அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 15 டிசம்பர், 2014

கவிஞர் வைரமுத்து தொடாத துறையா ‘சிறுகதை’?!

கவிஞர் வைரமுத்து ‘குமுதம்’ இதழில் சிறுகதைகள் எழுதவிருக்கிறார்[குமுதம், 22.12.2014].  இது, இதுவரை அவர் ‘தொடாத துறை’ என்கிறது குமுதம்[15.12.2014]. கவிஞர் இதுவரை சிறுகதை எழுதியதே இல்லையா?

 “எழுதியிருக்கிறார்” என்பதே என் பதில்.  1995 ஆம் ஆண்டில் அவர் சிறுகதை எழுதியிருக்கிறார். எனவே, சிறுகதைத் துறையைக் கவிஞர் ஏற்கனவே தொட்டுவிட்டார் என்பதே உண்மை[தொடரவில்லை என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்].

இதோ ஆதாரம்..........

வைரமுத்து எழுதிய சிறுகதையின் தலைப்பு: ‘அந்நியம்’.

வெளியான வார இதழ்:                                  'ராணி', 16.04.1995.

கதை...........

“என்னப்பா ஆளே மாறிப் போய்ட்டே.....”

“நம்ம மணிப்பயதான். தோல் செவந்து போயில்ல வந்திருக்கான்.”

“பெட்டியை வாங்கு! பெட்டியை வாங்கு!”

“ஏம்பா! அங்கே தண்ணியே கிடையாதுங்கறாக...எப்படிக் குளிக்கிறீங்க?”

“பய பளபளப்பாத்தான் ஆயிட்டான்.”

இந்த வரவேற்பு அவன் எதிர்பார்த்ததுதான். தொண்ணூத்தி ஒன்றில் போனவன் தொண்ணூத்து ஐந்தில் வந்திருக்கிறான்.

“நல்லா இருக்கியாம்மா.” அம்மாவின் உள்ளங்கை பற்றிக் கண்களில் ஒற்றிக்கொண்டான்.

அவள் பதிலை எதிர்பார்க்காமலேயே மனைவியின் திசையில் பார்வையைப் பரப்பினான்.

ஒரு கண்ணில் கண்ணீரையும் ஒரு கண்ணில் ஆசையையும் தேக்கி வைத்திருந்த சரசு, நிலைப் படியோரம் நின்றுகொண்டே அவனைப் பார்வையால் பருகிக்கொண்டிருந்தாள்.

“துபாய்னா சும்மாவா...? நம்மூர்ல தண்ணிக் கிணறு இருக்கிற மாதிரி அங்கே எண்ணைக் கிணறு இருக்காம்ல...கொட்டாதா காசு?”-கேள்விப்பட்டதை வைத்து ஒரு கிழவன் கயிறு திரித்தான்.

எல்லோரும் அவனிடம்தான் மாறுதல் பார்த்தார்கள். எந்த மாறுதலையும் அவன் பார்க்கவில்லை.

அதே முகங்கள்! அதே சுருக்கங்கள்! வெளிச்சம் இருந்தாலும் இருட்டுப் பள்ளத்தில் கிடக்கிற கண்கள்! அதே ஓட்டு வீடு! காரை பெயர்ந்த அதே சுவர்! அதில் எழுதப்பட்டிருந்த உங்கள் ஓட்டு என்ற வாசகத்தில் அழிந்த நிலையில் அதே’ங்’

அங்கு வந்திருந்த யாரையும் அவன் ஏமாற்றவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு பரிசு கொடுத்தான்.

ஒருவருக்குப் பேனா. ஒருவருக்கு சிகார் லைட்டர். ஒருவருக்கு நக வெட்டி. பக்கத்து வீட்டுக் கிழவிக்குப் புடவை...என்று எடுத்துக் கொடுத்தான்.

அந்த நிமிடங்களில் அந்தந்த முகங்களில் சந்தோச ரேகைகள் சரஞ்சரமாய்ப் பரவுகின்றனவே...அந்த ஆனந்தம் சுகமானது; சுத்தமானது.
ண்ணு...! டேய் எழுந்திரு...அப்பா வந்திருக்காரு பாரு...எழுந்திரு...” சரசு விடாமல் எழுப்பினாள்.

நான்கு வயது மகன் புரண்டு படுத்தான்.

தொடர்ந்து அவன் தூக்கம் கலைத்துத் துன்புறுத்தவும் செய்தாள்.

“டேய்! அப்பா பொம்மை வாங்கிட்டு வந்திருக்கார்டா, நாய் பொம்மை...கை தட்டினா குலைக்கும்.”

மகனின் விலாவில் விரல் பாய்ச்சினாள்.

