செவ்வாய், 22 ஜூலை, 2025

முதல் தர முட்டாள் தமிழனா, தெலுங்கனா?

க்தி வாய்ந்த சாமிகள் எனப்படும் தில்லை நடராசர், மதுரை மீனாட்சித் தாய், இவர்கள் ஈன்று புறம் தந்த முருகப் பெருமான், இவரின் தாய்மாமன் திருவரங்கம்[ஸ்ரீரங்கம்] அரங்கநாத சுவாமி[விஷ்ணு] என்று விதம் விதமானவையும் வகை வகையானவையுமான சாமிகளுக்கான ஆயிரக்கணக்கான கோயில்கள் தமிழ்நாட்டில்  இருக்க, இவர்களினும் மேலான கடவுள் திருப்பதி வெங்கடேசுவர சாமியே[மும்மூர்த்திகளில் ஒருவரான ‘விஷ்ணு’வே வேறு வேறு பெயர்களில் தரிசனம் தருகிறார்] என்று எண்ணித் தினம் தினம் ஆயிரக்கணக்கில் அங்கே குவிகிறார்கள் தமிழர்கள்.

உலக அளவில் புகழ் பெற்ற இந்த வெ.சாமி கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும்[திருப்பதி], மாநிலம் கடந்து தமிழ்நாட்டின் திருவண்ணாமலையிலுள்ள அண்ணாமலையாரை நம்பர் 1 கடவுளாக்கி[வெங்கடேசுவரர் என்னும் ஏழுமலையானை நம்பர் 2 கடவுள் ஆக்கிவிட்டார்கள்] அவரை வழிபடுவதற்காகப் பல்லாயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக வந்து குவிகிறார்கள் தெலுங்கர்கள்.

திருப்பதி செல்லும் தமிழர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் இது மிக அதிகம். 

நிர்வாகம் விதித்துள்ள எந்தவொரு கட்டுப்பாட்டையும் மதிக்காமல் முட்டி மோதி, நெட்டித் தள்ளி, கோயிலுக்குள் நுழைந்து அண்ணாமலையாரையே மூச்சுத் திணற வைக்கிறார்கள் தெலுங்கர்கள் என்பது செய்தி.

ஆக, முன்னாள் நம்பர் 1 கடவுளை[திருப்பதி வெங்கடேஸ்வரர்] நம்பர் 2 ஆக்கி, அண்ணாமலையாரை நம்பர் 1 கடவுள் ஆக்கியதன் மூலம், நம்பர் 1 முட்டாள்களாக இருந்த தமிழர்களை முட்டாள்தனத்தில் நம்பர் 2 ஆக்கி, தெலுங்கர்கள் முதலிடத்தைப் பெற்றுவிட்டார்கள்.

இது மூடர் உலகில் நிகழ்த்தப்பட்ட மாபெரும் சாதனை ஆகும்

சாதனை நிகழ்த்திய தெலுங்கர்களால் இங்கே பெரும் பிரச்சினைகள் உருவாகியுள்ளன.

நல்ல தமிழ்ப் பெயரான திருவண்ணாமலையைத் திருவண்ணாமலை என்று சொல்லாமல், ‘அருணாச்சலம்’ என்கிறார்கள் இவர்கள்.

இவர்களுக்காக, ஆந்திரா[+கர்னாடகா] செல்லும் பேருந்துப் பெயர்ப் பலகைகள் அருணாச்சலம் என்று மாற்றப்பட்டனவாம்[மீண்டும் திருவண்ணாமலையாக மாற்றப்பட்டுள்ளது என்பது அண்மைச் செய்தி> தமிழார்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததன் விளைவு].

தமிழர்களோ தெலுங்கர்களோ முட்டாள்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மொழிப் பிரச்சினை மட்டுமல்ல, சாதி மதம் இனம் போன்றவை தொடர்பான பிரச்சினைகளும் பெருமளவில் அதிகரிக்கும்.

ஆகவே, தெலுங்கராகட்டும் தமிழராகட்டும், இவர்கள் திருப்பதிக்கோ திருவண்ணாமலைக்கோ செல்லப் பேருந்து வசதி செய்துதருவது அரசுகள் செய்யும் மாபெரும் தவறு.

பழனிப் பக்தர்களைப் போல இவர்களும் பாதயாத்திரை செல்லட்டும்.

நடந்து நடந்து பாதங்களில் ரத்தம் கசிந்தால்தான் அதைக் கண்டு மனம் இளகி, திருப்பதி ஏழுமலையானும் திருவண்ணாமலை அண்ணாமலையானும் தாமதிக்காமல் அருள்பாலிப்பார்கள்!

                                           *   *   *   *   *

***//ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்குச் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகளில் "அருணாசலம்" என்று எழுதப்பட்டிருந்தது. திருவண்ணாமலைக்கு பதிலாக அருணாசலம் என்று பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது சில சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது//> https://tamil.oneindia.com/news/thiruvannamalai/arunachalam-name-boards-are-removed-from-the-tiruvannamalai-buses-after-outburst-720551.html