திங்கள், 31 டிசம்பர், 2018

புத்தக வாசிப்பில் தமிழனும் மலையாளியும்!!

தமிழ்நாட்டிலுள்ள பிரபல நூல் வெளியீட்டாளர்கள், பிரபலக் கதாசிரியர்களின் நூல்களைப் பிரசுரித்து விற்பனை செய்தால், பிரசுரித்த பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும் சில நூறு பிரதிகளாவது விற்பனை ஆகாமல் தேங்கிக் கிடக்கும். இவற்றைப் பரபரப்பாக விற்பனையாகும் பிற நூல்களோடு இலவசமாகக் கொடுத்துவிடுவார்கள். தவறினால், விற்பனையாகாத பிரதிகள் கரையான்கள், எலிகள், பூச்சிகள் என்று பலவித ஜீவராசிகளுக்கும் இரையாக நேரிடும்.

ஆனால், அருகிலுள்ள கேரள மாநிலத்தில் புத்தக வெளியீடு இப்படியொரு அவலநிலையில் இல்லை.

அங்கே, எந்தவொரு நூலும் எடுத்த எடுப்பில் பத்தாயிரம் பிரதிகள் பிரசுரமாகி விற்றுத் தீர்ந்துவிடுகின்றனவாம்[தரம் காரணமோ?]. இரண்டாம் பதிப்பு, மூன்றாம் பதிப்பு[ஒவ்வொரு முறையும் பத்தாயிரம் படிகள்] என்று அச்சடித்துத் தள்ளுகிறார்களாம்.

அங்கே அவர்கள் தரமான வாசகர்களை நம்பிப் பத்தாயிரம் பிரதிகள் வெளியிடுகிறார்கள். இங்கே பொது நூலகத்தை நம்பி ஆயிரம் பிரதிகள் அச்சிடுகிறார்கள். நூலகம் ஏற்கவில்லை என்றால் பதிப்பாளர் நிலைமை 'ஐயோ பாவம்'தான்.

இங்கு முதல் பதிப்பு நூல்கள் விற்பனை ஆனாலே போதும் என்பது நிலைமை. தொடர் பதிப்புகள் வெறும் கனவு மட்டுமே.

மலையாளிகளின் சுய மொழிப்பற்றும், ஆர்வமும், வெறியும் தமிழர்களுக்கு இல்லை...இல்லவே இல்லை.

மலையாள சினிமாச் சுவரொட்டிகளைப் பார்க்கும்போது, தேனீர்க்கடை மலையாளி, ''ஓ...இது எங்கள் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் கதையாக்கும். ஈ சினிமா தகழி சிவசங்கரம்பிள்ளை கதை அல்லோ'' என்பார். நம் தமிழ்ச் சகோதரரோ.....

''கமல் படம்; ரஜினி படம்; சமந்தா படம்...'' என்றெல்லாம் சொல்லிச் சொல்லிப் பூரிப்பார். 

எம்.டி.வாசுதேவன் நாயர் வெளிநாடு சென்றுவந்த அனுபவங்களை மலையாளத்தில் நூலாக வெளியிட்டால், உடனே அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட ஒரு நாயர் தயாராக இருப்பார்[அவர்கள் தங்கள் மொழி நூல்களைக் காசு கொடுத்து வாங்குகிறார்கள்].

இப்படி, மலையாளிகள் கட்டுக்கோப்பாக, ஒற்றுமையாகச் செயல்பட்டு உயர்ந்து நிற்கிறார்கள்.

தமிழனுக்கு.....

சக எழுத்தாளன் மீது பொறாமைப்பட்டு, வீங்கி வெடிக்கவே நேரம் சரியாக இருக்கிறது.
------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: கண்ணன் மகேஷ்; 'வாங்க எழுதலாம்', தமிழ்ச்சோலைப் பதிப்பகம், போரூர், சென்னை-600116.