*17 மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட 54 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக இருப்பதாகப் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆங்கிலம் பயிற்று மொழியாகக் கற்பிக்கப்படுகின்ற அரசுப் பள்ளிகளில் தமிழும் பயிற்றுமொழியாகக் கொண்டு வகுப்புகள் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது ஆங்கிலத்தை மட்டுமே பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளிகளாக அவை மாற்றப்பட்டுள்ளன என்னும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்துப் பள்ளிக் கல்வித் துறையிடம் விளக்கம் கேட்டபோது ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளிகள் ஒன்றுகூட இல்லை என்று சொல்லியிருக்கிறது[சமாளித்திருக்கிறது] அரசு[www.thanthitv.com].
தமிழ்நாட்டில் 54 அரசுப் பள்ளிகளில் பயிற்று மொழியாகத் தமிழ் இல்லாமல் போனதற்கான காரணம் என்ன?
தமிழர்கள்தான். தமிழர்களான தமிழ்ப் பெற்றோர்கள்தான்.
*தமிழ்நாட்டில் 34871 தொடக்கப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 8500 பள்ளிகள் ஆங்கிலப் பயிற்று மொழிப் பள்ளிகளாக உள்ளன[இப்போது இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது].
வேலை வாய்ப்பைக் கருத்தில் கொண்டு ஆங்கில வழியில்தான் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள் பெற்றோர்கள். உலக நடப்பை அறியாத ஏழைகள்தான் தமிழ்ப் பயிற்றுமொழியைத் தேர்வு செய்கிறார்கள்.
தாய்மொழி வழியில் கல்வி பெறுவதே குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்றது என்று மிகப் பல ஆண்டுகளாக அறிஞர்கள் ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அரசோ பெற்றோர்களோ இதைச் செவிமடுப்பதில்லை.
*மருத்துவக் கல்வியைக் கற்பிக்க அமித்சா இந்தி மொழியிலான பாட நூல்களை வெளியிட்டார் என்பது செய்தி. தமிழில் பாட நூல்களை உருவாக்கும் முயற்சி மன நிறைவு தரும் வகையில் இல்லையே.
மாநில மொழிகளைப் புறக்கணித்து, இந்தி வளர்ச்சிக்காகக் கோடானு கோடிக் கணக்கில் நடுவணரசு ஆண்டுதோறும் செலவழிப்பதை நம்மால் தடுக்க முடியாதது ஏன்?
*இந்தியை நுழைய விடமாட்டோம் என்று கூக்குரல் எழுப்புபவர்களுக்கு, தமிழ்நாட்டில் நடுவணரசின் கட்டுப்பாட்டில் உள்ள, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ரயில்வே போன்றவற்றில்[படிவங்கள், பெட்டிகள், பெயர்ப் பலகைகள் என்றிவற்றில்] இந்தி கோலோச்சுவது தெரியாதா?
*பெயர்ப் பலகைகளில் தமிழில் பெயர் எழுதாத கடைகள்[எழுதினாலும் ஓர் ஓரத்தில் துக்கிளியூண்டு எழுத்தில்...] ஏராளமாக உள்ளன. அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
*நெடுங்காலமாக இந்திப் பிரச்சார சபா மூலமாகவும், தனியார் தம் வீடுகளிள் நடத்தும் தனிப்பயிற்சி மூலமாகவும், அரசியல்வாதிகள் நடத்தும் பள்ளிகள் வாயிலாகவும் லட்சக்கணக்கான தமிழர்கள் இந்தி படித்திருக்கிறார்கள் என்பது "தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!!" முழக்கம் செய்வோருக்குத் தெரியாதா?
இந்தக் கேள்விகள்.....
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்க் கூட்டமைப்புச் சார்பில் நடந்த இந்தித் திணிப்புக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கவிஞர் வைரமுத்துவையும் உள்ளடக்கியவைதான்.
"ஒரு வரலாற்று நெருக்கடி தமிழுக்கு நேர்ந்துள்ளது. 85 ஆண்டுகளாக ஒரு மொழியைத் திணிக்கப் பார்க்கிறார்கள். இந்தியை அலுவலக மொழியாகக் கொண்டுவர மத்திய அரசு மசோதா கொண்டுவந்துள்ளது. அதனை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்குள் தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த தமிழ் மொழியை எப்படி இந்தி மொழியால் புறந்தள்ள முடியும்? தமிழ் மொழி பீனிக்ஸ் பறவைபோல. அதை அழித்தாலும் மீண்டும் எழுந்து வரும். அதோடு சட்டத்தால் தமிழை அழிக்கப் பார்க்கிறார்கள், இதைச் சரித்திரத்தாலும் அழிக்க முடியாது; சட்டத்தாலும் அழிக்க முடியாது. முந்திரிகள் இருக்கும் மூட்டைக்குள் வண்டுவை நுழையவிட்டால் அது முந்திரியை அழித்துவிடும். அதேபோல் இந்தியை நுழையவிட்டால் அது தமிழ் மொழியை அழித்துவிடும். சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்து, நுழைந்ததுதான் இந்தி மொழி. நேற்றுப் பிறந்தது இந்தி மொழி, ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த தமிழ் மொழியை எப்படி புறந்தள்ளுவீர்கள்." -இது வைரமுத்து வழங்கிய கருத்துகளின் தொகுப்பாகும்.
அதிகாரம் மிக்க நடுவணரசின் ஆதரவால் வெகு வேகமாக இந்தி வளருவதையோ, தமிழரின் போலித் தமிழ்ப்பற்று காரணமாக மெல்லத் தமிழ் அழிந்துகொண்டிருப்பதையோ எப்படித் தடுத்திட முடியாதோ அப்படி, அவ்வப்போது நம்மவர்கள் எழுப்பும் "தமிழ் வெல்லும்" முழக்கத்தையும் தடுக்க இயலாது.
முழங்குங்கள். தமிழ் முற்றிலுமாய் அழிந்து ஒழியும்வரை முழங்கிக்கொண்டே இருப்போம்!
"வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!!"
===============================================================================