செவ்வாய், 3 நவம்பர், 2026

‘தமிழ்நாடு’வை ‘வெற்றி நாடு’ ஆக மாற்றுங்கள் முதல்வர் அவர்களே!

முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதாவின் கௌரவப் பெயரான ‘அம்மா’ 15க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கும்[எ-டு: அம்மா உணவகம்], மு. கருணாநிதியின் சிறப்புப் பெயரான ‘கலைஞர்’ சுமார் 10 திட்டங்களுக்கும் சூட்டப்பட்டுள்ளன.

மக்கள் மனங்களில் தங்களின் நினைவு நீங்காத இடம்பெறுதல் வேண்டும் என்னும் இவர்களின் ஆசை..... அல்ல, வெறி இதற்குக் காரணம் எனலாம்.

முதல்வர் ஜோசப்பும் இதற்கு விதிவிலக்கானவர் அல்ல.

‘வெற்றிப் பயணத் திட்டம், வெற்றி வீடு திட்டம், வெற்றி மடிக்கணினித் திட்டம், வெற்றி தொழில் முனைவோர் திட்டம்... ‘ என்றிப்படி, ஆட்சிப் பொறுப்பேற்ற ஆறே மாதங்களில், தான் நடைமுறைப்படுத்தும் திட்டங்களுக்கெல்லாம், தவறாமல் ‘வெற்றி’ சேர்ப்பதைத் தன் முக்கியக் கடமையாகக்கியுள்ளார் இவர்.

தொடரும் இவரின் ஆட்சியில் இந்த எண்ணிக்கை மிக மிகப் பலவாகும் என்பதில் சந்தேகமில்லை.

அடைமொழி சேர்த்தல் ஒருபுறம் இருக்க.....

பெரும்பாலான பெற்றோர்கள் தம் பிள்ளைகளை ஆங்கிலத்தில் பாடம் கற்பிக்கும்[ஆங்கில மீடியம்] பள்ளிகளில் சேர்ப்பது அதிகரிக்கிறது. நல்ல நல்ல தமிழ்ச் சொற்கள் புழக்கத்தில் இருக்க, ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசுவதைப் பெருமையாக நினைப்போரின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டிருக்கிறது[100% உண்மை].

இவை போன்ற இன்னும் பல காரணங்களைக் கருத்தில் கொண்டு சிந்தித்தால், தமிழ்நாடு என்னும் பெயரில் உள்ள ‘தமிழ்’ஐ நீக்கிவிடுவது உத்தமம் என்று தோன்றுகிறது. இதனால், தமிழின் பரிதாப நிலையை எண்ணி எண்ணி மனம் குமைவது தவிர்க்கப்படும்.

எனவே, உடனடியாக, ‘தமிழ்நாடு’ என்னும் சொல்லில் உள்ள ‘தமிழ்’ஐ நீக்கிவிட்டு, ‘வெற்றி என்னும் சொல் சேர்த்து, தமிழ்நாட்டை ‘வெற்றி நாடு’ ஆக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு முதல்வர் ஜோசப் அவர்களைப் பணிவுடன் வேண்டுகிறோம்!

தமிழ்நாடே ‘வெற்றி நாடு’ ஆகும்போது, முதல்வர் தீட்டிச் செயல்படுத்தும் அத்தனைத் திட்டங்களும் வெற்றி பெறும் என்பதால், ஒவ்வொரு திட்டத்திலும் ‘வெற்றி’ சேர்த்து, மக்களை மண்டை காய வைப்பது தவிர்க்கப்படும்.

வாழ்க ‘வெற்றி நாடு’! வெல்க முதல்வர் ஜோசப்!!