவாதிருப்போம்.

   நன்றி நண்பரே.

   Delete
 3. பலருக்கு இவரைப் பற்றி தெரியவே தெரியாது. நாம் பாடப் புத்தகங்களிலும் இவர் இடம் பெறவில்லை.இப்படிப் பட்டவர்கள் ஆட்சி செய்த இடத்தில் இப்போது யார் யாரோ?

  ReplyDelete
  Replies
  1. நினைக்கும்தோறும் நெஞ்சு கனக்கிறது.

   நன்றி முரளி.

   Delete
 4. ஒரு நேர்மையான பெரியவர் பற்றிய தகவலுக்கு நன்றி.
  //நான் தமிழன். தமிழில் மட்டுமே என்னால் பேச முடியும். தெலுங்கில் சில வார்த்தைகள் தெரியும் என்பதால் நான் தெலுங்கன் ஆகிவிட மாட்டேன்.//
  தமிழில் சில வார்த்தைகள் மட்டும் தான் தெரியும் என்று சொல்லி பெருமைபடும் நாட்டில் முன்பு இப்படியானவர் இருந்திருக்கிறார்கள்!

  ReplyDelete
  Replies
  1. //தமிழில் சில வார்த்தைகள் மட்டும் தான் தெரியும் என்று சொல்லி பெருமைபடும்//

   இவர்கள்தான் தமிழ் அழிப்பு வேலையில் முன்னிலை வகிப்பவர்கள்.

   நன்றி நண்பரே.

   Delete
 5. அருமையான தலைவரை
  அழகோடு அறிமுகம் செய்தீர்!

  ReplyDelete