தேடல்!


Dec 16, 2014

கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘அந்நியம்’ சிறுகதையின் தொடர்ச்சி.....

கதையின் ‘முதல் பகுதி’யைப் படிக்காதவர்களுக்கு: http://kadavulinkadavul.blogspot.com/2014/12/blog-post_15.html [‘கிளிக்’குக!]


‘அந்நியம்’ சிறுகதையின் தொடர்ச்சி.....

அந்த நிர்ப்பந்தத்தில் நிலைகுலைந்து போன அவன் வீறிட்டு அலறினான். வீடே இரண்டு பட்டது.

அம்மா ஓடி வந்து பேரனை அள்ளிக்கொண்டாள். மணிக்கு உள் மனதில் ஏதோ முள்ளாய்க் குத்தியது.

கணவனின் எண்ண ஓட்டங்களைக் கண்களில் கண்ட சரசு, “அப்படித்தாங்க அவன். புதுசா யார்கிட்டேயும் போக மாட்டான். நீங்க போயிக் குளிச்சிட்டு வாங்க, சாப்பிடலாம்”என்றாள்.

முள் குத்திய இடத்தில் இப்போது அரிவாள் அறுத்தது.

“நான் புதுசா? மகனுக்கு அப்பன் புதுசா? எனக்கு என் குழந்தையின் முகம் அந்நியமா? என் குழந்தைக்கு நானே அந்நியமா?”- மணியின் மனசுக்குள் புகை மண்டலம் மண்டியது.

ரு வாரம் ஆயிற்று. இரு வாரம் ஆயிற்று. மகன் தந்தை உறவில் ஒரு சின்ன வளர்ச்சி.

மணியைக் கண்டால் அவன் முன்பு போல் அலறுவதில்லை; அழுவதில்லை.

ஆனால், அவன் கண்களை விட்டு மிரட்சியும் அந்நியமும் மீளவில்லை.

மணியின் மனசிலிருந்த உற்சாகம் காணாமல் போனது.

எல்லோரிடமும் கலகலப்பாகவே பேசினான். பேச்சின் கீழே சாரமில்லை.

மனைவியோடு சிரித்துக்கொண்டுதான் இருந்தான்; சிரிப்பின் கீழே ஈரமில்லை.

அன்று இரவு சங்கமக் களைப்பிற்குப் பிறகு அவள் கேட்டேவிட்டாள்.

“ஏன் ஒரு மாதியாவே இருக்கீங்க?”

அவன் கலைந்த லுங்கியைக் கட்டிக்கொண்டு ஜிவ்வென்று எழுந்து உட்கார்ந்து சிகரெட் புகைக்கு நடுவே கனவில் பேசுகிற மாதிரி பேசினான்.

“சரசு, சொந்த ஊரில் சோத்துக்கு வழியில்லேன்னுதான் கடல் கடந்து போனேன். ஒரு பெரிய திமிங்கலம் பிடிக்கணும்கிறதுதான் நோக்கம். இப்ப திமிங்கலத்தை நான் பிடிச்சிருக்கேனா திமிங்கலம் என்னைப் பிடிச்சிருக்கான்னுதான் தெரியல. செண்ட்டு, பளபளப்பு, சோப்பு, புடவை...இதுதான் ஊருக்குத் தெரியற வாழ்க்கை. ஆனால், உள்ளுக்குள்ளே ஒரு கீரல் இருக்கே! அது யாருக்காவது தெரியுமா? யாருக்காக உழைக்கிறேனோ அவங்க பக்கத்தில் நான் இல்லை. உங்களுக்கு வாழ்க்கை காசோலையிலே...எனக்கு வாழ்க்கை தபால்லே...பணம் எனக்கு ரொம்பச் சினேகமாயிருக்கு. மகன் எனக்கு ரொம்ப அந்நியமாயிருக்கான். இது என்ன வாழ்க்கை சரசு?”

சரசு மவுனமானாள்.

ரவாயில்லையே! இப்போதெல்லாம் அவன் சிரிக்கிறான்.

“வாடா” என்று அப்பா அழைத்தால் அந்தக் கோரிக்கையை அவன் பரிசீலிக்கிறான்.

ஆரம்பத்தில் அப்பா ஊட்டிவிட்டால் துப்பியவன் இப்போ வேண்டா வெறுப்போடு சாப்பிட்டான்.

அம்மாவோடுதான் படுப்பேன் என்று அடம் பிடித்தவன் இப்போது அப்பாவின் பக்கமும் திரும்பிப் படுக்கிறான்.

அவன் தூங்கும்வரை அப்பா தட்டிக் கொடுப்பதை அவன் சகித்துக்கொள்கிறான்.

மணியின் நெஞ்சுக்குள் இப்போது ஆறுதலாக ஒரு மாறுதல்.

ஆனால், இந்த ஆறுதல் எவ்வளவு தூரம்? எவ்வளவு நேரம்?

நாளை இந்நேரம் சென்னை.

நாளை மறு நாள் பம்பாய். அங்கிருந்து துபாய்.

நேற்று வந்த மாதிரி இருக்கிறது. நேரம் போனது தெரியவில்லை.

அன்று இரவு சாப்பிட்டுக்கொண்டிருந்த போது “அப்பா” என்று அழைக்கச் சொல்லி மகனைக் கெஞ்சினாள் சரசு.

அவன் பகிரங்கமாய் மறுத்தான்.

அடித்துவிட்டாள்; தடம் பதிய அடித்துவிட்டாள்.

மனைவியைத் திட்டினான் மணி.

மகனை எவ்வளவோ சமாதானப்படுத்தினான். அவன் அழுதுகொண்டே உறங்கிப் போனான். மகனை அணைத்துக்கொண்டே மணியும் உறங்கிப் போனான்.

புழுதி பறக்க வாடகைக் கார் வந்து நின்றது.

வரும்போது நிறையப் பெட்டிகள். இப்போது ஒன்றே ஒன்றுதான்.

பெட்டியைக் காரில் வைக்கச் சொல்லிவிட்டு அவன் விடை கேட்டபோதுதான் அம்மாவும் சரசுவும் அழுதார்கள்.

இருவருக்கும் தனித்தனியே ஆறுதல் சொன்னான்.

தான் மட்டும் கசியும் கண்களை மறைத்துக்கொண்டான்.

தூணைக் கட்டிக்கொண்டு தூரத்தில் நின்றுகொண்டிருந்த மகன் மட்டும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான்.

இவன் முத்தமிடப் போனான். அவன் தூணுக்குப் பின்னே தலையிழுத்தான்.

காரைச் சுற்றி, அவனை வரவேற்ற கூட்டம் வழியனுப்பவும் காத்திருந்தது.

காருக்குள் அமர்ந்தபடி கண்ணீர்த் திரையினூடே அம்மாவையும் சரசுவையும் மறுபடியும் பார்த்தான்.

மங்கலாய் மகன் தெரிந்தான்.

“போய்ட்டு வர்றேன். லெட்டர் போடுங்க. எல்லாருக்கும் வணக்கம்! கண்ணு வரட்டுமா?” கார் ஒரு குலுக்கலோடு புறப்பட்டது.

கார் சந்து தாண்டிவிட்டது. சாலை கடக்கவில்லை.

“அப்பா.....”

காற்றைக் கிழித்தது கன்றின் குரல்.

சாலையில் எழுந்த புழுதியில் கார் மறைந்து போனது.

*****************************************************************************************************************************************************