மக்கள் பெரும்பாலும் மாரடைப்பு, இதயச் செயலிழப்பு, இதயத் துடிப்பு ‘திடீர்’ நிறுத்தம் ஆகிய சொற்களை ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றைப் பயன்படுத்துகின்றனர். இந்த இதயச் சிக்கல்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவாக இருந்தாலும், இவை மூன்றும் வேறு வேறானவை. மாரடைப்பு[Heart Attack]: இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இரத்தக் கட்டிகள், தமனித் தடிப்பு, கொழுப்புப் படிவுகள் ஆகியவை தமனிகளை அடைத்து மாரடைப்புக்கு வழிவகுக்கின்றன.
மாரடைப்பின்போது, இதயம் தொடர்ந்து துடிக்கும். ஆனால், ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் அந்த உறுப்பை அடைய முடியாது. ஒருவர் சிகிச்சை பெறாமல் எவ்வளவு காலம் இருக்கிறாரோ, அந்த அளவிற்கு இதயத்திற்குச் சேதம் அதிகமாகும்.
இதன் அறிகுறிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் வேறுபடலாம். அறிகுறிகளில் மார்பு வலி, மூச்சுத் திணறல், குளிர் வியர்வை, குமட்டல், வாந்தி ஆகியவை அடங்கும்.
இதயச் செயலிழப்பு[Heart Failure]: இதயத்தால் உடல் முழுவதும் போதுமான இரத்தத்தைச் செலுத்த இயலாத நிலை 'இதயச் செயலிழப்பு' எனப்படுகிறது.
கரோனரி தமனி நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவை இதயச் செயலிழப்பை ஏற்படுத்தக்கூடும்.
இதயத்தின் ‘இரத்தத்தை உந்தித் தள்ளும் திறன்’ குறையும்போது, இரத்தமும் திரவமும் நுரையீரலுக்குள் பின்னோக்கிச் செல்லக்கூடும். இதன் விளைவு பாதங்கள், கணுக்கால்கள், கால்கள் ஆகியவற்றில் வீக்கம் ஏற்படலாம்.
இதயத் துடிப்பு ‘திடீர்’ நிறுத்தம்[Sudden Cardiac Arrest]: இது இதயத்தின் மின் சமிக்ஞைகளில் ஏற்படும் குழப்பத்தால் இதயத் துடிப்பு ஒழுங்கற்றதாக ஆகி, இதயம் ரத்தத்தைப் பம்ப் செய்யாமல் நடுங்கும் நிலையாகும்.
அரித்மியாஸ் எனப்படும் அசாதாரண இதயத் துடிப்புகள், இதயம் மிக வேகமாகவோ, மிக மெதுவாகவோ துடிக்க அல்லது முற்றிலும் துடிப்பதை நிறுத்தக் காரணமாகலாம்.
அரித்மியாவால் ஏற்படும் சிக்கல்கள் காரணமாக, இதயம் முற்றிலும் துடிப்பதை நிறுத்தும்போது, அது இதயத் துடிப்பு ‘திடீர்’ நிறுத்தம் என்று அழைக்கப்படுகிறது.
இதனுடன் தொடர்புடையவை: கரோனரி இதய நோய், உடல் ரீதியான மன அழுத்தம், பரம்பரைக் கோளாறுகள் ஆகியவை. அறியப்படாத காரணமின்றியும் இதயத் துடிப்பு ‘திடீர்’ நிறுத்தம் ஏற்படலாம். சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இதயத் துடிப்பு நிறுத்தம் ஏற்பட்ட ஒருவர் சில நிமிடங்களில் இறந்துவிடுவார்.
இதயத் துடிப்பு நின்றதற்கான அறிகுறிகள்:
சுயநினைவு இழப்பு, சுவாசிக்க இயலாமை. விரைவாகச் சிகிச்சை அளித்தால், நின்றுவிட்ட இதயத் துடிப்பைச் சரிசெய்ய இயலும்.
=====================