“வேணாம் சரசு. குழந்தை தூங்கட்டும். காலையில் எழுந்து அப்பாவைப் பார்த்தா அவனுக்கு ஆச்சரியமா இருக்குமில்ல. அப்படியே தூங்கட்டும்.”

மனைவியைத் தடுத்துவிட்டு மகனின் நெற்றி தடவினான். அவனது முடியைக் கோதிக் கொடுத்தான். அவன் பக்கத்தில் படுத்து பிஞ்சுக் கைகளை நெஞ்சி வைத்துக்கொண்டான். குனிந்து உறக்கம் கலைக்காமல் முத்தமிட்டான்.

இது என்ன புது இன்பம்? இதுவரை அடைந்திராத இன்பம்? அவசரமில்லாத பரவசம்? படுத்திருக்கும் ஜீவன் தன் உயிரின் உயிர் என்கிற உற்சாகமா?

தொட்டில் குழந்தையாய்க் கிடக்கையில் விட்டுவிட்டுப் போனவன் நான்கு ஆண்டுகள் கழித்து இன்று வளர்ந்த பிறகு வந்திருக்கிறானே...அந்த ஆசையின் அடர்த்தியா?

தன் மகனின் முகம் தொட்டுத் தொட்டு மனைவியின் முகம் பார்த்து மகிழ்கிறானே!

உண்மையில்...மனசுக்குள் இப்போது துருத்திக்கொண்டிருப்பது துக்கமா, சந்தோசமா?

சில பொம்மைகளையும் சில சாக்லெட் பெட்டிகளையும் மகனின் தலையணை அடிவாரத்தில் வைத்துவிட்டு...“எப்படி வளர்ந்துட்டான்ல...!...உன் நிறம்...என் சாயல்...” என்றான் மனைவியின் உள்ளங்கையைக் கிள்ளிக்கொண்டே.

அந்தக் கிள்ளல் அவளுக்கு இதுவரைக்கும் இருண்டு கிடந்த பிரதேசங்களில் எல்லாம் பொசுக்கென்று வெளிச்சம் போட்டது.

கன் வாங்கி வந்த நான்கு பவுன் சங்கிலியில் மகிழ்ந்து போனாள் அம்மா. “கல்யாணத்தன்னிக்கி கழுத்தில் கெடந்துச்சி. பிறகு எங்கே தங்கத்தைப் பார்த்தேன்?” என்று மலரும் நினைவுகளில் அழுதாள்.

ரவின் பிற்பகுதி.

மணிக்கும் சரசுவுக்கும் அப்போதுதான் தனிமை கிடைத்தது.

“இது உனக்கு சோப்பு...இது உனக்குப் பவுடர்...ஒரு ஜோடி தங்க வளையல்...மோதிரம்...எல்லாம் உனக்குத்தான்! இதோ பார்! சேக்கு வீட்டுப் பொம்பளைங்க மட்டும் போட்டுக்கிற செண்ட்டு...”- ஒரு பளபளப்பான பாட்டிலை நீட்டினான்.

அவள் வாங்கினாள். பூச்சி மருந்து அடிக்கிற மாதிரி முகத்துக்கு நேரே பீச்சினாள்.

அவன் பதறிப் போய்த் தடுத்தான்; சிரித்தான்.

செண்ட் போடும் இடங்களைச் சொல்லிக்கொடுத்தான். அவள் சிணுங்கினாள்.

தேக்கி வைத்த ஆசைகள் அணை உடைத்தன. வெள்ளம்; வெள்ளம்; விடிய விடிய வெள்ளம்.

“டேய்! அப்பாடா...அப்பா...அதோ பார் அப்பா...போடா...போ!”

பையன் பயந்தான்.

“வாடா கண்ணு...வா...அப்பா வந்திருக்கேன். வா வா வா...!”

பையன் அழுதான். முதலில் குடையைக் கண்டு மிரளும் மாடு மாதிரி!

“உனக்குப் பொம்மை, சாக்லேட்டு எல்லாம் வாங்கி வந்திருக்காரு...அப்பாடா...அப்பா!”

மகனைக் கணவன் கையில் திணித்தாள்.

குழந்தை தத்தளித்தான். தன் உடம்பெங்கும் ஓர் அந்நிய ஆதிக்கம் பரவுவதாய் நினைத்தானோ என்னவோ!..........[தொடரும்]

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

மன்னியுங்கள் நண்பர்களே. அவசரப் பணி ஒன்று குறுக்கிட்டுவிட்டது. மீதிக் கதையை நாளை எழுதி முடிப்பேன்.

தடங்கலுக்கு வருந்துகிறேன்.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக