துள்ளோட்ட நடையிலும், எதிர்பாராத முடிவுடனும் உங்களின் மனம் கவரும் 'கமகம' மண்வாசனைக் கதை. தவறாமல் படித்து மகிழுங்கள் அல்லது வருந்துங்கள்!
ஏழூர்ப்பட்டிக் கிராமத்தின் அம்மன் கோயிலில், பாத்தியப்பட்ட அத்தனை ஊர் மக்களும் திரண்டிருந்தார்கள்.
இருவார காலப் பண்டிகையின் இறுதி நாள் அது.
கரகாட்டம், கோலாட்டம், இசைத்தட்டு நடனம், அம்மனின் சப்பரப் பவனி, வாண வேடிக்கை என்று வழக்கமான கோலாகலத்துடன் இரவுப்பொழுது கழிய, பொழுது புலர்ந்ததும் கம்பம் பிடுங்கிக் காவிரியாற்றில் திருமுழுக்குச் செய்ததோடு ஏறத்தாழப் பண்டிகை முற்றுப்பெற்றிருந்தது. மிச்சமிருப்பவை, காலை நேரக் கிடாவெட்டும், பகல் விருந்தும், மாலை நேர மஞ்சள் நீராட்டமும்தான்.
அம்மனிடம் வேண்டுதல் வைத்தவர்கள், கோயிலில் தத்தம் ஆட்டுக் கிடாய்களுக்குக் கழுத்தில் மாலை அணிவித்து, பெரிய பண்ணையின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பெரிய பண்ணை வீட்டு ஆட்டுக் கிடாயை 'முதல் காவு' கொடுப்பது அங்கு பரம்பரை வழக்கமாக இருந்தது.
''என்னப்பா, பெரிய பண்ணை வீட்டுக் கிடாய் இன்னும் வரக்காணமே?'' -ஆளாளுக்குக் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.
இப்படி, எல்லோரையும் சலிப்புக்குள்ளாக்கித் தாமதமாக வருவதே பெரிய பண்ணைக் குடும்பத்தாரின் பரம்பரைக் குணமாக இருந்தது. அப்போதைய பண்ணையார் திருமலைச்சாமியும் இதற்கு விதிவிலக்கானவர் அல்ல. தமது நெருங்கிய சொந்தபந்தங்கள் சூழ மிக மெல்ல நடந்து கோயிலை நோக்கி வந்துகொண்டிருந்தார். கூடவே, ஒரு குட்டிக் குதிரை அளவுக்குக் 'கொழுகொழு' என்றிருந்த அவருடைய ஆட்டுக்கிடாயும் அழைத்துவரப்பட்டது.
''உங்க பக்கத்துத் தோட்டக்காரர் அத்தப்பன் கிடா வெட்டுறாரா?'' என்று திருமலைச்சாமியின் பெரியப்பா மகன் கேட்டார்.
''அம்மனுக்கு நேர்ந்துவிட்ட கிடாயை, வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வக்கில்லாம வித்துட்டான் அவன். காவு கொடுக்கிறதுக்கு யார்கிட்டயோ கடன் சொல்லி ஒரு கிடா வாங்கியாந்திருக்கான்னு சொன்னாங்க'' என்றார் திருமலைச்சாமி. அவர் குரல் தொனியில் ஏகத்துக்கு இளக்காரம்.
''அவர் ரொம்பவே நொடிச்சிப்போய்ட்டார்னு சொன்னாங்க. நிஜமா மாமா?'' -கேட்டவர் வெளியூரில் பொறியாளராக வேலை பார்க்கும் பெரிய பண்ணையின் தங்கை மகன்.
''என்னைப் பகைச்சான்; கெட்டுப்போனான்.''
''பங்காளிகளுக்குள்ள என்ன தகராறு?''
''கோயில் வந்திடிச்சி. அப்புறம் சொல்றேன் மாப்பிள்ளை'' என்றார் பெரிய பண்ணை.
பெரிய பண்ணைக்குச் சொந்தமாகப் பரந்துபட்ட பாசன நிலம் இருந்தது. லேவாதேவி பண்ணியதில், தேவைக்கு மேல் பணம் சேர்ந்திருந்தது.
வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் வசதி இல்லாத விவசாயிகளுக்குக் கடன் தருவதில் முன்னுரிமை வழங்கினார் பெரிய பண்ணை. நிலத்தை அடமானம் எழுதி வாங்கிக்கொண்டு கடன் தருவார். குறிப்பிட்ட காலக்கெடு முடிந்ததும் கடன் வசூல் ஆகாத நிலையில் அந்த நிலத்துக்கு அவரே உரிமையாளர் ஆகிவிடுவார். இப்படியாகத்தான் அவருக்கு அளவில்லாமல் சொத்துச் சேர்ந்தது.
அத்தப்பனின் விவசாய நிலத்தை அடுத்திருந்த சுப்பராயனின் பத்து ஏக்கர் புஞ்சை இந்த வகையில்தான் அவருக்குச் சொந்தம் ஆனது. அந்தப் பத்து ஏக்கர் புஞ்சைக்கும் அவருடைய பூர்வீக நிலத்துக்கும் நடுவே அத்தப்பனின் நாலு ஏக்கர் மேட்டுக்காடு இருப்பது பெரிய பண்ணையின் உள்மனதைக் குடைந்துகொண்டே இருந்தது.
