வியாழன், 5 செப்டம்பர், 2013

ஐன்ஸ்டீனின் ‘சார்பியல் கொள்கையை’க் கேள்விக்குள்ளாக்கும் ஒரு தமிழர்!

##விண்வெளி வளைந்திருக்கிறது என்று சொன்னால் நம்மால் நம்ப முடிகிறதா? “இதைச் சிந்தனையில் தேக்குவதற்கு விஞ்ஞானிகளே திணறினார்கள்” என்கிறார் சுஜாதா##


“அரிஸ்டாட்டிலின் கொள்கையைக்[theory] கலிலியோவும் கோப்பர்நிகசும் திருத்தினர். நியூட்டனின் கொள்கையை ஐன்ஸ்டீன் திருத்தினார். ஐன்ஸ்டீனின் கொள்கையை ’ஸ்டீபான் ஹாக்கிங்’ மாற்றியமைக்கிறார். அவருடைய கொள்கைகளும் முடிந்த முடிவினவாய் இல்லை. அறிவியலைப் பொருத்தவரை எந்தக் கொள்கையும் நிரந்தரமானதல்ல.”  [’நான் அறிவு ஆன்மா பிரபஞ்சம்’, 2005 ஆம் ஆண்டு வெளீயீடு. கார்த்திகேயன் பதிப்பகம், சென்னை]

பேராசிரியர் கே.என் ராமச்சந்திரன்[இயற்பியல் & அறிவியல் பேராசிரியர்] அவர்களின் மேற்கண்ட கருத்தை மனதில் பதித்து மேலே படியுங்கள்.

[theory என்னும் ஆங்கிலச் சொல்லை, கொள்கை, கோட்பாடு, தத்துவம், சித்தாந்தம் என்று பலவாறாக மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக, இங்கு ‘கொள்கை’ என்னும் சொல்லே கையாளப்படுகிறது]


இயற்பியல், வானவியல் போன்ற விஞ்ஞானக் கல்வி கற்றவர்களும், அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிவதில் ஆர்வம் உள்ளவர்களும் ஐன்ஸ்டீனின் ‘பொதுச் சார்பியல் கொள்கையை’[General Relativity Theoryஓரளவேனும் அறிந்திருப்பார்கள்.

‘ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியல் கொள்கை கொஞ்சம் தலை சுற்ற வைக்கும். விண்வெளியே வளைந்திருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? 1915ல் அவர் அதை நம்ப வைத்ததுமில்லாமல் 1919ல் ஒரு சூரிய கிரகணத்தின் போது அது நிரூபிக்கவும்பட்டது. கிராவிடேஷன் என்னும் ஈர்ப்பு விசையே விண்வெளியின் தன்மை. அதிகக் கனமுள்ள நட்சத்திரங்களுக்கு அருகில் அந்த விசை அதிகமிருந்தால், அது ஒளிக்கதிரை வளைத்து உள்ளே இழுத்துவிடும். கரும் பள்ளங்கள் உருவாகும். இதெல்லாம் எந்த வகையிலும் ரீல் அல்ல. ஐன்ஸ்டைனின் ஜெனரல் தியரி சிந்தனைகளின் விளைவாக. சென்ற நூற்றாண்டில் ஐன்ஸ்டைனுக்குப் பின் வந்த விஞ்ஞானிகள். பலமுறை பரிசோதித்துப் பார்த்து நிரூபித்த உண்மைகள். [இந்தப் பத்தி, sree எனபவரின், ‘எல்லாம் இறைவன் செயல் என்பவனைப் பைத்தியம் என்போம்’  {ஜூலை 6,2009} என்னும் பதிவிலிருந்து எடுத்தது]

எழுத்தாளர் சுஜாதா தரும் விளக்கம், இக்கொள்கையை இன்னும் தெளிவாகப் புரிய வைக்கும் என்று எண்ணுகிறேன்............

‘நியூட்டன் விதிப்படி, ஈர்ப்புச் சக்தி என்பது ஒரு பொருளின் ஆதார இயற்கை. ஒரு பொருளின் எதிரே மற்றொரு பொருளை வைத்தால், இரண்டும் ஒன்றுக்கொன்று கவர்ந்துகொள்வது அவற்றின் இயற்கை என்று நம்பினார் அவர். ஐன்ஸ்டீன் அப்படி நம்பவில்லை. அவருடைய சித்தாந்தப்படி[கொள்கை] இந்த ஈர்ப்புச் சக்தி ஜடப்பொருளின் இயற்கை அல்ல. 

வெளியில் பொருள் இருக்கும்போது பொருளைச் சுற்றியுள்ள வெளி வளைந்துவிடுகிறது......


[இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது......‘வெளி வளைகிறது’ என்பதாகும்]

வெளி வளைவதால் ஏற்படும் சரிவு அல்லது வழுக்கல் ‘ஈர்ப்புச் சக்தி’[gravitation]யாக இருக்கிறது. அந்த ஈர்ப்புச் சக்திதான் பொருளைத் தன்னுள் ஈர்த்துக்கொள்கிறது. [நியூட்டன் சொன்னது போல, பொருளுக்கு ஈர்க்கும் சக்தி இல்லை]

இந்த ஈர்ப்புச்சக்தி ஒளியையும் தன்பால் ஈர்க்க வல்லது.

சூரிய கிரகணத்தின் போது, சூரியனுக்குப் பின்னால் மறைந்திருக்கும் நட்சத்திரங்களின் ஒளியானது, வளைந்திருக்கும் வெளி வழியாக [ஈர்ப்புச் சக்தியால் ஈர்க்கப்பட்டு] நம்மை வந்து சேர்கிறது.


இது சூரிய கிரகணத்தின்போது நிரூபிக்கப்பட்டது [கிரகணம் இல்லையென்றால், சூரியனின் அதீத ஒளியில் நட்சத்திர ஒளி நம் கண்களுக்குத் தெரியாது என்பது தெரிந்ததே]

இப்போது, ஐன்ஸ்டீனின் இந்தப் பொதுச் சார்பியல் கொள்கை, அது பற்றி அறியாதவர்களுக்கும் பெருமளவு புரிந்திருக்கும். முழுவதும் புரிய வேண்டுமென்றால் நாம் ஒரு விஞ்ஞானியாக இருத்தல் வேண்டும்.

இக்கொள்கை விஞ்ஞானிகளையே திணறடிப்பதாக சுஜாதா கூறுகிறார். “வளைந்த வெளியைச் சிந்தனையில் தேக்குவதற்கே விஞ்ஞானிகள் திணறினார்கள்” என்கிறார்.

இந்த ஈர்ப்புச் சக்தி எவ்வாறு உருவாயிற்று என்பதையும் விஞ்ஞானிகள் விளக்கியிருக்கிறார்கள். எப்படி?

’ஐன்ஸ்டீனின் பொதுச் சார்பியல் கொள்கையின்படி, விண்வெளியில் சில இடங்களில் [கவனிக்க...’சில இடங்களில்’. அந்தச் சில இடங்கள்தான் வெளியின் வளைவுகளோ?] பருப்பொருள் முழுதும் ஒரு நுண்ணிய புள்ளிக்குள் சுருங்கி, மகத்தான பொருண்மையும் மாபெரும் ஈர்ப்பு விசையும் கொண்டதாக ஆகிறது. அதை ‘ஒருமை[singularity], கருந்துளை[Black Hole]எனப் பலவாறாகப் பெயரிட்டு அழைக்கிறார்கள். [விளக்கம்: பேரா.கே.என் ராமச்சந்திரன்]

இந்தக் 'கருந்துளை' குறித்து ஆய்வு செய்து பிரபலம் ஆனவர் விஞ்ஞானி ‘ஹாக்கிங்’. [இது பற்றி இவர் எழுதிய நூல் பல லட்சம் பிரதிகள் விற்றதாம்!]

ஆனால், இந்தத் துளை பற்றிய தன் கொள்கையை இவரே பின்னர் மாற்றிக்கொண்டுவிட்டாராம்!

“கருந்துளையை ஒரு தூலப் பொருளாகக் கருத முடியாது. அது ஒரு மண்டலம். அதுவும் மெல்ல மெல்லக் கரைந்து போகிற ஒன்று” என்று குழப்புகிறார்!

மேற்கண்ட கொள்கைகளையும், விளக்கங்களையும் உள்வாங்கிக்கொண்டு, ஐன்ஸ்டீனின் கொள்கையில் உள்ள முரண்பாட்டைத் தைரியமாகச் சுட்டிக் காட்டி, அது பற்றிய நூல் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார் தமிழரான வ. அழகுமுத்து என்பவர்! [நூல்: ‘நான் அறிவு ஆன்மா பிரபஞ்சம்']

தம் நூலில், ’வெளியும் காலமும்’என்னும் தலைப்பில்..........

’வெளியும் காலமும் ‘தனிமுதல்’ பொருள்களல்ல; ஜட உலகைச் சார்ந்து வெளிப்படுவன. பிரபஞ்சத்திலுள்ள அனைத்துப் பொருள்களும் இல்லை என்று வைத்துக்கொண்டால், காலமும் வெளியும் இல்லை என்பதை உணர முடியும். ஜடப் பொருள்களின் இருப்பு மற்றும் இயக்கம் காரணமாகத்தான் அவை இருப்பதாகத் தோன்றுகின்றன’ என்பதை முதற்கண் தெளிவுபடுத்திவிடுகிறார்.

