புதன், 19 டிசம்பர், 2018

அரங்கா.....நீ உறங்குவது ஏன்?!

புனித வைகுண்ட ஏகாதசி நாளின் காலைப் பொழுது.

என் மனைவி தந்த சுவையான தேனீரைச் சுவைக்கத் தொடங்கியபோது அவள் கேட்டாள்: ''இன்னிக்கி வைகுண்ட ஏகாதசி. விடிகாலையிலேயே பரமபத வாசல்கிற சொர்க்க வாசல் திறந்திருக்கும். நீங்க வரமாட்டீங்கன்னு தெரியும். இருந்தாலும் கேட்கிறேன், வர்றீங்களா?'' 

''நான் வர்றது இருக்கட்டும். நீ எதுக்குப் போறே?''

''சொர்க்க வாசலில் நுழைஞ்சிட்டு வந்தா செத்தப்புறம் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்னு சொல்றாங்க.''

''சொல்றவங்க யாரு?''

''எல்லாரும்தான்.''

''எந்த நம்பிக்கையில் அப்படிச் சொல்றாங்க?''

''முன்னோர்கள் சொல்லியிருக்காங்க.''

''வைகுண்ட ஏகாதசி உருவானதுபத்தி அவங்க கதையெல்லாம் சொல்லியிருக்காங்க, தெரியுமா?''

''சுரன்கிற அரக்கன் தேவர்களைத் துன்புறுத்திட்டிருந்தான். தன்னைச் சரணடைந்த தேவர்களுக்காகச் சுமார் 1000 வருடங்கள் கடுமையாக அசுரனுடன் போர் புரிந்தார் மகாவிஷ்ணு.....''

இடமறித்தேன் நான். ''மகாவிஷ்ணுங்கிற கடவுள் சர்வ வல்லமை படைத்தவர். அனைத்தையும் படைத்தவர் அவரே. அவருக்குத் தெரியாம இப்படியொரு அரக்கன் எப்படித் தோன்றினான்னு எப்பவாவது யோசிச்சிருக்கியா?'' என்றேன்.

பதில் இல்லை.

''சுரன்னு ஒருத்தன் இருந்ததாகவே வைத்துக்கொள்வோம். மேலே சொல்லு.''

''இவனோடு 1000 வருசம் போர் புரிந்து களைச்சிப்போன மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார். அந்த நேரத்தைத் தனக்குச் சாதகமாக்கிய அசுரன், பகவானைக் கொல்லத் துணிந்த போது, அவருடைய சரீர சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டு,  அசுரனை எரிச்சிச் சாம்பலாக்கிடிச்சி.....

விழித்தெழுந்து நடந்ததை  அறிந்த மகாவிஷ்ணு, அந்தச் சக்திக்கு 'ஏகாதசி'ன்னு பெயர் சூட்டி, உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் செய்வேன்னு வரமளிச்சி, தன்னுள் மீண்டும் சக்தியை ஏத்துகிட்டாராம். இதுதான் அந்தக் கதை.''

''சண்டை போட்டுக் களைச்சிப்போனார்னு நீ சொல்லுறே. உறங்கிட்டார்னும் சொல்வாங்க. எதுவாகவோ இருக்கட்டும். பஞ்சபூதங்களால் ஆன உடலோடு வாழுற நமக்குத்தான் சோர்வு, உறக்கம் எல்லாம். கடவுளுக்கு நம்மை மாதிரி தேகம்னு ஒன்னு கிடையாது. இருந்தா, அவர் கடவுள் அல்ல. அப்புறம் எப்படி மகாவிஷ்ணு களைப்படைஞ்சார், உறங்கினார்னு எல்லாம் கதை சொன்னாங்க? பதில் சொல்லு.''

என்னவள் சொன்னாள்: ''முழுமுதல் கடவுளையே நம்பாத நீங்க இதையெல்லாம் நம்பவே மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். உங்ககிட்ட பேச்சுக் கொடுத்ததே தப்பு.....''

மீண்டும் குறுக்கிட்டேன். ''நான் நம்புறதில்லதான். ஆனாலும், இந்த ஒரு தடவை உன்னோடு நானும் சொர்க்க வாசலுக்கு வர்றேன். வந்தா சொர்க்கத்தில் எனக்கும் இடம் கிடைச்சாலும் கிடைக்கலாம்'' என்று கிண்டலாகச் சொன்னேன்.

''சொர்க்கத்துக்குப் போக நீங்க கோயிலுக்கெல்லாம் வரத் தேவையில்லை. கடவுள் நம்பிக்கையைக் கிண்டலடிச்சி இப்படியே பதிவுகள் எழுதிட்டிருந்தீங்கன்னா, பக்தர்கள் பொறுமையிழந்து, நேரடியா உங்களை அங்கே அனுப்பி வெச்சுடுவாங்க'' என்று பதிலடி கொடுத்தாள் என் இல்லக்கிழத்தி.
------------------------------------------------------------------------------------------------------------------ 
நேற்றே[18.12,2018] எழுதிமுடித்த பதிவு இது. என் மனைவியின் எச்சரிக்கையால் உண்டான பய உணர்வு தாமதத்துக்குக் காரணமானது. ஹி...ஹி...ஹி...

இப்பதிவு indiblogger முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------
100% உண்மைக் கதைகள்: சிறுகதைகள் (Tamil Edition)
அமேசான் கிண்டிலில் 5 நூல்கள்(புதுப்பிக்கப்பட்டவை)வெளியாகியுள்ளன.