அத்தப்பனை அழைத்து, ''கொஞ்சம் நிலத்தை வெச்சிகிட்டு மானாவாரிப் பயிர் பண்றே. பருவ மழை இல்லேன்னா அதுக்கும் வழி இல்ல. கை மேல பணம் தர்றேன். எனக்கு வித்துடு. வேற தொழில் செஞ்சி பிழைச்சிக்கோ'' என்றார்.
அத்தப்பன் மானஸ்தர். ''நீர் ஒன்னும் எனக்குப் பிழைக்க வழி சொல்ல வேண்டாம். இது என் பூர்வீகச் சொத்து. லட்சம் லட்சமா கொட்டிக் கொடுத்தாலும் இதை விற்க மாட்டேன்'' என்று வெடித்தார்.
''தேடி வர்ற அதிர்ஷ்டத்தை எட்டி உதைக்கிறே. இந்தப் பூர்வீகச் சொத்தை வெச்சிகிட்டு இதுவரை என்ன சம்பாதிச்சிக் கிழிச்சே?'' -சீண்டினார் திருமலைச்சாமி.
வெகுண்ட அத்தப்பன், ''உன் கண் முன்னாலயே சம்பாதிச்சிக் காட்டுறேன்'' என்று சவால்விட்டுப் போனார்.
அடுத்த சில வாரங்களிலேயே, தன் நிலத்தை அடமானம் வைத்துக் கடன் வாங்கினார் அத்தப்பன்; நிலத்தடி நீர்மட்டம் பார்ப்பவரை அழைத்துவந்து, அவர் குறித்துக் கொடுத்த இடத்தில் 'ஆழ்துளைக் கிணறு' தோண்டினார். துளையில் தண்ணீர் சீறிப் பாய்ந்தது.
மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தார் அத்தப்பன். ஆனால், அந்த மகிழ்ச்சி கொஞ்சம் நாட்களே நீடித்தது. இவருடைய துளைக்கிணற்றை ஒட்டிய தன் நிலப்பகுதியில் ஒரு ஆழ்துளைக் கிணறு குடைந்தார் திருமலைச்சாமி. சரியாக ஐநூறாவது அடியில் தண்ணீர் பொங்கிப் பீறிட்டது. இரண்டு கிணறுகளுக்கும் ஒரே நீரோட்டம் என்பதை அறிந்து, துளையின் ஆழத்தை ஆயிரம் ஆக்கினார் பெரிய பண்ணை.
சக்தி வாய்ந்த மோட்டார் பொருத்தி இரவுபகலாய் நீரை உறிஞ்சித்தள்ளினார். அவர் எதிர்பார்த்தது நடந்தது. அத்தப்பனின் துளைக்கிணற்றில் தண்ணீர் வருவது குறைந்து குடிக்க மட்டுமே மிஞ்சியது.
பெரிய பண்ணையின் பழிவாங்கும் படலம் அத்துடன் முற்றுப்பெறவில்லை.
அத்தப்பனின் பட்டா நிலத்தில், ஒரு பெரிய வயல் அளவுக்குப் புறம்போக்கு நிலம் சேர்ந்திருந்தது. அதையும் சேர்த்துத்தான் விவசாயம் செய்துவந்தார் அத்தப்பன். விவசாயக் கூலிகளைத் தூண்டிவிட்டு அதில் குடிசை போடவைத்தார்.
குடிசை போட்டவர்களிடம், ''இது என் அனுபோகத்தில் இருக்கு. இங்க நீங்க குடிசை போட்டது தப்பு. அப்புறப்படுத்துங்க'' என்றார் அத்தப்பன்.
''முடியாது. இது ஒன்னும் உன் பட்டா நிலம் இல்ல; பொறம்போக்கு'' என்றார்கள் கூலித் தொழிலாளர்கள்.
''பத்து வருசமா இதுக்கு சிவாஜிமா வரி கட்டுறேன்.''
''வரி கட்டுனா பட்டாக் கொடுக்கணும்கிறது கட்டாயம் இல்ல. அதை ரத்து பண்ணிட்டுக் குடியிருக்க இடம் இல்லாத எங்களுக்குப் பட்டா போட்டுத் தரச்சொல்லி கலெக்டருக்கு விண்ணப்பம் கொடுத்திருக்கோம்.''
''உங்க கோரிக்கையை ஏத்துகிட்டு கவர்மெண்டு உங்களுக்குப் பட்டா கொடுத்தப்புறம் இங்கே குடிசை போடலாம். இப்போ எல்லார்த்தையும் அப்புறப்படுத்துங்க.''
''முடியாது. உன்னால் ஆனதைப் பார்த்துக்கோ.''
