திங்கள், 3 ஆகஸ்ட், 2026

சேர்ந்து வாழ்தலும்[living together] 'முன்னோட்டம்' பார்த்தலும்!!!

தியழகியும் அறிவழகனும் ஒரே தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள்.

பெயர்ப் பொருத்தம் அமைந்தது போலவே, அவர்களின் பழக்கவழக்கங்களும் வாழ்வியல் குறித்த நம்பிக்கைகளும் ஓரளவுக்கு ஒன்று போலவே அமைந்திருந்தன.

அதனால், நெருங்கிப் பழகினார்கள்; நல்ல நண்பர்கள் ஆனார்கள்.

சில மாதங்களிலேயே நட்பு காதலாகவும் மாறியது.

வெறும் காதல் மொழிகளைப் பகிர்வதில் சலிப்பு ஏற்பட்டபோது, அதற்குக் காரணம் இருவருக்குள்ளும் பதுங்கியிருந்து, படாத பாடு படுத்தும் காமம் என்பது புரிந்தது.

புணர்ச்சி செய்வதைத் தவிர, அதைத் தணிக்க வேறு வழியில்லை என்பதையும் அவர்கள் அறிந்தார்கள்.

“இப்போதெல்லாம் பல திருமணங்கள் விவாகரத்தில் முடியுது. அதனால, இன்றைய இளையத் தலைமுறையினர் சேர்ந்து வாழ்வதையே தேர்வு செய்யுறாங்க. என்னுடைய விருப்பமும் இதுதான்” என்றான் அறிவழகன்.

“எனக்கு மறுப்பில்லை. ஆனால் ஒரு திருத்தம். ஆறு மாதம் மட்டும் இணைந்து வாழலாம். வாழும்போது, பெரிய அளவில் கருத்து மாறுபாடுகளோ, தாம்பத்திய உறவில் வெறுப்போ அல்லது சலிப்போ ஏற்படாமலிருந்தால், அப்புறமும் சேர்ந்து வாழ்வது குறித்து அப்போதைக்கு முடிவு செய்யலாம். என்ன சொல்லுறீங்க?” என்றாள் மதியழகி.

“எனக்குச் சம்மதம். நாளையே வாடகைக்கு வீடு தேடுவோம்” என்ற அறிவழகன், அவர்கள் உரையாடிக்கொண்டிருந்த தேநீர் விடுதியில், யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, அவளின் ஒரு கன்னத்தில் அழுத்தமாக ஆசை முத்தம் பதித்தான்.