தேடல்!


Dec 11, 2014

குமுதம் ஆசிரியருக்குப் பிடித்த கதை உங்களுக்குப் பிடிக்காதா என்ன?!

                                                   டெஸ்ட்

ன் வீட்டில் முழுநேர வேலைக்காரியாகக் கன்னியம்மா பதவியேற்று முழுசாக ஒரு மாதம்கூட ஆகவில்லை. அதற்குள் இரண்டு பரீட்சைகளில் ஜெயித்து இன்று மூன்றாவது சோதனையைச் சந்திக்கவிருக்கிறாள்.

பத்து நூறு ரூபாய்ப் பச்சை நோட்டுகளை, வெளியே துருத்திக்கொண்டிருக்கும் வகையில் பர்ஸுக்குள் திணித்து, சோபாவின்மீது வீசிவிட்டு, “புறப்படுவோமா?” என்றேன்.

“என்னங்க இது விஷப்பரீட்சை? அம்பதா நூறா? ஆயிரம் ரூபாய்ங்க! கன்னியம்மா அபேஸ் பண்ணிட்டு மாயமா மறைஞ்சிட்டான்னா? வேண்டாங்க” என்று தனது நியாயமான அச்சத்தை வெளிப்படுத்தினாள் என் மனைவி பாப்பு.

“பயப்படாம வா.” என்றேன்.

ரண்டரை வயது ராஜீவுக்குப் பெற்றோர்களான நாங்கள் இருவருமே அலுவலகம் சென்று சம்பாதிப்பவர்கள். நாங்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் குழந்தையைப் பராமரிக்கும் ஆயாவாக இருந்து, மீதி நேரத்தில் இதர காரியங்களில் ஒத்தாசை செய்ய ஒரு வேலைக்காரி எங்களுக்கு நிரந்தரத் தேவையாகிவிட்டாள்.

திருட்டுப் புரட்டு இல்லாத யோக்கியமான பெண் கிடைத்தால் தேவலை என்று செங்கல்பட்டு மாமாவிடம் சொல்லி வைத்திருந்தேன். அவரால் அனுப்பி வைக்கப்பட்டவள்தான் இந்தக் கன்னியம்மா.

கன்னியம்மா கண்ணியமானவள்தானா என்பதைக் கண்டுபிடித்துவிடத்தான் இந்தச் சோதனைகள்! இது மூன்றாவது சோதனை.

முதல் டெஸ்டாக, வேலைக்குச் சேர்ந்த இரண்டாவது நாளே, வேண்டுமென்றே சட்டைப் பாக்கெட்டில் நூறு ரூபாய் நோட்டை வைத்து, சட்டையைத் துவைக்கக் கொடுத்தேன். முனை முறியாமல் நோட்டை என்னிடம் திருப்பிக் கொண்டுவந்து கொடுத்துவிட்டாள் கன்னியம்மா, “சட்டையில் இருந்ததுங்க” என்று சொல்லி.

மற்றொரு நாள், டைனிங் டேபிளருகே ஐந்து பத்து ரூபாய் நோட்டுகளைப் பொட்டலம் போல் மடித்துப் போட்டுவிட்டு வந்து காத்திருந்தேன்! பத்திரமாய்த் திரும்பி வந்தது. “அங்கே இருந்ததுங்க”என்றாள்.

இன்று கடைசிச் சோதனை.
[பக்கங்களில், இதழின் பெயரைத் தேதியுடன் அச்சிடும் வழக்கம் அன்று இல்லை]

ழக்கமான நேரத்துக்குக் கொஞ்சம் முன்னதாகவே வீடு திரும்பினோம். பர்ஸ் போட்ட இடத்தில் போட்டபடி கிடந்தது. திறந்து பார்த்த போது பணம் அப்படியே இருந்தது. பூரித்துப் போனோம்.

கன்னியம்மா கொண்டுவந்து தந்த காப்பியை உறிஞ்சிவிட்டுத் தலை நிமிர்ந்தபோது, ஒரு துணி மூட்டையுடன் எங்கள் முன் வந்து நின்றாள் அவள்.

“நான் ஊருக்குப் போறேனுங்க” என்றாள்.

“என்னம்மா சொல்றே?”

“ஐயா அம்மா ரெண்டு பேருமே வேலைக்குப் போறீங்க. கண்ட எடத்துல நூறு ஆயிரமுன்னு பணத்தை வைச்சுடறீங்க. ஏதோ என் கண்ணுல படறப்ப எடுத்துக் குடுத்துடறேன். ஒரு கெட்ட நேரத்துக்கு என் கண்ணுல படாம வேறே யாராச்சும் எடுத்துட்டுப் போயிடுறாங்கன்னு வைச்சுக்குங்க. உடனே, வேலைக்காரி என் மேலதான் உங்களுக்குச் சந்தேகம் வரும். நான் தப்புச் செய்யலேன்னாலும், போலீஸ் அது இதுன்னு கூப்பாடு போடுவீங்க. எதுக்கு இந்த வம்பெல்லாம்? ஜாக்கிறதையா இருக்கிறவங்க கிட்டேதான் வேலை பார்க்கணும்.”

எங்கள் அனுமதியை எதிர்பாராமல் அவள் புறப்பட்டுவிட்டாள்.

=============================================================================================

20.05.1982 இதழில் வெளியானது.

=============================================================================================