புதன், 1 நவம்பர், 2023

உலகம் புகழ் ஆஞ்சநேயரும் ஓட்டை உளுந்து வடையும்!!!

வால்மீகி, தான் எழுதியக் கற்பனைக் காவியத்தில் குரங்காகிய ஆஞ்சநேயனை அபூர்வ சக்தி வாய்ந்த மனிதனாக்கி ராமனின் பிரிய பக்தனாக உலவவிட்டான். காலப்போக்கில் அந்த மனிதக் குரங்கைப் பிரபலக் கடவுள்கள் பட்டியலில் சேர்த்தார்கள் நம் பக்தக்கோடிகள்.

கம்பன் அந்தக் குரங்குக் கடவுளைத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியதன் விளைவு, ஊரூருக்கு அநுமன் கோயில்கள்.

ஆண்டு முழுக்கக் கொண்டாட்டங்கள். அலைமோதும் பக்தர்கள் கூட்டம். 108, 1008 என்று வடை மாலை சாத்திக் கொண்டாடும் அநுமன் ஜெயந்தி விழாக்கள் உலகப் புகழ் பெற்றவை.

வடை, குறிப்பாக உளுந்து வடை என்றாலே நம் நினைவுக்கு வருபவர் வாயு புத்திரனான[காற்று ஒரு கடவுளாம். அவர் ஒரு குரங்கைப் புத்திரனாகப் பெற்றாராம். புளுகுவதற்கு எல்லையே இல்லையா?] இந்த ஆஞ்சநேயன்தான்.

இவன் உளுந்து வடைப் பிரியன்.

வடைகளில் பருப்பு வடை, மசால் வடை, கீரை வடை, ஆமை வடை, தவளை வடை, வாழைப்பூ வடை, தயிர் வடை, தட்டை வடை என்று விதம் விதமாய் எத்தனையோ வடைகள் இருக்க, இந்தக் குரங்குக் கடவுள் உளுந்து வடைப் பிரியன் ஆனது ஏன்”

உளுந்து வடையில் அப்படி என்ன விசேசம்?

உளுந்தின் மகிமை: “மாம்ஸார்த்தே மாஷம் குர்யாத்’’ என்னும் வரிகளுக்கு ஏற்ப ‘மாஷம்’ என்னும் பெயரினைக் கொண்ட உளுந்து தான்யத்திற்கு உள்ள சிறந்த குணம் யாதெனில், மாம்ஸத்திற்கு உள்ள பலத்தையும், குணத்தினையும் உளுந்தும் கொடுக்க வல்லது. ஸ்ரீ ஹனுமான் இலங்கைக்குச் சென்று திரும்பி வருவதற்குத் தேவையான வீர்யத்தையும், திறனையும் பெறுவதற்காக உளுந்து தான்யத்தினை உண்டார் என்பது சான்றோர் வாக்கு[?!]. எனவே, சிறப்பான இந்த உளுந்துத் தான்யத்தினால் செய்யப்பட்ட வடைகளைக் கொண்டு மாலையாக ஹனுமனுக்கு ஸமர்ப்பிப்பதால் அவர் மகிழ்ந்து தன் பக்தர்களுக்கு உள்ள கஷ்டம், ரோகம், பிணி ஆகியவற்றினை அகற்றி சிரமமின்றி, ஆரோக்கியமாக வாழ வழிசெய்து அருளுவார்.” https://copiedpost.blogspot.com/2012/02/blog-post_4095.html?m=0

ஆன்மிகச் செம்மல்கள் சிலர் சொன்ன காரணங்கள்:

ஆனந்த விகடனார்: தன்னைவிட வேகமாகச் செல்லும் அனுமனின் வேகத்தையும் வீரத்தையும் கண்டு மகிழ்ந்த ராகு, “அப்பனே, நான் சூரியனைப் பிடிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. எனவே, உன் வேகத்தைக் குறைத்துக்கொள். அதற்குப் பதிலாக நான் உனக்கு ஒரு வரம் தருகிறேன். எனக்கு உகந்த தானியமான கறுப்பு உளுந்தினால் வடை செய்து மாலையாக்கி, உனக்குச் சார்த்தி வழிபட்டால், அவர்களுக்கு என்னால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும்” என்று வரம் கொடுத்தார்.  -https://www.vikatan.com/spiritual/temples/121679-how-to-worship-lord-hanuman

