Dec 19, 2014

‘உயிர்’ என்றால் என்ன? அறியும் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும்.

Aleksand[e]r Oparin, in full Aleksandr Ivanovich Oparin என்னும், பிரபல சோவியத் உயிரியல் விஞ்ஞானியின் 'origin of life' [தமிழாக்கம்: நா.வானமாமலை, NCBH, சென்னை] நூலை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட பதிவு இது.

“புலன்களால் அறிய முடியாதது உயிர்.  இதுவே ‘ஆன்மாவின் சலனம்’; ‘கடவுளின் சிறு பொறி’;  ‘சூட்சுமம்’ என்றெல்லாம் அழைக்கப்படும்”. - இப்படிச் சொல்வது ‘கருத்துமுதல் வாதம்’[Idealism] ஆகும். இக்கொள்கையாளர்களைக் ‘கருத்துமுதல் வாதிகள்[Idealists]’ என்பார்கள்.

“பொருள் என்பது சலனம் அற்ற ‘ஜடம்’ ஆகும். அந்த ஜடத்திற்குள் உயிர் புகுந்தால் அது ‘உயிர்ப்பொருள்’[உயிருள்ள பொருள்] ஆகிறது. உள்ளே உயிர் இருக்கும் வரைதான் ஜடமானது வாழவும் வளரவும் செய்யும். உயிர் பிரிந்துவிட்டால் மீண்டும் ஜடமாகி அழுகி நாறி அழிந்து போகிறது. ‘கடவுளின் இச்சையினால் திடீரென்று உயிர் தோன்றுகிறது. செத்த சடலத்தில் கடவுளின் உயிர் மூச்சு  நிரம்பியதும் அது உயிர்ப் பிராணி ஆகிறது.  இந்த உயிரை அடக்கி ஆளும் வல்லமை மனிதனுக்கு எப்போதும் வாய்ப்பதில்லை.” என்பது இவர்கள் தரும் கூடுதல் விளக்கம் ஆகும்.

அனைத்து மதங்களும் உயிரைப் பற்றி மேற்கண்ட கொள்கைகளையே கொண்டுள்ளன.

'பிராணிகளின் உடலிலுள்ள பொருளுக்கு உயிரில்லை. உயிர் என்னும் சக்தி அதனுள் புகுந்தால்தான் அவை உயிருள்ளவை ஆகின்றன’ என்பது பிளாட்டோவின் கருத்து. அரிஸ்டாட்டிலும் இதே கருத்தைக் கொண்டிருந்தார். இரண்டாயிரம் ஆண்டுகளாக இக்கருத்து நிலைபெற்றிருந்தது. மதக் கோட்பாடு களுக்கு ஒத்துப் போகாத எந்தவொரு கொள்கையும் தலையெடுக்க முடியாத நிலை நீடித்தது.

ஆனாலும், இவர்களோடு ஒத்துப் போகாத ஒரு பிரிவினரும் தம் கருத்துகளை அன்றுதொட்டுச் சொல்லிக்கொண்டுதான் இருந்தார்கள். அவர்களைத்தான்,
 ‘பொருள்முதல் வாதிகள் [Meterialists]’ என்கிறார்கள். அதாவது, ‘பொருள் முதல் வாதம்’[Meterialism] என்னும் கொள்கை உடையவர்கள்.

‘பொருளற்ற சூட்சுமம்’ என்பதெல்லாம் வெறும் கற்பனை. ‘வெறுமை’ என்பது எப்படிச் சாத்தியமற்றதோ[?], அது போல், சூட்சும நிலை என்பதும் சாத்தியமற்றதே. புலன்களால் அறிய முடியாத ‘பொருளற்ற ஒன்று’ இருப்பதாகச் சொல்வது வெறும் அனுமானமே. பொருளின் மிக...மிக...மிக நுண்மையான ஒரு வடிவமே உயிர். இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டு, அது சிதைவுகளையும் மாறுதல்களையும் பெறுகிறது.

மிக மிகப் புராதன காலத்தில், இன்று காணப்படும் நுண்ணுயிர்களைப்[Micro Organism] போல, மிக நுணுக்கமான சின்னஞ் சிறிய உயிர்களே இருந்தன. அவை மட்டுமே வாழ்ந்த ஒரு காலமும் இருந்தது. அவை மிக மிக நுண்ணிய பொருள்கள்.

பொருள் இல்லாமல், ‘சூட்சுமமானது’ என்று சொல்லப்படுகிற உயிர் தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லை.

பொருள், காலப்போக்கில், மிகப் பல சிறு சிறு மாறுதல்களைப் பெற்று, குறிப்பிட்ட ஒரு கால நிலையில் உயிர் என்று சொல்லப்படுகிற ‘நுண் பொருளாக’ மாறுகிறது என்பது இவர்களின் கருத்தாகும்.

விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?

‘கரி, நீர்வாயு, ஆக்ஸிஜன், நைட்ரஜன், பாஸ்பரஸ் ஆகிய ஐந்து மூலப் பொருள்களும் ஒன்றுகூடி பொருளாகத் தோற்றம் தருகின்றன. இந்தச் சிக்கலான ‘அணுக்கூட்டு’தான்[Molecule] பின்னர் உயிர்த்தன்மை பெற்றது.’

‘உயிர் என்பது பொருளின் சலனத்தில் ஒரு சிறப்பான வடிவம்.’

