சனி, 7 செப்டம்பர், 2013

குமுதம் ஆசிரியருக்கு: “பத்தாங்கிளாஸ் அறிவியல் புத்தகம் படிங்க பாஸ்!”

பதிவின் உள்ளடக்கம்: ‘எழுத்தாளர் ராஜேஷ்குமார் சிறுகதையில் அறிவியல் படும்பாடு!!!’

ணக்கம் நண்பரே...நண்பர்களே,

உங்களிடம் கொஞ்சம் அறிவியல் படிச்சிட்டு, இந்த வாரக் குமுதம் இதழில்[11.09.2013] வெளியாகியுள்ள, பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமாரின், ‘ஒரு கிராம் நிலா’ என்னும் சிறுகதையைப் ‘போஸ்ட்மார்ட்டம்’ செய்யப் போறேன்.

நான்:
‘தனிமம்’னா என்னங்க?

நீங்கள்:
 அணுக்கள் பல இணைந்தவையே பொருள்கள். இவற்றுள் ஒரே வகை அணுக்கள் பல சேர்ந்தது தனிமம்(element) எனப்படுகிறது. ஒரு தனிமத்தின் அணுவைப்போல் மற்றொரு தனிமத்தின் அணு இருக்காது. எனவே, ஒரே அணு எண் கொண்ட அணுக்களால் ஆன பொருளே தனிமம் ஆகும். சான்றாக இரும்பு ஒரு தனிமம்.[www.thiru-science.blogspot.com]

நான்: 
தனிமங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து புதுப்புதுத் தனிமங்களாய் உருவாகும்தானே?

நீங்கள்: 
என்னய்யா உளறுறே? தனிமங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்தால் அதற்குத் தனிமம்னு பேர் இல்ல; சேர்மம்’னு பேரு. சேர்மம்(Chemical Compound) அல்லது கூட்டுப்பொருள் என்பன ஒன்றுக்கும் மேற்பட்ட தனிமங்களின் இணக்கத்தினால் உருவாகும் மாசற்ற கூட்டமைப்பு ஆகும். அணுக்களின் இடையே உருவாகும் பிணைப்பின் தன்மையைப் பொருத்து சேர்மங்கள் வகைப்படுத்தப் படுகின்றன. எடுத்துக்காட்டாக இரண்டு ஹைட்ரஜன்அணுக்களையும் ஒரு ஆக்ஸிஜன் அணுவினையும் கொண்ட நீர் (H2O) ஒரு சேர்மம் ஆகும். [விக்கிபீடியா]

நான்:
நான் உளறுலீங்க.  ‘ஒரு கிராம் நிலா’ சிறுகதையில் ராஜேஷ்குமார் இப்படிச் சொல்லியிருக்காருங்க. அவருதான், பாறைப்படிவச் சிதறலைத் தனிமம்னு சொன்னதோட, தனிமங்கள் ஒன்னோட ஒன்னு இணைஞ்சி புதுத் தனிமங்கள் உருவாகும்னு சொல்லியிருக்கார்.

நீங்கள்:
இது மாதிரி, தப்புத் தப்பா இன்னும் என்னவெல்லாம் சொல்லியிருக்கார்?

நான்:
கோபப்படாதீங்க. சுருக்கமா கதையைச் சொல்லிட்டுச் சொல்றேன்.
‘கிருபா’ன்னு ஒரு புரொஃபசர். நம்ம நாட்டுக்காரர்தான். நாஸா[NASA] நடத்துற ஒரு கல்லூரியில் பணி செஞ்சுட்டு நம் நாடு திரும்புறார்.

அவருக்கு அந்த நாஸா, அமெரிக்க விண்வெளி வீரர்கள் அங்கிருந்து கொண்டுவந்த பாறைப் படிவச் சிதறல்களில் இருந்து ஒரு கிராம் எடையுள்ள கல் தர்றாங்களாம்.

அந்த ஒரு கிராம் கல், நம்ம பூமியில் ஒரு டன் தங்கத்துக்குச் சமமானதுன்னு ப்ரொஃபசர் சொல்றார்.....

நீங்கள்: [குறுக்கிட்டு] ஒரு டன் தங்கத்துக்குச் சமமானதா?!?! அடங்கொப்புறானே, அப்படியொரு மகத்தான பரிசு தர்ற அளவுக்கு இவர் அங்கே என்ன கிழிச்சாராம்...மன்னிக்கணும், சாதிச்சாராம்?

நான்: அதைப் பத்தியெல்லாம் கதாசிரியர் ஒன்னும் சொல்லலைங்க.

நீங்கள்:  சரி, மேலே சொல்லு.

நான்: அந்தக் கல்லை எப்பவும் ஒரு கண்ணாடிப் பேழைக்குள்தான் வெச்சிருக்கணுமாம். ரெண்டு அல்லது மூனு மணி நேரத்துக்கு மேல வெளியில் வெச்சிருந்தா, வாயுக்களோட கலந்து புதிய வைரஸ்களை உண்டாக்குமாம். ஏதாவது உலோகப் பொருளோட ரசாயனக் கிரியை பண்ணி, ஒரு அணுகுண்டு வெடிச்சா, எவ்வளவு சேதம் உண்டாகுமோ அவ்வளவு சேதத்தை இந்தப் பூமிக்கு உண்டாக்குமாம்.

இப்படியெல்லாம் எச்சரிகை பண்ணித்தான்.....