மகா..... பெரியவா அருளிய விளக்கவுரை: ஆஞ்சநேயருக்கு இனிப்பான ஜாங்கிரி மாலை சார்த்தினாலும், காரமான வடைமாலை சார்த்தினாலும், இரண்டுமே உளுந்தினால் ஆனது என்பதே உண்மை. இரண்டுமே ராகு தோஷத்திலிருந்து நம்மை விடுவித்து, நல்லது செய்யும் என்பது மகிழ்ச்சியான விஷயம்தான். https://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/hanuman-prayer-benefits-tamil/

‘வெப்டூனியா’வின் விரிவுரை: பால அனுமன் சூரியனைப் பிடிப்பதற்காக வானில் பறந்துகொண்டிருந்த அந்த நேரத்தில் ராகு கிரகம், சூரியனைப் பிடித்துக் கிரகணம் உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் ராகுவால், ஆஞ்சநேயரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இதனால் சூரியனைப் பிடிக்க ராகுவால் அப்போது இயலாமல் போய் விட்டது. பால அனுமனின் வீரதீரத்தைக் கண்ட ராகு பகவான் மகிழ்ந்து அனுமனுக்கு வரம் கொடுத்தனர்.


அதாவது, தனக்கு உகந்த தானியமான உளுந்தால் வடை செய்து, அதனைத் தன் உடல் போல(பாம்பு உடல் கொண்டவர் ராகு) வளைந்து இருக்கும்படி செய்து(மாலையாக) எவர் ஒருவர் அனுமனுக்குச் சாத்தி வழிபடுகிறாரோ அவரை எந்தக் காலத்திலும் தான் பிடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் யாவும் நிவர்த்தியாகிவிடும் எனவும் ராகு பகவான் அனுமனுக்கு வரம் கொடுத்து வாழ்த்தினார்.


அதனால்தான், உளுந்தால் வடை செய்து அவற்றை 54, 108 அல்லது 1008 என்ற எண்ணிக்கையில் மாலையாகக் கோர்த்து ஆஞ்சநேயருக்குச் செலுத்துகிறார்கள்.https://tamil.webdunia.com/hindu-religion-features/hanuman-vadamalai-116010800067_1.html


முத்துக்கமலம்[இணைய இதழ்]: ருத்திராட்சத்திற்கு மாலையாகக் கட்டிக்கொள்ள இயற்கையாகவே துளை இருக்கும். அது போல் வடையை மாலையாகக் கட்டவே நடுவில் துளை வைத்துத் தட்டப்படுகிறது.’[?!] ‘முத்துக்கமலம்’ இணைய இதழ்.


படைப்பு குறித்துக் கண்டறியப்படாத காரணங்கள்/புதிர்கள், மனிதர்களின் உடல் நலம், மன நலம், நோயற்ற வாழ்வு, ஆயுள் நீட்டிப்பு, மனித இன ஒற்றுமை பற்றியெல்லாம் ஆராய்வதற்கும் உதவும் ஆறறிவை, ஆன்மிகத்தின் பெயரால் குருட்டுத்தனமான நம்பிக்கைகளை வளர்க்கப் பயன்படுத்துவது மன்னிக்கவே இயலாத..... கூடாத மாபெரும் குற்றமாகும்.


குற்றம் புரிவோர் ஆட்சியாளர்களின் நிரந்தர ஆதரைவைப் பெற்றவர்கள் என்பதால் இவர்களைத் தண்டித்துத் திருத்துவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று.


பல்லாயிரம், மிகப் பல லட்சம் என்று கூட்டம் கூடி, ஒரு குரங்கைக் கடவுளாக்கிக் இவர்கள் கூத்தடிப்பதை நினத்தால், கட்டுக்கடங்காத வேதனை மனதைக் கலங்கடிக்கிறது.


கலங்குவோர் எண்ணிக்கை மிகச் சிறுபான்மை என்பது பரிதாபம்!