’மிகச் சிறிய நுண்ணுயிர்கள்கூட, உயிரற்ற பொருள்களோடு ஒப்பிடும்போது மிகச் சிக்கலான அமைப்பு உடையவை. அவை திடீரென்று தோன்றிவிட முடியாது’

அனைத்துப் பொருள்களையும் உயிர்களையும் கடவுள் நினைத்த மாத்திரத்தில், நினைத்த படியெல்லாம் படைத்தார் என்பது 100% கற்பனையே.

‘உருவம் உடைய பொருள்களே உண்மையானவை[எத்தனை சிறிய அணுவாக இருந்தாலும் அதற்கும் உருவமுண்டு. உருவமற்றவை என்று சொல்லப்படுகிற, உயிர்[ஆன்மா], ஆவி [கடவுள் உட்பட!] போன்றவற்றைப் புலன்களால் அறிவது என்பது சாத்தியமே இல்லை.

‘சூட்சுமம்’ பற்றிப் பேசுபவர்களில் யாரேனும் அது பற்றி விளக்கியிருக்கிறார்களா என்றால், “இல்லை” என்பதே பதிலாக இருக்க முடியும்.

கழகத் தமிழ் அகராதி. சூட்சுமம் என்பதற்கு, ‘நுண்மை, கூரறிவு’ என்று பொருள் சொல்கிறது.

நுண்மை - நுட்பம்.

அறிவு - அறிதல், அது, சிந்திப்பதற்குக் காரணமாக இருப்பது. முற்ற முழுக்க மூளையின் இயக்கத்திற்கு உட்பட்டது. எனவே........

‘கூர் அறிவு’  என்பதற்கு, புலன்களால் அறிய முடியாத சூட்சுமம் என்று பொருள் கொள்ள வாய்ப்பே இல்லை.

'நுட்பமான உத்தி’ என்கிறது தமிழ் விக்சனரி. இது குழப்பமானதொரு விளக்கமாகும்.

‘நுண்ணுடம்பு’ பற்றிப் பேசாத பக்தி இலக்கியங்கள் இல்லை. ஆனால், அந்த நுண்ணுடம்பு பற்றி விளக்கிச் சொன்னவர் எவருமே இல்லை.

நுண்ணுடல், சூக்கும தேகம் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி, மக்களின் மூளையில் வெகு ஆழமாக அதைப் பதிய வைத்துவிட்டார்கள்.

சூட்சுமத்தை ஆங்கிலத்தில், ‘subtlety' என்கிறார்கள். கூகிளில் தேடியதில் தெளிவான விளக்கம் பெறுவது சாத்தியப்படவில்லை.

'www.thefreedictionary.com/subtlety' தரும் விளக்கங்கள்:
n., pl. -ties.
1. the state or quality of being subtle.
2. acuteness or penetration of mind; delicacy of discrimination.
3. fine-drawn distinction; refinement of reasoning.
4. something subtle.

penetration of mind = மனதின் ஊடுருவல்.

ஊடுருவல்! எப்படி?... தெளிவில்லையே!

acuteness = கூர்மை. மனக் கூர்மையா? கூர்மை மனதா? புரியவில்லையே!

something subtle ?    இப்படியொரு விளக்கமா?!

www.vocabulary.com/dictionary/subtlety:   Subtlety is the quality of being understated, - இதிலும் போதுமான விளக்கம் இல்லை.

உயிரைப் பற்றிய ஆய்வு ஒருபுறம் இருக்கட்டும். நாம் சிந்திக்கிறோமே அந்தச் சிந்தனைக்குக்கூட வடிவம் உள்ளதா என்றொரு கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.

இதற்கும் அறிவியல் பதில் தருகிறது.

‘சிந்திப்பதென்பது முழுக்க முழுக்க மூளையின் செயலாகும். மூளை இல்லையேல் சிந்திப்பதும் சாத்தியமில்லை.’

ஆக, பொருள்முதல் வாதிகள் முன்வைக்கும் வாதங்களும், விஞ்ஞானிகள் தரும் விளக்கங்களும் ‘உயிர் என்பது சூட்சுமமானதும் தனியே இயங்கக்கூடியதுமான  ஒன்றல்ல; அதுவும் ஒரு பொருளே’ என்னும் கருத்தை உறுதி செய்கின்றன. எனினும்...........

“பொருள்களின் தோற்றம் நிகழ்ந்தது எவ்வாறு? பொருள்களின் பரிணாம மாறுதல்களால் உயிர் தோன்றியது எப்படி?” என்ற வினாக்களுக்கு இந்நாள்வரை விடை இல்லை!

வருங்காலத்திலேனும் விஞ்ஞானத்தால் விடை காண முடியுமா என்றால், “முடியும்’ என்று சொல்லும் துணிவு எவருக்கும் இல்லை.

“மனித இனம் இம்மண்ணில் நிலைபெற்றிருக்கும்வரை விடை தேடும் முயற்சி தொடரும்” என்று வேண்டுமானால் சொல்லலாம்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

அறிவியல் பதிவு எழுதும் அளவுக்கு அறிவியலறிவு படைத்தவனல்ல நான். ‘உயிரின் தோற்றம்’[NCBH, முதல் பதிப்பு, பிப்,2008] என்னும் இந்த நூல் தந்த தைரியத்தில் எழுதினேன்.

நூலில் சிதறிக் கிடக்கும் குறிப்பிடத்தக்க கருத்துகளைத் தொகுத்து, சுருக்கி, கொஞ்சமே கொஞ்சம் என் கருத்துகளையும் கலந்து என் நடையில் தந்துள்ளேன்.

பிழை காணின் பொறுத்தருள்க.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000