கையூட்டுப் பெறும் அரசு அதிகாரிகளை எப்போதும் தன் 'கவனிப்பில்' வைத்துக்கொண்டு, தான் நினைப்பதைச் சாதிக்கிறார் பெரிய பண்ணை என்பது அத்தப்பனுக்குத் தெரிந்தே இருந்தது. ''உங்களுக்கெல்லாம் இத்தனை தைரியம் எப்படி வந்துதுன்னு எனக்குத் தெரியும். உங்களைத் தூண்டிவிட்ட அந்த அயோக்கியன் யார்னு எனக்குத் தெரியும். அவன் நாசமாய்ப் போவான்'' என்று மண்ணை அள்ளிப் பெரிய பண்ணையின் வீடு இருந்த திசையில் தூற்றினார் அத்தப்பன். அது மட்டும்தான் அவரால் முடிந்தது.
வெத்து ஆளா இருந்து எதையும் சாதிக்க முடியாது. பணக்கட்டு வேணும். அது இல்லேன்னா சனக்கட்டாவது இருக்கணும். அத்தப்பனுக்கு இந்த இரண்டுமே இல்லை என்பது பரிதாபம். கட்டிய பெண்டாட்டியையும் ஒரு பெண் குழந்தையையும் நிரந்தர நோயாளியான மாமனாரையும், குடிகார மைத்துனனையும் துணையாகக் கொண்ட அவரால் பெரிய பண்ணையை எதிர்த்து எதுவும் சாதிக்க முடியாது என்பது அவருக்கே தெரிந்துதான் இருந்தது.
இந்தச் சம்பவம் நடந்த மறுநாளே, கூலித் தொழிலாளர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக அத்தப்பன் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு வாரம் கழித்துப் பிணையில் வீடு திரும்பினார்.
கிடாயுடன் வந்த பெரிய பண்ணைக்கு வழிவிட்டு விழாக்கூட்டம் மரியாதை செலுத்தியது.
கிடாயின் கழுத்தில் பிணைக்கப்பட்டிருந்த கயிற்றைப் பிடித்தவாறு அம்மன் சந்நிதிக்கு எதிரே இருந்த பலிபீடத்தை நெருங்கினார் பெரிய பண்ணை.
கிடாயின் கழுத்தில் பூமாலை அணிவித்துத் தீபாராதனை காட்டி, பயபக்தியுடன் தீர்த்தச் செம்பைக் கையில் ஏந்திக் கிடாயின் மீது தீர்த்தத்தைத் தெளித்தார் பூசாரி.
காலதாமதம் செய்யாமல், தெளிக்கப்பட்ட தீர்த்தம் வெளிப்பட்டுச் சிதறும் வகையில் ரோமம் சிலிர்த்து, ஒட்டுமொத்த உடம்பையும் சிறிது நேரம் சிலுப்பிக் குலுக்கியது ஆட்டுக்கிடா.
''முதல் காவுக்கு அம்மனுடைய அனுமதி கிடைச்சிட்டுது'' என்று அனைவருக்கும் கேட்கும்படியாக உரத்த குரலில் சொன்ன பூசாரி, பலி பீடத்தில் சாத்தப்பட்டிருந்த பெரிய வெட்டரிவாளைக் கையில் ஏந்தினார்.
கிடாயின் கழுத்தைக் குறி வைத்து அரிவாளை ஓங்கினார். ஓங்கிய கை தாழ்வதற்குள், இன்னொருவரின் கை அதைத் தடுத்தது. அந்தக் கை அத்தப்பனுடையது.
கண்ணிமைப் பொழுதில், பூசாரியின் கையிலிருந்த அரிவாளைத் தன்வசப்படுத்திய அவர், அதே வேகத்தில் பெரிய பண்ணையைப் பற்றி இழுத்து, பலிபீடத்தின் முன்னால் தள்ளினார். மல்லாக்க விழுந்த அவரின் கழுத்தில் குறி பிசகாமல் அரிவாளை இறக்கினார்.
பெரிய பண்ணையின் தலை துண்டாகித் தரையில் உருண்டது. வெறி பிடித்தவர் போல, குருதி வெள்ளத்தில் கிடந்த பெரிய பண்ணையை இரண்டு கால்களாலும் மாறி மாறி மிதித்தார் அத்தப்பன்.
சற்றே எதார்த்த நிலைக்குத் திரும்பிய பின்னர், பெரிய பண்ணையின் தலையைக் கையில் ஏந்திய அவர், பேரதிர்ச்சியின் பிடியில் சிக்குண்டிருந்த ஊர் மக்களைப் பார்த்து.....
''சாமி ஏத்துக்கும்னு சொல்லி வாய் பேசாத உயிர்களைப் பலி கொடுக்குற பாவத்தை இனியும் செய்யாதீங்க. அதுக்குப் பதிலா, இந்தப் பெரிய பண்ணை மாதிரியான அயோக்கியர்களைக் காவு கொடுங்க'' என்றார்.
ரத்தச் சேறு பூசிய அவருடைய கால்கள் சற்றுத் தொலைவில் இருந்த கிராம நிர்வாக அதிகாரியின் அலுவலகம் நோக்கிக் கம்பீரமாக நடை பயின்றன.
------------------------------------------------------------------------------------------------------------------