அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

தளராத 'தன்னம்பிக்கை' எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்!

இவ்வாண்டு[2018], தமிழுக்கான 'சாகித்திய அகாடமி' விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பேட்டி இன்றைய 'இந்து தமிழ்'[16.12.2018] நாளிதழில் வெளியாகியுள்ளது. பேட்டியின் தொடக்கத்தில், 'எழுத்தை நம்பியே ஒருவர் வாழலாம்' என்று அவர் குறிப்பிட்டிருப்பது, தமிழில் எழுதிக்கொண்டிருப்போருக்கும், எழுத நினைப்போருக்கும் மிக்க மகிழ்ச்சி தருவதாகவும் தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும் உள்ளது.
''எந்த வயதில் முழுநேர எழுத்தாளராக ஆவது என்று முடிவெடுத்தீர்கள்?'' என்னும் கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் நம்மைப் பெரு வியப்புக்கு உள்ளாக்குகிறது. சொல்கிறார்.....

''.....நான் ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருந்தேன்.....முனைவர் பட்டம் வாங்கிவிட்டேன் என்றால், கல்லூரியில் ஆசிரியராக வேலை கிடைத்துவிடும். அப்புறம் கல்லூரி வாழ்க்கை என்னைக் கட்டுப்படுத்த ஆரம்பிக்கும். ஆகவே, முனைவர் பட்டப்படிப்பைப் பாதியோடு நிறுத்திவிட்டேன்.....

.....'என்ன பண்ணப்போற?' என்ற என் வீட்டாரின் கேள்விக்கு, 'நான் என் படிப்பு முழுக்கவும் உங்கள்ட்ட சரண்டர் பண்ணிடுறேன். இனி நான் வெறும் ஆள். இனிமேல் நான் என்னவாக ஆகப்போகிறேன் என்று  பார்க்கப்போகிறேன். ஏதும் முடியவில்லை என்றால் திரும்பவும் வந்து இந்தச் சானறிதழ்களையெல்லாம் திரும்ப வாங்கிக்கிறேன்' என்று சொல்லிவிட்டேன். இன்றுவரை அந்தச் சான்றிதழ்கள் அங்கேதான் இருக்கின்றன.....
நான் சென்னைக்கு வரும்போது எனக்கு எந்தப் பிடிமானமும் கிடையாது. எல்லாவற்றையும் நான் உருவாக்கிக்கொண்டேன். அப்படி உருவாக்கும்போது எனக்கு என்ன தோன்றியது என்றால், 'நான் உறுதியாக இருந்தால் அது நடக்கும்' என்றுதான். அது நடந்தது.''

''.....தமிழ் மொழியில் எவ்வளவு பெரிய மாஸ்டர்கள் இருந்திருக்கிறார்கள்! உண்மையாகவே தேவாரத்திலும் திருவாசகத்திலும் கம்பராமாயணத்திலும் கையாளப்பட்ட மொழியைப் பார்த்தால் தமிழ் நிஜமாகவே ஒரு 'மேஜிக்'தான் என்று தோன்றுகிறது'' என்று இவர் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கும்போது, ராமகிருஷ்ணன் அவர்களுக்குத் தமிழின் மீது இத்தனை மரியாதையா என்று வியக்கத் தோன்றுகிறது.

எழுத்தாளர் அவர்கள், தளராத தன்னம்பிக்கை மட்டுமல்ல, மிகுந்த தன்னடக்கமும் கொண்டவர் என்பதை, ''எழுதி முடித்த பிறகு எல்லாப் புத்தகங்களும் எனக்கு ஏமாற்றத்தைத்தான் கொடுக்கும். நாம் நினைத்ததில் பாதிகூடச் செய்ய முடியவில்லையே என்ற அதிருப்திதான் அது. சரி, அடுத்த புத்தகத்தில் சரிசெய்துகொள்ளலாம் என்று நினைப்பேன்'' என்ற அவரின் கூற்று நமக்குப் புரியவைக்கிறது.

பேட்டியின் இறுதிப் பகுதியில், தம்மால் போற்றப்படுகிற எழுத்தாளர்கள் தஸ்தாயேவ்ஸ்கியும், டால்ஸ்டாயும், புதுமைப்பித்தனும் என்று சொல்லிப் பெருமைப்படுகிறார் பிரபல எழுத்தாளர்.

''இளம் எழுத்தாளர்களில் உங்களுக்கு நம்பிக்கை தருபவர்கள் யார்?'' என்னும் கடைசிக் கேள்விக்கு.....

''நிறையப் பேர் நம்பிக்கை தருகிறார்கள்[அவர்களில் முதன்மையானவர் 'பசி'பரமசிவம் என்பது ராமகிருஷ்ணன் அவர்களின் முடிவாக இருத்தல்கூடும். ஹி...ஹி...ஹி...]. அவர்களில் ஒருவர் பேரைச் சொல்லி இன்னொருவர் பேரை என்னால் விடமுடியாது'' என்று பதில் அளித்திருப்பது அவரின் பெருந்தன்மைக்குச் சான்றாகும்.

எழுத்தாளர் ராமகிருஷ்னன் அவர்களின் தன்னம்பிக்கையைப் போற்றுவதோடு, அவர் வாழ்நாளெல்லாம் பெரும் பெரும் சாதனைகளை நிகழ்த்தி, மிகச் சிறந்த விருதுகள் பெற்றிடவும் என் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

நன்றி.
------------------------------------------------------------------------------------------------------------------