செவ்வாய், 18 டிசம்பர், 2018

கன்னியரின் கற்பு குறித்துக் 'கல கல' கவிதைகள்!

பொழுதுபோக்காக, 'Dr.இரா.பிரபா' அவர்களின் 'கற்பு-கலாச்சாரம்'[தமிழ்ப் புத்தகாலயம்] என்னும் நூலை வாசித்தபோது அதில் வெகுவாக ரசித்து மகிழ்ந்த, மகளிர் 'கற்பு' குறித்த சில கவிதைகள் கீழே. நீங்களும் வாசித்து இன்புறலாம்.
'ஒருத்தி போதாதென்று ஒரு நூறும் நாடுவீர்
உற்றயாம் பிறரை நோக்கின் 
ஓலமிட்டு உறுமியே கற்பு போச்சென்பீர்
ஒரு பாலர்க்கு ஒரு நீதியோ?' -முருகேச பாகவதர்.

'ஸ்கூட்டர்களுக்காகவும் ஃபிரிட்ஜிக்காகவும்
அலுவலகம் செல்ல
அனுமதிக்கப்படும் போது
எங்கள் கற்பின் எல்லை
விரிவாக்கப்படுகிறது'  -கவிஞர் ரோகிணி.

'கற்பின் திறத்தால் ஒரு 
நகரத்தைக் கரியாக்கலாம்
நல்ல மழை பெய்விக்கலாம்
என்றார்கள்
கற்போடு வேலை கேட்கப்போன
உன்னிடம்
கற்பையே கேட்டார்கள்'  -கந்தர்வன்.

'மதுரையைக் கொளுத்திய தெய்வீகக் கற்பைப்
பத்துக்கும் அஞ்சுக்கும் குத்தகை விடுவது
சிலம்பை ஏந்திய சிலையின் கீழேதான்'  -கவிஞர் இன்குலாப்.

'இழுத்து மூடும் சேலையிலும்
ஆணின் ஸ்பரிசம் படாத உடலுக்குள்ளும்
கற்பு ஒளிந்து கொண்டிருப்பதாய்
நான் நம்பவில்லை'  -ஒரு கவிதாயினி.

'அடுக்களை அரசி,
கற்புத் தெய்வம்,
மெல்லியலாள் என்றிவை
எல்லாம் வெறும் கனவுப்
பொன் விலங்குகள்
சுயநலக் காரர்கள் உன் மேற்சூட்டிய
மாயமுள் கிரீடங்கள்'  -மைத்ரேயி.

'கருப்பை சுமப்பதனால்
கற்பையும் சுமக்கும் பாவப்பட்ட
ஜென்மங்கள் நாங்கள்'  -ஒரு கவிஞர்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அமேசான் கிண்டிலில் என்னுடைய இன்னுமொரு நூல் சேர்க்கப்பட்டுள்ளது.

100% உண்மைக் கதைகள்: சிறுகதைகள் (Tamil Edition)