நீங்கள்: [மீண்டும் உங்கள் குறுக்கீடு] இவர்கிட்டே கொடுத்தாங்கன்னு சொல்ல வர்றே. ஏய்யா, கொஞ்சம் அஜாக்கிறதையா இருந்தா இத்தனை பெரிய அழிவை உண்டு பண்ணுற இதை ஒரு தனி மனிதனான இந்தக் கிருபாவுக்குப் பரிசா தருவாங்களா?

ராஜேஷ்குமார்தான் ஏதோ தெரியாம எழுதிட்டார்னா, அதைப் படிச்சுட்டு எங்ககிட்டே கதை சொல்ல வந்துட்டியே, நாங்கெல்லாம் என்ன கூமுட்டைகளா?

நான்: மன்னிச்சுடுங்க. குமுதம் பல லட்சம் வாசகர்களால படிக்கப்படுற வார இதழ். கதையில் தப்பு இருந்தா, ஆசிரியர் பிரசுரிச்சிருக்க மாட்டார்னு நம்பிட்டேன்.

நீங்கள்: முதலில் அந்தக் குமுதம் ஆசிரியரைப் பத்தாங்கிளாஸ் அறிவியல் புத்தகத்தைப் படிக்கச் சொல்லு. அடிப்படை அறிவியல்கூடத் தெரியாம பத்திரிகை நடத்த வந்துட்டார்.

நான்: போகட்டும். மேலே கதையைச் சொல்லட்டுங்களா?

நீங்கள்: கதையின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டுபோச்சு. இனி என்ன கதை வேண்டியிருக்கு? நீ ஒரு டென்ஸன் பார்ட்டி. இனி சொல்லாதேன்னு சொன்னா மனசு உடைஞ்சிருவே. சொல்லு. [உங்க மனசுக்குள்: “சொல்லித் தொலை”]

நான்: நாஸாக்காரங்க சொன்னபடியே அந்த ஒரு கிராம் கல்லை[அதுக்குத்தான் ‘ஒரு கிராம் நிலா’ன்னு கவர்ச்சியா பேரு வெச்சிருக்காரு] கண்ணாடிக் குடுவையில் வெச்சி, ஒரு நிலவறைக்குள்ள பாதுகாப்பா வெச்சிருக்கார்.

‘உமாதாணு’ன்னு சி.பி ஐ டைரக்டர். இவருக்குத் தெரிஞ்சவராம்.

“தீவிரவாதிகள் ஒரு கிராம் நிலவை அபகரிக்கத் திட்டம் போட்டிருக்காங்கன்னு தகவல் கிடைச்சிருக்கு. அதனால, இதை, நேஷனல் கெமிக்கல் எலிமெண்ட்ஸ் ரிசர்ச் யூனிட்டுக்குக் கொடுத்துரு” அப்படீன்னு கிருபாவுக்கு அட்வைஸ் பண்றாரு. இவரும் அப்படியே கொடுத்துடுறார்.....

நீங்கள்: கதை முடிஞ்சுதுதானே?

நான்: இல்லீங்களே.

நீங்கள்: [நீங்கள் இறுகிய முகத்துடன் மௌனம் சாதிக்கிறீர்கள்]

நான்: [தொடர்கிறேன்] ஒ.கி.நிலா இவர்கிட்டேதான் இருக்குன்னு தீவிரவாதிகள் நினைப்பாங்களாம். அவங்களால இவர் உயிருக்கு ஆபத்து நேருமாம். அதனால, பிரஸ்காரங்களையும் பெரிய போலீஸ் ஆஃபீசரையும் தன் வீட்டுக்கு வரவழைச்சு [உள்துறை அமைச்சர் காதுல போட்டுட்டுச் சும்மா கிடக்க வேண்டியதுதானே. இந்த ஆளு என்ன கிறுக்குத்தனமா ஏதேதோ பண்றான்னு நினைக்காதீங்க] ஒ.கி நிலவை யாரோ திருடிட்டுப் போய்ட்டாங்கன்னு சொல்றாரு. இதுல என்ன வேடிக்கைன்னா, அவருடை பொண்ணுகிட்டேயும் இதே பொய்யைச் சொல்றாரு.

நீங்கள்: போதும். முடிவை மட்டும் சுருக்கமா சொல்லு.

நான்: தமிழ்நாடு போலீஸையும் பிரஸ்காரங்களையும் நம்ப முடியாதுன்னு, யாரு ஒ.கி நிலவை நே.கெ.எ.ரி.யூனிட்டுக்குக் கொடுத்துருன்னு ஐடியா தந்தாரோ அந்த சி.பி ஐ அதிகாரிகிட்டயே மறுபடியும் போறாரு. போயி.......

நீங்கள்: [படு பயங்கர கோபத்துடன்] யோவ்...போதும் நிறுத்துய்யா. இந்தக் கதையைச் சொன்னதுக்காக இந்த ஒரு தடவை உன்னை மன்னிக்கிறோம். இனியும் இந்த மாதிரி கதையைச் சொன்னீன்னா..... அப்புறம் நடக்குறதே வேற. என்ன, சொன்னது புரிஞ்சுதா?

நான்: புரிஞ்சுதுங்க. ஒரு வேண்டுகோள்...என்னை எச்சரிக்கை பண்ணின மாதிரி அந்தக் குமுதம் பத்திரிகைக்காரங்களையும் எச்சரிக்கை பண்ணிடுங்க.

#####################################################################################