அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 22 டிசம்பர், 2018

நம்புங்கள்...'அநுமன்' எங்கள் சாதிக்காரர்!!!

ராவணனால் கடத்தப்பட்ட சீதையை மீட்பதற்காக இலங்கை புறப்பட்ட ராமபிரான், வழியில் 'கிட்கிந்தை'யில் தங்கி, வாலியை மறைந்திருந்து[கோழைத்தனமாக] கொன்று, சுக்கிரீவனை நண்பனாக்கி, அனுமனை உள்ளடக்கிய வானரசேனையுடன்[குரங்குகளல்ல, அவற்றின் உடலமைப்புக் கொண்ட மானுடர்கள்] தன் பயணத்தைத் தொடர்ந்தார் என்பதை அறிந்திருப்பீர்கள்.

ராமன் தங்கிச் சென்ற அப்போதைய கிட்கிந்தைதான் பழைய, மலைகள் நிறைந்த 'சேலம்'[சேலம், தர்மபுரி, நாமக்கல், சங்ககிரி ஆகியவற்றை உள்ளடக்கியது] மாவட்டம் ஆகும்.
(நாமக்கல் மலை)
                                                        
இன்று இப்பகுதிகளில் வாழ்பவர்கள், அன்று கிட்கிந்தையில் அரசோட்சிய அநுமன் வகையறாக்களின் வழி வந்தவர்கள் என்பது அறியப்பட்டுள்ளது. இதற்கான ஏராள ஆதாரங்கள் என் வசம் உள்ளன[பின்னர் நூலாக வெளியிடப்படும்]. 

இன்று இப்பகுதிகளில், கடுமையான உழைப்புக்கு உதாரணமாக விளங்குகிற சாதிகளில் எங்கள் சாதி குறிப்பிடத்தக்கதாகும். எனவே, அன்று ராமபிரானுக்காகக் கடுமையாக உழைத்த அனுமன், இன்று நாட்டுக்காக உழைக்கிற எங்களின் சாதியைச் சார்ந்தவர்தான் என்பதை உறுதியுடனும் மிக்க பெருமையுடனும் நான் சொல்லிக்கொள்கிறேன்.

இன்றளவும் இந்த அரிய உண்மையை அறியாத என் சாதி மக்கள், அவர்கள் அறிந்துகொள்வதோடு நாடெங்கும் பரப்புரை செய்தல் வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

அத்துடன்.....

அனுமன் எங்கள் சாதியைச் சேர்ந்தவர் என்பதை இந்த நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரும் அறிவாராக.

''அனுமன் உன் சாதிக்காரர் என்கிறாய்...சரி. உன் சாதியைச் சொல்லவில்லையே?'' என்று கேட்கிறீர்கள்தானே.

அது...வந்து...அது வந்து...ஹி...ஹி...ஹி...

முக்கிய குறிப்பு:

இப்பதிவுக்குத் தூண்டுதலாக அமைந்த 'இந்து தமிழ்'[22.12.2018]ச் செய்தி கீழே[சுருக்கமாக].....

#சமீபத்தில், ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தின்போது உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத்,  ''அனுமன் ஒரு தலித்...'' என்றார்.

நேற்று முன்தினம் பஜகவைச் சேர்ந்த 'புக்கல் நவாப்' என்பவர், ''முஸ்லீம்களின் பெயர்கள் ஒலிப்பது போல் அனுமனின் பெயரும் ஒலிப்பதால் அனுமன் ஒரு முஸ்லீம்'' என்றார்.

இந்நிலையில், உ.பி.மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் 'லக்ஷ்மி நாராயண் சவுத்ரி', ''அநீதிக்கு எதிராகப் பொங்கி எழுந்தவர் அனுமன் என்பதால் அவர் ஜாட் சமூகத்தவர் ஆவார்'' என்று கூறியிருக்கிறார்#
------------------------------------------------------------------------------------------------------------------
100% உண்மைக் கதைகள்: சிறுகதைகள் (Tamil Edition)கடவுள்?.....ஊஹூம்!: தற்சார்பற்ற சுயசிந்தனைப் பதிவுகள் (Tamil Edition)
அமேசான் கிண்டிலில் 06 நூல்கள் வெளியாகியுள்ளன.