அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

காணிக்கைக்குத் தடையும் கண்டிக்கத்தக்க இ.முன்னணிக் கண்டனமும்!!!

கோயில்களில், பக்தர்கள் அர்ச்சனைத் தட்டில் பணம் காணிக்கை போடுவதற்கு அறநிலையத் துறை அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாகத் தெரிகிறது. அதைக் கண்டித்து ‘இந்து முன்னணி’ப் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள் என்பது செய்தி.

கொஞ்சமேனும் சிந்தித்திருந்தால், கண்டனம் தெரிவிக்காமல் ஸ்டாலினை வாயாரவும் மனமாரவும் அவர்கள் பாராட்டியிருப்பார்கள்.

குறைந்த சம்பளம் வாங்கும் அர்ச்சகர்களுக்கு அர்ச்சனைத் தட்டு வருமானமும் பறிபோகும் என்பதால் இனி அவர்கள் எப்பாடுபட்டேனும் வேறு வேலை தேடிக்கொள்வார்கள். இ.முன்னணி சிபாரிசு செய்தால் நடுவணரசு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப[எல்லோரும் படித்தவர்கள்]ப் பணி நியமனம் செய்யும் என்று நம்பலாம்.

அர்ச்சகர்களின் பரிதாபப் பொருளாதார நிலை கருதி புதியவர்களும் ‘வேதமந்திரம்’ ஓத முன்வரமாட்டார்கள்.

இந்நிலையில், சாமி கும்பிடப்போகிறவர்கள் அவர்களாகவே, சந்நிதிக்குள் முட்டி மோதி நுழைந்து தப்பும் தவறுமாய்த் தமிழில் பக்திப் பாடல்கள் பாடி அர்ச்சனை செய்யும்போது, தள்ளுமுள்ளும் தரக்குறைவான வாக்குவாதங்களும் ஏற்பட்டு, வழிபாட்டுத்தலம் இடிபாட்டுத்தலமாக மாறிவிடும்.

இதனால், ஸ்டாலின் பொதுமக்களின் சாபத்திற்கு உள்ளாவார்.

இதோடுகூட, தேவபாஷையான சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதுவது தடைப்படுவதால் கடவுளின் கோபத்திற்கும் அவர் ஆளாவார்.

மக்களின் சாபமும் கடவுளின் கோபமும் ஸ்டாலினின் நிர்வாகத் திறனை வெகுவாகப் பாதிக்கும் என்பதால், அடுக்கடுக்கான பல தவறுகளை அவர் செய்வார். இதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பிரதமர் மோடியும் அமித்ஷும் செயலில் இறங்குவார்கள்.

ஆட்சிக் கலைப்பு அவர்களுக்கு[‘பாஜக’]க்குக் கைவந்த கலை[ஆளும்கட்சி உறுப்பினர்களைத் தம் கட்சிக்கு இழுப்பது] என்பதால், இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி,  மிக எளிதாகத் தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள். அப்புறம்.....

அப்புறம் என்ன, இங்கே இந்தித் திணிப்பு, இந்துத்துவத் திணிப்பு போன்ற திணிப்புகளெல்லாம், எந்தவித் தடையும் இல்லாமல் “திணி திணி திணி” என்று துரிதகதியில் நிகழ்த்தப்படும்.

ஆகவே, இந்து முன்னணித் தோழர்களே, ‘தட்டுக் காணிக்கை’ பற்றி இனி மறந்தும் வாய்திறந்து பேசாதீர்!

=========================================================================