நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றிருந்தேன்.
அலுவல் முடிந்து, எதிரே ‘தி.கோடு’ செல்லும் சாலையைக் கடந்து, வரிசைகட்டியிருந்த பலதரப்பட்ட கடைகளுக்கிடையே, மனித ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்த ஒரு தேனீர்க் கடையை நெருங்கினேன்.
போண்டா, வடை, பக்கோடா, பஜ்ஜி என்று பலசாதிப் பலகாரங்களின் கலப்பு மணம் என்னைக் கவர்ந்திழுத்தது. உள்ளே நுழைந்தேன்.
கடையின் முகப்பிலேயே அதன் வலப்பக்கத்தில் ஆவி பறக்கும் ‘சுடுபானம்’[தேனீர்&காப்பி] தயாராகிக்கொண்டிருக்க, இடப்புறத்தில் எண்ணை கொதிக்கும் இரும்புச் சட்டியில், வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை கலந்து பதமாகப் பிசைந்த கடலை(பருப்பு) மாவு காரவடையாக மாறும் மாயாஜாலம் நிகழ்ந்துகொண்டிருந்தது.
நான் போண்டாப் பிரியன். உருளைக்கிழங்கு போண்டாவுக்காக உயிரையும் பணயம் வைப்பவன்[சின்ன வயதிலேயே அடிக்கடி போண்டா தின்றதால் ‘போண்டா வாயன்’ என்னும் செல்லப்பெயரால் அழைக்கப்பட்டவன். ஹி... ஹி... ஹி!!!)
செவ்வக வடிவிலான ஒரு கண்ணாடிப் பேழையில் மற்ற பலகாரங்களுக்கிடையே குவிக்கப்பட்டிருந்த போண்டாவைப் பார்த்ததும் என் வாயில் உமிழ்நீர் சுரக்க ஆரம்பித்தது.
போண்டா சூடு தணியாமல் இருந்ததால், ஒன்றுக்கு இரண்டாக எடுத்துக்கொண்டேன்.
தின்றுகொண்டே பார்வையைச் சுழலவிட்டேன்.
தங்களுக்கான பண்டங்களைத் தேர்ந்தெடுத்து உண்ணும் சுதந்திரம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது என்னை வியக்கவைத்தது.
கடை உரிமையாளர் எங்கே?
பட்டிக்காட்டில் பிறந்து, கொஞ்சம் படித்து, பட்டணத்து நாகரிகம் கற்றவர் போல் தெரிந்த ஒரு நடுத்தர வயதுக்காரர், நட்ட தலையுடன் வாடிக்கையாளர்கள் தரும் பணத்தை வாங்கி, தனக்கு முன்னாலிருந்த சிறிய மேசையின் இழுப்பறைக்குள் வைப்பதும் மீதிச் சில்லரை கொடுப்பதுமாக இருந்தார்.
“என்ன சாப்பீட்டீர்கள்?” என்று அவர் எவரிடமும் கேட்டவில்லை. சாப்பிட்டவர்கள் அவர்களாகவே, தின்ற பலகாரங்களுக்கும் குடித்த சுடுபானத்திற்குமான பணத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்.
மேலும் அவர், வந்த வாடிக்கையாளர் வசதி உள்ளவரா அல்லவா, மேல்சாதியா கீழ்ச்சாதிக்காரரா, நாகரிகரா அநாகரிகரா என்றெல்லாம் அடையாளம் காண்பதில் அக்கறை கொள்ளாதவராகவும் இருந்தார்.
போண்டாக்களை ஆற அமர மென்று சுவைத்து விழுங்கிவிட்டு, அவரை நெருங்கி, “ரெண்டு போண்டா” என்று சொல்லி உரிய பணத்தைக் கொடுத்ததுடன், “உங்ககிட்ட ஒன்னு கேட்கணும். தப்பா நினைக்கமாட்டீங்களே?” என்றேன்.
சிரித்துக்கொண்டே, “கேளுங்க” என்றார்.
“யார் யாரெல்லாமோ வர்றாங்க. அவங்களா எடுத்துச் சாப்பிடுறாங்க. சாப்பிட்ட பலகாரத்துக்கும் குடிச்ச காப்பிக்கும் டீக்கும் அவங்களாகவே கணக்குச் சொல்லி உண்டான பணத்தைக் கொடுத்துட்டுப் போறாங்க. யார் மேலயும் உங்களுக்குச் சந்தேகமே வர்றதில்லையா.” -இது என் கேள்வி.
இப்போது அவர் சிரிக்கவில்லை; சிறிது நேரச் சிந்தனைக்குப் பிறகு சொன்னார்: “எல்லாரும் மனுசங்கதான்; நல்லவங்கதான். ஒரு போண்டாவுக்கும் வடைக்கும் பொய் சொல்லுவாங்கன்னு நான் நினைக்கிறதில்ல. பொய் சொல்லுற ரெண்டொருத்தரும் மத்தவங்களைப் பார்த்து திருந்திடுவாங்கன்னு நினைக்கிறேன்” என்றார்.
நல்ல மனிதர்களுக்கிடையே மிக நல்ல மனிதர் ஒருவரை அடையாளம் கண்டதில் உண்டான மகிழ்ச்சியுடன் அவரிடம் விடைபெற்றுப் புறப்பட்டேன்.
==============================================================================