சர்வ அலங்காரங்களுடன் அடக்கவொடுக்கமாகக் காப்பி கொண்டுவந்து கொடுத்த செண்பகாவை, மணிமொழியனின் வீட்டாருக்குப் பிடித்திருந்தது. பெண் வீட்டார் முகங்களிலும் மகிழ்ச்சி தெரிந்தது.
நாட்டு நடப்பு பற்றிய இருதரப்பாரின் பொதுவான கருத்துப் பரிமாற்றங்களுக்கிடையே, “மாப்பிள்ளையும் பொண்ணும் தனிமையில் கொஞ்ச நேரம் பேசட்டும்” என்று தரகர் சொன்னார்.
இரு வீட்டுப் பெரியவர்களும் தலையசைத்த நிலையில், மணிமொழியனோ செண்பகாவோ இருந்த இடத்தைவிட்டு நகரவில்லை.
மணிமொழியனின் தோள் தொட்டு, “எழுந்து போப்பா” என்றார் அவனின் சித்தப்பா.
“வருசக்கணக்கில் குடும்பம் நடத்திப் பிள்ளைகளைப் பெத்ததுக்கு அப்புறமும் விவாகரத்துக் கேட்டு அலைகிறவங்க எண்ணிக்கை அதிகரிச்சிட்டே போகுது. நாங்க ரெண்டு பேரும் அரை மணி நேரம் போல் தனிமையில் பேசுறதால எந்தவிதப் பயனும் இல்லை. பொண்ணு விரும்பினா தனியாப் பேசச் சம்மதம்” என்றான் மணிமொழியன்.
சில நிமிட அமைதிக்குப் பிறகு பெண் வீட்டார் சார்பாக வயதான பெண்மணி ஒருவர் சொன்னார்: “செண்பகாவும் அதையேதான் சொல்லுறா.”
“பொது அறிவு விசயத்தில் எங்களுக்குள்ள நல்ல பொருத்தம் இருக்கு. மனப் பொருத்தமும் இருக்கும்னு நம்புறேன். அடுத்து நடக்க வேண்டியதைப் பேசுங்க” என்று முகத்தில் புன்னகை தவழச் சொன்னான் மணிமொழியன்.