ஐன்ஸ்டீன் அவர்களால் அறிவிக்கப்பட்ட ‘சிறப்புச் சார்பியல் கொள்கை[Special Relativity Theory]யின்படி[காலமும் வெளியும் இயல் உலகப் பொருள்களின் சார்புடையவை] இவ்விளக்கம் உறுதிப்படுவதாகச் சொல்கிறார் அழகுமுத்து.

அதை, ”இயல் உலகப் பொருள்கள் எல்லாம் இல்லாது மறைந்துவிட்டால், காலத்துக்கும் வெளிக்கும் என்ன நேரும்?” என்று கேட்ட ஒரு பெண்ணுக்கு[அவரைச் ‘சீமாட்டி’ என்று குறிப்பிடுகிறார். மேல் விவரம் ஏதும் தரவில்லை] ஐன்ஸ்டீன் தந்த பதிலையும் முன்வைக்கிறார்.

ஐன்ஸ்டீன்: "பொருளியல் உலகம் இல்லாது மறைந்துவிட்டாலும், காலமும் வெளியும் இருக்கும் என்று முன்பு நம்பப்பட்டது. ஆனால், சார்பியல் கோட்பாட்டின்படி, இயல் உலகில் பொருளியல் உலகம் மறைந்துவிட்டால் காலமும் வெளியும் உடனே மறைந்துவிடும்.” என்கிறார்.

"ஐன்ஸ்டீனின் இந்தக் கூற்றைச் சிக்கெனப் பற்றிக்கொண்டுவிட்ட அறிஞர் அழகுமுத்து, “வெளி என்று ஒன்று இல்லை[அது வெறுமையானது; சூன்யமானது] என்ற கொள்கை கொண்ட ஐன்ஸ்டீன், வெளி வளைகிறது என்றும் அங்கே ஈர்ப்புச்சக்தி இருக்கிறது. அதுதான் ஒளி முதலானவற்றைத் தன்பால் ஈர்க்கிறது என்றும் சொன்னது எப்படி?” என்று கேள்வி எழுப்புகிறார்.

இல்லாத ஒரு பொருள்[வெளி], வளைகிறது; ஈர்க்கிறது என்று சொல்வது கொள்கை முரண்பாடல்லவா என்றும் கேட்கிறார்.

‘சூரிய கிரஹணத்தின் போது, சூரியனுக்குப் பின்னால் மறைந்திருக்கிற நட்சத்திர ஒளி, ‘வெளி வளைந்திருப்பதால் நம் கண்ணுக்குத் தெரிகிறது என்பது சரி என்றாலும், வெளி வளைந்திருப்பதும், ஈர்ப்புச் சக்தி என்று ஒன்று இருப்பதும் நிரூபிக்கப்படவில்லையே’ என்கிறார். [நட்சத்திர ஒளியானது, வேறு காரணங்களாலும் நம் கண்ணுக்குத் தெரிவதாக அமையக்கூடும்]

இவர் இவ்வாறு கேட்பதைச் ‘சரி’ என்று ஏற்க முடியாவிட்டாலும், ‘தவறு’ என்றும் என்னால் சொல்ல முடியாது என்கிறார் நூலுக்கு கருத்துரை வழங்கியவரும், ‘பிரபஞ்சம் ஒரு புதிர்’ என்ற நூலின் ஆசிரியருமான பேராசிரியர் கே. என்.ராமச்சந்திரன் அவர்கள்.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய பேராசிரியர், டாக்டர் ரமேஷ்குமார் அவர்கள், “காலவெளி பற்றி இதுபோல் ஒரு நூல் வெளிவந்ததில்லை” என்பதோடு, “மேலது கீழாய் கீழது மேலாய் நம் பிரபஞ்ச நோக்கைப் புரட்டிப் போட்டவர் ஐன்ஸ்டீன். நவீன பௌதீகத்தில் அவருடைய தாக்கம் பிரும்மாண்டமானது. அவருடன் குஸ்தி போடுகிறார் அறிஞர் அழகுமுத்து” என்று வியந்து பாராட்டுகிறார்.

ஐன்ஸ்டீனுடன் குஸ்தி போடுவதற்கான தகுதி, அறிஞர் அழகுமுத்துக்கு உள்ளதா என்பதை அறிஞர் உலகம்தான் தீர்மானிக்க வேண்டும்.